Wednesday, December 27, 2006

சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்...

வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்) உதவி தான். எப்போதும், பட படவென்று திருப்பிவிட்டு, என் போக்கில் பாட்டு கேட்பது வழக்கம். இன்றைக்கு கொஞ்சம் படிக்கவும் செய்தேன். படித்தது சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிகல் (San Francisco Chronicle), செய்தி நம்ம ஊர் தோசை பற்றியது. இந்தியா என்ற வார்த்தை பார்த்தாலே விட மாட்டேன், இதில் (மசாலா) தோசை படம் போட்டு, அதை பற்றி எழுதியிருந்தால், படிக்காமல் இருக்க தோன்றாது.

சுவாரஸ்யம் தான், ஒரு வெளி நாட்டவர் (Michael Bauer) நம் ஊர் தோசை வார்க்கும் உணவகம் தான் சிறந்த பத்தில் (in San Francisco) முதல் என்கிறார். அமெரிக்காவில் எப்போதுமே வித விதமான இதர நாட்டு உணவு வகைகள் மட்டுமே பெயர் பெறுகிறது. அந்த வகையில், இந்திய உணவு வகைகள், இந்தியர் அல்லாத பலரால் விரும்பபடுவது உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. நானும் நண்பரும் அடிக்கடி போகும் பஞ்சாபி உணவகத்தில் எங்கள் இரண்டு பேரை தவிர வெறு இந்தியர்களை பார்ப்பது கடினம். அவ்வளவும் அமெரிக்கர்களும், மற்ற நாட்டவரும் தான். அப்படி என்ன தான் ஈர்த்து விட்டது இவர்களை? நம் நாட்டின் கார சாரமான சமையல் முறையாக இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. அதுவும் இல்லாமல், இவர்களுக்கு எப்போதும் ஒரு மாதிரி வித்தியாசபடுத்தி சாப்பிடும் எண்ணம் பலரிடம் உள்ளது.

இந்த செய்தியை படித்தவுடன், கண்டிப்பாக இந்த வார இறுதியில் தோசா உணவகத்துக்கு சென்று விடுவேன் என்று தான் நினைக்கிறேன். நீங்களும் சான் பிரான்ஸிஸ்கோ பக்கம் இருந்து, தோசை பிரியராய் இருந்தால், வாங்களேன் அங்கே போய் ஒரு கை பார்போம்.

Tuesday, December 26, 2006

இருட்டு கடை

காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும் இடத்தில் போனால் அங்கே தான் என்று வழி காட்டினார். கூடவே, 'இப்போ போகாதீங்க, சாயங்காலம் 5 மணிக்கு தான் திறப்பாங்க'. ரயில் 5:45க்கு. இருந்தாலும், அந்த கடையை பார்த்து விட்டு, அல்வாவையும் நேரில் வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை என்னை காத்திருந்து கண்டிப்பாக போக சொன்னது.

கொஞ்ச நேரம் ரயில் நிலையத்தின் வெயிட்டிங் அறையில் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி நெல்லையப்பர் கோவிலில் இறங்கினேன். எதிர்ப்பார்க்கவில்லை, அந்த கோவில் இத்தனை பெரியதென்று. அந்த சாயங்காலமும் மதியமும் சேர்ந்த நேரத்தில் கோவிலில் அதிகம் பேர் இல்லை. ஆசை தீர, சுற்றி பார்த்தேன். கோவிலை அமைதியாக, யாரும் இல்லாத போது சென்று பாருங்கள். அதன் ரம்மியம் தனி. எண்ணை வாசனை, மெல்லிய காற்று, எங்கோ தூரத்தில் ஒலிக்கும் மணி சத்தம், தூணுக்கு பின் தோழியிடம் சண்டை போட்டு கொண்டிருக்கும் தோழன், இரும்பு கம்பிகளுக்கு பின் அருள் பாலிக்கும் பல கடவுள்கள், கோவில் தோட்டத்து சல சல சத்தம். ஏகாந்தம்! இத்தனையும் இருட்டு கடை அல்வா வாங்க வேண்டும் என்ற ஆசையால் கிடைத்தது.

வெளியே வந்து செருப்பை வாங்கும் போது, பக்கத்தில் இருப்பவரிடம் 'இருட்டு கடை எங்கங்க இருக்கு'. 'அதோ' என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் பல கடைகள் கொண்ட இடம். சரி, எதாவது போர்ட் இருக்கும் என்று, கிட்டே போய் கேட்டால், பக்கத்தில் டீ கடை அளவுள்ள, சில பலகைகள் கொண்டு முடப்படும் அந்த காலத்திய அமைப்புள்ள ஒரு கடை. அதை பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், நேரில் பார்க்கும் போது பெரும் வியப்பே மிஞ்சியது. அப்போது அங்கு யாரும் இருக்கவில்லை, ஒருவரை தவிர. அவரை விசாரித்த போது, அல்வா வாங்கத்தான் அவரும் காத்திருப்பதாக சொன்னார். வாங்கி விட்டு, அவரும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும் என்றார். பரவாயில்லை, நான் எடுத்த முடிவு கொஞ்சம் சரியானது தான் என்று நினைத்து கொண்டேன். பேச்சு கொடுத்தபின் தான் தெரிந்தது, அவர் என்னை போல் அல்லாமல் அதிகம் பேசுவார் என்று. நிறைய பேசி கொண்டிருந்தார். சொன்னதில் நான் பற்றி கொண்டது ஒன்று தான். அவரின் வீட்டு பக்கம் தான் இருட்டு கடை அல்வா பாக்டரி இருக்கிறது. அவரின் தாத்தா, அப்பாவுக்கு இந்த இருட்டு கடை முதலாளியிடம் நல்ல பெயரும் உள்ளது. அப்புறம் என்ன, அங்கேயே வாங்கி கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு கிடைத்த பதில், 'இங்க தவிர வேற எங்கயும் யாருக்கும் இவுங்க குடுக்கவோ விக்கவோ மாட்டாங்க'.

மார்க்கெட்டிங் என்ற பெயரால் இன்றைய விளம்பர வித்வான்கள் பலர் உயிரை கொடுத்து தன் பொருள் விற்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்திலும், கடைக்கு ஒரு பெயர் கூட வைக்காமல், ஆரம்பித்த அதே நிலையில் ஒரு மாற்றமும் இல்லாமல், செய்யும் பொருளின் தரத்திலும் கூட ஒரு மாற்றமும் இல்லாமல் உலக தரத்திற்கு பேசபடும் இவர்களின் முன் பலர் கண்டிப்பாக பாடம் கற்று கொள்ள வேண்டும்.

ரயிலுக்கு நேரமாகி விடும், கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது என்று கறாரான பதில், கடையில் வேலை செய்பவரிடம். அது வரையில் கிட்ட தட்ட பத்து பேராவது காத்து கொண்டிருந்தார்கள். முதலாளி வந்தே விட்டார். எங்கு இருந்து தான் வந்ததோ தெரியவில்லை அத்தனை கூட்டம். குறைந்து நாற்பது பேராவது முற்றுகை இட்டார்கள். சற்றே பின் வாங்கினேன். எனக்கு கில்லி சினிமா டிக்கட் வாங்க போய், முச்சு முட்டியது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், அலுவலக சகாக்களுக்கு அல்வா கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்று சொன்னதால், துணிந்து, வியர்வை பொங்க, முச்சு இறைக்க, அடுத்தவர்கள் திட்ட முன்னே போய் வாங்கியே விட்டேன். பக்கத்தில் நான் முன்பு பேசி கொண்டிருந்த நண்பரும் அவருக்கான கொள்முதல் செய்து விட்டிருந்தார். கூட்டத்தை தள்ளி கொண்டு இரண்டு பேரும் ஒரு பெருமித புன்னகையை பரிமாறி கொண்டு கிளம்பினோம்.

இந்த அனுபவத்தில் அதிகம் திரில் இல்லை என்றாலும் இருட்டு கடை என்ற அந்த வியாபார தலம் என்னை ஈர்க்கவே செய்த்தது. அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏன் உலகின் எந்த முலையிலுமே விளம்பரபடுத்தி கொள்ளாவிட்டால் எப்பேர்பட்ட கொம்பாக இருந்தாலும், சறுக்கி விழ வேண்டிய அபாய பொருளாதார நிலைமை மற்றும் கால மாற்றம் இப்போது. இது எல்லாம் தெரிந்தும், உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மட்டுமே நிஜம், மற்றவை எல்லாம் கண் துடைப்பு என்ற வியாபார கொள்கை உடைய இவர்களை நெல்லையப்பரின் கடைக்கண் பார்வை காக்கவே செய்கிறது.

(கடையின் படம், ramz பதிவிலிருந்து)

Sunday, December 24, 2006

Happy Christmas

எல்லோரும் Happy Holidays சொல்லி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள்.

Jesus Christ. இவரின் பிறந்த நாள், கண்டிப்பாக சிறந்த தினமே. மனிதமும், அமைதியும், இரக்கமும் சொல்லி கொடுத்த இவரின் குரல் நம்மில் பலருள் இன்னும் எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் போதித்த அத்தனையும் பின்பற்ற முடியாத கால கட்டங்கள் இப்போது. ஆனாலும் கண்டிப்பாக அதை நினைக்கவாவது செய்வது அவரை சந்தோஷ படுத்தும்.

மனிதம் எல்லோருக்குள்ளும் பல நேரங்களில் மறைந்து போகும், தன் வாழ்க்கை, தன் பாதுகாப்பு என்று நினைக்கும் போது. என்னுள்ளும் பல சமயங்கள், மனிதமும் அன்பும் இறந்து போனதை, இவரை பார்க்கும் போதெல்லாம் நியாபகம் வந்து, தலை குனிந்து போன பல தருணங்கள் உண்டு.

மதம் போதிக்காமல், மனிதம் போதித்த இவரை பற்றி நம் தேச தந்தை,

A man who was completely innocent, offered himself as a sacrifice for the good of others, including his enemies, and became the ransom of the world. It was a perfect act.

Roman Holiday

மறுபடியும் ஒரு பழைய படத்தின் பார்வை.

என்ன தான் இது போன்ற படங்கள் பலரால் விமர்சிக்கபட்டு, சிலாகிக்கபட்டு இருந்தாலும் இதை பற்றி எழுதும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

Audrey Hepburn , இவர் மட்டுமே இந்த படத்தை தன் பார்வையால், தன் சிரிப்பால், தன் பேச்சால், தன் குரலால், தன் வசன உச்சரிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார். முதல் படமான இந்த படத்தில் அவருக்கு சிறந்த கதா நாயகிக்கான அகாடமி விருது கிடைத்ததில் தவறே இல்லை.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஒரு கவிதையாகவே உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் ஆச்சரியபடுவது நடக்கும்.

ஒரு இயக்குனரின் திறமை, திரைக்கதையிலும் அதை முறையாக வெளிபடுத்த கூடிய நடிகர்களும் அமைந்து விட்டால் போதும். கண்டிப்பாக அந்த படம் அரங்கு நிறைந்த வெற்றி தான், இந்த படம் போல.

ப்ரபலம்னாலே ப்ராப்ளம் தான். இந்த ஒரு வரி கூட போதும், இந்த படத்தின் கதையை சொல்வதற்கு. அதை பார்பவர்களுக்கு புரிய வைக்க, இயக்குனர் பிரம்ம ப்ரயத்தனம் எதுவும் செய்யவில்லை. முதல் காட்சியில், அதை வார்த்தைகள் இல்லாமல், அழகாய் சொல்லி இருப்பார். பார்த்து மட்டுமே புரிய கூடிய விஷயம் இது.

Audrey Helpburn, எத்தனை அழகு. வியந்து போனேன். தூக்க மாத்திரை போட்டு, அந்த கலக்கத்தில் அவர் பேசும் அத்தனை வார்த்தைகளும் (Thank you. No Thank you. You have my permission to withdraw இப்படி பல), கொள்ளை அழகு. இப்படி கூட சாதாரணமாக மனதை திருட முடியுமா என்று வியப்பு தான். சில நாயகிகள் அவர்களின் முதல் படத்தில் ரசிகனின் இதயத்தில் சுலபமாக சம்மனம் போட்டு உட்கார்ந்து விடுவார்கள். இவரும் அப்படித்தான். அரச வம்சத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும், எந்த உணர்ச்சியையும் சராசரி மனிதர்கள் போல வெளிபடுத்தும் முறை இல்லை. அதை, பல காட்சிகளில் கஷ்டமே இல்லாமல் செய்திருக்கிறார். அவர்களுக்குள் இருக்கும் வெளிபடுத்தாத எண்ணங்களும் சரி, அடடா இவங்களுக்குள்ளும் இத்தனை இருக்கிறதா என்று நிஜமாக நினைக்க தோன்றுகிறது.

1953ல் எடுக்கபட்ட, இந்த படத்தின் பல காட்சிகள் (ஏன் கதை கூட) பலரால் உபயோகபடுத்தபட்டுள்ளது என்பது புரிந்தது. நம் ஷங்கர் கூட விதி விலக்கில்லை. Mouth of truth, இந்த காட்சியின் அச்சு அசலான காட்சி காதலனில் பார்க்கலாம். கண்களாலேயெ பேசும் உத்தி நம் அத்தனை பா இயக்குனர்களும் இன்றைக்கும் பயன் படுத்துகிறார்கள்.

இந்த படத்தில் நடித்த Audrey Hepburn, Gregory Peck, Eddie Albert மற்றும் இயக்குனர் William Wyler யாரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்கள் இறக்கும் தருவாயில் கண்டிப்பாக இந்த படம் அவர்கள் கண் முன் இருந்திருக்கும்.

நிறைவேறிய காதலை விட, நிறைவேறாத காதல் கதைகள் மனதின் அடியை தொட்டு விட்டு செல்வது சாத்தியமே, இந்த இளவரசி மற்றும் பத்திரியாளனின் காதலை போன்று.

உலக சினிமாவில் இன்னும் நான் பார்க்காத, இது போன்ற அத்தனை படங்களையும் ஒரு மாதம் லீவ் போட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்து பார்க்க ஆசை.

பார்க்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள். உங்களை நீங்கள் மறப்பது நிச்சயம்.

Roman(ce) Holiday

( Mouth of Truth scene, Confernce scene, Parting scene

நன்றி - Youtube )

Monday, December 18, 2006

ஜோசப் பார்பரா

இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.

பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த இருட்டுடனேயே வாழ்ந்து அதிலேயே இறந்தும் போகிறார்கள். திரையில் தோன்றும் அனைவரும் அதற்கு மாறாக வான்புகழ் அடைகிறார்கள். இவரின் படைப்பு என்னவென்று கேட்கிறீர்களா? டாம் அன்ட் ஜெர்ரி. இதை பார்க்காமல் வளர்ந்த குழந்தை எங்காவது உண்டா? அத்தனை குழந்தைகளின் சந்தோஷத்தையும் இந்த கார்ட்டூன் மூலம் பல மடங்கு அதிகரித்த பெயர் இவருக்கும், William Hanna என்பவருக்கும் மட்டுமே சொந்தம்.

நிலா காண்பித்து சோறு ஊட்டிய காலம் போய், டாம் அன்ட் ஜெர்ரி காட்டி சோறுட்டிய அத்தனை அம்மாக்களும் நன்றி சொல்ல வேண்டிய மகானுபாவர். இத்தனை வயதானாலும், நம்மில் எத்தனை பேர் வரிந்து கட்டி கொண்டு, மடியில் தலைகாணி, இரு கன்னங்களிலும் கைகள், கண்களில் குழந்தைதனம் என்று டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கிறோம். இன்று கார்ட்டூன் படங்களுக்கு உள்ள மவுசு அதிகரிக்க காரணம் ஒரு வகையில் டாம் அன்ட் ஜெர்ரி வெற்றியும் தான்.

நிஜ மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, இதையெல்லாம் காட்டும் சினிமாவை விட இந்த கார்ட்டூன் படங்கள் நிச்சயம் ஒரு படி மேல் நிற்பது மறுக்க முடியாத உண்மை. இதை எடுப்பது சாதாரண காரியம் அல்ல. Finding Nemo - Behind the scenes பார்த்த போது தான் தெரிந்தது. இத்தனை உழைப்பா? இதற்கு பின் இத்தனை நுணுக்கமா என்று கண்களையும் மனதையும் ஆச்சரியபடுத்தவே செய்தது. நாம் செய்யும் ப்ரொகிராம் வெட்டி வேலையை விட்டு விட்டு அனிமேஷன் கற்று கொண்டு இந்த துறைக்கு வந்து விடலாமா என்று இன்றைக்கும் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு முறை அலுவலகம் செல்லும் போதும் பிக்சார் ஸ்டுடியொஸ் வாசலில் இறங்கி உள்ளே செல்லும் அனைவரையும் பார்க்கும் ஏக்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை.

உலகத்தின் எந்த மூலையில் குழந்தைகள், டாம் அன்ட் ஜெர்ரி பார்த்து சிரிக்கும் போதும், ஜொசப் பார்பரா ஒரு அகாடமி விருது பெற்று கொண்டு தான் இருப்பார்.

விக்கி தகவல்கள்

Sunday, December 17, 2006

அவள் அப்படித்தான்...

அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்... அவள் அப்படித்தான்...

அழகாய் முடிகிறது 'அவள் அப்படித்தான்' படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த உலகத்தில் பிறக்க கூட இல்லை. ஆனால், இன்று விவாதிக்கப்படும் பல விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது பெறும் ஆச்சரியமே.

இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது என்னவோ உண்மை தான். இயக்குனர் ருத்ரையாவிடம் நிறைய தில் அப்போதே. நிச்சயம், இந்த படத்தை இப்பொது யாராவது எடுத்தால் அவர்களுக்கு, மக்கள் போராட்டம், கலவரம் போன்ற விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த படம் எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பலரின் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

கலர் படங்கள் நன்றாக வெளிவந்த அந்த காலகட்டத்தில், கருப்பு வெள்ளையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது, ஆச்சரியமான விஷயம். கதையின் தாக்கத்தை இதுவும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது.

நடித்த அத்தனை பேருக்கும் என்ன சொல்வது? அவர்களின் நடிப்பு வாழ்க்கையில் மற்றவர்களிடம், சிலாகித்து சொல்ல நிறைய செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை உங்களை உட்கார வைக்கும் வேகமான த்ரில்லர் போல, உங்கள் மனதை கண்டிப்பாக உணர வைக்கும். ஒரு பெண்ணை சுற்றியே படம், அதுவும் அவள் மற்ற சராசரி பெண்கள் போல கண்டிப்பாக அல்ல. ஆண் சமுதாயத்தின் மீது கட்டுகடங்காத கோபமும், பெண்ணுக்கே உரிய, தன் சோகம் கேட்கும் ஆணிடம் தன்னை பறி கொடுக்கும் வித்தியாசமானவள். பல நேரங்களில் இது போன்ற நிழல் நாயகிகள், நம் வாழ்க்கையிலும் வருவதுண்டு. நான் பார்த்த, பழகிய, எனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண் என் நினைவுக்கு அடிக்கடி வந்தார். நிழல் சில நேரங்களில் நிஜத்தை உரசி பார்ப்பதென்னவோ உண்மை தான். சராசரிக்கும், வித்தியாசத்துக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ள, இப்போதைய, பல பெண்கள் இந்த படத்தில் தங்களை உணர்வார்கள்.

ரஜினி சில காட்சிகள் வந்தாலும், அட போட வைத்திருக்கிறார். நெற்றி பட்டையுடன், அதற்கு சம்மந்தமில்லாத பல விஷயங்களை பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை. அதை சுப்பர் ஸ்டார் கையாண்டுள்ள விதம், அதை விட திறமை. கமல், சொல்ல என்ன இருக்கிறது. பல இடங்களில் கண்களால் மட்டுமே நடித்துள்ளார். இவரை வேட்டையாட விளையாட விட்டுள்ளது, இந்த கால கமர்சியல் கட்டாயம். Sri Priya, இவர் நடித்து அதிகம் பார்த்ததில்லை. இந்த படம் பார்த்த பின், இவரை தவிர்த்து யாராவது செய்திருந்தால் ???

இளையராஜா. எப்போதும் போல ரசிகனின் மன அரியாசனத்தில் ராஜாங்கம் நடத்துகிறார். பாடல்களை விட, பல இடங்களில் நுட்பமான பின்னிசை கேட்க கேட்க பிரமிப்பு.

கத்தி, காதல் என்ற வட்டத்துக்குள் சிக்கி கொண்டுள்ள இன்றைய திரைப்படங்களை பார்த்து பார்த்து சிவந்த கண்களுக்கும், மனதுக்கும் இந்த பழைய படம் நிச்சயம் ஒரு ஆறுதல்.


Sunday, December 10, 2006

பாரதி

அது என்ன எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை

கல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.

பாரதி
உனக்கு மரணத்தின் பின்னும்
கேட்கும் திறம் உண்டு என்பதனால்

நீ விரும்பிய அனைத்தும்
இக்கணம் கிடைக்கும்
நீ கனவு கண்ட
அத்தனையும் கைக்கு எட்டிய தூரத்தில்
உன் முயற்சி எதுவும்
விழலுக்கு இறைத்த நீராகி விடவில்லை

ஆனால்...
இவை எல்லாம்
நீ நினைத்தது
நீ கனா கண்டது
நீ முயற்சித்தது
என்று எங்கள் சந்ததிகளுக்கு
நாங்கள் சொல்ல எங்களுக்கு
நேரமில்லை
அரசாங்கத்துக்கும்
நேரமில்லை

உன்னை மறுபடியும்
பிறக்க சொல்லி
பாட சொல்லி
நாங்கள் வற்புறுத்த போவதில்லை

ஆனால்,
நாங்கள் வற்புறுத்துவது
மறுபடியும் பிறந்து விடாதே என்று தான்

அப்படியும் வந்தால்
நீ பாடம் சொல்ல
உன் அறிவுரைகள் கேட்க
உன் தீ பிழம்பு கண்கள் பார்க்க
உன் வார்த்தை ஜாலங்கள் மகிழ
இளமை கொதிக்கும் நாங்கள்
நீ பிறந்த இடத்தில் இல்லை

முடிந்தால்
டெக்சாசிலோ, மிசிசிபியிலோ,
நியு ஜெர்சியிலோ, கலிபோர்னியாவிலோ
பிறந்து கொள்.

ஏன் இறந்தாய் பாரதி?

வெயில் - ரொம்ப மோசமில்ல

ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட்.

மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஒரு திரைப்படம். ஷங்கரின் தயாரிப்பில் வந்த இரண்டு படங்களும் ஏற்படுத்திய தாக்கமும், அதன் அசாத்திய வெற்றியும் தான்.

வசந்தபாலன் பல இடங்களில் பளிச்சிடுகிறார். கதை மற்றும் கதாபாத்திர களம் ஆகியவற்றை கூடுமானவரை வித்தியாசபடுத்த முயற்சி செய்திருக்கிறார். அதில் பலனும் காண்கிறார். ஒரு டுயட் விருது நகர் வீதிகளில் மட்டுமே எடுக்கபட்டுள்ளது.

பசுபதி நிறைய அழுகிறார், கூடவே நிறைய நடித்தும். படத்திற்கு பரத் வெறும் பெயருக்கு தான் கதா நாயகன். பசுபதி தான் கதா நாயகன் என்று சொன்னால், படம் விற்குமோ விற்காதோ என்ற பயம் கூட இருக்கலாம். பசுபதி, சினிமா தியேட்டரில் வேலை செய்யும் கால கட்டம் படம் செய்த விதம் ஈர்க்கவே செய்கிறது. சினிமா பேரடிசியோ படத்தின் தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகம்.

பசுபதியின் காதலும் கூட படத்தில் சொல்ல கூடிய ஒன்று, சிறிது நேரமே வந்தாலும். யார் அந்த புது நடிகை? நல்ல தேர்வு. பசுபதி காதல் காட்சிகளில் நடிக்கும் போது தியேட்டரில் ஒரே சிரிப்பு சத்தம். தவிர்க்க முடியாதது தான்.

பசுபதி, பரத் சிறிய வயது காட்சிகள், அட போட வைக்கும் இடங்கள். அதிலும் முதல் பாட்டில் வரும் சின்ன பசங்க விளையாட்டுகள் (கில்லி, கோலி, லென்சில் பிலிம் வைத்து படம் காட்டுவது, கோணிப்பை ஒட்டம், சுடு கொட்டை, வெப்பங்காய் ஒடு, கபடி, பொன்வண்டு இப்படி பல), கிராமத்து பழைய நினைவுகளை கிளருவது நிச்சயம்.

சில பாத்திரங்கள் கண்டிப்பாக நினைவில் வருகிறார்கள். ஷ்ரெயா திமிரு படத்தில் வந்தது போல் இல்லாமல், குறைத்து பேசி அதிகம் நடித்துள்ளார். தங்கம் (பசுபதியின் காதலியாக வருபவர், நிஜ பெயர் தெரியவில்லை) வாட்ட சாட்டமான கருப்பான பசுபதியை திகட்ட திகட்ட திட்டுகிறார் & காதலிக்கிறார். கடைசியில் இறந்தும் போகிறார். தன் கண் முன்னே பசுபதியை தூக்கில் மாட்ட முயற்ச்சிப்பவர்களை தடுக்கும் போது, காதல் சந்தியா மற்றும் சில காட்சிகள் நம் கண் முன்னே. வாங்கிய காசுக்கு நல்ல நடிப்பு. பரத் (இவரை படத்தின் முக்கிய கதா பாத்திரமாக கருதாததால், சில பாத்திரங்கள் வகையறாவில் வருகிறார்), காதலை கூட கோபத்துடன் தான் செய்கிறார், தேவைக்கு ஏற்றபடி. கசாப்பு கடை வைத்திருக்கும் பசுபதி, பரத்தின் அப்பா. செய்யும் தொழில் எப்படியோ அப்படிதான் குடும்பத்துடன் பழகுகிறார், பாசத்தை படத்தின் இறுதியில் மட்டுமே வெளிபடுத்தும் நேர்த்தியான பாத்திரம். பாவனா, அழகாக பாந்தமாக போகிறார் வருகிறார். மற்றபடி வியாபார ரீதியிலான பாத்திரம். சிறு வயது பசுபதி மற்றும் பரத், நல்ல நடிப்பு அந்த சிறுவர்களிடம்.

முதல் பாதி என்ன சொல்ல வருகிறார்கள் என்ற யோசனை இல்லாமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதி, வழக்கம் போல 50% சென்டிமென்ட் 15% சத்தம் 15% ரத்தம் 20% கத்தி. கதைக்கு வெயில் என்று பெயர் வைத்ததன் காரணம்?? புரியவில்லை. ஆனால், இயக்குனரோ வெயில் படத்தில் ஒரு இம்ப்லிசிட் கேரக்டர் என்று சொல்கிறார்.

சோரம் போகாத கதை. ஆனால், நன்றாக செதுக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
கண்டிப்பாக இந்த படம் தோல்வி இல்லை, அதே நேரத்தில் ( நீங்கள் நினைப்பது போலவே) வெற்றியும் இல்லை.

எனக்கும் படம் விட்டு வெளியே வரும் போது, ஷங்கர் சிவாஜி படபிடிப்பில் பிசியாக இருப்பதால், இந்த படத்தை பார்க்கவில்லையோ என்று நினைக்கதான் தோன்றியது.

Thursday, September 28, 2006

எத்தனை நாளாச்சு

சாயங்காலம் ஆறேமுக்கால். சரியாக அலாரம் அடிக்கவும், நான் கண் முழிக்கவும், ரயில் நிற்க்கவும் சரியாக இருந்தது. ஒரு பாய் இருந்தா அங்கயே தூங்கிடலாம் போல இருந்தது. ஆனா, வெளியே சில்லென்று உடம்பை ஊடுருவும் காற்று. சரி, வேற வழி இல்லியேன்னு நடக்க ஆரம்பிச்சேன். என்னமோ திரும்பி பாக்க சொல்லி மனசு சத்தம் போட்டுச்சு. மனசு சொல்லி யார் கேக்காம இருப்பா? பார்த்தா, புடவை கட்டிகிட்டு ஒருத்தர் வந்துகிட்டு இருந்தாங்க. எத்தனை நாளாச்சு, புடவை கட்டின ஒரு பொண்ண பார்த்து. மனசுகுள்ள ஒரு முழு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி (என்னடா ஒரு பொண்ண பார்த்துட்டு அவனவன் நிலா, தாமரை அப்படின்னு அள்ளி விடாம இப்படி சொல்றானேன்னு யோசிக்கறீங்களா. வெளி நாட்டுல இருக்கிற ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் கார சாரமான சாப்பாடுதாங்க சொர்க்கம். அதுனால தான் இப்படி ஒரு நினைப்பு).

இங்க சேலை கட்டுற எந்த இந்தியா பெண்களை பாக்க தீபாவளி, பொங்கல் வரைக்கும் காத்திருக்கணும். எல்லாருக்கும் நிமிஷத்துல உடுத்திகற அமெரிக்க கலாசாரம் தான் புடிச்சிருக்கு. தப்பில்ல. நானெல்லாம் தமிழ் மண்ணு கலாச்சாரம், மண்ணு, மட்டைன்னு இருக்கிறவன். எனக்கு இந்த மாதிரி ஒருத்தர அதுவும் வேலை செஞ்சிட்டு, அசதியா, முதுகுல புத்தக மூட்டை சுமக்கிற மாதிரி, லாப்டாப் எடுத்துகிட்டு வற்றபோ பார்த்தா இப்படி ரெண்டு பத்தி எழுத தோணும் தான்.

அந்த பெண், பின்னால் வந்த ஒரு வயதான இந்திய முதியவரிடம் இருந்த அந்த 10 வயதுள்ள சிறுவனை பார்த்து, 'அதோ பாரு, அப்பா' என்று தூரத்தில் கார் மீது சாய்ந்திருந்த ஒருவரை காட்ட, அவன் முதியவரின் கையிலிருந்து விடுபட்டு, 'அப்பா' என்று சத்தமிட்ட படியே ஒட, நான் என் வழி பார்த்து நடந்தேன்.

யாருமில்லாத அந்த ரோட்டில் நடந்து போகும் போது ஏனோ அம்மாவின் நினைப்பு, கண்ணில் சிறிது ஈரம் படற ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் இன்று இரவுக்கு நான் சமைக்க வேண்டும். ரூம் மேட் பசியோடு காத்து கொண்டிருக்கும் நினைவு வர வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

Monday, September 04, 2006

ஆசிரியர் தினம்

ஆசிரியர் இல்லா ஒரு மனிதன், எப்போதுமே ஒரு கேள்வி குறி. தன் வழியில் வரும் அத்தனை மாணவர்களையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் அவர்கள் சென்ற வழியை பார்த்து கொண்டே அடுத்து வரும் மாணவர்களை வழி நடத்தும் ஒரு நல்ல மனித உள்ளம். அப்துல் கலாம் இப்போது ஜனாதிபதியாக இருந்தாலும் அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். முகேஷ் அம்பானி இந்தியாவின் மிக பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தினாலும், அவருடைய ஆசிரியர் இன்னமும் ஆசிரியர் தான். மிக பெரிய தியாகம். இவர்கள் தொண்டு பணி செய்து கிடப்பதே.

என் சிறு வயது (6 அல்லது 7),

ஜெயா டீச்சர் - 'அம்மா, அந்த டீச்சர் என்ன அடிக்கிறாங்கம்மா.'

சிறிது வளர்ந்த பின் (8 முதல் 12)

பர்வதராசன் - 'காலை வணக்கம் அய்யா. இன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு போயிட்டு தண்ணி எடுத்துட்டு வரேன். சரி, போ. ஆனா, நீ வந்தப்புறம், நீ விட்ட பாடத்த என் கிட்ட வந்து சொல்லனும், புரியுதா.'

விவரம் கொஞ்சம் வளர்ந்த பின் (13 முதல் 17)

கொக்கையா - 'அய்யா, இன்னைக்கு நான் திருக்குறள் படிக்கல. ஏன்? சைன்ஸ் பாடம் நிறைய இருந்தது.'

கு.க அய்யா - 'குனித்த புருவமும் யார் யாருக்கெல்லாம் தெரியாது.' சில பேர் எழுந்து நிற்க, நான் மற்றும் பலர் உட்கார்ந்திருந்தோம். என்னை எழுப்பி, ' எங்கே சொல்லு'. தளபதி படத்தில், ராக்கம்மா பாட்டை சிறிது நேரம் உள்ளுக்குள் ஓட்டி விட்டு, குனித்த புருவமும் வரும் போது, உரத்த குரலில் சொன்னது.

நெப்போலியன் அய்யா - நண்பன் சொன்னது, 'இவர் ஒரு தடவை பாடம் நடத்தும் போது, டியுப் லைட் உடைஞ்சி போச்சு. அவ்ளொ, உணர்ச்சி வசப்பட்டு பாடம் நடத்துவார்'. நான், 'அப்படியா. சே, நான் அவரோட செக்க்ஷன் இல்லாம போயிட்டனே'

செல்வம் அய்யா - பள்ளியின் விளையாட்டு விழா. 500 மீட்டர் என்று நினைக்கிறேன். எல்லோரும் ஒடும் போது, இவரின் குரல், 'ஒளி படைத்த நெஞ்சினாய் வா வா வா. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா'

T.P. சார் - 'என்னா செட்டியார், ஏன் யென் ஸி ஸி பரேடுக்கு வரல.' ' உடம்பு சரியில்ல சார்' 'உனக்கெல்லாம், H.M. கிட்ட சொன்னாத்தான் சரியா வரும்' 'வேண்டாம் சார். அடுத்த பரேடுக்கு வரேன்'

லுகாஸ் பிரதர் - 'உங்களுக்கெல்லாம் யோகாசனம் சொல்லி தரேன். சஞ்சய், இங்க வா, இந்த ஆசனம் செஞ்சி காட்டு. எங்க, எல்லாரும் இதே மாதிரி செய்ங்க.' 'பிரதர், உடம்பு வலிக்குது, முச்சு விட முடியல' 'முச்சு சரியா விடரத்துக்கும், உடம்பு வலி வராம இருக்கவும் தான் இதெல்லாம். வாய மூடிக்கிட்டு செய்ங்க'

ஜான் பால் பாதர் - என் அப்பாவிடம், 'உங்க பையன கம்ப்யுட்டர் சைன்ஸ் குருப்ல சேருங்க. அவன் அமெரிக்கா போறத்துக்கு நான் உத்திரவாதம் குடுக்கறேன்'

மாசோ அய்யா - 'என் கிட்ட படிச்ச பசங்க எல்லாம், எதுத்தாப்போல வந்தாலும், சிகரட் அணைக்காமத்தான் போவாங்க. அவ்ளோ மரியாதை.'

தேவதாஸ் - நண்பன் என்னிடம், 'இவர் வீட்டு வாசல்ல, இவர் அவரோட பொண்டாட்டிக்கு கிஸ் குடுக்கற மாதிரி போட்டோ இருக்கு'. 'எப்படிடா, பென்ச் போட்டு குடுத்திருப்பாறோ' 'என்னடா, ரெண்டு பேரும் அங்க சத்தம் போடறீங்க' 'ஒன்னும் இல்ல சார், பென்ஞைன் ஆஸைடு பார்முலா கேட்டேன்.'

லியோ மாஸ்டர் - மறுபடியும் நண்பன் என்னிடம் 'ஒரு நாள், நான் சைக்கிள வந்துகிட்டே இருந்தேன். இவரு எதுத்தாப்போல வந்தாரு. வணக்கம் சொன்னேன். அவரு எதுவுமே சொல்லல. கொஞ்ச தூரம் போயிட்டு, வணக்கம் சொல்றாரு. அவ்ளோ லேட் பிக் அப்.'

இள வயசின் போது (18 முதல் 21)

ஷபி சார் - ' நானெல்லாம் பாம்பே போயிருந்தப்போ, விடாம ப்ளு பிளிம் பார்த்திருக்கேன். ஒரு கட்டத்துல அது அலுத்து போச்சு. மனசு வேற தேட ஆரம்ப்ச்சிடுச்சு. அதுனால தான் நான் இப்போ உங்களுக்கு இப்போ ஷெல்லி நடத்திகிட்டு இருக்கேன். விடாம தேடுங்க. கண்டிப்பா, ஜெயிப்பீங்க'

மீரா மொய்தீன் அய்யா - 'ஆப்பிரிக்காகாரன் போடறது தான் உலகத்துலயே அதிக வெயிட். ஏன்னா, அவன் சாப்பிடறது அப்படி'

சரவணன் - சக பேராசிரியரிடம், 'இதோ வற்றார் பாருங்க, இவரு பெரிய பழம். வெல்லூர்ல கம்ப்யுட்டர் கிளாஸ்கெல்லாம் போவாரு'

முகம் மற்றும் பெயர் மறந்து போன என் கல்லூரியின் பிரின்ஸி - என் அப்பாவிடம் 'மார்க் ஷீட் எல்லாம் அந்த பக்கம் வைங்க. நாங்க சொன்ன ரூபா குடுக்க முடிஞ்சா சீட் கிடைக்கும்.'

முதுகலை (21 முதல் 24)

மகெந்திர நாத் - 'இந்த This is Nothing But யுஸ் பண்றத நிறுத்திகோங்க'

டேப்னி மேடம் - 'லக்ஷ்மண், அங்க என்ன பேச்சு. Myths of Software Engineering சொல்லு'

வேலை கிடைத்ததை சொன்ன போது,
சிவகாமி மேடம் - 'சமத்து. எனக்கு அப்போவே தெரியும், நீ ஒரு நல்ல கம்பனில சேருவென்னு', நான் அத்தனை கேம்பஸ் இன்டர்வியுவிலும் கோட்டை விட்ட போதிலும்.

வேலை செய்யும் இடத்தில்,

ஆசிரியர் பட்டம் தரிக்காத பல ஆசிரியர்கள் எனக்கு.

எத்தனை ஆசிரியர்கள். எத்தனை விதங்கள்.

சிலரிடம் நல்ல பெயர். பலரிடம் சுமாரான மற்றும் கெட்ட பெயர்.

எனக்கு கற்று கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.

Sunday, September 03, 2006

இப்படியும் சி(ப)லர்

என்னடா இப்படி இளச்சி போயிட்ட.
இல்லம்மா, அதுக்குள்ள உனக்கு அப்படி என்ன தெரியுது. வந்தே ஒரு வாரம் தான் ஆகுது.
எனக்கு தெரியாதா?
உனக்கு ஒன்னும் தெரியாது.
சும்மா இரு. நான் அப்படியே தான் இருக்கேன்.சரி. வேளா வேளைக்கு சாப்பிடு.
சரி.
சமைக்க முடியலென்னா வெளிய சாப்பிடு.
சரி.
ரெண்டு நாளைக்கு ஒரு தடவை எண்ணை தேச்சி குளி.
சரி.

என்னடா இப்படி இளச்சி போயிட்ட.
ஆமாடா. சரியான சாப்பாடு கிடைக்கல.
நீ தான் சமைக்கற இல்ல.
இன்னமும் ஆரம்பிக்கல.
சரி, அம்மா அடுத்த லைன்ல இருக்காங்க, ஆன்லைன்லயெ இரு. முடிச்சிட்டு வரேன்.
சரி.

வேற என்னம்மா. எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. தூங்க போகணும்.
சரிடா குட்டி. உடம்ப பார்த்துக்கோ. நான் குடுத்த பலகாரமெல்லாம் சீக்கிரம் சாப்பிடு. எல்லாம் எண்ணையில செஞ்சது, கெட்டு போயிடும். உன் கூட இருக்கிறவங்களுக்கும் குடு. கொஞ்சமா குடு. உடம்ப பார்த்துக்கோ. குரல் எதொ ஜலதொஷம் புடிச்சா மாதிரி இருக்கு. வெளிய அடிக்கடி சுத்தாத.
சரிம்மா. வேற ஒன்னுமில்லையெ. நான் தூங்க போறேன்.

சொல்லுடா குட்டி, எப்படியிருக்க.
எதொ இருக்கேன்.
ஒழுங்கா சாப்பிடறயா.
ம்ம்ம்.
கொஞ்சம் குறைஞ்சா மாதிரி இருக்க..
டேய், நான் இப்பொ சொன்னா மாதிரி இருக்கு.
சரி சரி. உடம்ப பார்த்துக்கோ. அது தான் முக்கியம். ஒழுங்கா வேளாவேளைக்கு சாப்பிடு. அடிக்கடி மெஸெஞ்சர்ல வா. உன்ன பார்க்காம, இங்க எந்த வேலையும் ஓடாது. சரியா?
புரியுது. இப்படியெல்லாம் சொல்லிட்டு, அந்த பக்கம் வேற பொண்ணொட சேட் செஞ்சிட்டு இருந்த, மவனே முதல் ராத்திரி, கடைசி ராத்திரி ஆயிடும். புரியுதா.
ராசாத்தி, அதுல எல்லாம் கை வெச்சிடாத.
நான் உன்ன தவிர யாரயும் பாக்கவோ பேசவோ மாட்டேன்.
சரி. சரி. உன்னயெல்லாம் நம்ப முடியாது.
நம்புடா குட்டி.
சரி. நான் கிளம்பறேன்.
பசிக்கு சாப்பாடா இருந்தாலும், தாகத்துக்கு தண்ணியா இருந்தாலும் அது தேவையான நேரத்துல கிடைக்கணும். அதே மாதிரி தான் வெற்றியும்.

Thursday, August 31, 2006

மாற்றம்

திகட்ட திகட்ட நாகரிகம். எங்கும் எதிலும் சுத்தம். பகட்டான தினசரி வாழ்க்கை. இத்தனையும் இருந்தும்,

காலை எழுந்தவுடன் பக்கத்தில் குறட்டை விட்டு தூங்கும், நைட் ஷிப்ட் போய்விட்டு வந்த நண்பன்..
பக்கத்து வீட்டில் இட்லி சாம்பருக்காக பருப்பு தாளிக்கும் மணம்..
கரப்பான் பூச்சிகள் நெளியும் கழிப்பறை..
சிகரட் பாக்கட் பக்கதில் வீற்றிருக்கும் தொந்தி கணபதி படம்..
நெற்றி வியர்வை வழிய நடந்து போய் வேன் பயணம்..
கூடவே பயணிக்கும் பெயர் தெரியாத அதே சமயம் அடிக்கடி கவனம் கவரும் அழகு கணிணி பெண்..
யுனிட் வாசலில் எப்பொழுதும் சல்யுட் அடிக்கும் செக்யுரிட்டி..
வருகை பதிவேடாக எப்பொழுதும் தொடும் அதே அரத பழசான கணிணி..
மத்தியான உணவுக்கு வரிசையாக அழைக்கும் நண்பர்கள்..
சுமாராக இருந்தாலும் நெஞ்சை நிறைக்கும் சௌத் இன்டியன் உணவு..
அதன் பிறகு வரும் மதி மயக்கும் இளம் தூக்கம்..
பர பரவென டெலிவரி மெயில் அடிக்கும் அவசரம்..
பாலாஜி மெஸ்ஸில் வெலையாட்களை அடித்து துரத்தி வேலை வாங்கும் முதலாளி..
20 ரூபாய்க்கு வயிற்றை நிரப்பும் இட்லி மற்றும் தோசை..
வீட்டில் அன்றைக்கான வேலை பற்றிய நகைச்சுவை விமரிசனங்கள்..
துவைத்து பல மாதங்களான தலைகாணி, போர்வை, பாய்..
தூக்கம் வராமல் எதை எதையொ நினைக்கும் பொல்லாத மனம்..
வெள்ளி கிழமை ஏறும் 102B விறைவு வண்டி..
நியாபகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கான ஈடற்ற அம்மா சமையல்..
யாரிடமும் அதிகம் பேசாமல், TVயில் மட்டுமே வாழும் சனி & ஞாயிறு..
திங்கள் அதிகாலை பேருந்து பயணம்..

இது எதுவும் இல்லை. தவிக்க வைத்த போதும் தாய் நாடு, தாகம் தீர்க்கும் புஷ்கரணி. வெளி நாடு??

Sunday, July 30, 2006

(தி). மு. க

அது தான் கலைஞர். இப்படி முடிந்துள்ளது, மு.க. ரஜினி ராம்கி எழுதியுள்ள அடுத்த புத்தகம்.

புத்தகத்தின் ஆரம்பமே, அடடா ஜால்ரா அடிக்க போறாங்கன்னு நெனச்சா, நல்ல வேளை அது இல்லே. பூ மாறி பொழியும் வார்த்தைகளோ, நெஞ்சை பிழியும் உணர்ச்சி பிழம்புகள், கழகத்தின் கொள்கைகள், திராவிட கோஷம் இப்படி எதுவும் இல்லை. இது இல்லாமல் எழுதியதற்காகவே ஒரு சபாஷ்.

பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் இவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் முடியாது. அதனால் தானோ என்னவோ, இவர்கள் சம்மந்தபட்ட பகுதிகள் படிப்பதற்கு மிகுந்த சுவாரசியம். இது அத்தனையும், கலைஞர் துடிப்புடன் செயல்பட்ட காலங்கள். மிக வேகமாக படிக்க முடிந்தது. அதன் பின், சிறிது தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு வேகமான இளைஞர், அவரின் வாழ்க்கை ஓட்டம். இன்று அவர் ஒரு முதியவர். ஆனால், அரசியல் சாராத ஒரு இளைஞர் அவரை பற்றி எழுதுகிறார்.

அரசியல் இல்லாமல் ஒரு அரசியல்வாதி பற்றி ஒரு நல்ல ஒரு பதிவு.

Saturday, July 22, 2006

உறுபசி

நண்பரிடம் ஓசி வாங்கி படித்தேன். இதன் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் இப்பொழுது நட்ச்சத்திர எழுத்தாளர். அது மட்டுமல்ல, சுகானுபவ எழுத்துக்கு சொந்தகாரரும் கூட. கற்பனை எழுத்துக்கு இவர் கொஞ்சம் முக்கிய இடம் கொடுக்கிறார். ஆனால் அந்த கற்பனை கூட, சம கால அனுபவத்தை வைத்து சொல்லும் கதை சொல்லி.

நண்பர் இதை கொடுக்கும் போது, பர பரன்னு படிக்காதிங்க. அப்புறம் புரியாது. எனக்கு என்னமோ இந்த ஜிரோ டிகிரி மாதிரி இருக்க போகிறது என்று நினைத்தேன். நல்ல வேளை, அப்படி எதுவும் இல்லை. சாமானிய நாலு நண்பர்கள் பற்றிய கதை. ஒருவன் இறந்து போகிறான். பிறரின் நினைவலைகளும், அந்த இறந்த நண்பனின் நீண்ட நெடும் பழைய சம்பவங்கள்.

கதை இக்காலத்துக்கும், அக்காலத்துக்கும் தாவுகிறது. ஆனால் படிக்கும் அந்த ஓட்டம் தடைபடவில்லை. அவரின் பயண அனுபவங்களை அள்ளி தெளித்திருக்கிறார். அதே நேரத்தில் சம்பத் என்னும் அவருடைய நாயகன் தான் உறுபசி முழுவதும் வியாபித்து இருக்கிறார், அவர் கதையின் ஆரம்பத்திலேயே இறந்து போனாலும். எஸ் ரா சம்பத்தை ஒரு வித்தியாசமான நபராகவும், அதே நேரத்தில், சுப்பர் சுப்புவாகவும் காட்டவில்லை. இளமையில் அலை கழிக்கபட்ட சில பேரில் இவனும் ஒருவன். இவனை பிடித்தோ பிடிக்காமலோ உடன் இருந்த 3 நண்பர்கள். அவர்களின் எண்ண ஊற்றுக்கள்.

மொத்ததில் ஒரு நல்ல கதை படித்த திருப்தி, ஓசியில்.

Sunday, July 09, 2006

வேலூர்

தெய்வம் இல்லாத கோயில்
தண்ணீர் இல்லாத ஆறு
மரங்கள் இல்லாத மலை
அழகு இல்லாத பெண்கள்

இப்படி எல்லாம் எம் நகரத்து மக்களே தங்கள் ஊரை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதுண்டு.

கோடை காலத்தில் தமிழகத்து மக்கள் அதிகம் கவலைபடும் இடம். இங்க இவ்ளோ வெயில் அடிக்குதே, பாவம் இந்த வேலூர்காரங்க என்ன தான் பண்ணுவாங்களோ? இப்படி பல பேர் நினைக்கும் நகரம். ஆனால் இந்த மக்கள் அதற்கு எல்லாம் சலைத்தவர்கள் அல்ல என்று நினைக்க தோன்றியது, வேலூர் கோட்டை பார்க்கும் போது.

இப்பொ மேட்டர் இன்னா தெரியுமா. இங்க தான் இந்தியாவோட முதல் சுத்ந்திர போராட்டம் நடந்தது, எப்பொ தெரியுமா 1806. அதோட 200வது ஆண்டு விழா, எங்க ஊரு ஒரே ஜொலி ஜொலிப்பு. அதுக்காக இங்க இருக்கிற கோட்டைல திப்பு மகால் திறந்து விட்டாங்க. நல்ல கூட்டம். தமாஷ் சொல்ரேன் கேளுங்க,

சரியா 4:00 மணி. நாங்க போன நேரத்துக்கு சில பெரிய தலைங்க வந்து இருந்தது. அவுங்க பின்னாடியே எல்லா மக்களும் போயிட்டோம். நம்ம மக்கள் ரொம்ப புத்திசாலிங்க (என்னயும் சேத்து தான்). அவங்க எதோ பெரிய ஆபிசர் ரூமுகுள்ள போக, நாங்களும் போயிட்டோம். அப்படியும் திப்பு மகால் போகலமாம். எங்களுக்கு என்ன தெரியும். அந்த பெரிய மனுசங்க பின்னாடியே நாங்களும். அதுல அந்த ஆபிசர் டென்சன் ஆகிட்டாரு. நம்ம வயசு பசங்க, கலாச ஆரம்பிசிட்டாங்க. அதுல இன்னமும் டென்சன் ஆன ஆபிசர், கதவ முடிட்டாரு, ரெண்டு பக்கமும். மக்கள் கொந்தளிச்சு போயிட்டாங்க. கதவ பலமா தட்டறதும், கத்தறதும் ஒரே கூச்சல். இதுல என் பின்னாடி இருன்த ஒரு பெருசு சொல்லுது, 'மறுபடியும் ஒரு சிப்பாய் கலகம் வந்துரும் போல இருக்கே'.

ஒரு வழியா உள்ள போயிட்டோம். அங்க பார்த்தா, ஒரு கைட் கூட இல்ல. நம்ம ஆளுங்களுக்கு சொல்லனுமா, ஆளாளுக்கு கைட் ஆகிட்டாங்க. ஒருத்தன், இங்க தான் திப்பு சுல்தான் பல்லு விளக்குவார் அப்படீன்ற அளவுக்கு அளந்து விட ஆரம்பிச்சிட்டாங்க. உண்மை என்னனா, திப்பு இறந்தப்புறம் அவரோட குடும்பம் மொத்ததயும் இங்க அடைச்சி வெச்சிட்டாங்க. திப்பு சுல்தான் வாரிசுகளோட உதவியோட தான் அப்போ இருந்த சிப்பாய்கள் எல்லாம், வெள்ளைகார துரைங்க கூட மோதினாங்க. இதெல்லாம் அங்க இருந்த ஒரு அரசாங்க ஊழியர் சொன்னது.

திரித்து பேச இது என்ன செல்வி சீரியல் கதையா? தெரியவில்லை என்றால் சும்மா இருப்போம். இது ரத்தம் தோய்ந்த வரலாறு அய்யா.

Saturday, June 17, 2006

விளம்பரம்

சாகித்திய அகாடமி விருது ஒரு வகையில் புத்தகம் பிரபலபடுத்துவதற்கான வழியோ என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது, அலுவலகத்தில் ஒரு நண்பர் கூறிய பின்.

கணிபொறி எழுத்துகள் கூட இப்பொழுது பேச ஆரம்பித்து விட்ட காலம். படிக்க அப்படி ஒரு அலுப்பு இப்பொழுதெல்லாம். பழைய புத்தகங்கள் விற்கும் ஆழ்வார் இப்பொழுது எந்த இடத்தில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறாறோ? தெரியவில்லை.

சுட்டெரிக்கும் வெயிலில் மதிய உணவுக்காக சென்று கொண்டு இருந்தோம், முன்பு கூறிய நண்பருடன். அவரிடம், நான் சமீபத்தில் வாடகை நூலகத்தில் கள்ளி காட்டு இதிகாசம் எடுத்து படித்து கொண்டிருப்பதாக சொன்னேன். சற்றும் எதிர்பாராத விதத்தில் சொன்னார், 'சாகித்திய அகடமி கெடச்சவுடனெ படிக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு'.

அவருக்கு என் விளக்கம் கொடுத்த பிறகும், நினைத்து கொண்டிருந்த்தேன். நான் ஏன் ஆனந்த விகடனில் தொடராக வந்த போது படிக்கவில்லை?

சாகித்திய அகடமி விருது விளம்பரத்திற்கான ஒரு உத்தியோ? நான் அதில் ஒரு பலி கடாவோ? விளம்பர உத்தியில் விழுந்த ஒரு விட்டில் பூச்சியோ நான்?

Saturday, March 11, 2006

agara mudhala...

இந்த வலை பக்கதிலாவது அடிக்கடி எழுதுவேனா? தெரியவில்லை? ஆனால், முயற்சி செய்யலாம் என்று ஒரு முடிவு.

தமிழ் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு. கூடவே ஒரு சகாவின் தூண்டுதல்.
தமிழ் எழுத, நான் தகுதி உடையவனா? தெரியவில்லை.

எத்தனை எத்தனை படைப்பிலக்கியங்கள். படைப்பாளிகள். நான் எம்மாத்திறம்.

பாரதி, பல மொழிகள் கற்ற மகாகவி. அவர் பேசிய தமிழ், நானும் பேசுவதில் ஒரு மகிழ்ச்சி. பலருக்குள் விதைந்துள்ள தமிழ் விருட்சம் அவர். எனக்குள்ளும். உன்னை வணங்கி என் முதல் அடி.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...