Thursday, April 05, 2007

70 மில்லியன் பேர்களில் ஒருவன்

70 மில்லியன் வலைபதிவுகள்
120,000 புதியவை, ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு நொடியும் 1.4 வலைபதிவுகள் புதியவையாக துவங்கபடுகின்றன
3000 முதல் 7000 வரை பதிவுகள் தினமும்
35 மில்லியனிலிருந்து 75 மில்லியன் ஆவதற்கு ஒன்றுமில்லை ஜென்டில்மேன் 360 நாட்கள் தான்
ஜப்பான் சகோதர சகோதரிகள் பதிவு எழுதுவது தான் அதிகம். 37%.
ஆங்கிலம் அவர்களுக்கு அடுத்தபடி. 33% (இந்த வருடம் விட்டு கொடுத்துவிட்டார்கள்)


இப்படியெல்லாம் புள்ளி விவரத்தை அள்ளி தெளிக்கிறார்கள் Technorati மக்கள்.

இத்தனை இருந்தும் நம் நட்பு வட்டாரங்கள் பலருக்கு பதிவுலகம் இப்படி பல்கி பெருகியிருப்பது தெரிந்திருப்பதில்லை. அவர்களுக்கும் தெரியவைத்து, 70 மில்லியன் சீக்கிரமே பில்லியன் ஆகட்டும்.

காலரை தூக்கிவிட்டு, நானும் ப்ளாகராக்கும் என்று பார்ப்பவர்களிடம் சொல்லலாம். ஆனால், இப்போதைய உலக சுழலில் பெரிதும் பேசபடுகிற எந்த விஷயமும் ஒரு பயத்துடனேயே பார்க்கபடுகிறது. நம் பதிவு உலகமும் அப்படித்தான். சிதறாமல் இருக்கும் வரை சந்தோஷம்.

Saturday, March 31, 2007

இலவச broadband


ஏப்ரல் 1. நமகெல்லாம் தெரிந்தவர்களை முடிந்தவரை ஏமாற்றவோ இல்லை அதிர்ச்சிகுள்ளாகவோ ஆக்கலாம். நானெல்லாம் அதற்கு அதிகம் யோசித்ததில்லை. சிலர் வார கணக்கில் யோசித்து ஏப்ரல் 1 அன்று திட்டத்தை அமுல்படுத்துவார்கள்.

இதோ நம் கூகுளாண்டவரின் திட்டம். நான் கூகுள் பக்கம் பார்த்தவுடன், என்னடாது இலவசமா Wireless broband internet connection குடுக்கறாங்க (Google TiSP). சரி, என்ன விசயமென்று கொஞ்சம் உள்ளே நுழைந்தேன். படிக்க படிக்க என்ன கருமம்டா இது என்று தோன்றியது. இப்படியெல்லாம் இவுங்களுக்கு ஏன் யோசனை வருது என்று நினைத்துக்கொண்டிருந்த போது, அடடா வழக்கமாக விஷேஷங்களுக்கு மட்டுமே மாற்றுபவர்கள், இன்றைக்கு team meeting போட்டு யோசித்து டாய்லெட் மூலம் இணைய இணைப்பு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளார்கள்.

நல்லா ஏமாத்திடீங்கையா. சந்தோஷம். (இது உண்மை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். அப்படியெல்லாம் வரும் இணைய இணைப்பு எனக்கு தேவையில்லை)

Thursday, March 29, 2007

Alicia Chinai

1996. தூர்தர்ஷன் மட்டுமே பலரின் வீட்டில் இருந்த விஷயம். கலாநிதி மாறன் தமிழ்மாலையில் இருந்து சன் டீவிக்கு சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்த நேரம். எந்த பாடலும், படமும் பிரபலமாக தூர்தர்ஷனின் தயவு அதிகம் தேவைப்பட்டது.


அந்த காலத்தில் பெரிய திரைக்கு வராமல், பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆல்பம் என்ற புது வடிவத்தை ஒரு 4 நிமிட பாடலில் தமிழ் நாட்டிலும் நுழைத்தவர் அலிஷா. அப்போதெல்லாம்,
ஹிந்தி திரைப்பட பாடல்கள் என்னதான் வட நாட்டை புரட்டி போட்டாலும், தமிழ் நாட்டில் டீ கடையில் ஈ கூட கேட்காது. இப்போது காலம் பதல் ஹோ கயா. மேட் இன் இன்டியா வந்தவுடன் நிறைய பேர் முனுமுனுத்தார்கள். அசாத்தியமான இசையின் வெற்றி.

நாங்களெல்லாம், இந்த பாட்டை காதோரம் கேட்டவுடன், குவார்ட்டர்ஸில் யார் வீட்டில் ஒடுகிறதோ, அங்கே பாட்டு முடிவதற்குள் பேயோட்டம் ஒடி எப்படியாவது கடைசி சில நொடிகளாவது பார்த்து விடுவோம். அந்த வீட்டு ஆன்ட்டியும், பசங்களுக்கு நாட்டு பற்றும், இசை பற்றும் அதிகம் என்று பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்வதெல்லாம், ஒரு காதில் கேட்டுகொண்டு, அலிஷாவையே முறைத்துகொண்டிருப்போம். எப்படியோ எங்களுக்கெல்லாம் தேச பற்றை தெரிந்தோ தெரியாமலோ ஊட்டி விட்டார் அலிஷா. அப்படி ஒரு அழகிய ராட்சசி. இப்போது எப்படியும் 35 அல்லது 36 வயதில் இருப்பார். பார்க்காமல் இருப்பது நலம் :)

துள்ள வைக்கும் இசை. பாடகியின் குரலை கொஞ்சமும் மறைக்காத பிண்ணனி, கோரஸ் என்றால் இது தான் என்று சொல்லும் மேட் இன் இன்டியா தருணங்கள், அலிஷாவின் குரல், பல்லவி சரணம் அனுபல்லவி என்றெல்லாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் இசையாக ரசிக்க வைத்த பாடல் மேட் இன் இன்டியா...

Wednesday, March 14, 2007

பசுமை விகடன்

எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி :) எல்லாம் படிப்பேன். அப்படி புரட்டிகொண்டிருந்த போது, அப்படி என்ன தான்பா பவி'ல சொல்லியிருக்காங்க, என்று கொஞ்சம் தடவினேன்.

விகடன் பாதி வியாபாரமாகி விட்ட காலமிது. 144 பக்கங்களில், கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு பழைய விஷயங்களை தொடர்வது, நீண்ட கால வாசகர்கள் எல்லோரும் தெரிந்திருக்கும் விஷயம். வந்த பாதையில் பலவற்றை தொலைத்து விட்டாலும், பசுமை விகடனில் தொலைத்ததை தேடியிருக்கிறார்கள் என தோன்றுகிறது.

வயலும் வாழ்வை தொடர்ந்து ஒளிபரப்பியே பாவம் கட்டி கொண்டது தூர்தர்ஷன். விவசாயம், சாகுபடி, உரம், கொள்முதல், பூச்சிகொல்லி இதையெல்லாம் கேட்டால் நடராஜன் காத தூரம் ஒடுவார் என்று நினைக்கிறேன். இவ்வளவு பார்த்த பின்பும் பசுமை விகடனை தொடங்கியது, வியாபார நோக்கம் இல்லை.

படிக்க சுவாரசியம். பக்கத்துக்கு பக்கம் பசுமை. படிக்க படிக்க இனிமை என்று இதற்கு கூவியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கணிப்பொறியில் இருந்தவர் விவசாயம் செய்வது, நார்வே Global Warming மனதில் வைத்து அழிக்க முடியாத விதை கிடங்கை ஆர்டிக்கில் அமைப்பது, போக்குவரத்து அமைச்சர் K.N.நேரு விவசாயம் பேசுவது, கொடைகானலின் பக்கத்து கிராமத்தில் மாட்டு பண்ணை நடத்தி பால் மற்றும் உற்பத்தி செய்யும் அமெரிக்க பெண், மதுர ஜில்லா ஆளுங்களை பற்றி எல்லாம் நம் மண்டைக்கு எட்டும் பாஷையில் சொல்லியிருக்கிறார்கள் இந்த மாத இதழில்.

இந்த முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கை கண்டிப்பாக இல்லை. நாணயம் விகடன் பிரதி அதிகம் போடுங்க, பசுமை விகடன் கம்மியாவே போடுங்க என்று விகடனின் நலம் விரும்பிகள் அவர்களிடம் ஜாக்கிரதையாக சொல்லியிருப்பார்கள்.
தற்சமயம் விவசாயிகளாக உள்ளவர்களை அதிலேயே நீடிக்க வைத்தால் அதுவே பெறும் புண்ணியம்.

Tuesday, March 13, 2007

Philadelphia

இதோ இன்னொரு படம்(பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள்.

இவர்கள் சிறிய விஷயத்தை, உணர்வுகளோடு ஊதி பெரிதுபடுத்துவதில் கில்லாடிகள். படத்தின் ஆரம்பத்தில் அதிகம் தொட்டுகொள்ளாமல் தான் பார்த்தேன். நாயகனுக்கு எய்ட்ஸ் என்ற விஷயத்தை தொட்டவுடன், அடடே நல்லா இருக்கே இந்த மேட்டர் என்று நினைத்து பார்க்க தொடங்கியது, முடிவில் கொஞ்சம் கணத்தோடு தூங்க போனேன்.

Tom Hanks மற்றும் Denzel Washington, இவர்களை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியவில்லை. படத்தை சுற்றி இவர்களின் ஆதிக்கம். அதிலும் Denzel Washington, எங்காவது பார்த்தால், எங்க ஊருக்கு வந்து கொஞ்சம் பாடம் எடுங்களேன் என்று கேட்கலாம் என்று நினைக்கிறேன்.

இங்கே பலரின் வாழ்க்கை முறையில் ரகசியமாக புகுந்துவிட்ட ஒரினசேர்க்கை பற்றி மேலாக சொல்லியிருக்கிறார்கள். அதை புரிய வைக்க அப்பட்டமான காட்சிகள் கண்டிப்பாக இல்லை.

ஒரு தனி மனிதனின் உணர்வுக்கு பாதகம் ஏற்பட்டால், அதை மில்லியன் டாலரில் ஈடுகட்டி எல்லாரும் மகிழ்ந்து கொள்ளும் நிகழ்வை படமாக்கி, Tom Hanks'க்கு OSCARம் வாங்கி கொடுத்து விட்டார்கள்.

Friday, March 02, 2007

A magnitude 4.2 earthquake is considered a "light" quake. More than 6,000 occur on an annual basis according to the U.S. Geological Survey (USGS).

இங்கே எல்லோருக்கும் இயற்கையின் இடர்பாடுகள் தினமும் கேட்கும் ஒரு விஷயமாகி விட்டது.

அறையில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். தீடீரென ஒரு குலுக்கல். சில நொடிகளுக்கு தொடர்ந்தது. 4.2 ரிக்டர். ஆனால், எங்களிடம் பெரிய அதிர்ச்சி இல்லை. நண்பர் சொல்கிறார், 'இது பரவாயில்ல. அப்புறம், எங்க விட்டேன்.' அப்படியென்று விட்ட இடத்தில் இருந்து அறுக்க ஆரம்பித்தார்.


வருடங்கள் ஆக ஆக, பனியும், மழையும், வெயிலும், பூகம்பமும் தங்கள் இருப்பை அதிகம் வெளிக்காட்டி கொள்ள ஆரம்பித்துள்ளன. GLOBAL WARMING பற்றி இப்போது எந்த உலக குடிமகனும் அறிந்திருக்க கூடும். ஆஸ்காரில் கூட இதே பேச்சு தான். அல் கோர், இதற்கான டாகுமென்டரி எடுத்து தன் பங்குக்கு கொஞ்சம் இடம் பெற்று கொண்டார்.

போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில்/மழை/பனி அதிகம் தான் இல்ல, என்ற வசனம் கேட்டு நீங்கள் அடிக்கடி அலுத்து போக வேண்டியிருக்கும். உலகின் முதல் மனிதன் பார்த்து பயந்த அத்தனை விஷயங்களும், மறுபடியும், நம்மை எல்லாம் உலுக்க ஆரம்பித்து விட்டது.

மனிதன், செவ்வாயில் அபார்ட்மென்ட் கட்ட இன்னும் அதிக வருடங்கள் இல்லை என நினைக்கிறேன். ICICI இதற்கு இப்போதே லோன் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

Saturday, February 24, 2007

மொழி, இப்போது திரைகளில்.
Premiere show இங்கே பாருங்கள்.
படத்தின் முன்பு உருவான அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக உடைத்தெரியாத ஒரு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Tuesday, February 20, 2007

சங்கீத ஸ்வரங்கள்

சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்...
என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்ல பகலா.. எனக்கும் மயக்கம்...
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்.. நானும் தான் நெனச்சேன்.. நியாபகம் வரல.. என்னவோ மயக்கம்...

இந்த பாட்டை கேட்கும் போது, இரவில் பேசும் பலரின் நியாபகம் வந்தது. இவர்களில் பலரை கவனித்திருக்கிறேன். அவர்கள் காதலித்து கொண்டிருக்க கூடும், இல்லை, நிச்சயமாகி கல்யாண தேதியை எதிர்பார்த்திருக்க கூடும். ஆய்ந்து ஒய்ந்து பேசி விட்டு, படுக்கையில் சாயும் போது அப்படி ஒரு பெரு மூச்சு. மனது முழுவதும், அந்த இரவை இன்பமாக்கி விட்டவரை நினைத்து கொண்டு, கனவுக்கு தயார் செய்து கொண்டு, கண் மூடுவார்கள்.

சில நேரங்களில், கடும் கோபம் வரும். பல நேரங்களில், சந்தோஷமே மிஞ்சும். அப்படி என்ன தான் பேசுவார்கள்? கண்டிப்பாக, ஜார்ஜ் புஷ் பற்றியோ, அமிதாப் குடியரசு பதவிக்கு பேசப்படுவதை பற்றியோ இருக்காது. இல்லாத வரை சந்தோஷமே. பெரும்பாலும், அடுத்தவரை கிள்ளிவிட்டு, சிணுங்குவதை ரசிப்பார்கள். இல்லை, கொஞ்சம் ego கிளப்பி விட்டு, செல்ல கோபத்தை உருவாக்கி, பின் அதை அணைக்க, காதல் வார்த்தைகள் பேசி நேரத்தை எப்படியாவது கடத்தி விடுவார்கள்.

தகவல் தொடர்பு வளர்ச்சியும், இவர்களின் பேச்சு வளர்ச்சியும் கூடவே செல்லும். நிறைய பேர், பேசுவதற்கு முன் தொலைபேசியை கடவுளாகவும், மாத கடைசியில் அந்த கடவுளை மிக கேவலமாக திட்டுவதும் உண்டு.

ஆனால், அந்த அந்தி சாய்ந்த வேளையில், பிடித்தவரின் குரலை எல்லா மாடுலேஷனிலும் கேட்டுவிட்டு தூங்குவது என்னவோ ஒரு போதை தான். வீழும் வரை வாழட்டும் காதலும் மொபைலும்.

Thursday, February 15, 2007

ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ்

வெகு நாட்களாகவே ஜேபி எக்ஸ்பிரஸ் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு வந்தபின் BARTல் போகும் போது, அடிக்கடி ஜேபி நியாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, வேறு வேறு நாட்டில் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.
ஆனாலும், ஜேபி ஏற்படுத்திய பாதிப்பை கொடுக்கவில்லை BART.
அப்பொழுதெல்லாம், அதிகம் ரயிலில் போய் பழக்கம் இல்லை. ஆனால், 3 மாதத்திற்கு தினமும் காட்பாடியில் இருந்து சென்னை சென்று வர வேண்டும், அதுவும் ரயிலில் என்ற போது, மனதிற்குள் மகிழ்ச்சியே. அதிகம் கேள்விபட்டதில்லை, இந்த ஜேபி பற்றி. காலை, 6:20க்கு காட்பாடி ஸ்டேஷனிற்கு வரும், ஜோலார்பேட்டையில் இருந்து. ஒரு வாரம், எழுந்து போய்விட்டு வந்ததிற்கே, தாவு தீர்ந்து விட்டது. காலை, 5 மணிக்கு ஸ்டேஷனை பார்க்க வேண்டுமே, எங்க இருந்துடா வந்தாங்க என்ற மலைப்பே மிஞ்சும். இதை போன்று பல வருடங்களாக போய் வருகிறோம் என்று அவர்கள் கூற, சற்று வாழ்க்கையை பற்றிய கவலை வந்தது, நானெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு.

எல்லோரிடமும், இரண்டு உணவு மூட்டை இருக்கும். ஒன்று, அரக்கோணம் தாண்டியவுடன் சாப்பிட வேண்டிய காலை உணவு. இரண்டு, வழக்கம் போல, மதியம். அரக்கோணம் நெருங்கும் போதும், தாண்டிய பின்னரும், எல்லா கோச்களிலும், கண்டிப்பாக இட்லி, தோசை, பொங்கல், பழைய சாதம் சாம்பார், உப்புமா வாசனை வீசும். அதிலும் சிலர், காலை உணவு மட்டும் எடுத்து கொண்டு வருவதில்லை. நடுவில் பொட்டலம் கட்டி, இட்லி தோசை விற்கும் ஒருவரின் சமையல் ருசி கண்டவர்கள் இவர்கள். சில சமயம், அதை சாப்பிட்டு பார்த்ததும் உண்டு. சொல்வதற்கு குறை ஒன்றும் இல்லாத பொட்டலங்கள் அவை.

கீழே இந்த பக்கம் 5 பேர், அந்த பக்கம் 5 பேர். மேலே இந்த பக்கம் 3 பேர், அந்த பக்கம் 3 பேர். வார நாட்களில் போனீர்களானால் உங்களுக்கே தெரியும். தாங்கள் வாங்கிய வீட்டை யாராவது அபகறித்தால் கூட இப்படியெல்லாம் கோபம் வருமா என்று சொல்வதிற்கில்லை. அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தை தெரியாமல் புதிதாக வரும் யாரவது பிடித்தால், கண்டிப்பாக அந்த கோச்சில் குருஷேத்திரம் தான். தூக்கம் தொலைந்த அத்தனை கோபத்தையும், புதியவரின் மேல் காட்டாமல் விட மாட்டார்கள். இவர்கள் அத்தனை பேரும் நிச்சியமாக கல்லூரி மாணவர்கள் கிடையாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று, தொந்தி விழுந்து, வழுக்கையில் வாடும் நடுத்தர அரசாங்க ஊழியர்களே. இவர்களின் இந்த இரண்டரை மணி நேர பயணங்கள் இல்லாவிட்டால், பேனா இல்லாத கவிஞர்கள் போலாகி விடுவார்கள்.

சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் முதலில் இருக்கும் மகளிர் கோச் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். பலர், கண்ணாடி பவுடர் சகிதம் மேக்கப் போட்டு கொண்டிருப்பதை எல்லாரும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். பாவம், இவர்களின் பிழைப்பு. பெரும்பாலும், ஒரு வழிசல் மேனேஜரிடம் மாட்டி கொண்டுள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சொல்ல நிறைய இருக்கிறது. பலரின் தூக்கத்தையும், கவலையையும், சீட்டு கச்சேரிகளையும், சிரிப்புகளையும், கிண்டலையும் சுமந்து இன்றும் ஒடிக்கொண்டு தான் உள்ளது என்று நினைக்கிறேன், இந்த ஜேபி. ரயில்வே அதிகாரிகள், இந்த ரயிலை நிறுத்தினால் பலருக்கு இருதய ஓட்டம் சிறிது நின்று ஓடும்.

Wednesday, February 14, 2007

பூவின் மொழி மணமா, நிறமா

இது என்ன, இசை வெளியீட்டு விழாவா, இல்லை, வெள்ளி விழாவா என்ற சந்தேகமே வந்தது, இந்த வீடியோ பார்க்கும்போது.

எனக்குள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது தமிழ் சினிமா. இப்போது அது கொஞ்சம் மாறி சினிமா மட்டுமாக உள்ளது. மற்ற உலக சினிமாக்களை பார்க்கும் போது, 'அட, நம்ம ஆளுங்க எப்போ இதெல்லாம் எடுக்க போறாங்க' என்று தோன்றும். மிக சிறிய கால கட்டத்திலேயே, இந்த உலக சினிமா எல்லாம் தமிழ் சினிமாவை மறக்கடித்தது. இப்படி இருந்தபோது தான், ஆனந்த விகடன் என்று நியாபகம். ஜோதிகா பேட்டி, மொழி படத்தை கண்டிப்பாக முடித்து கொடுத்து விட்டேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத படம் என்றார். கூடவே பலவையும் சொல்லியிருந்தார். சரி, வழக்கமாக எல்லாரும் சொல்வது தானே என்று நினைத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று, இந்த ராதா மோகனும், பிரகாஷ் ராஜ்ம் ஏமாற்ற மாட்டார்கள் என்ற எண்ணம்.

அப்படித்தான் இருக்கும் போல என்பது போல், இந்த இசை வெளியீட்டு விழா. வழக்கம் போல இசையை கொஞ்சமாக பேசி, மற்றவற்றை அதிகம் பேசினார்கள். ஈர்த்தது கனிமொழியும், வைரமுத்துவும். மாறுபட்ட சினிமா என்றார்கள். இப்போது வரும் எல்லா சினிமாவையும் அதை உருவாக்குபவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதையும் மீறிய பலவற்றை இவர்கள் கூற தவறவில்லை. பார்த்தால் உங்களுக்கே தெரியும். வைரமுத்து, எப்போதும் போல, உணர்ச்சியை உருக்கி, தமிழை பரப்பி பேசினார். பல நேரங்களில் அது அலுப்பே தட்டும், ஆனால், இதில் அல்ல. ஜோதிகா பாவம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே) நெகிழ்ந்தும், நெளிந்தும் இருப்பார்.

மொத்தத்தில், மொழி, நான் பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் சினிமா. இந்த படம், மசாலா நெடியை கொஞ்ச நாளைக்கு நிறுத்தும் என்ற நம்பிக்கையில் ஒரு பழைய தமிழ் சினிமா ரசிகன்.

Monday, February 12, 2007

I'm the greatest thing that ever lived. I'm so great I don't have a mark on my face. I shook up the world.

இவரை பற்றிய படம் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் அத்தனை பேருக்கும் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர். கொஞ்ச நேரத்திலேயே, இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமே என்று விக்கிபீடியாவை அணுகினேன்.

அந்த பதிவு, படத்தை விட சுவாரசியமாகவே இருந்தது. புகழை தன் காலடியில் இட்டு அடிபணிய வைத்த ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டம், அவரின் சண்டை முறையை போலவே படு வேகமாகத்தான் இருந்துள்ளது. புகழின் ஒரு புள்ளியை தொட்டவுடன் சரசரவென பல படிகள் பறந்துள்ளார், ஆனால், கீழே அதல பாதாளம் ஒன்று கண்ணுக்கு தெரியாமல் உண்டாவதை அறியாமல்.

அவர் வாழ்ந்த காலத்தில் உச்சத்தில் இருந்த பல குத்து சண்டை வீரர்களை வீழ்த்தியும், 6 முறையே குத்து சண்டை போட்ட ஒரு இளைஞனிடம் தோற்றும், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சண்டை போட்டு பார்க்கின்சன் நோய் பெற்றும், நாலு மனைவியரை கட்டி மேய்த்தும், பெண்கள் இதற்கெல்லாம் வர கூடாது என்று சொல்லி, தன் மகளை வர விட்டும், வாழ்க்கை சதுரங்கத்தை தன் போக்கில் வாழ்ந்துள்ளார்.

இப்பொழுது 22 மில்லியன் பேருக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி, உலகம் முழுவதும் தன்னால் முடிந்தவற்றை செய்து வரும்
இவரை பார்க்கும் போது புகழ் மட்டுமே தேடும் பலர் நியாபகம் வருகிறார்கள்.

முடிந்தால் இவரை நேரில் பார்க்க ஆசை.

I never thought of losing, but now that it's happened, the only thing is to do it right. That's my obligation to all the people who believe in me. We all have to take defeats in life.

Friday, February 09, 2007

காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது.

தாஜ் மகால், இதற்கு பின் பல கதைகள். இதோ இன்னுமொரு கதை. நீங்கள் கண்டிப்பாக கவனித்திருக்க வேண்டும். நடுவில் சமாதி, அதன் மேல் அழகு மிளிரும் பளிங்கு மண்டபம். அதை சுற்றி, நான்கு பெரிய தூண்கள். இங்கு தான் விஷயமே. அதை இன்னும் கவனித்து பார்த்தால், அவை சிறிது சாய்ந்து இருக்கும், மிக துல்லியமான சாய்வு. இது ஷாஜகான், மும்தாஜ் மீது வைத்திருந்த அளவில்லா காதலை மட்டுமே சொல்கிறது. பூகம்பமோ இல்லை எதாவது இயற்கை இடர் வந்தாலும் கூட, இந்த தூண்கள் சமாதி மீது விழுந்து விடாதபடி இருக்க இந்த சாய்வு. இறந்த பின்னும் தன் காதல் மனைவிக்கு எந்தவொன்றும் ஆக கூடாது என்ற காதலனின் சரித்திர காதல்.

இன்று நினைத்தாலும் நல்ல சிரிப்பு வரும் கதை இது. அப்போதெல்லாம், அடடா இப்படி லவ் பண்ணனும்டா என்று நினைத்து கொண்டிருந்ததே காரணம். அன்று தித்தித்த விஷயம் இன்று திகட்டுகிறது. கற்பனை இல்லாமல் ஒரு காதல், இருக்க முடியுமா? வயதை பொறுத்தது என்று நினைக்கிறேன்.

இன்றும் காதலாகி கசிந்துருக பல பேர் இருக்க, பிப்ரவரி 14, படு ஜோராக உங்கள் முன் சிறிது நாட்களுக்குள். எங்கு பார்த்தாலும், காதல் தான். வசூல் ராஜா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

12 வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே, லவ்வில்ல அது லவ்வில்ல
கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது மனசுக்குள்ள கவுளி கத்துமே, லவ்வில்ல அது லவ்வில்ல
...
இதுக்கு ஏன் உசிர குடுக்கனும்
...
லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா

பயமுறுத்தும் global warming மத்தியிலும், காதலை வைத்து வியாபாரம் பண்ணும் அனைவருக்கும் நல்ல நேரம். உங்களுக்கு எப்போதுமே வியாபரம் படுக்காது. பூமி அழிந்தாலும், செவ்வாயில் உங்களுக்காக சில காதலர்கள் காத்து கொண்டிருப்பார்கள்.

Tuesday, January 23, 2007

Yahoo

இங்கே, இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இரண்டு வாரத்திற்கு முன்பு. இதை கேட்டவர் மிக பிரபலம் என்பதால் சற்றே சூடும் பிடித்துள்ளது. நான் பார்க்கும் போது 15767 பதில்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சரியம் தான்.

இதை நம் ஜனாதிபதி படிப்பார், அவசியம் அதை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை பலருள் இருக்கும் போல தான் உள்ளது. செயல் படுத்த கூடிய மனிதர் தான் அவர். ஆனால், தனி ஆளாக, அவரின் உணர்வு மட்டும் அதை செய்து விடாது. உலகத்தின் அத்தனை மனங்களும் இணைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அவர் கேட்பது போல் இது முற்றிலும் தவிர்க்கபட்டு விட கூடிய விஷயம் தானா இது? நாம் எத்தனை தான், டெஸ்டிங் செய்தாலும் எங்கிருந்தோ வந்து விடும் ப்ரோகிராம் பக் போல தான் இதுவும். நம்மால் செய்ய முடிபவை அத்தனையும் செய்தாலும், எங்கோ ஒரு முலையில் இதன் மவுன மூச்சு இருந்து கொண்டு தான் இருக்கும். அதன் கடைசி மூச்சை நிறுத்துவதற்கு பெரும் காலம் கண்டிப்பாக பிடிக்கும். அதற்கான முயற்ச்சிகள் அரசாங்கத்திடம் மட்டும் இல்லாமல், இது போன்று பொது மக்களிடமும் ஏற்பட்டால், அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களிடம் அதை கொண்டு செல்லும் சரியான ஒரு வழி இது.

இணையம், ஷில்பா ஷெட்டி மற்றும் ஜேட் கூடி வீடியோ பார்ப்பதற்கு மட்டுமில்லை, இதற்கும் தான் என்று கூறும் நல்ல முயற்சி.

இன்னமும் 5 நாட்கள் தான் உள்ளது. நம்மால் முடிந்ததை செய்வோமே!!!

Wednesday, December 27, 2006

சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்...

வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்) உதவி தான். எப்போதும், பட படவென்று திருப்பிவிட்டு, என் போக்கில் பாட்டு கேட்பது வழக்கம். இன்றைக்கு கொஞ்சம் படிக்கவும் செய்தேன். படித்தது சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிகல் (San Francisco Chronicle), செய்தி நம்ம ஊர் தோசை பற்றியது. இந்தியா என்ற வார்த்தை பார்த்தாலே விட மாட்டேன், இதில் (மசாலா) தோசை படம் போட்டு, அதை பற்றி எழுதியிருந்தால், படிக்காமல் இருக்க தோன்றாது.

சுவாரஸ்யம் தான், ஒரு வெளி நாட்டவர் (Michael Bauer) நம் ஊர் தோசை வார்க்கும் உணவகம் தான் சிறந்த பத்தில் (in San Francisco) முதல் என்கிறார். அமெரிக்காவில் எப்போதுமே வித விதமான இதர நாட்டு உணவு வகைகள் மட்டுமே பெயர் பெறுகிறது. அந்த வகையில், இந்திய உணவு வகைகள், இந்தியர் அல்லாத பலரால் விரும்பபடுவது உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. நானும் நண்பரும் அடிக்கடி போகும் பஞ்சாபி உணவகத்தில் எங்கள் இரண்டு பேரை தவிர வெறு இந்தியர்களை பார்ப்பது கடினம். அவ்வளவும் அமெரிக்கர்களும், மற்ற நாட்டவரும் தான். அப்படி என்ன தான் ஈர்த்து விட்டது இவர்களை? நம் நாட்டின் கார சாரமான சமையல் முறையாக இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. அதுவும் இல்லாமல், இவர்களுக்கு எப்போதும் ஒரு மாதிரி வித்தியாசபடுத்தி சாப்பிடும் எண்ணம் பலரிடம் உள்ளது.

இந்த செய்தியை படித்தவுடன், கண்டிப்பாக இந்த வார இறுதியில் தோசா உணவகத்துக்கு சென்று விடுவேன் என்று தான் நினைக்கிறேன். நீங்களும் சான் பிரான்ஸிஸ்கோ பக்கம் இருந்து, தோசை பிரியராய் இருந்தால், வாங்களேன் அங்கே போய் ஒரு கை பார்போம்.

Tuesday, December 26, 2006

இருட்டு கடை

காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும் இடத்தில் போனால் அங்கே தான் என்று வழி காட்டினார். கூடவே, 'இப்போ போகாதீங்க, சாயங்காலம் 5 மணிக்கு தான் திறப்பாங்க'. ரயில் 5:45க்கு. இருந்தாலும், அந்த கடையை பார்த்து விட்டு, அல்வாவையும் நேரில் வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை என்னை காத்திருந்து கண்டிப்பாக போக சொன்னது.

கொஞ்ச நேரம் ரயில் நிலையத்தின் வெயிட்டிங் அறையில் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி நெல்லையப்பர் கோவிலில் இறங்கினேன். எதிர்ப்பார்க்கவில்லை, அந்த கோவில் இத்தனை பெரியதென்று. அந்த சாயங்காலமும் மதியமும் சேர்ந்த நேரத்தில் கோவிலில் அதிகம் பேர் இல்லை. ஆசை தீர, சுற்றி பார்த்தேன். கோவிலை அமைதியாக, யாரும் இல்லாத போது சென்று பாருங்கள். அதன் ரம்மியம் தனி. எண்ணை வாசனை, மெல்லிய காற்று, எங்கோ தூரத்தில் ஒலிக்கும் மணி சத்தம், தூணுக்கு பின் தோழியிடம் சண்டை போட்டு கொண்டிருக்கும் தோழன், இரும்பு கம்பிகளுக்கு பின் அருள் பாலிக்கும் பல கடவுள்கள், கோவில் தோட்டத்து சல சல சத்தம். ஏகாந்தம்! இத்தனையும் இருட்டு கடை அல்வா வாங்க வேண்டும் என்ற ஆசையால் கிடைத்தது.

வெளியே வந்து செருப்பை வாங்கும் போது, பக்கத்தில் இருப்பவரிடம் 'இருட்டு கடை எங்கங்க இருக்கு'. 'அதோ' என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் பல கடைகள் கொண்ட இடம். சரி, எதாவது போர்ட் இருக்கும் என்று, கிட்டே போய் கேட்டால், பக்கத்தில் டீ கடை அளவுள்ள, சில பலகைகள் கொண்டு முடப்படும் அந்த காலத்திய அமைப்புள்ள ஒரு கடை. அதை பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், நேரில் பார்க்கும் போது பெரும் வியப்பே மிஞ்சியது. அப்போது அங்கு யாரும் இருக்கவில்லை, ஒருவரை தவிர. அவரை விசாரித்த போது, அல்வா வாங்கத்தான் அவரும் காத்திருப்பதாக சொன்னார். வாங்கி விட்டு, அவரும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும் என்றார். பரவாயில்லை, நான் எடுத்த முடிவு கொஞ்சம் சரியானது தான் என்று நினைத்து கொண்டேன். பேச்சு கொடுத்தபின் தான் தெரிந்தது, அவர் என்னை போல் அல்லாமல் அதிகம் பேசுவார் என்று. நிறைய பேசி கொண்டிருந்தார். சொன்னதில் நான் பற்றி கொண்டது ஒன்று தான். அவரின் வீட்டு பக்கம் தான் இருட்டு கடை அல்வா பாக்டரி இருக்கிறது. அவரின் தாத்தா, அப்பாவுக்கு இந்த இருட்டு கடை முதலாளியிடம் நல்ல பெயரும் உள்ளது. அப்புறம் என்ன, அங்கேயே வாங்கி கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு கிடைத்த பதில், 'இங்க தவிர வேற எங்கயும் யாருக்கும் இவுங்க குடுக்கவோ விக்கவோ மாட்டாங்க'.

மார்க்கெட்டிங் என்ற பெயரால் இன்றைய விளம்பர வித்வான்கள் பலர் உயிரை கொடுத்து தன் பொருள் விற்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்திலும், கடைக்கு ஒரு பெயர் கூட வைக்காமல், ஆரம்பித்த அதே நிலையில் ஒரு மாற்றமும் இல்லாமல், செய்யும் பொருளின் தரத்திலும் கூட ஒரு மாற்றமும் இல்லாமல் உலக தரத்திற்கு பேசபடும் இவர்களின் முன் பலர் கண்டிப்பாக பாடம் கற்று கொள்ள வேண்டும்.

ரயிலுக்கு நேரமாகி விடும், கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது என்று கறாரான பதில், கடையில் வேலை செய்பவரிடம். அது வரையில் கிட்ட தட்ட பத்து பேராவது காத்து கொண்டிருந்தார்கள். முதலாளி வந்தே விட்டார். எங்கு இருந்து தான் வந்ததோ தெரியவில்லை அத்தனை கூட்டம். குறைந்து நாற்பது பேராவது முற்றுகை இட்டார்கள். சற்றே பின் வாங்கினேன். எனக்கு கில்லி சினிமா டிக்கட் வாங்க போய், முச்சு முட்டியது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், அலுவலக சகாக்களுக்கு அல்வா கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்று சொன்னதால், துணிந்து, வியர்வை பொங்க, முச்சு இறைக்க, அடுத்தவர்கள் திட்ட முன்னே போய் வாங்கியே விட்டேன். பக்கத்தில் நான் முன்பு பேசி கொண்டிருந்த நண்பரும் அவருக்கான கொள்முதல் செய்து விட்டிருந்தார். கூட்டத்தை தள்ளி கொண்டு இரண்டு பேரும் ஒரு பெருமித புன்னகையை பரிமாறி கொண்டு கிளம்பினோம்.

இந்த அனுபவத்தில் அதிகம் திரில் இல்லை என்றாலும் இருட்டு கடை என்ற அந்த வியாபார தலம் என்னை ஈர்க்கவே செய்த்தது. அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏன் உலகின் எந்த முலையிலுமே விளம்பரபடுத்தி கொள்ளாவிட்டால் எப்பேர்பட்ட கொம்பாக இருந்தாலும், சறுக்கி விழ வேண்டிய அபாய பொருளாதார நிலைமை மற்றும் கால மாற்றம் இப்போது. இது எல்லாம் தெரிந்தும், உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மட்டுமே நிஜம், மற்றவை எல்லாம் கண் துடைப்பு என்ற வியாபார கொள்கை உடைய இவர்களை நெல்லையப்பரின் கடைக்கண் பார்வை காக்கவே செய்கிறது.

(கடையின் படம், ramz பதிவிலிருந்து)

Sunday, December 24, 2006

Happy Christmas

எல்லோரும் Happy Holidays சொல்லி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள்.

Jesus Christ. இவரின் பிறந்த நாள், கண்டிப்பாக சிறந்த தினமே. மனிதமும், அமைதியும், இரக்கமும் சொல்லி கொடுத்த இவரின் குரல் நம்மில் பலருள் இன்னும் எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் போதித்த அத்தனையும் பின்பற்ற முடியாத கால கட்டங்கள் இப்போது. ஆனாலும் கண்டிப்பாக அதை நினைக்கவாவது செய்வது அவரை சந்தோஷ படுத்தும்.

மனிதம் எல்லோருக்குள்ளும் பல நேரங்களில் மறைந்து போகும், தன் வாழ்க்கை, தன் பாதுகாப்பு என்று நினைக்கும் போது. என்னுள்ளும் பல சமயங்கள், மனிதமும் அன்பும் இறந்து போனதை, இவரை பார்க்கும் போதெல்லாம் நியாபகம் வந்து, தலை குனிந்து போன பல தருணங்கள் உண்டு.

மதம் போதிக்காமல், மனிதம் போதித்த இவரை பற்றி நம் தேச தந்தை,

A man who was completely innocent, offered himself as a sacrifice for the good of others, including his enemies, and became the ransom of the world. It was a perfect act.

Roman Holiday

மறுபடியும் ஒரு பழைய படத்தின் பார்வை.

என்ன தான் இது போன்ற படங்கள் பலரால் விமர்சிக்கபட்டு, சிலாகிக்கபட்டு இருந்தாலும் இதை பற்றி எழுதும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

Audrey Hepburn , இவர் மட்டுமே இந்த படத்தை தன் பார்வையால், தன் சிரிப்பால், தன் பேச்சால், தன் குரலால், தன் வசன உச்சரிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார். முதல் படமான இந்த படத்தில் அவருக்கு சிறந்த கதா நாயகிக்கான அகாடமி விருது கிடைத்ததில் தவறே இல்லை.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஒரு கவிதையாகவே உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் ஆச்சரியபடுவது நடக்கும்.

ஒரு இயக்குனரின் திறமை, திரைக்கதையிலும் அதை முறையாக வெளிபடுத்த கூடிய நடிகர்களும் அமைந்து விட்டால் போதும். கண்டிப்பாக அந்த படம் அரங்கு நிறைந்த வெற்றி தான், இந்த படம் போல.

ப்ரபலம்னாலே ப்ராப்ளம் தான். இந்த ஒரு வரி கூட போதும், இந்த படத்தின் கதையை சொல்வதற்கு. அதை பார்பவர்களுக்கு புரிய வைக்க, இயக்குனர் பிரம்ம ப்ரயத்தனம் எதுவும் செய்யவில்லை. முதல் காட்சியில், அதை வார்த்தைகள் இல்லாமல், அழகாய் சொல்லி இருப்பார். பார்த்து மட்டுமே புரிய கூடிய விஷயம் இது.

Audrey Helpburn, எத்தனை அழகு. வியந்து போனேன். தூக்க மாத்திரை போட்டு, அந்த கலக்கத்தில் அவர் பேசும் அத்தனை வார்த்தைகளும் (Thank you. No Thank you. You have my permission to withdraw இப்படி பல), கொள்ளை அழகு. இப்படி கூட சாதாரணமாக மனதை திருட முடியுமா என்று வியப்பு தான். சில நாயகிகள் அவர்களின் முதல் படத்தில் ரசிகனின் இதயத்தில் சுலபமாக சம்மனம் போட்டு உட்கார்ந்து விடுவார்கள். இவரும் அப்படித்தான். அரச வம்சத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும், எந்த உணர்ச்சியையும் சராசரி மனிதர்கள் போல வெளிபடுத்தும் முறை இல்லை. அதை, பல காட்சிகளில் கஷ்டமே இல்லாமல் செய்திருக்கிறார். அவர்களுக்குள் இருக்கும் வெளிபடுத்தாத எண்ணங்களும் சரி, அடடா இவங்களுக்குள்ளும் இத்தனை இருக்கிறதா என்று நிஜமாக நினைக்க தோன்றுகிறது.

1953ல் எடுக்கபட்ட, இந்த படத்தின் பல காட்சிகள் (ஏன் கதை கூட) பலரால் உபயோகபடுத்தபட்டுள்ளது என்பது புரிந்தது. நம் ஷங்கர் கூட விதி விலக்கில்லை. Mouth of truth, இந்த காட்சியின் அச்சு அசலான காட்சி காதலனில் பார்க்கலாம். கண்களாலேயெ பேசும் உத்தி நம் அத்தனை பா இயக்குனர்களும் இன்றைக்கும் பயன் படுத்துகிறார்கள்.

இந்த படத்தில் நடித்த Audrey Hepburn, Gregory Peck, Eddie Albert மற்றும் இயக்குனர் William Wyler யாரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்கள் இறக்கும் தருவாயில் கண்டிப்பாக இந்த படம் அவர்கள் கண் முன் இருந்திருக்கும்.

நிறைவேறிய காதலை விட, நிறைவேறாத காதல் கதைகள் மனதின் அடியை தொட்டு விட்டு செல்வது சாத்தியமே, இந்த இளவரசி மற்றும் பத்திரியாளனின் காதலை போன்று.

உலக சினிமாவில் இன்னும் நான் பார்க்காத, இது போன்ற அத்தனை படங்களையும் ஒரு மாதம் லீவ் போட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்து பார்க்க ஆசை.

பார்க்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள். உங்களை நீங்கள் மறப்பது நிச்சயம்.

Roman(ce) Holiday

( Mouth of Truth scene, Confernce scene, Parting scene

நன்றி - Youtube )

Monday, December 18, 2006

ஜோசப் பார்பரா

இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.

பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த இருட்டுடனேயே வாழ்ந்து அதிலேயே இறந்தும் போகிறார்கள். திரையில் தோன்றும் அனைவரும் அதற்கு மாறாக வான்புகழ் அடைகிறார்கள். இவரின் படைப்பு என்னவென்று கேட்கிறீர்களா? டாம் அன்ட் ஜெர்ரி. இதை பார்க்காமல் வளர்ந்த குழந்தை எங்காவது உண்டா? அத்தனை குழந்தைகளின் சந்தோஷத்தையும் இந்த கார்ட்டூன் மூலம் பல மடங்கு அதிகரித்த பெயர் இவருக்கும், William Hanna என்பவருக்கும் மட்டுமே சொந்தம்.

நிலா காண்பித்து சோறு ஊட்டிய காலம் போய், டாம் அன்ட் ஜெர்ரி காட்டி சோறுட்டிய அத்தனை அம்மாக்களும் நன்றி சொல்ல வேண்டிய மகானுபாவர். இத்தனை வயதானாலும், நம்மில் எத்தனை பேர் வரிந்து கட்டி கொண்டு, மடியில் தலைகாணி, இரு கன்னங்களிலும் கைகள், கண்களில் குழந்தைதனம் என்று டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கிறோம். இன்று கார்ட்டூன் படங்களுக்கு உள்ள மவுசு அதிகரிக்க காரணம் ஒரு வகையில் டாம் அன்ட் ஜெர்ரி வெற்றியும் தான்.

நிஜ மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, இதையெல்லாம் காட்டும் சினிமாவை விட இந்த கார்ட்டூன் படங்கள் நிச்சயம் ஒரு படி மேல் நிற்பது மறுக்க முடியாத உண்மை. இதை எடுப்பது சாதாரண காரியம் அல்ல. Finding Nemo - Behind the scenes பார்த்த போது தான் தெரிந்தது. இத்தனை உழைப்பா? இதற்கு பின் இத்தனை நுணுக்கமா என்று கண்களையும் மனதையும் ஆச்சரியபடுத்தவே செய்தது. நாம் செய்யும் ப்ரொகிராம் வெட்டி வேலையை விட்டு விட்டு அனிமேஷன் கற்று கொண்டு இந்த துறைக்கு வந்து விடலாமா என்று இன்றைக்கும் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு முறை அலுவலகம் செல்லும் போதும் பிக்சார் ஸ்டுடியொஸ் வாசலில் இறங்கி உள்ளே செல்லும் அனைவரையும் பார்க்கும் ஏக்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை.

உலகத்தின் எந்த மூலையில் குழந்தைகள், டாம் அன்ட் ஜெர்ரி பார்த்து சிரிக்கும் போதும், ஜொசப் பார்பரா ஒரு அகாடமி விருது பெற்று கொண்டு தான் இருப்பார்.

விக்கி தகவல்கள்

Sunday, December 17, 2006

அவள் அப்படித்தான்...

அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்... அவள் அப்படித்தான்...

அழகாய் முடிகிறது 'அவள் அப்படித்தான்' படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த உலகத்தில் பிறக்க கூட இல்லை. ஆனால், இன்று விவாதிக்கப்படும் பல விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது பெறும் ஆச்சரியமே.

இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது என்னவோ உண்மை தான். இயக்குனர் ருத்ரையாவிடம் நிறைய தில் அப்போதே. நிச்சயம், இந்த படத்தை இப்பொது யாராவது எடுத்தால் அவர்களுக்கு, மக்கள் போராட்டம், கலவரம் போன்ற விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த படம் எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பலரின் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

கலர் படங்கள் நன்றாக வெளிவந்த அந்த காலகட்டத்தில், கருப்பு வெள்ளையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது, ஆச்சரியமான விஷயம். கதையின் தாக்கத்தை இதுவும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது.

நடித்த அத்தனை பேருக்கும் என்ன சொல்வது? அவர்களின் நடிப்பு வாழ்க்கையில் மற்றவர்களிடம், சிலாகித்து சொல்ல நிறைய செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை உங்களை உட்கார வைக்கும் வேகமான த்ரில்லர் போல, உங்கள் மனதை கண்டிப்பாக உணர வைக்கும். ஒரு பெண்ணை சுற்றியே படம், அதுவும் அவள் மற்ற சராசரி பெண்கள் போல கண்டிப்பாக அல்ல. ஆண் சமுதாயத்தின் மீது கட்டுகடங்காத கோபமும், பெண்ணுக்கே உரிய, தன் சோகம் கேட்கும் ஆணிடம் தன்னை பறி கொடுக்கும் வித்தியாசமானவள். பல நேரங்களில் இது போன்ற நிழல் நாயகிகள், நம் வாழ்க்கையிலும் வருவதுண்டு. நான் பார்த்த, பழகிய, எனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண் என் நினைவுக்கு அடிக்கடி வந்தார். நிழல் சில நேரங்களில் நிஜத்தை உரசி பார்ப்பதென்னவோ உண்மை தான். சராசரிக்கும், வித்தியாசத்துக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ள, இப்போதைய, பல பெண்கள் இந்த படத்தில் தங்களை உணர்வார்கள்.

ரஜினி சில காட்சிகள் வந்தாலும், அட போட வைத்திருக்கிறார். நெற்றி பட்டையுடன், அதற்கு சம்மந்தமில்லாத பல விஷயங்களை பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை. அதை சுப்பர் ஸ்டார் கையாண்டுள்ள விதம், அதை விட திறமை. கமல், சொல்ல என்ன இருக்கிறது. பல இடங்களில் கண்களால் மட்டுமே நடித்துள்ளார். இவரை வேட்டையாட விளையாட விட்டுள்ளது, இந்த கால கமர்சியல் கட்டாயம். Sri Priya, இவர் நடித்து அதிகம் பார்த்ததில்லை. இந்த படம் பார்த்த பின், இவரை தவிர்த்து யாராவது செய்திருந்தால் ???

இளையராஜா. எப்போதும் போல ரசிகனின் மன அரியாசனத்தில் ராஜாங்கம் நடத்துகிறார். பாடல்களை விட, பல இடங்களில் நுட்பமான பின்னிசை கேட்க கேட்க பிரமிப்பு.

கத்தி, காதல் என்ற வட்டத்துக்குள் சிக்கி கொண்டுள்ள இன்றைய திரைப்படங்களை பார்த்து பார்த்து சிவந்த கண்களுக்கும், மனதுக்கும் இந்த பழைய படம் நிச்சயம் ஒரு ஆறுதல்.


Sunday, December 10, 2006

பாரதி

அது என்ன எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை

கல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.

பாரதி
உனக்கு மரணத்தின் பின்னும்
கேட்கும் திறம் உண்டு என்பதனால்

நீ விரும்பிய அனைத்தும்
இக்கணம் கிடைக்கும்
நீ கனவு கண்ட
அத்தனையும் கைக்கு எட்டிய தூரத்தில்
உன் முயற்சி எதுவும்
விழலுக்கு இறைத்த நீராகி விடவில்லை

ஆனால்...
இவை எல்லாம்
நீ நினைத்தது
நீ கனா கண்டது
நீ முயற்சித்தது
என்று எங்கள் சந்ததிகளுக்கு
நாங்கள் சொல்ல எங்களுக்கு
நேரமில்லை
அரசாங்கத்துக்கும்
நேரமில்லை

உன்னை மறுபடியும்
பிறக்க சொல்லி
பாட சொல்லி
நாங்கள் வற்புறுத்த போவதில்லை

ஆனால்,
நாங்கள் வற்புறுத்துவது
மறுபடியும் பிறந்து விடாதே என்று தான்

அப்படியும் வந்தால்
நீ பாடம் சொல்ல
உன் அறிவுரைகள் கேட்க
உன் தீ பிழம்பு கண்கள் பார்க்க
உன் வார்த்தை ஜாலங்கள் மகிழ
இளமை கொதிக்கும் நாங்கள்
நீ பிறந்த இடத்தில் இல்லை

முடிந்தால்
டெக்சாசிலோ, மிசிசிபியிலோ,
நியு ஜெர்சியிலோ, கலிபோர்னியாவிலோ
பிறந்து கொள்.

ஏன் இறந்தாய் பாரதி?

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...