Tuesday, February 11, 2020

அரசனின் வளாகம்

இது போன்ற சந்திப்புகள் எப்போதோ ஒரு முறை தான் நிகழும். பாரதி அண்ணா, இப்போது அவருக்கு 65 வயது, எனக்கு 39 வயது. ஆனாலும், அவர் எனக்கு அண்ணா தான். சிறு வயதில், அம்மா அவரை அண்ணா என்றழைக்க, நானும் அப்படியே அழைக்கலானேன். அப்பாவுக்கு பாரதி அண்ணன் அப்போதைக்கு எடுபிடி. ஆனாலும், நீதிமன்ற வளாகத்தில் அரசால் அவருக்கு வழங்கப்பட்ட பதவி, டைப்பிஸ்ட். அதிலும் ஜூனியர் என ஒரு முன்குறிப்பு வேறு. இவை எல்லாம் அந்த காலத்தில் பதவியை குறித்தததோ இல்லையோ, யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பிரக்ஞயை பெரும் முயற்சி இல்லாமல், பொது மக்களுக்கு கூற பயன்பட்டது.

பதினான்கு வருடங்களுக்கு பின்னரும் அமெரிக்கா அலுக்கவில்லை என்றால் அது அப்பட்டமான என்னவென்று எல்லோருக்கும் புரியும். தனியே சென்று பெற்றோர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் தொடங்கி, இப்போதைக்கு தனியே மட்டும் சென்றால் போதும், நெருக்கமான உணர்வை பெற்றால் போதும் என்ற நிலையில் தான் பெரும்பாலான பயணங்கள் முடிகின்றன. அப்படியொரு நெருக்கம் இந்த முறை. எப்போது சென்றாலும், முன்னின்றும் பின்நின்றும் தாக்கும் ஜெட்லேகை தாண்டி, இருக்கும் இரண்டு வாரங்களில், பல தலைமுறைகளாக சிலந்திகளால் பாத்தியப்பட்ட நகர தலைமை நூலகத்திற்கு சென்றேன். நூலகத்திற்கு முன், பின், இடம், வலம், வானம், பூமி எல்லாம் மாறிவிட்டது. ஆனால், உள்ளே மட்டும் படிக்கும் கூட்டம் மாறவே இல்லை. அதை கூட்டம் என்றும் சொல்ல கூச்சமாய் இருக்கிறது. அவர்கள் அனைவரும் அந்த சிலந்தி கூட்டம் பிறக்கும் போது பிரசவம் பார்த்தவர்கள். அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். நரை கூடி, கிழப்பருவம் எய்தி. முப்பத்தி ஒன்பது வயது மூளையில், பல நியூரான்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும். அதனுள் குறிக்கப்பட்ட நினைவுகள் இன்றோ என்றோ என்று எமனை எதிர்பார்த்து கொண்டிருக்கும். அப்படி ஒரு நினைவானில் இருந்த பாரதி அண்ணன், அங்கே நூலகத்திலும் இருந்தார்.

அப்போதெல்லாம் அண்ணன் சொல்வார், செய்யறது கிளார்க் வேலை, இருந்தாலும் டிப் டாப்பா இருக்கனும்டா. இல்லைன்னா, தூக்கி வேஷ்டியில் சொருகிட்டு போயிடுவானுங்க. கோர்ட் கோர்ட்ன்னு வெளிய தான் இதுக்கு மரியாத. உள்ள இறங்கினா, ஒரு பக்கம் பொண்டாட்டிய கொன்னுட்டு, வாயில பான் பராக்  போட்டுக்கிட்டு ஒருத்தன் நிப்பான். அவனுக்கு பின்னாடி செவத்துல தான் நீதியரசர் அப்படின்னு போட்டு இருக்கும். அதுக்குள்ள அரசர் உக்காந்து சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கிட்டு இருப்பாரு. இவுங்களுக்கு நடுவுல, நியாயம் காப்பாத்தறேன்னு, ஒரு கருப்பு அங்கி நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கும். இவன் அத்தனை பேருக்கும், அங்க எங்கிங்கெனாதபடி  இருக்குற நீதியை நிலைநாட்ட, என்ன மாதிரி கிளர்க்கும் உங்க அப்பா மாதிரி சிரஸ்தாரும் உக்காந்து பணிவிடை செய்யணும். நீதிமன்றத்துல நீதி கிடைக்குதோ இல்லையோ, உலகமகா உத்தம அயோக்கியனுங்களும் அயோக்கியமும் நிரவி கிடப்பாங்க. அதுல நீ ஆமாசோமா மாதிரி இருந்தென்ன, சொன்ன மாதிரி, சொருவிட்டு போயிடுவானுங்க.

அதே டிப்டாப்புடன்  தஸ்தாவெஸ்கி படித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் தலைமாட்டில் வயதான சிலந்தியும், பீட்டர்ஸ்பர்க்கை தொலைநோக்கிக்கொண்டிருந்தது.

"அண்ணா, இன்னுமா அந்த மனுசன படிச்சிட்டு இருக்கீங்க..."

"யாருடா அது" என்றார். என்னுள் தற்கொலை செய்து கொள்ளும் நினைவான்களுக்கும் அவருள் தற்கொலை செய்து கொள்ளும் நினைவான்களுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் போல். பார்த்த அடுத்த நொடி, துடித்தெழுந்த நினைவு, சட்டென காலத்தின் பூ ஒன்றை பறித்தது.

"வாடா சிரஸ்தார் மவனே... உனக்கு வெண்ணிற இரவுகள் படிச்சி காமிச்சு, நாஸ்தென்கா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் கட்டாத, ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ண கண்டிப்பா ஒரு தடவையாச்சும் காதலிச்சிடுன்னு சொன்னது மறந்து போச்சு உனக்கு... அந்த மனுசன படிக்கணும்டா, படிச்சு படிச்சே உயிரை விட்டுடனும். சப்போஸ், உயிர் விடலைன்னு வெச்சிக்கோ, அந்த மனுசன் உன்கிட்ட இன்னும் நிறைய சொல்லணும்னு வெச்சிக்கிட்டு இருக்கான்னு அர்த்தம். இதோ இன்னும் புடிச்சுகிட்டு இருக்கான். நாப்பது வயசுல கரமசோவ் சகோதரர்கள் படிச்சேன். ஒரு தலைமுடியும் புரியல. இப்போ புரியுது. இருவது வருஷத்துக்கு மேல ஆவுது. சரி, அது கெடக்குது, என்ன இந்த பக்கம். நீ அமெரிக்காவுல இருக்கன்னு  ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரிஞ்ச உன் அப்பன் ஒரு காலத்துல நிறுத்துவான்னு பாத்தா, அவனும் நிறுத்தல, நிறுத்த சொல்லி நீயும் சொல்லல போல. நீ பதில் சொல்லு, ஆனா இத கேளு மொதல்ல... நேத்தைக்கு தான் டால்ஸ்டாயோட குற்றமும் தண்டனையும் படிச்சு முடிச்சு தெளிவா இருக்கேன்..."

அப்பாவுக்கும் அவருக்கும் ஐந்து வயது வித்தியாசம் இருந்தாலும், அண்ணனுக்கு அப்பா "அவன்" தான். அதை குணப்படுத்த நானும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி. பாரதியை போன்றவர்களை, அவர் போக்கில் விட்டுவிட்டால், பல பொக்கிஷங்கள் கிடைக்கும்.

"இல்ல. அவர் சந்தோசம், சொல்லிக்கிட்டு போகட்டுமே. எழுவது வயசாகுது. இந்த வயசுக்கு மேல, அவருக்கு புத்தி சொல்லி என்ன புதுசா குடும்பமா நடத்த போறாரு. எதோ ஒரு காட்டுல, ஒரு மரம், சரியாய் வளரலைன்னா, போயிட்டு சரி பண்ணிட்டா வரோம். அது அதுவா இருந்துட்டு போவுதுன்னு இருக்கறதில்லயா?"

"பரவாயில்லையே. நீ இன்னும் படிக்கிறது நிறுத்தலை போல. ரெபெரென்ஸ் எல்லாம் இலக்கிய தரத்துல இருக்கு."

"ஆனா விதை, நீங்க போட்டது" என சிரித்தேன்.

"சரி வாயேன், நம்ம வளாகத்துக்கு போய்ட்டு வரலாம். எப்போ வந்த, எப்போ கெளம்பர அப்படின்னு எல்லாம் கேக்க மாட்டேன். குடும்பம் எப்படி இருக்குன்னு எல்லாம் கேக்க மாட்டேன். நீயும் கேக்காத, சரியா"

அண்ணனுக்கு என்ன முறையான கல்வியும், வாழ்க்கையும் கிடைத்திருக்கும், எப்படி, இப்படி தன்னை கட்டமைத்துக்கொண்டார் என பல முறை வியந்ததுண்டு. நேர்கோட்டில் பயணிக்கும் பல ஆயிரம் பயணிகளுக்கு மத்தியில், சாலையின் உள்ளடங்கிய ஒரு குடிசை வீட்டில் கூழ் வாங்கி குடிக்கும் ஒரு விட்டேத்தியான பயணியின் மனநிலை எப்போதும். எப்போதும் உச்சத்தில் இருப்பவர். ஆனால், பக்கத்தில் இருப்பவருக்கு இவரெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் முந்தி அடித்துக்கொண்டு, சீக்கிரம் மூப்பு அடையும் நோக்கில் இருப்பவர்கள். இவர் மட்டும், வரும் நேரத்தில் வரட்டும், அது வரை சிக்ஸர் அடித்து விளையாடுவோம் என இருப்பவர்.

"கார் கீர் எடுத்துட்டு வந்திருக்கியா என்ன? இருந்தா, அங்க விட்டுட்டு வந்துடு. இன்னும் செவென் கிராஸ் நம்பர் போட்டு நம்ம அரசாங்க பஸ் ஓடிகிட்டு தான் இருக்கு. உனக்கு தான் நல்ல நியாபகம் இருக்குமே. ஜாய்'னு ஓரு பொண்ண ஒர கண்ணாலேயே பாத்து, குடும்பத்தையே நடத்திட்ட. ஆனா, அந்த பொண்ணு தான் பாவம், உன்ன பாவம்னே நெனச்சி, சரி தம்பி, கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிடுச்சு", வெடித்து சிரித்தார். இந்த வயதில் வெடித்து சிரிப்பதெல்லாம் வரம். என் பக்கத்து வீட்டு மாமாவெல்லாம், சிரித்தால் ரத்தஅழுத்தம் அதிகமாவுதுப்பா, என்ன வரம்னே தெரியல என்று அலுத்துக் கொள்வார்.

வளாகம் வந்திருந்தது. இறங்கினோம். சிவப்பு வண்ணம். கட்டியதென்னவோ இந்த காலத்து பொறியாளர் தான். சிகப்பை தவிர எந்த வண்ணம் அடித்தாலும், இங்கு நீதி கிடைக்காது என்று அனைவருக்கும் தோன்றிவிடுமோ என்று பயம் போல இருக்கிறது. உள்ளே நுழைந்ததில் இருந்து, அண்ணன் முன்பு கூறிய அத்தனையும் இப்போதும் மாறாமல் இருந்தது. பான் பராக் (தடை செய்யப்பட்டாலும், புழங்கும்... நீதியின் தரையிலும்), அங்கி அங்கிள்கள், அரசர்கள், கிங்கரர்கள். பாவப்பட்ட முகங்கள் கூட. அந்த முகங்கள் இப்போது, குறுஞ்செய்திகளிலும், டிக்ட்டாக்கிலும் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்.

அண்ணன் ஒரு பெரியவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சில் ஒரு சிரிப்பில்லை. இறுக்கம் அதிகம் இருந்தது. அப்படி இருக்கும் தருணங்கள் மிக குறைவு. இவர்களின் பின் இருந்த இளம்பெண், யூடூப்பில் ப்ளூ சட்டை விமர்சனம் பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவரிடம் உணர்ச்சிகள் மிகுந்தது. பாத்திரம் ஒன்று கைமாறியது.

"என்னடா, எல்லாத்தையும் பாத்தியா. மனசுக்குள்ள பெருசா ஓடியிருக்கணுமே. என்னன்னு கேக்காத. அங்க ஒரு நீதி அரசர பாத்துட்டு வந்துடறேன். அவருக்கு ஆற்காடு மக்கன் பேடா'ன்னா ரொம்ப இஷ்டம். குடுத்துட்டு வந்துடறேன். மனுசன் சக்கரைக்கே சக்கரை காட்டிகிட்டு இருக்கார். பாக்கவும் சக்கரை மூட்டை போலத்தான் இருப்பாரு. இருந்தாலும், ஒரு நாளைக்கு நாப்பது மாத்திரை போட்டும், மக்கன் பேடாவுக்கு மட்டும் இன்சுலின் தானா சுரக்கும். அப்படி ஒரு அமைப்பு"

அறையும் வந்தது. உள்ளே போன அண்ணனின் உடல் மொழி மாறி இருந்தது. கூழை கும்பிடு போடும் அந்த கால கிளார்க் உள்ளே நுழைந்தார். ஒரே குழப்பம். இப்படி ஒரு வடிவத்தை இவரிடம் இது வரை கண்டதில்லை. சரி வந்த பின் கேட்கலாம் என்றால், கேட்காதே என்பார். இயற்கையின் ஒரு குழப்ப செய்திகளில் இவரும் ஒருவர். அந்த காட்டில் இவரும் ஒரு சுயம்பு மரம்.

வெளியே வந்தார். கையில் இனிப்பு இல்லை.

"என்னடா" என்கிறார்.

"ஒன்னும் கேக்கலையே.... கேட்டாலும் என்ன சொல்லுவீங்கன்னு தெரியும்"

"இத சொல்லணும்டா. சொல்லியே தீரணும். அந்த பொண்ணு இருக்கா இல்ல, அந்த பெரியவரோட பொண்ணு.தவமா தவமிருந்து பெத்தவ. இவரோட நாப்பத்தஞ்சு வயசுல பொறந்தா. இயற்கை வரம் கொடுக்கும், ஆனா பாத்து பாத்து கொடுக்கும். அதோட கால அவகாசமும், பொறுமையும், நமக்கு புரியாது. புரிஞ்சவங்க, பொறுத்திருப்பாங்க. இவரு பொறுத்திருந்தார். தங்க சிலையா பொறந்தா. ஆனா, இந்த காலத்துல தங்கத்த எவன் அலங்காரமா பாக்கறான். எப்படியாச்சும் லவட்டிட்டு போய் தன்னோட பீரோவுல வெச்சுக்கணும், இல்லைனா, ஒரு முறையாச்சும் அத உருக்கி தனக்கு மாலையா போட்டுடணும்னு இல்ல தவிக்கிரனானுங்க. அப்படி ஒருத்தன் உருக்க நெனச்சான் அந்த தங்கத்த"

அண்ணனுக்கு துடித்த உதடுகள் நிற்கவில்லை. தொடர்ச்சியாக, வசவு வார்த்தைகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த வளாகத்தில், இது ஒன்றும் புதிதில்லை. அங்கே அதிகம் புழங்குவதில், வசவு வார்த்தைகளுக்கு முதல் இடம். இரண்டாம் இடம் தான், ஐபிசி கோடுகள்.

"அந்த பாவிக்கு அப்போ வயசு ஒரு அம்பது இருக்கும். பெரிய பதவி. இந்த பொண்ணுக்கு பத்து வயசு. என்ன நடந்திருக்கும்னு நீயே யூகிக்கலாம். அவ்ளோ சாதாரணமா இந்த ரணம் எல்லா மனசுக்குள்ளயும் பரவி இருக்கு. அவ்ளோ நடக்குது. எல்லாம் நடந்த பிறகு தான் எனக்கு உண்மை தெரிஞ்சது. அந்த அம்பது வயசு கிழவனையும் எனக்கு தெரியும். கோர்ட் கேஸுன்னு எல்லாம் இழுக்கவே முடியாது. ஏன்னா, அவன் காலுக்கு கீழ தான் அத்தனையும் முடங்கி கெடந்துச்சு. அப்போ, அவன் அரசன் கிடையாது. அம்பது வயசான இளவரசன். அரசனாக இன்னும் நாலஞ்சு வருஷம் பாக்கி இருந்தது. அந்த கிழட்டு இளவரசன தான் இப்போ பாத்துட்டு மக்கன் பேடாவ குடுத்துட்டு வரேன்"

அதிர்ச்சி என்றாலும், அதை தாண்டி பேசும் பக்குவ நிலையை, சிறு வயதிலேயே அண்ணன் எனக்கு சொல்லி கொடுத்திருந்தார்.

"பிறகு, ஏன் அந்த ஆள பாக்க உள்ள போகும் போது அப்படி ஒரு முதுகெலும்பு செத்த தனம் வந்துச்சு. நான் பாத்த பாரதி அண்ணணுக்கு அங்க ரௌத்திரம் இல்ல வந்திருக்கணும். வயசானதுல உங்களுக்கும்..." என இழுத்ததில், அவருக்கு வந்தது கோபம். ஆனாலும், அவர் சொல்லி கொடுத்த பக்குவ நிலையை, அவர் குலைப்பாரா என்ன.

"அதுக்கு பேர் அது இல்ல. குற்றம் செய்யும் போது வர நடுக்கம். அதை மறக்க நான் போட்டுக்கிட்ட வேஷம். ஜெயமோகனோட அறம் படிச்சிருப்ப இல்ல..."

சத்தம் மேலோங்கி இருந்தது பின்னே. அரசனின் அவையில் பெரும் கூச்சல். அரியாசனத்தில் இருந்து, கவிழ்ந்து கிடந்தான் அரசன். சுவையான மக்கன் பேடாவின் மேற்பரப்பில், சக்கரை ததும்பிய மாவு. சக்கரை சூழ் மாவின் நடுவே இருந்திருக்க வேண்டிய உலர் பருப்பிற்கு பதில், தங்கத்தை உருக்கியதற்கான தண்டனை. 

Thursday, February 06, 2020

மிச்சிகன் வேள்பாரி

அப்பாடா என்றிருந்தது. நினைப்பில் கூட வந்ததில்லை, என் பெயர் ஒரு  படைப்பில் வந்து போகும் என்று. மூளையை அடித்து துவைத்த சம்பவம் கடந்த 5 மாதங்களில் நடந்தேறியது.

புத்தகங்களுடன் மட்டுமே இருந்த வாழ்க்கை, 2008 முதல் அகலப்பட்டு போனது. புத்தங்களையும், வார்த்தைகளையும், தமிழையும் என் இரண்டு பெண் மக்கள் மொத்தமாய் குத்தகைக்கு கொண்டு சென்றார்கள். இலக்கிய வாசகனாகியது போதுமென்று, நானும் டையாப்பர் மாற்றியும், பள்ளிக்கு அனுப்பியும் இலக்கியத்திற்கு பிரிந்த விடை கொடுத்திருந்தேன். பத்து வருடம் முடிந்த கணத்தில் எல்லாம் மாறியது. என் புத்தக அலமாரியை கண்ட நண்பர், நீங்கள் ஒரு குழுவில் கண்டிப்பாய் இணைய வேண்டும் என்கிறார். இணைத்தும் விட்டார். அனைத்தும் மாறியது. காகித ஸ்பரிசம் மறுபடியும். இம்முறை மிக வேகமாக. 10 வருட பசியை தீர்க்க, புத்தகங்கள் வாங்கி குவித்தேன். ஆனால் மொத்தமாய் மறந்தது, இன்னும் குடும்பஸ்தன் என்பதை. ஒரு புத்தகம் படிக்க நினைக்க 1 மாதம். அதே புத்தகத்தின் முதல் பக்கம் புரட்ட 2 மாதம். அதை முடிக்க 36 மாதம் என பல அரசியல் சிக்கல்கள். ஆனாலும், குழு எனக்கு அளித்த உத்வேகம் இதுவரை கண்டிறாதது. கூடும் போதெல்லாம், 10 வருடத்திற்கு முன் மறந்த அத்தனையையும் ஆசையாய் அசை போட யாரோ ஒருவர் கிடைத்தனர். அப்போது சக ஆர்வலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், எனக்கு கதை படிக்க பிடிக்கும், அதை பற்றி பேச மிகவும் பிடிக்கும், கதை எழுத அறவே பிடிக்காது, ஆனால், காதலோடு செய்ய காத்திருப்பது திரைக்கதை எழுதுவது. காதலி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தில் இருப்பதாய் சொல்லியிருந்தேன்.

செவி வழி செய்தி, நிற்க வேண்டிய இடத்தில் நிற்க, வந்தது, வேள்பாரி நாடகத்தை மேடைக்காக எழுதும் பணி. காதலி இப்போது காதின் பின் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தாள். பின் என்ன, காதலி கிடைத்த மோகம், குடும்பம் காத தூரத்தில் விடப்பட்டது (அதற்கான பாவகணக்கை இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்). முதலில் நான் செய்ய ஒப்புக்கொண்டது, வசனம் எழுதுவது. இரண்டு காட்சிகளுக்கு எழுதினேன். அதோடு நிற்கும், அதற்கு மேல் இவனையெல்லாம் சேர்த்துக்கொண்டால், ஒன்றும் எடுபடாது என்று நினைப்பார்கள் என நினைத்தேன். ஆனால், நேர்மாறாக, அத்தனை காட்சிகளையும் மேடைக்காக திருத்தி எழுதும் பணி  வந்தது. காதலி, இப்போது கண் முன் வந்தாள். கவிதை வடிக்கலாம், காதல் வடிக்கலாம். இரவெல்லாம் உட்கார்ந்து உட்கார்ந்து, காதலி கண் முன் மேடைக்காக வடிவெடுத்தாள். என்னுடன் தலைமை இயக்குனரும் இருந்ததை சொல்லாவிட்டால், காதலி கோவித்துக்கொள்வாள். அவர் தலைமை, நான் தொண்டு புரிந்தேன். காதலி எங்கிருந்தாள், யாருடன் இருந்தாள் என்றெல்லாம் கேள்வி வந்தால் நான் பொறுப்பில்லை.

திருத்தங்கள் முடிவடைந்தது. இப்போது மேடை நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் பணி. பின்னிருந்து மட்டுமே இயங்கலாம் என நினைத்தவனுக்கு பொங்கல் வைக்கலாம் என நினைத்தார் தலைமை இயக்குனர். என்னையும் நடிக்க சொன்னார். நான் வேண்டாமென மறுத்தேன். நாடகத்திற்காக ஆட்கள் தேவை என கேட்டபோது, நான் அனைத்து துறைகளிலும் உதவி செய்கிறேன் என சொன்னேன். ஒரு துறையில் மட்டும் உதவி செய்ய மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆட்கள் இல்லாத நிலைமை, மேடையில் என் முகமும் இருந்தே ஆக வேண்டிய அவல நிலை. காதலி கொஞ்சம் முகம் சுழித்தாள்.

மனைவியாரும், குழந்தையாரும் என்னை வேள்பாரியின் அரண்மனை காவலாளி என்றெண்ணி, என்னை துன்புறுத்தாமல் என் சேவையை பாரிக்கு செய்ய பணித்தார்கள் (பின் நடந்ததெல்லாம், ஒரு வலைப்பின்னலில் அடங்காது). திரை அலங்காரத்தில் சேர்ந்தேன். காதலி கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்ச ஆரம்பித்தாள். அவளின் அரங்கேற்றத்திற்கு அவளே ஏங்கினாள்.

நடிகர்கள், பாத்திரங்கள் ஆனார்கள். ஒத்திகைகள் ஒத்தி வைக்காமல் நடந்தது. பனி விடாமல் பெய்யவில்லை. பாரிக்காக காத்திருந்தது.

இயக்குனரின் ஒரு இந்திய பயணத்தில் பாத்திரங்கள் அனைவரையும் நாயக நாயகிகளாக மாற்றும் உடை அணிகலன்கள் வந்தது.

ஒலிக்கோர்வை சேர்ந்தது. பாடல்கள்  பாடப்பட்டு, இசைக்கப்பட்டு, முழு இசையானது. மொத்தமாக ஒன்றரை மணி நேர கோர்வையும் ஒரு .WAV ஆனது.

நாளும் வந்தது. வேள்பாரி கண் முன் பிரமாண்டமாய்  நின்றான். அவன் மக்களை அரவணைத்தான். அரவணைத்த மக்களை அச்சுறுத்தும் மூன்று வேந்தர்களை, ஓடி ஓடி, ஓட ஓட விரட்டினான்.

நினைத்தது நடந்தது. காதலி அரங்கேறினாள். மொத்தமாய் காத்திருந்த பனி, கொட்டி தீர்த்தது.

Thursday, December 05, 2019

தவமாய் தவமிருந்து

சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான் ரசித்தேன் என சொல்வதோ, இந்த இயக்குனரின் ரசிகன் என சொல்வதோ, மற்றவர்களுக்கு கேலியாக தோன்றும். இத்தனைக்கும் நான் சொல்லும் அனைத்தும் ஆழ்மனதில் இருந்து எழுந்த படைப்புகள், சினிமாவை திரையில் தோன்றும் வண்ணங்களாக மட்டும் பார்க்காமல், அதை கனவு கடத்தியதாக பார்க்கும் அறிவார்ந்த படைப்பாளிகள், திரைப்படத்தை வியாபாரமாக மட்டும் பார்க்காதவர்கள், உள்ளிட்ட இன்னும் பல பேர்.

தவமாய் தவமிருந்து அப்படி ஒரு திரைப்படமாகவே இருந்தது. நான் இன்று வரை ஒரு படத்தை பார்க்கும் முன் தயாராகிறேன் என்றால் அது இந்த திரைப்படம் மட்டுமே. அதென்ன, தயாராவது என்றால், உள்ளதை இழந்து ஒரு கவலை குழிக்குள் தள்ளிவிடப்படும் செயலை ஒவ்வொரு முறையும் செய்யும் இந்த படைப்பு. பயந்தே பார்ப்பேன். பார்த்த அடுத்த நாள் வரை தங்கி விட்டு போகும் கவலைகள். ஆனால் கவலை மட்டுமா சொல்கிறது இந்த படைப்பு. ஒரு மனிதனின் வரலாறு, அதனினும் பெரிதாக அவனின் சின்ன வாழ்க்கை. அதனுள் இருக்கும் மெல்லிய மனத்தின் மக்கள்.

எந்த ஒரு படைப்பும், சாகாவரம் பெறுவது, பார்க்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வடிவத்தை கட்டமைப்பது. 2005ல் இந்த படம் வந்த போது கொடுத்த அழுத்தம், இப்போது 2019ல் வேறு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது.

அப்பா, இன்று வரை தமிழ் சினிமாவில் கைவிடப்பட்ட முயற்சி, தவமாய் தவமிருந்து தவிர. எவ்வளவோ வந்திருக்கிறதே, அப்பா என்று பெயர் கொண்ட திரைப்படமே வந்திருக்கிறதே என்றெல்லாம் சொல் வரும். ஆனால், அப்பனை, அனைத்துமாய் இருப்பவனை, அள்ளி அனைத்து பார்க்காமல், கண்களாலேயே வாழ்க்கை நடத்துபவனை, சிறுக சிறுக மண் சேர்த்து கட்டிய கோட்டை இந்த திரைப்படம்.

சரியாய் சொல்லப்போனால், பெரும்பாலான அப்பன்சாமிகள் கடைசியில் தவித்துக்கொண்டு தான் இறக்கிறார்கள். என்ன தவிப்பு என்பதிலேயே வித்தியாசம் உண்டு. அம்மாக்களுக்கு இல்லையா என்றால், இருக்கும். ஆனால், அம்மா பேசிவிடுவாள். வாழ்வின் பெரும்பாலான நொடிகளை பேசியே அவள் வாழ்ந்திருப்பாள், அதில் சோகமும் அடக்கம், சகலமும் அடக்கம். 2000த்தின் அப்பாக்கள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், என் காலத்து அப்பா, ராஜ்கிரண் போலவே. அப்படி மிகைநடிப்பில் ஒருவரும் இருப்பதில்லை என வாதாடலாம். அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கையிடம், ஒவ்வொருவரும் மிகை முகத்தை காட்டியே இருக்கிறோம். சரியென ஒத்துக்கொள்ள மாட்டோம். அதே போல, இல்லாத ஒன்றை உருவகப்படுத்த சேரன் ஒன்றும் வேற்று கிரகத்தவர் இல்லை.

ஒரு பேட்டியில், கதை சொல்லும்போது, ஹீரோ பிரஸ் வெச்சிருக்காரு. ஹீரோ கடன் தொல்லையில மாட்டிகிட்டு, இக்கட்டான சூழ்நிலையில பசங்க முன்னாடியே அவமானப்படறாரு. ஹீரோ, இளையமகனோட ஏற்ற இறக்கத்தை இப்படித்தான் சரி செஞ்சாரு, என்றெல்லாம் சொன்னரென்றும், ஹீரோ யாரென்று கேட்டால் அது ராஜ்கிரண், அவர் தான் அப்பா என்றாராம். சந்திரமுகி, சச்சின், கஜினி, சிவகாசி, சண்டக்கோழி எல்லாம் வந்த 2005ல் இப்படி ஒரு கதை எடுக்கப்பட்டிருந்தது என்றால், சேரன் என்றொரு மனிதனின் அசாத்திய நம்பிக்கை மட்டுமே. இந்த கதை தோற்கும் என்று அவர் கண்டிப்பாக கணக்கிட்டு இருப்பார். ஆனால், அவரின் வெற்றி, என் போன்ற சிலர் மனதினில் இன்று வரை, 15 ஆண்டுகள் கழித்தும் இந்த திரைப்படம் கொடுக்கும் அதிர்வுகள்.

நான் முதலில் சொன்ன சங்கடத்தை சொல்கிறேன். ஒரு இயக்குனராக சேரனை பிடிக்கும் என்று சொன்ன போதும், தவமாய் தவமிருந்து பிடிக்கும், ஆட்டோகிராப் பிடிக்கும் என்று சொன்னபோதும், எனக்கு வந்த விமர்சனங்கள் அவரை மட்டுமில்லாமல், அவரின் படைப்பை மட்டுமில்லாமல், என் ரசனையையும் கேலியாக்கியது. நான் மட்டுமல்ல, நிறைய பேர் இந்த அனுபவத்தை அடைந்திருக்கலாம். அதற்காக, சேரனின் ரசிகன் என சொல்லாமல் இருக்கும் பல பேர் உண்டு. தவமாய் தவமிருந்து எல்லாம் ஒரு படமா, இவ்வளவு நீண்ட 2000த்தின் பாசமலரை எல்லாம் யார் பார்ப்பார்கள், நீ வேண்டுமானால் பார்க்கலாம் என்றவர்கள் பல பேர் உண்டு. இத்தனையும் உடைக்கும் ஒரு காட்சி, இளைய மகன் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி போய், அலைக்கழிக்கும் வாழ்க்கையின் இடையில், அப்பா வீட்டின் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். எதிர்பார்க்காத மகன், அழுது தீர்க்கிறான். அப்பா, ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், உனக்கு நான் செய்யவேண்டிய கடமையை என்றும் ஒரு அப்பனாக, உன் காப்பனாக, ஒரு போதும் செய்யாமல் விடமாட்டேன் என்பதை கண்ணாடியின் பின் இருக்கும் கண் வழியே மட்டுமே சொன்ன அந்த அப்பன் போதும். என் கண்களில் அந்த காட்சிக்காக, எப்போதும், ஒரு துளி கண்ணீர், இறக்கும் வரை இருக்கும்.

Thursday, October 31, 2019

என்றென்றும்!!!

இன்னொரு ஜென்மமுன்டெனில்
அது ஒரு நொடி
மட்டுமிருந்தால் போதும்,

‘தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்’

வார்த்தைகளை என்
முன் ஜென்மத்து
கருப்பசாமி
வாயில் இருந்து கேட்க!!!

Monday, October 28, 2019

நீ பிழைத்திருக்க வேண்டுமே...

பத்தடியில் உன்னை பார்த்த
உன் கிராமத்து மனிதனை
உன் ஓலத்துடன்
இருக்க வைத்திருக்கிறாய்

இருவதடியில்
உன் இரு கைகளை
பிடிக்க நினைத்த
கயிறை பிடித்திருந்த
சித்தப்பனை பைத்தியமாக்கி இருக்கிறாய்

முப்பத்தடியில்
உனக்கு தெரிவதெல்லாம்
மண்ணும் தூசியும்
என புரிந்த உள்ளூர்காரனை
பித்தனாக்கி இருக்கிறாய்

நாற்பதடியில்
உனக்கு பசித்திருக்குமே
கொடுக்க நீ விரும்பிய
தோசை கூட கொடுக்க வழி இல்லையே
என கழிவிரக்கம் கொண்ட
பாட்டி இன்னும் மயங்கி கிடக்கிறாளே

ஐம்பதடியில்
நீ விளையாட நினைத்த
வானவில் நிறத்து பொம்மை
வந்து நின்று காப்பாற்றும் என
நீ நினைப்பாய் என நினைத்த
பக்கத்து வீட்டு மாமாவை
நிலை கொள்ள வைத்திருக்கிறாய்

அறுவதடியில்
தண்ணீர் தவித்த நாவினில்
ஒரு துளி தண்ணீரை
தொட்டு வைக்க நினைத்த
உன் இன்னொரு இரண்டு வயது கூட்டாளி
அழுது கொண்டிருக்கிறானே

அப்படியே
நூறடியில் நீ இருக்கும்போதும்
சொன்னாளே அவள்
அவனுக்கு வேர்க்குமே...
அடுத்த நொடியில் அவளுக்கு வேர்த்து
இந்த நொடியில் எழுந்தாளே

யாருக்கு தெரிந்திருக்க முடியும்
27ம் அடியிலேயே
நீ
ம்மா, தூக்கு என்றதை... 

Sunday, July 07, 2019

மண்ணுயிர்


இத்தனை இருள் பழகவில்லை. நான் தேவைப்படாத ஒரு இடத்தில் சிக்கி கொண்டுள்ள உணர்வு ஓங்கியிருந்தது. தலைக்கு மேல் அடர்த்தியான ஈர்த்துபோன கயிறுகள். தொட்டுப்பார்த்து உணர்ந்ததில் கயிறாகவும், ஓங்கி வளர்ந்த மரத்தின் வேராகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. எவை எப்படியோ, நான் இருக்கும், இருந்த இடமில்லை. என் துணை எவருமில்லை. பேச முடியவில்லை. உடல் உணரப்படவில்லை. நினைப்பது சரியில்லை என்றாலும், அது தான் நடந்திருக்கிறது. காலம் கடந்திருக்கிறேன்

வலியின்றி இருக்கும் உலகு இப்படித்தான் இருக்குமென்றால் இவை இருந்து விட்டு  போகட்டும். ஆனால், ஏன் சிந்திக்கிறேன்? என் இனம் சொன்னது, இறந்த பின் நான் மேலுலகம் செல்ல வேண்டும் அல்லது கருந்துளைக்குள் வட்டமிட வேண்டும். நான் இருக்குமிடம் (இல்லாமல் இருந்தாலும், இருக்குமிடம் என்றே சொல்ல முடியும்), இவற்றின் எதிலும் சிக்கவில்லை. சிந்தித்துக்கொண்டே, கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் நிலை, எத்தனை நாள் தாக்கு பிடிக்க முடியும்? இறவா நிலை இப்படி ஒரு சிக்கலை கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. செய்து தான் பார்ப்போமே என்று செய்தது, எனக்கு நன்மை பயந்தது. யாராவது இருக்கிறீர்களா என ஆழ்ந்த மனநிலையை மட்டும் கொண்டேன். கடும் மௌனம், பாலைவன இருட்டு, ஆனால் உணர்வில் மட்டும் தலை மேலும் பக்கவாட்டிலும் கயிறுகள். இவை எங்கோ எனக்கு பரிச்சயம். கேள்விகளின் மத்தியில், இந்த உண்மை மட்டும் இருண்டு கிடந்தது. பதில் வந்தது, பல மணி - இங்கே எது மணி - பல கேள்விகளின் பின் என் காலுக்கு கீழே இருந்து ஒலி.

வருகைக்கு நன்றி, என்றது குரல்.

நான் எங்கே வந்தேன். என்னை இழுத்து வந்தாகி விட்டது, என்றேன்.

நீ இங்கே வர வேண்டியது அவசியம், வந்தாகி விட்டாய்.

கேள்வி கேட்கிறேன், பதில் சொல்ல முடியுமா?

நான் பதில்கள் மட்டுமே. கேள், நீயே அறிவாய்.

என் அறிவுக்கு எட்டியவரை மனிதர்கள் காலமாகி விடுவது வழக்கம். நான் காலமாகி விட்டேனா?

இல்லை. நீ இப்போது உயிராகி இருக்கிறாய்.

உயிராகி, உடலுமாகி, அந்த உடல் சிதிலமாகி தானே இங்கே வந்துள்ளேன். ஒரு வேளை, நான் இப்போது கருவாய் ஒரு பெண்ணுக்குள் சென்று கொண்டிருக்கிறேனா? அதை தான் நான் உயிராகி இருக்கிறேன் என்கிறீர்களா?

இல்லை. நீ உயிராகி இருக்கிறாய், ஆனால் நீ நினைக்கும் உயிரில்லை. நீ பார்த்த உயிர்

புரியவில்லையே.

நீ விதை.

நான் விதையாகி விட்டேனா? விண்ணுலகம் எல்லாம் பொய்யா? மண்ணுலகம் தான் நாங்கள் நினைத்த விண்ணுலகமா? மண் வாழ்க்கை பெயர்த்தால் விண் வாழ்க்கை தானே அடுத்த படி. அது தானே எங்கள் மறை சொன்னது. அது தானே எங்கள் கடைசி புள்ளியாய் இருந்தது.

அது தவறு. அது புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் இறக்க வேண்டும். இறந்து பிறக்க வேண்டும். அடுத்த பிறவி உனக்கு உண்டென்றால், அது மண்ணுலகில் தான். விண்ணுலகில் சுயம் பெற நீ விண்ணுலக பிறவி இல்லை. உன் ஆதி, இந்த மண்ணில் தரித்தது. ஆதியின் அத்தனை வித்துக்களும், மண் மீதே உடல் பெறும், மண் மீதே அறம் கொண்டும் அறம் கிளைத்தும் அறம் திரித்தும்வாழும். இத்தனையும் மண்ணில் நடந்து, கடைசி பகுதி மட்டும் எப்படி விண்ணுக்குள் போகும்? நீ மண். மண்ணில் தான் உன் முதல், முடிவு, மறுபடியும் முதல்.

சரி, அப்படியே இருக்கட்டும். நான் மட்டும் ஏன் பேசுகிறேன். பதில் பெறுகிறேன். மற்ற, மனிதர்கள், மன்னிக்கவும் விதைகள், ஏன் பேசவில்லை?

உன் விளைவு, உன் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. உன் போல் பலர் உள்ளனர், அவர்கள் அவர்களின் பதில் பெற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி விதையானேன்?

உன் சக உயிரினங்கள், நீ சுமந்த உடலை என்ன செய்தார்கள் என எண்ணிப்பார். உனக்கு புரியும். நீ புதைக்கப்படுவாய், அல்லது எரிக்கப்படுவாய். எது செய்தாலும், மண் உன்னை உள்கொள்ளும்.  உட்கொள்ளப்பட்ட நீ, விதையாவாய். உன் அடுத்த கேள்வி எனக்கு தெரியும். அதன் பதில் இதோ. நீ என்ன விதையாவாய் என்பதை மண் தாண்டி முளைத்த இன்னொரு மரம் தேர்ந்தெடுக்கும். உன் அறம் அத்தனையும் நிறுத்தல்கோலில் நிறுத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

என்னை என் வீட்டு தோட்டத்தில் அல்லது பக்கத்தில் உள்ள மண்ணில் சூல் கொள்ளவைக்க முடியுமா?

உன் வீடு உனக்கு இப்போது தெரியாது, எங்களுக்கும் தெரியாது. இங்கே உள்ளதெல்லாம், உயிர் சுமக்கும் தாவரங்கள். மனிதர்கள் அல்ல.

இப்போதெல்லாம் மின்சார மயாணங்கள் வந்து விட்டதே. நானும் அப்படித்தானே முடிந்திருப்பேன். இதில் எங்கே மண், எப்படி நான் விதை?
அதன் பதில் உனக்கே தெரியும். அதனால் தான் என்னுடன் உன்னால் உரையாட முடிகிறது. பலர் விதையாகி, உயிராகி, மண் கொண்டு, மண் தின்று தினசரி வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் நீ அவர்கள் இல்லை.

புரிந்தது. என்னை கடல் கொண்டிருந்தாலும், ஆறு கொண்டிருந்தாலும், ஏரி கொண்டிருந்தாலும், நீர் மண்ணின்றி அமையாது, இருக்காது. என் துகள், நீரின் வழியே மண் சேர்ந்திருக்கிறது. இன்னொன்றும் புரிகிறது, ஏன் அத்தனை மண்ணுயிர்கள் இருக்கின்றன என்று. மரித்த பின், இப்படியானால், அத்தனை பச்சை உயிர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி.

நீ இப்போது நீயாகி விட்டாய். உன் கடன் இனி உயிர்த்து கிடப்பதே. உன் அறம் விளைந்து இருப்பதே.

எல்லாம் முடிந்தது. நான் விதையானேன். கேள்விகள் மட்டுப்பட்டன. நானும் பதில்கள் ஆனேன். மண் விரித்து, வெளிவந்தேன். என் உடலை மரமாக்கினேன். மௌனித்து இருந்தேன். அவன் வந்தான். ஆட்கொண்டேன், பின் புத்தன் ஆனான். நான் போதி ஆனேன்.

Wednesday, September 18, 2013

கொள்ளை போகவிட்ட நேரம்

அதிக காலத்திற்கு எழுதாமல் விட்டிருந்தது ஏகபோகமாக வருத்தம் தந்தது. 4 வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு, புண்ணியமாய் போன கூகிளினால் இன்னும் வெள்ளை கருப்பில் அப்படியே இருக்கிறது. 4 வருடத்தில் நிறைய மாற்றங்கள். வந்துதானே ஆக வேண்டும்.

காதல், திருமணம், பிள்ளை, இடமாற்றம், பல மனமாற்றம், விட்டு போனவை சில கிடைத்தது, கிடைத்தவை சில விட்டு போனது. படிக்க நிறைய ஆசைப்பட்டு, ஆசையோடே நிறுத்தினேன். எழுத முனைந்தால், நல்ல எழுத்துக்களும் நல்ல தமிழுக்கும் கலப்படம் உண்டாவதை, வேண்டாம், என நானே சொல்லிகொண்டேன்.

இனியாவது எழுத வேண்டும். எழுத்தும் மவுனமும் கூட சேர கிடைத்தால், கலப்படம் குறையும்.

Thursday, May 07, 2009

தேர்தல்...

எங்கெங்கும் தேர்தல் வாசனை
முடிந்தவரை சுவர்களில்
வெள்ளுடைகள் அடங்கிய
சுவரொட்டிகள்...

தெரு முக்கிலெல்லாம்
கைகூப்பி நிற்கிறார்கள்...

தொலைபேசியில் அழைத்து
குசலம் விசாரித்து
கூப்பாடு போடுகிறார்கள்...

எப்பாடு பட்டினும்
வாக்களித்து விடுங்கள்..
இல்லையேல்,
மறுபடியும் பேச
ஆரம்பித்து விடுவார்கள்...
இன்னொரு ஈழம்
கிடைக்காதாவென
தேட ஆரம்பித்துவிடுவார்கள்...

49-0 எல்லாம் வேண்டாம்
எந்த பட்டனை
அழுத்தினாலும் விடை
ஒன்று தான்...

Friday, February 27, 2009

.... சுஜாதா ஓராண்டுக்கு பிறகும்

எல்லாவற்றையும் காலம் வெகுவேகமாக பின்னுக்கு தள்ளுகிறது. காலமா, இல்லை அதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை வேகப்படுத்துகின்றனவா தெரியவில்லை.

எதேச்சையாக கடந்த நான்கைந்து நாட்களாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஐந்தாம் பாகம் பிட்டு பிட்டாக படித்தேன். அவ்வப்போது உலாவும் பதிவுகளில் பார்த்தால் சுஜாதா பதிவுகள். பின்புதான் மரமண்டைக்கு உறைத்தது. அவர் காலமடைந்து ஒரு வருடமாகிறது. சுப்புடு, தேசிகன், நாராயணன் இவர்களின் பதிவுகள் ஓராண்டை கனத்துடன் நினைவுபடுத்தின.

தேசிகனின் பதிவு என்னமோ செய்தது. கண் முன்னே காலமெல்லாம் ரசித்த மகானுபாவர் மூச்சிழக்கும் நிமிடங்களை உள்வாங்கிகொள்ள அசாத்திய பலம் வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். அரங்கனையும் தாண்டி, நீண்டு உயர்ந்த கோபுரத்தையும் தாண்டி சுஜாதா மனதிற்குள் சலனமானார்.

இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால், சமீபத்தில் என் நோயுற்ற 94 வயது தாத்தாவின் மரணம் சொன்ன விஷயம், வலி நீடித்திறா வாழ்க்கை நம் கடைசிகளை ரணம் கம்மியாய் வைத்திருக்கும்.

எந்த கணத்தையும் உணர்வையும் casual paint அடிக்கும் இவர், மரணத்தையும் just like that தள்ளியிருப்பாராக.

Tuesday, February 24, 2009

A.R. ரஹ்மானும் கடவுளும்

வார இறுதியில் மூன்று படம் என சினிமா பித்து பிடித்து அலைந்தேன். நான் கடவுளில் ஆரம்பித்து, சிவா மனசுல சக்தியில் நொந்து, வெண்ணிலா கபடி குழுவில் முடித்தேன். நான் கடவுளை தவிர மற்ற இரண்டும் (எனக்கு) சோபிக்கவில்லை.

நான் கடவுளும் ரொம்ப பிடித்துபோன பகுதியில் இல்லை. 3 வருட உழைப்பு, ஆர்யாவின் மெனக்கெடல், பாலாவின் விரைப்பான இயக்கம், இவற்றையெல்லாம் மீறி என்னை இழுத்தது இளையராஜாவும் சில நிமிடங்களே வந்து போகும் காசியும்.

இளையராஜாவின் இசை இண்டு இடுக்குகளில் புகுந்து கிளர்ந்துள்ளது. பல காட்சிகளை கண்ணை மூடிக்கொண்டே பார்த்தேன். அவரின் தாண்டவத்தை மொத்தமாக உள்வாங்க ஒரே வழி இது, இல்லையெனில் காட்சிப்படுத்தலில் இருக்கும் பாலாவின் தனித்தன்மை இசையுடன் போட்டி போடும். ஓம் சிவோஹம் பாடலில் இவரின் தனி ஆவர்த்தனம், absolute Ilayaraja Brand.

ஆர்யா அல்ல, அஜித்தாக இருந்திருந்தாலும் வியக்க வைத்திருப்பார். இது முற்றிலும் பாலா படம். ருத்ரன் பாலாவின் நாயகன். முற்றிலும் சேர்ந்தமைந்த directorial film இது.

நான் எப்போதும் வியக்கும் பாலா factor இதிலும் தவறாமல் இருந்தது. பல படங்களில் hero மட்டுமே rugged ஆக இருப்பார், மிஞ்சி போனால் வில்லன். ஆனால் பாலாவின் படம் முழுவதுமே (நகைச்சுவை தவிர) rugged ஆக இருக்கும். நான் கடவுளில் இது வழக்கம்போல் கைவிடப்படவில்லை.

பூஜா தேவைதானா என மட்டுமே தோன்றியது. வியத்தகு நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியவில்லை. மெத்த உழைத்திருக்கிறார். ஆனால் தேவையில்லாத உழைப்பு பெரும்பாலும் எடுபடாது. அப்படி அப்படியே இருந்துள்ள பலரின் நடுவில், இவர் மட்டும் சினிமாத்தனமாய்/புகுத்தபட்ட குறைபாடுகளுடன் (வெள்ளை லென்ஸ் வகையறா) இருந்ததாக எனக்கு பட்டது.
. . .
A.R. ரஹ்மான். ஆஸ்கார் இவருக்கு கிடைத்த மிகப்பெரும் commercial வெற்றி. வாழ்த்துக்கள். சிலர் சொன்னதுபோல், Slumdog Millionare இவரின் ஆகப்பெரிய படைப்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த விதத்திலேயும் entertainment richness குறைந்த பாடல்களல்ல. ரஹ்மானின் இரவு உழைப்பில் உருவான மற்றுமொறு நல்ல படைப்பு. கொசுக்கடிக்கு மத்தியில் DTS இல்லாமல் திருடா திருடாவில் “வீரபாண்டி கோட்டையிலே” கேட்ட அனுபவத்திற்கு Jai Ho எந்த விதத்திலும் ஈடு கொடுக்கமுடியவில்லை என்பதே என் கருத்து. ஆஸ்காரையும் தாண்டி போகக்கூடிய திறமை உள்ளவர். இவருக்கு ஆஸ்கார் மற்றுமொறு விருது, அவ்வளவே.
Kodak Theater. இங்கு செல்லும் வாய்ப்பு நான் Los Angeles செல்லும்போது கிடைத்தது. உள்ளே விடவில்லை, முழுவதாய் பார்க்கவும் முடியவில்லை. ஆனாலும் பல மகானுபாவர்கள் கால்பட்ட இடம், நம்மில் ஒருவன் எப்போது மிதிக்கபோகிறானோ என்ற நினைப்பு அப்போதிருந்தது. இப்போதில்லை.
நிலை உயரும்போது சிரம் தாழும் இவரின் குணமும் இசையும் எந்த நாளும் மாறாதிருக்க எல்லா புகழும் சேர்ந்த இறைவன் அருள் புரியட்டும்.

Tuesday, January 20, 2009

ஒபாமா ...
Rosa sat so Martin could walk; Martin walked so Obama could run; Obama is running so our children can fly

Saturday, January 10, 2009

சென்னை புத்தக கண்காட்சி - 2009

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை. இப்போதைக்கு சென்னை தான் ஜாகை என்பதால், திறந்த மூன்றாவது நாள் சென்றிருந்தேன். இதற்கு முன் காயிதே மில்லத்தில் நடந்தது. இப்போதெல்லாம் செயிண்ட் ஜியார்ஜ் ஆங்லோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. முன்னதற்கும் இதற்கும் கட்டமைப்பு ஒன்றாகவே பட்டது. உள்ளே நுழையும் பாதையின் இரு பக்கத்திலும் இடைவெளியில்லாமல் பேனர்கள். நல்ல விஷயமாக ஒவ்வொரு பேனரிலும் எந்த ஸ்டால் எண் என்று போட்டிருந்தார்கள். மொத்தமாக ஒரு லே-அவுட் பேனர் வெளியே போட்டிருந்தால், குறித்துக் கொண்டு போக வசதியாக இருந்திருக்கும். பலர் எந்த பதிப்பகம் எங்கே இருக்கிறது என்று கேட்டு கேட்டு அலைந்து கடைசியில் கேண்டீனில் தஞ்சம் புகுந்தார்கள்.

கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களின் மாலைகளிலும் யாராவது பேசுவதோ இல்லை நிகழ்ச்சி நடப்பதோ வழக்கம். நிகழ்ச்சி பட்டியல் கண்ணில் படும் வகையில் வைத்திருந்தார்கள். நான் போன நாள் வைரமுத்து வார்த்தை உதிர்ப்பதாக போட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி பட்டியல் BAPASI வலைப்பக்கத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் பலருக்கு உபயோகப்படும்.

நான் பார்த்து புத்தகம் வாங்க உத்தேசப்பட்டது நான்கு பதிப்பகங்கள் மட்டும். காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு மற்றும் விகடன். மற்றவை எல்லாம் உள்ளே நுழைந்து ஒரு கழுகு பார்வை விட்டதோடு சரி. மற்றதில் என்னை கவர்ந்தது தீம்தரிகிட, நக்கீரன். தீம்தரிகிட ஒற்றை இலக்கத்திலேயே புத்தகங்கள் வைத்திருந்தார்கள். கூடவே வழக்கம் போல் poll. ஞானி கைவண்ணம். ஞானி உட்கார்ந்திருந்தால், பார்த்து ஏன் சார் இப்படி என்று கேட்க உத்தேசித்திருந்தேன்.

உயிர்மையில் நல்ல கூட்டம். எந்த பக்கம் நகர்ந்தாலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டோ இல்லை சிபாரிசு செய்துகொண்டோ இருந்தார்கள். நீக்கமற நிறைந்திருந்தவர்கள் சுஜாதா, சாரு மற்றும் எஸ். ராமகிருஷ்ணன். சாரு கொஞ்சம் நிறையவே இருந்தார். பல பேர், எச்ஸிச்டென்ஷியலும் ஃபேன்சி பனியனும் பார்த்தபடிக்கு இருந்தார்கள். நான் ராஸலீலா வாங்க நினைத்தேன். ஆனால், என்னமோ மறு எண்ணம். அதை வாங்குவதற்கு, என் மண்டைக்கு புரியும் நான்கு குட்டி புத்தகங்கள் வாங்க முடிவெடுத்தேன். ஜீரோ டிகிரி படித்த பாதிப்பு. பில் போடுபவரின் பக்கத்து சேரில் எஸ். ராமகிருஷ்ணன் நான்கைந்து பேருடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். அப்படியே புத்தகம் நீட்டுபவர்களிடம் கையெழுத்தும் போட்டுக்கொண்டிருந்தார். நானும் அவரின் சிறுகதை தொகுப்பை நீட்டி ஒப்பம் வாங்கி கொண்டேன். கொஞ்சம் தள்ளி மனுஷ்யபுத்திரன் மேற்பார்வையிட்டபடி இருந்தார். அவர் பக்கத்தில் யாருமில்லை. வாங்கிய சுஜாதாவின் நிலா நிழல் புத்தகத்தில் கையெழுத்து கேட்டு, என்னை அறிமுகபடுத்திக்கொண்டேன்.

கிழக்கு இந்த முறை அதன் குட்டி பதிப்பகங்களுடன் தனிதனியாக ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். நலம், வரம், ப்ராடிஜி, ஆடியோ புத்தகங்கள் இதெல்லாம் தனிதனி ஸ்டால்கள். நல்ல உத்தி. கூட்டத்தை குறைக்கும். கிழக்கில் நுழைந்தால், எதிர்பார்த்தபடி, தள்ளுமுள்ளு கூட்டம். இருந்தாலும் நுழைந்தேன். வழக்கமாய் இருக்கும் சுவாரசியம் எனக்கு இந்த முறை கொஞ்சம் குறைவாக இருந்தது. நிறைய அறிமுகமான புத்தகங்கள் (படிக்காவிட்டாலும்) இருந்த காரணமாக இருக்கலாம். ஆனால், அத்தனை புத்தகங்களும் பளிச் பளிச். அம்பானி புத்தகத்தை வாங்க அல்லோலகல்லோலபட வேண்டிய அவசியமில்லை. சோம வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் மூன்று பாகங்களும் ராஜமரியாதையுடன் நீக்கமற நிறைந்திருந்தது. ஸ்டாக் மார்க்கெட் பக்கம் ஒதுங்கினால் அலுவலகத்தில் பஞ்சப்படி கேட்கும் இந்த நிலைமையிலும், அவரின் புத்தகங்கள் வாங்க பல பேர் இருந்தார்கள். இன்றைக்கு இல்லையேல் நாளை உயர்ந்தே தீரும் என்ற எப்போதும் போல் நம்பிக்கை. கிழக்கின் miniMAX ஒரு நல்ல அறிமுகம். புத்தங்களை சல்லிசாக 25 ருபாய்க்கு வாங்க பிரியப்படும் சரியான பொருளாதார நேரம். ஆயில்ரேகை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கேட்டால், இதோ கொண்டுவருகிறேன் என்று இரண்டுக்கும் மேற்பட்டோர் கால் தெறிக்க ஓடினார்கள். மற்ற பதிப்பகத்தில் குறைந்த ஒரு விஷயம் பாங்கான customer support. அது கிழக்கில் அள்ள அள்ள கிடைக்கிறது. எத்தனை தேடியும் ஆயில் ரேகை கிடைக்கவில்லை. சாரி சார், உங்க அட்ரஸ் குடுங்க, நாங்களே வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். வேண்டாமென்று, நாளைக்கு வருவதாய் சொல்லிவிட்டு, முஷாரஃப்பின் புத்தகம் வாங்கி கொண்டு என் இடத்தை காலி செய்து கொடுத்தேன்.

விகடனில் வழக்கம் போல் பிளாஸ்டிக் கவர் மினுமினுங்க அத்தனை புத்தகங்களையும் அடுக்கிவைத்திருந்தார்கள். விகடன் கொஞ்சம் வாரபத்திரிக்கை பேப்பரில் புத்தகங்கள் அச்சிடுவதை மாற்றிக்கொண்டால் உசிதமாய் இருக்கும். நாள்பட நாள்பட தாள்கள் வெளியே வர, கடைசியில் வீட்டில் கோலப்பொடி கொட்டிவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அங்கே வைகோ எழுதிய ஒபாமா புத்தகத்தை வாங்கி நகர்ந்தேன்.

பெரும்பாலான பதிப்பகங்களில் காணக்கிடைத்த ஒரு விஷயம், அங்கே salesல் இருப்பவர்கள் பலருக்கு புத்தகங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. தன் பதிப்பகத்தில் இருக்கும் புத்தகங்கள் பற்றி அடுத்த பதிப்பகத்தின் இருக்கும் ஒரு விஷயம் தெரிந்த படிப்பாளியிடம் கேட்க சொல்லி சொன்ன ஒருவரை பார்த்தபோது திக்கென்று இருந்தது.

வெளியே வந்தபோது வெள்ளையும் சொள்ளையுமாக கவிப்பேரரசு விரைப்பாக தமிழ் பேசிக்கொண்டிருந்தார். ஆறு மணி விழாவிற்கு ஆறு மணிக்கே வந்தற்கான காரணத்தை சொன்னார். அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி துவக்க விழாவில் கலைஞரின் பேச்சை கேட்க போக வேண்டுமென்றார். அதற்கடுத்து அவரின் வழக்கமான உரையாடல். அந்தளவுக்கு சுவாரசியமில்லாததால் வண்டியெடுக்க நகர்ந்தேன்.

எதிர்ப்பார்த்த அளவுக்கு கூட்டமில்லை. ஆனாலும் வருடாவருடம் இந்த கூட்டம் வருவதே ஆரோக்கியம். நிறைய குழந்தைகளும் அங்குமிங்கும் அப்பா அம்மாவிற்கு தொல்லை கொடுத்தபடிக்கே ஓடிக்கொண்டிருந்தனர். அது இன்னுமொறு ஆரோக்கியம். படிக்கிறார்களோ இல்லையோ, உள்ளே சில நேரங்கள் பிடிவாதம் பிடிக்காமல் இருப்பதே போதும். புதிய புத்தக வாசனை என்னவெல்லாமோ பண்ணும். தானாகவே ஈர்க்கும். ஈர்க்கப்படட்டும். அறிவாகட்டும்.

கிளம்பும் போது பார்த்தால், கண்ணதாசன் பதிப்பகத்தில் கடும் கூட்டம். கூட்டத்தை பார்த்தால் புத்தகம் வாங்கும் கூட்டமாக தெரியவில்லை. கொஞ்சம் எட்டி பார்த்ததில், ராமதாஸ் நின்று கொண்டிருந்தார். ஜி.கே. மணியுடன். எதற்கு வந்தார்களோ தெரியவில்லை. வந்த வேகத்தில் கிளம்பியும் விட்டார்கள்.



Wednesday, December 31, 2008

2009

இந்த வருடமாவது தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் இதை புத்தாண்டு உறுதிமொழியாக எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நடக்கபோவதென்னவோ ஒன்று தான்.

கடந்த ஆண்டு, அப்பப்பா. பலத்த திருப்பங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படம் பார்த்த உணர்வு. 2008 தூவிவிட்ட சில கடின விதைகள் 2009ல் தான் முளைக்கவே போகின்றன என்று பல நிபுணர்கள் வேறு குறி சொல்கிறார்கள். அடுத்த வருடம் கரடுமுரடாக இருக்கபோவதென்னவோ நிஜம். தட்டுதடுமாறி விழாமல் இருந்தால் சரி, நாடாக இருந்தாலும், நாமாக இருந்தாலும்.

நாட்டுல ஏழை ஏழையாவே இருக்கான், பணக்காரன் பணக்காரனாகிட்டே வர்ரான். இப்படி ஒரு படத்தில் வசனம் வரும். இப்போதைய நிலை நிற்காமல் தொடர்ந்தால் அந்த வசனம் சீக்கிரமாகவே பொய்யாகும்.

என் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள். கல்யாணமாகிவிட்டது. எப்போதும் தெரியாத தக்காளி, வெங்காய விலைகளெல்லாம் இப்போது தெரிகிறது. கூடவே விம் பார் போட்டால் பாத்திரங்கள் பளிச்சென ஆகுமென்ற பிரம்ம ரகசியம் வேறு தெரிந்து தொலைத்திருக்கிறது. சில விஷயங்களை வாழ்க்கையில் ரொம்ப நாள் தள்ளி போட முடியாதென்பதென்னவோ உண்மை.

2008 களேபரங்களுக்கு நடுவே Global Warming கொஞ்சம் தூரமாக நிற்கவைக்கபட்டுள்ளது. இப்போதைய Global Recession எல்லாம் 1 வருடமோ 2 வருடமோ இல்லை குறைவாகவோ தன் கோர முகத்தை காட்டிவிட்டு நம்மையெல்லாம் பழைய பாதையில் விட்டுவிடும். ஆனால் GW, slow எமன். சீக்கிரமாக Global Recession முடித்துவிட்டு, நல்ல செய்திகளோடு தொடர 2009 முதல் புள்ளி வைக்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, June 30, 2008

WALL-E

Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது.

2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம், Pixar அனிமேட்டர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணம் செய்த ஒருவர் 2 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், ‘நாங்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் project பெயர் WALL-E'. கிட்டதட்ட எனக்கு தெரிந்தே 2 வருடங்களுக்கு மேல் உழைக்கபட்ட ஒரு படம்.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே (கூட்ட நெரிசலில்லாமல்) பார்த்தேன். தமிழ் பட வாசனை குழைத்த ஒரு அமெரிக்க ஆங்கில (hollywood) படம். மனிதர்களில்லாமல், வரைபடங்கள் சினிமாவாக்கபட்டிருந்தது. புதிதொன்றுமில்லை. ஆனால், பழக்கபட்ட அனிமேஷனை எப்படியாவது ஜனரஞ்கமாக்கபடவேண்டிய அவசியம் இப்போது. முற்காலம் போல், வெறும் சின்ரல்லா வைத்து பிலிம் ஓட்டமுடியாத காலமிது. The Enchanted அப்படி ஒரு படம்தான். ஆனாலும், அதில் real-life vs animation-life வித்தியாசம் காண்பிக்கபட்டது.

Wall-E. கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத ஒரு படம். வேண்டிய அளவுக்கு Hollywood மசாலா தெளிக்கபட்டு, ஒழுங்காக வார்த்தெடுக்கபட்டுள்ளது. சமீப காலமாக, சினிமா தீவிர ரசிகனாக இருந்த நானே, பல படங்களை பார்க்க போய் தூங்கி வழிந்தேன் (தசாவதாரம் உள்பட). Wall-E அந்த குறையை கொடுக்கவில்லை. முதல் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களில் இருந்த மெலிதான தொய்வை தவிர, படம் சரியான விர்ர்ர்ர்.

முதலில் ஒரு இயந்திரத்தை (Robot) பேச வைத்து, அதற்கு மனிதர்களுக்குண்டான பாவங்களை (காதல் கூட விடபடவில்லை) கொடுத்ததெல்லாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால், சின்ன பிள்ளைதனமாக கண்டிப்பாக படும். ஆனால் Pixar வரலாற்றை திரும்பி பார்த்தால், அதற்கு பலமான அஸ்திவாரம் போடபட்டுள்ளது தெரியும். இவர்களின் Toy Story, A Bugs Life, Monsters Inc., Finding Nemo, Cars, Ratatouille எல்லாமே பெரும்பாலும் மனிதர்கள் கம்மியாகவும், non-மனிதர்கள் அதிகமாகவும் வைக்கபட்ட படங்கள் தான். அதில் கைகொடுத்த வெற்றி formula தான் Wall-E.

இதில் (அப்பாவி)ஹீரோ இயந்திரத்தின் பெயர் தான் Wall-E (Waste Allocation Load Lifter Earth-Class). ஹீரோயின் இயந்திரத்தின் பெயர் Eve (Extraterrestrial Vegetation Evaluator). இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து, பல பல கோள்/வாண்வெளி இடையுறுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன செடியை (படத்தின் மிக முக்கியமான விஷயம் இந்த செடி. இதன் பின் இன்றைய கால பயங்கரம் கொஞ்சமாக சொல்லபட்டுள்ளது) பூமிக்கு கொண்டுவந்து சேர்க்கும் வேலையை ஜோடியாக செய்து முடிப்பது தான் கதை.

கதை ஒரு வரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை அசத்தலோ அசத்தல். பூமியில் துவங்கும் கதை, வான்வெளிக்கு பறந்து, அங்கே சில பல action block, romance block, comedy block எல்லாம் போட்டு, மறுபடியும் பூமிக்கே திரும்பி u-turn அடிக்கும் திரைக்கதை.

படத்தை பார்க்கும் போது, சில தமிழ் படங்களின் காட்சிகள் உங்கள் கண் முன் வர ஏகபட்ட சாத்தியங்கள் உண்டு. எனக்கு கண் முன் வந்தது, மூன்றாம் பிறை மற்றும் பல நூறு மசாலா படங்கள்.

Sunday, March 02, 2008

வாத்தியார்

கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா' என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர் ரோபோ பற்றி சொல்ல, மற்றொறுவர் நகரம் பற்றி சொல்ல, எங்கும் பாரபட்சமில்லாமல் நிறைந்திருந்தார்.

எனக்கு முதன் முதலில் சுஜாதாவை அறிமுகபடுத்தியது, அப்பா. அப்போது வந்திருந்த ரத்தம் ஒரே நிறம் தொடர். வாரபத்திரிக்கையில் வந்த தொடரை எல்லாம் மொத்தமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். படிக்கும்போது கிட்டதட்ட 14 வயதிருக்கும். வெறும் ஆனந்த விகடன் படித்த நேரத்தில் முதல் நாவலாக படித்தது இந்த ரத்தம் ஒரே நிறம். அப்போதைய படித்ததின் மனநிலை இப்போதைக்கு நியாபகம் இல்லை. இருந்தாலும், அப்பாவின் TVS Champன் மீது உட்கார்ந்து கொண்டு ஆடிகொண்டே பல மணி நேரம் படித்தது நிழலாடுகிறது. சுஜாதா ஈர்ப்புவிசை அப்போது ஆரம்பித்தது. பிறகு நீண்ட காலம் தொடரவெல்லாம் இல்லை. ஆனால் சுஜாதா என்ற அறிமுகம் இருந்தது.

பிறகெல்லாம் எல்லாரும் போல நானும் கற்றதும் பெற்றதும், சீரங்கத்து தேவதைகள், சில சிறுகதைகள், சில நாவல்கள் படித்ததுண்டு.
எந்த வார்த்தையிலும் அல்லது படைப்பிலும் மிதமிஞ்சிய செண்டிமெண்ட் இருக்காது. எதையுமே maturedஆக பார்க்கும் ஒரு எழுத்து. இவரின் எழுத்துக்களில் பெரிதாய் மேதாவித்தனம் இருக்காது. ஆனால், அதை லேசாக தொட்டுவிட்டு போகும் பலம் இவருக்கு உண்டு.
வைரமுத்துவில் தொடங்கிய என் மெலிதான புத்தக பழக்கம், அடுத்ததாக நகர்ந்தது இவரின் பக்கம் தான். சுற்றி சுற்றி எல்லாரும் இவரையே பரிந்துரை செய்தால் வேறேன்ன செய்துவிட முடியும்.
ஓரளவுக்கு விபரம் தெரிந்த நேரத்தில் நான் படித்தது “ஆ” நாவல். இதன் ஆதாரம் எல்லாம் ஒரு சின்ன வியாதி. மூளைக்குள் நடக்கும் சில விஷயங்கள். ஒரு எழுத்தாளராக இவருக்கு அதில் இருந்த கதைக்களன் இது மட்டுமே. அதன் அறிவியலை விளக்காமல், கதையோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டி வெட்டி பரபரப்பு கூட்டி இருப்பார். அதன் பிறகு, இவரின் எந்த நாவலாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் படித்திருக்கிறேன்.
கமல், அவரின் சுஜாதா இரங்கலில் சொல்லி இருந்த விஷயம் சத்தியமானதாக பட்டது. சினிமாவில் சுஜாதா, என்பது ஒரு சமரசம் மட்டுமே. எழுத்தில் இருந்த அத்தனை பட்டாசுகளும் திரையில் வெளிபட்டதாக எனக்கு தெரியவில்லை. சில படங்களை பார்த்த பின்பு, இது சுஜாதா என்று சொன்னபின்பே தெரிந்தது. இவருக்கான களம் இல்லை சினிமா, எனக்கு தெரிந்தவரை. அல்லது, இவருக்கு தீனி போடும் அளவுக்கு நம் சினிமா இன்னமும் நகர்ந்து விடவில்லை.
எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை கவனம். ஒவ்வொரு விஷயமும் கவனிக்கபட்டால் மட்டுமே எழுத்தாக்க முடியும். இந்த பதிவாளரின் சுஜாதா பற்றிய பதிவு அதை தெளிவாக சொல்லும்.
அவரின் உடல்நிலை சரியில்லாத விஷயத்தையே நகைச்சுவையாக சொன்ன மனிதர் இவர். ரொம்ப கஷ்டப்படாமல் சுவாசம் நிறுத்தி இருப்பார்.
மரணித்தவர்கள் ஒரே ஒரு முறை எழுத ஒரு வாய்ப்பு அமைக்கபட்டிருந்தால், இவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கபட்டு எழுதப்படும் அந்த இரண்டு பக்க கட்டுரை படிக்க கண்டிப்பாக ஆவலாயிருப்பேன். இவரை விட மரணத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட யாராலும் முடியாது.

Thursday, January 03, 2008

ஆதி

(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி)
ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தனத்தால். எப்போதும் பர பர குணம் அவன். சொல்வதை கேட்காத குணமும் சேர்ந்து கொண்டது. நல்லவிதமாய் NASAவில் (ரகு செல்லமாக Rug அமெரிக்காவில்) வேலை செய்வதால் அவன் அப்பாவும் இவனிடம் பெரிதாய் அலட்டிகொள்வதில்லை. ரகுவை அரட்டி புரட்டினால் எதிரில் இருப்பவர் நிலைமை பரிதாபம் தான். இப்போதைக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்யறதெல்லாம் பழசாகி போச்சு என்று சொல்லியும் கேட்காமல், அப்பா பிறந்த நாளிலேயே ஏற்பாடு செய்தான். அவன் சொன்ன காரணம் கொஞ்சமாய் பயமுறுத்தினாலும், இவன் நினைத்ததை யாரும் தடுத்தாட்கொள்ள முடியாத நிலை. கல்யாணமும் முடிந்திருக்கவில்லை. ரகு மெத்த படித்ததை நினைத்து இப்போது அப்பாவுக்கு கவலை. இல்லையென்றால் ஏதோ Nano technology, Energy technology என்று சொத்தை வேலையில் மிதமான சம்பளத்தில் காலம் தள்ளியிருப்பான். அதிகமாய் படித்து, அதிகமாய் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி, அமெரிக்க குடியுரிமை பெற்று, இப்போது Voyager Mars Programல் பணி.

60ம் கல்யாணம் அமோகம். ரகு பெரும்பாலும் 'நன்னா செஞ்சுட்டேள். உங்க அப்பா, அம்மாவுக்கு மனசெல்லாம் நெறஞ்சு போயிருக்கும். எனக்கும் தான் வந்து பொறந்திருக்கே ஒரு திராபை' போன்ற டயலாகுகளை கேட்டவாறே ஓடி ஓடி களைத்து போனான். நடுவில் மேடையில் பாடிகொண்டிருந்த பாடகர் வேறு, இவனை பாட அழைக்க, 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' பாட்டை தப்பு தப்பாக முச்சிரைக்க பாடி விட்டு, மறுபடியும் வேகபடுத்தி வேலை செய்தான்.

ரகுவின் அப்பா இப்போது வழக்கம் போல கண்ணீருடன், போகாத இங்கயே இருந்துடேன். ரகு - இல்லப்பா, உங்களுக்கு தெரியும். Voyager சாதாரண விஷயமில்ல. எனக்கு பெருசா பேச நேரமில்ல. நான் Houston போய்ட்டு உங்கள கூப்பிடறேன். நான் டிசம்பர் 30 கெளம்பறேன். அப்பாவும் அம்மாவும் மறுபடியும் அவன் செய்ய போகும் பயணத்தை நினைத்து பார்க்க விரும்பவில்லை. இவர்கள் இருக்கும் வருடம் 2080. கலாச்சாரங்கள் பெரிதாய் மாறுபட்டுவிடவில்லை, எல்லோரும் எதிர்பார்த்தது போல்.

டிசம்பர் 30. ஆனமட்டும் உலக ஜனங்கள் எல்லோரும் அவர்களுடன் உள்ள தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தார்கள், ரகுவின் அப்பா அம்மா தவிர. காரணம் Voyager பல முறை Nasaவில் தோல்வி அடைந்த, கிடப்பில் போடபட்டு திரும்ப பல முறை எடுக்கபட்ட ஒரு முயற்சி. இந்த முறை கண்டிப்பாய் Marsல் கால் பதிக்கும் சாத்தியம் உண்டு. இதற்கு முன்னால் unmanned mission & animal based missionம் வெற்றி பெற்ற நம்பிக்கை. ஆனால் மொத்தமாய் 4 வருட கால ஆராய்ச்சி. ரகு பூமியின் இலக்கில் இருந்து பல தூரத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். 10 பேர் அடங்கிய கூட்டணி என்றாலும், போகும் இடம் Mars என்பதால் இத்தனை சிந்தனைகள்.

(பூமியில் இப்போது தேதி, டிசம்பர் 31 2081) ரகு இப்போது இருப்பது Mars. அலட்டிகொள்ளாமல் எல்லோரும் வேலையை பார்த்தார்கள். இவர்களின் ஆராய்ச்சி 5 பூமி மாதங்கள். மனிதனின் உடனடி தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யபட்டு, கன கச்சிதமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ரகுவின் தேடல் உச்ச கட்ட நிலைக்கு போக, அவனின் ஆராய்ச்சி சொன்ன நிலையை தாண்டி போய்கொண்டிருந்தது. அவனின் ஒரே கோட்பாடு, Mars முன்பே மனித இனம் அல்லது அது போன்ற ஒன்றை கொண்டிருந்தது என்பது தான். இதை விளக்கி சொல்லி பல நேரங்களில் கஷ்டபட்டிருக்கிறான். இப்போது சொல்லாமல் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டான். Marsல் சுற்றி திரிய சூரிய வெளிச்சத்தை எனர்ஜியாக பயன்படுத்தும் வாகனம் எல்லோருக்கும் கொடுக்கபட்டிருந்தது.

ரகுவின் மனது சொன்னதெல்லாம், முதலில் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடு, பிறகு மனித இனத்தின் சுவடை தேடலாம் என்பது தான். சுற்றி திரிந்து கண்டுபிடித்துவிட்டான். அங்கே தன் கூட்டாளிகள் இருந்திருக்கவில்லை. அவனுக்கு தண்ணீரின் குணம் சற்றே பயமுறுத்தியது. இதுவரை வரையறுக்கபடாத ஒரு நிறத்தில் இருந்தது. பயத்தின் உணர்வால், தண்ணீரை தொட யோசித்தபடியே, தன் ஆராய்ச்சியின் போது படித்த Mars minerals தன்மை பற்றியெல்லாம் தேவையில்லாமல் யோசித்தபடி, நேரம் ஓடிகொண்டே இருந்ததால், வேறு வழி இல்லாமல் அதை experiment'காக கைகள் படாமல் எடுத்து வைத்த அடுத்த நிமிடம், இடது பக்கத்து காது சுத்தமாய் அடைக்கபட்ட ஒரு உணர்வு.

கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை இழக்கும் நிலை. சில நிமிடங்கள் தான். அவன் இப்போது கண்கள் திறந்தபடிக்கே மயங்கினான். ஆனால், இது எப்போதும் வரும் மயக்கமில்லை. கண் முன் மஞ்சள் வண்ணங்களோ, தலை சுற்றலோ இல்லாத மயக்கம். Mars வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதோ, ஆனாலும் மூளை எப்போதும் போல் சிந்திப்பதில், மொத்தமாய் குழம்பி போனான். இப்போது அதிலும் நிசப்தம். தன்னுள் ஏதோ ஒன்று இயங்கியது மட்டும் தான் அவன் நினைவில் இப்போது இருப்பது. எப்போதும் நம்பாத அசிங்கமான alien பற்றியெல்லாம் நினைக்க அவன் மூளை இடம் கொடுக்கவில்லை.

கண் மட்டும் இயங்க, இப்போது அவன் முன் எந்த மாற்றமும் இல்லாத ஒரு மனித உருவம். உருவம் மட்டுமே மனிதத்தனமாக இருக்க, தோலின் நிறம் அதே வரையறுக்கபடாத தண்ணீரின் நிறம். பெரிதாய் கிழியாத உதடு. மொத்தமாய் ஒரு சின்ன O. கைகள் சமானமில்லாத நிலை. கால்களும் கைகளும் கீழே ஊனிகொண்டு, சற்றே குரங்கின் வாடிக்கைகள். ரகு எதை எதையோ முடிச்சு போட்டுகொண்டிருந்தான். எண்ணங்கள் ஒரு சீராக இல்லை. ஆனாலும் அதன் சைகைகள் புரிந்து கொள்ளும்படியாக இருப்பது போல் உணர்ந்தான். அது இவன் முன் சிறிது இடைவெளியில் வந்து நின்றபோது, தேவை இல்லாமல் புளித்து போன தோசை மாவின் வாசனை நியாபகம் வந்து தொலைத்தது. அது இவனை தொட முயற்சிப்பது இவனுக்கு புரிந்துவிட்டது. ஓட முயற்சிக்கவில்லை இவன். தொட்ட நிமிடம், தீடீரென சிறு உருவமாக தண்ணீரில் நீந்தும்படிக்கு ரகு மனநிலை. பாதி குழம்பிய அவன், இப்போது முழுதாய் குழம்பி போனான். ஆனால் எங்கோ மூலையில் நான் நினைத்தது சரி என்று அடித்துகொண்டிருந்தது.

இப்போது அது இவனை விட்டு தூரத்தில். பெரிதாய் நகர்ந்துவிட முடியாத நிலை. அப்போது தான், குரல் எழுப்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. ஆனாலும், அது இவனிடம் எதையோ சைகை காட்டிய லேசான நியாபகம். கையை கீழே முட்டு கொடுத்து எழுந்திருக்கும் போது, உள்ளங்கையில் சில்லிட்டது. அங்கே, மஞ்சளும் சிவப்பும் கலந்த வடிவமில்லா பெரிய கல். அப்படிபட்ட வெப்பநிலையில் கல் சில்லிடுவது வித்தியாசபட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்துவிட்டான். எடுத்தவுடன் தான், scan செய்ய மறந்தது உறைத்தது. இருந்தாலும், என்ன தான் இருக்கிறது என பார்க்க அதில் பல கிறுக்கல்கள்.

(பூமியில் இப்போது தேதி, மே 31 2082) ரகுவுக்கு இப்போது பல பட்டங்கள். Mars மண் தொட்ட சில யுக புருஷ புருஷிகளில் இவனும் ஒருவன். இந்தியாவில் இவன் பெயரில் NH திறந்துவிட்டிருந்தார்கள். ரகுவுக்கு மட்டும் அந்த கல்லின் ஆராய்ச்சி முடிவு பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அதன் கிருக்கல்கள்.

3 மாத இடைவெளி. ரகு இப்போது மொத்தமாய் வெளியே விடபட்டான் (Mars கதிர்வீச்சுக்கள் பூமியில் பாய்ந்துவிடாமல் இருக்க, 3 மாத observation period). அப்பா, அம்மாவிற்கு தன் குரலை deliver செய்துவிட்டு, லேபிற்கு ஓடினான். சம்பிரதாயங்கள் முடிக்கபட்டு, அவன் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் இவன் கண்டெடுத்த கல்லின் முன் நின்று கொண்டிருந்தான்.

இக்பால் அந்த கல்லை உருட்டி புரட்டி கொண்டிருந்தவன். இராக்கில் இருந்து digitial archaeology படித்த award winning விஞ்சானி இவன். ரகுவிற்கு நல்ல நண்பனாகி விட்டிருந்தான். 1 மாததிற்கு பின், ரகுவிற்கு கிடைத்த செய்தி, அந்த கல் இப்போது இருப்பது சென்னையில், ஆராய்ச்சிக்காக.

சென்னை ஆராய்ச்சி மையம். மெலிதாக oxygen கலந்த குளிர் எல்லோர் முகத்திலும் அறைந்து கொண்டிருந்தது. இக்பாலும் ரகுவும் இப்போது ரகுவின் அப்பா முன். ரகுவின் அப்பா அந்த காலத்து தமிழ் ஆராய்ச்சி செய்தவர். கொஞ்சம் கொஞ்சமாய் கல்லின் கிருக்கல்கள் தமிழ் படுத்தபட்டு கொண்டிருந்தன. Oxygen நிரப்பபட்டிருந்த்தும் முவரின் மூச்சு சில நேரங்கள் பெருத்த இடைவெளியில் வந்து கொண்டிருந்தன. மொத்தமாய் இப்போது கல்லின் கிருக்கல்கள் தமிழ்படுத்தபட்டிருந்தது.

"இந்த கிரகத்தின் கடைசி நிமிட பதிவு. இந்த பதிவு எழுதபட்டிருப்பது எங்கள் மொழியில். எழுதியது ஒரு கடைசி உயிரினம். எழுதபட்ட விதம் - எங்களின் விஞ்சான வளர்ச்சியில் உருவான அழியாத எழுத்து பதியும், எதிலும் எழுதும் கருவி. இந்த கிரகம், இப்போது அழிந்து போக போகிறது. சுற்றிலும் இறந்த வாசனைகள்.

நாங்கள் வளர்த்த விஞ்சானம் எங்களை பால்வெளிக்கு அப்பால் பயணிக்க வைத்தது. எங்கள் கிரகத்தை சந்தோஷபடுத்தியது. ஆனால், பின்னாலேயே அதன் அடங்கா கோபம் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் உருவாக்கிய விஞ்சானம், எங்கள் வாழ்க்கையில் ஒன்றாகி, இயற்கை குலைத்து, கிரகம் அழிக்கபட்டு விட்டது. கடல் மட்டங்கள் உயர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம்.

எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு நாங்கள் இட்ட பெயர் Adam & Eve"

Tuesday, December 25, 2007

சில உலக சினிமா

நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா பார்க்கும் பழக்கத்தை மறுபடியும் ரிப்பன் வெட்டி துவக்கி, atleast, அக சோம்பேறிதனத்தை தள்ளி போட முடிவு செய்து BlockBuster'ல் சேர்ந்தேன். பார்த்த படங்கள் (எல்லாம் பழசு தான்) பற்றி குட்டியாக சொல்ல ஆசை.

Pursuit of Happyness - உண்மை தழுவிய கதை. Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். Spider Man, Harry Potter எல்லாம் தமிழ் பேசினார்கள், நம் நாட்டில். இந்த படத்தை தமிழ் செய்து வெளியிட்டார்களா என தெரியவில்லை. செய்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.

Babel - கொஞ்சமாய் என்னை திக்குதிக்கென ஆக்கிய படம். இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை. தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.

L.A. Confidential & The Departed - இரண்டுமே ஒரு வகையில் ஒரு மாதிரி. தங்களுக்குள் (police/gangster groups) தங்களுக்கு தெரியாமல் புகுத்தபட்ட விஷயத்தை கண்டுபிடிப்பது தான். குருதிபுனல், காக்கிசட்டை, போக்கிரி எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நல்ல பர பர திரைக்கதை. Dinner சாப்பிட்டுகொண்டே பார்க்க சரியான படங்கள்.

Bicycle Thief - இது ஒரு பழைய இத்தாலிய திரைப்படம். கடைசி நிமிஷ பன்ச் தான் திரைப்படம். அந்த பன்ச் அழுத்தமானதாய் இருக்க மீதி காட்சிகள். நல்ல வேளையாக போர் அடிக்கும் நிலை வரும் சரியான நேரத்தில் படத்தை முடித்துவிடுகிறார்கள். ஆனால், கடைசி பன்ச் நிஜமாகவே அசத்தல். ஒரு சைக்கிளுக்கு அவ்வளவு மரியாதை அந்த காலத்தில் (1948).

Apocalypto - Mel Gibson'ன் The passion of the Christ பார்த்து தியேட்டரில் ஒரு பெண்மணி கேவிகேவி அழுதது தான் எனக்கு நியாபகம் வந்தது. Apocalypto, Mel Gibson'ன் இரண்டாவது இயக்க முயற்சி. அசாத்திய முயற்சி. Mayan நாகரீகம் தான் கதைக்களம் மற்றும் அந்த மக்கள் தான் கதையில் இருக்கிறார்கள். கொஞ்சமாய் பல தமிழ் பட கதைகளில் வரும் விஷயம் தான். அப்பாவி ஹீரோ, கடைசியில் வில்லனை ரவுண்ட் கட்டி அடிக்கும் மசாலா கதை. ஆனால் இதன் பிரமாண்டம் ஆச்சரியம். இங்கே பிரமாண்டம் graphics அல்லது set கிடையாது. நம் கண் முன் விரியும் Mayan மக்களின் வாழ்க்கை.

Walk the line - ஒரு biography வழி கதை. The beautiful mind, Pursuit of Happyness எல்லாம் இந்த வகையறா. இங்கே Johnny Cash என்பவரின் இசை வாழ்க்கை. பார்க்க பார்க்க எனக்கு முன் சிந்து பைரவி தான் ஓடியது. அச்சு அசல் அப்படியே எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இரண்டிருக்கும் பெரும்பாலும் நிறைய ஒற்றுமை. வாழ்ந்து, கெட்டு மறுபடியும் வாழ்ந்து விட்ட ஒரு இசைஞனின் வாழ்க்கை அழகாக நெய்யபட்ட படம். படத்தின் கதாநாயகி Reese Witherspoon கொள்ளை அழகு. அவருக்காகவே அவரின் Legally Blonde (2001) அடுத்து subscribe செய்து விட்டேன். முடிந்தவரை ஜொள்ளிகொள்ளத்தான்.

இதெல்லாம் இல்லாமல், சனி ஞாயிறெல்லாம் தியேட்டரில் பார்த்த படங்கள் தனி கணக்கு. முடிந்த்தால் அதையும் எழுத ஒரு எண்ணம்.

Monday, December 24, 2007

2008 முடிவில்...

இந்திய பொருளாதாரம் பின்னி பெடலெடுத்திருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதியாக Obama முடிசூடியிருக்கலாம். திமுக ஒரு இளைஞரை (அல்லது அப்படி சொல்லபடுபவர்) தலைவராக்கி இருக்கலாம். United Kingtom'ன் தேசிய கீதம் "God save the king" என மாறி இருக்கலாம். அமெரிக்கா ஈராக்கை இடது வலதாக வளைத்த விளையாட்டை நிறுத்தி அடுத்த பெட்ரோலிய நாட்டின் மேல் நோட்டம் வைத்துகொண்டிருக்கலாம். ஜெயித்த மோடி, அத்வானியை ஜெயிக்க வைக்க ஊர் ஊராக தண்டோரா போட்டு கொண்டிருக்கலாம்.
ஆசிய கணினி மக்கள் அமெரிக்காவை சீ இந்த பழம் புளிக்கும் என தற்காலிகமாக திட்டிகொண்டிருக்கலாம். Microsoftம் Googleம் இன்னமும் அதே பங்காளி சண்டையை சிரித்துகொண்டே போட்டுகொண்டிருக்கலாம். மிக பெரிய அளவில் Cyber attack நடந்திருக்கலாம். ரஷ்யா அமெரிக்காவிடம் "நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால்..." என பாடிகொண்டிருக்கலாம். Larry Ellison சுண்டு சுளுவான்களை எல்லாம் அள்ளி தன் பாக்கெட்டில் போட்டு கொக்கரித்து கொண்டிருக்கலாம்.
மணிரத்னம் அடுத்த காதல் கதையை மனதுக்கு இதமாக யோசித்து கொண்டிருக்கலாம். கமலின் தசாவதாரம் தமிழ் சினிமா காணாத தோல்வியை தழுவி இருக்கலாம். சுல்தான் பிச்சிகொண்டு ஓடலாம். ரஹ்மான் ஐரோப்பிய யூனியனில் citizenship வாங்கி இருக்கலாம். ஜோடி நம்பர் 1 சீசன் 3'ல் பிரித்விராஜ் நடுவராகி இருக்கலாம். மோனிஷா சிம்புவின் ஆதர்ஷ நாயகி ஆகியிருக்கலாம். Aamir Khan கஜினியை நம்பி ஏமாந்து போயிருக்கலாம்.
அத்தனையும் யூகம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு வருடமும் நம் வீட்டு தாத்தா பாட்டி 'அது என்னமோப்பா, இப்போவெல்லாம் வெயிலும் குளிரும் மனுஷன பொரட்டி எடுக்குது. நாங்க இப்படி எல்லாம் பாத்ததில்ல. என்ன உலகமோ' என சொல்வது மாற போவதில்லை. நீண்ட வெயில் காலம், நீண்ட குளிர் காலம், உருகும் Artic & Antartic இதெல்லாம் பெரும்பாலும் அடுத்த சில பல வருடங்களில் பழகிவிடும்.
அறிவியலை நம் வாழ்க்கையில் புகுத்திய போதெல்லாம் இதை பற்றி யோசிக்க மனம் மறுத்துவிட்டது. புகுத்திய விஷயங்கள் உறுத்த ஆரம்பித்தவுடன், இப்போதெல்லாம் natural and alternate energy பற்றி யோசிக்கிறோம். ஒவ்வொரு generation'க்கும் ஒவ்வொரு பிரச்சனை. நமக்கு இது. தீர்க்கிறோமோ இல்லையோ, முடிந்தவரை முயன்று தள்ளிபோடலாம்.
2008-Planet Earth நல்லபடியாக, நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...