Tuesday, January 05, 2021

புள்ளி

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. ஒருக்களித்து படுத்ததில் கொஞ்சம் ஆறுதல். நாற்பத்தியைந்து வயதில் எவ்வளவு தான் படுத்தி எடுக்கும்? எல்லாம் புகுத்திக்கொண்டது, தானே தொத்திக்கொண்டது அல்ல. வர வேண்டாம் என நினைப்பதெல்லாம் வராமல் தான் இருக்கும். வந்து விடுமோ, வந்தால் என்ன ஆகுமோ, வந்தே விட்டதோ என விட்டத்தை பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் வந்து தான் தொலைக்கும். என்னவோ இதயத்தையே இழந்து விட்டதை போல சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். வெத்துவேட்டான ஒரு பிரச்சினை தான். வாய்வு தொல்லை. யாருக்குத்தான் இல்லை என நீங்கள் சொல்லும் வெறுப்பு வார்த்தைகள் எனக்கு கேட்கத்தான் செய்கிறது. தெரிந்தே கடந்து செல்கிறேன்.

இவ்வளவு விரிவாக ஜவ்வு போல வாய்வு தொல்லை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கும் போது தான் குளிரை உணர்கிறேன். உறைகிறேன், இதற்காகத்தான் வந்தேன். குளிர் என்னை அடை காக்க வேண்டும் என்று தான் வந்தேன். அதையும் தாண்டி வேறு என்னவெல்லாம் என்னை அமிழ்த்தும் எனும் போது தான் ஒன்று புரிந்தது. உள்ள பரிமாற்றத்திற்கும், அதன் மேல் கீழ் இயக்கத்திற்கும் ஒரு இயற்கை நிகழ்வு எப்போதும் பக்கத்திலேயே இருந்திருக்கிறது. அந்த இயக்கம் ஒரு நேரம் மகிழ்வின் உச்சத்தில் கொண்டு செல்கிறது. இன்னொரு நேரம் சோகத்தின் அந்தத்திற்கு கொண்டு செல்கிறது. இப்போது அந்த அந்தத்திற்கு தான் ஏங்கி வந்திருக்கிறேன். அந்த அமிழ்த்துதல் இப்போதைக்கு தேவைப்படுகிறது. என்னதான் அது சொல்லித்தொலையேன் என சொல்வது கேட்கிறது. எப்படி நாங்கள் நினைப்பது உனக்கு கேட்கிறது என நீங்கள் கேட்பதும் எனக்கு கேட்கிறது. நாங்கள் சொல்வதையும், அதை நீ புரிந்து கொண்டாய் என சொல்லும் மேதாவித்தனத்தையும் கேட்பதற்கு தான் நாங்கள் உனக்கு பத்து நிமிடங்கள் கொடுத்திருக்கிறோமா என கேட்க வாய்ப்பும் இருக்கிறது. கேட்டு விடுங்கள். அந்த ஆசுவாசத்திற்கு பின் பதில் சொல்கிறேன்.

அந்த ஒரு நொடி தான் எனக்கு இத்தனை நெருக்கடியை கொடுத்தது. அவளுக்கு என் மேல் மிகப்பிரியம். பிரியம் என்றால் அவ்வளவு பிரியம். எனக்கு சமைத்து போடுவாள். தலையை கசக்கி பிழிந்து சீயக்காய் போட்டு, பட்டு போல தலை முடியை அலை போல மாற்றி விடுவாள். கொஞ்சம் முகம் சுளித்தால் போதும், அடுத்த நிகழ்வு அத்தனையும் என்னை பேரன்பில் ஆழ்த்தும். கொஞ்சம் கூட சுணங்கி போக விட மாட்டாள். ஏன் இவ்வளவு காதல் என்று கேட்டால், அதை அன்பு என்று சொல்வாள். சரி அது கூட எதற்கு இவ்வளவு என கேட்டாள், பதில் இருக்காது. அடுத்த சமையலில் அதற்கு பதில் இருக்கும். நாக்கில் இருக்கும் சுவை நரம்புக்கும் அவளுக்கும் பெருத்த நட்பு உண்டென்பது பல வருடங்களுக்கு பின்பு தான் எனக்கு புரிந்தது. ஏதோ கொடுத்து வைத்தவள் போல, அவள் சமைத்தால் மட்டும், நாக்கை வழித்துக்கொண்டு அந்த சுவை நரம்புகள் பல் இளிக்கும். எத்தனை நாள் தான் இதையே செய்து கொண்டிருப்பாள். அதற்கும் பதில் இல்லை.  அவளுக்கு அன்பை பொழிந்து கொண்டிருக்கும் ஒரே சாபம் மட்டும் விதிக்கப்பட்டு இருந்தது போல. அதுவும் எனக்கு மட்டும். அது என்ன சாபம் என்று கேட்டால், ஆமாம் பின்னே எனக்கு, அதுவும் என்னைப்போன்ற நிரந்தர மனிதத்தன்மை இழந்தவனிடம் இவள் அத்தனை கொடுப்பது சாபம் தான். அவளுக்கு என்னமோ என்னை பார்த்தால், அவள் சொல்லும் அன்பு, பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அப்படி வந்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி. 

அந்த ஒரு நொடி. நொடிக்கு பின் அவள் மீது பல ரத்த தடங்கள். முகத்தில் தான் அத்தனையும் இருந்தன. என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தன. காரணம் கேட்க கூட எனக்கு திராணி இல்லாமல் இருந்தேன். என் மரியாதைக்குரிய ஒருவன் தான் அதை செய்து வைத்திருந்தான். அவனிடம் எனக்கு கொடுக்க நன்றிகள் மட்டுமே இதற்கு முன் இருந்தன. என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவன் தான் செதுக்கி இருந்தான். அவன் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன். அது இல்லாவிட்டால் எதுவும் இல்லாமல் போய் இருப்பேன். அவனுக்கு அப்படி என்ன ஒரு காழ்ப்பு! அதற்கு முன் அடித்து ரத்த காயம் வரும் வரவைக்கும் வரை அவள் ஏன் பூப்பறித்துக் கொண்டு இருந்தாள்? அவளுக்கு மட்டுமே வெளிச்சம். அந்த காய காட்சிகளுக்கு பின் நான் எனக்கான கூட்டில் அடைந்து விட்டேன். அந்த கூட்டில் எனக்கு இருந்தது ஒன்றே ஒன்று தான். தாழ்வு  மனப்பான்மை. அது சரி, அதற்கும் உன்னை விரும்பிய ஒருவரை, உன்னை உருவாக்கிய இன்னொருவர் அடித்து திருப்பிய பின்னர், கேள்வி கேட்காமல் இருப்பாயா என்று. உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எல்லா கன்றாவியும் சேர்த்து தான் மனிதனை உருவாக்கி இருக்கிறது. அது எனக்கு அதிகம் பூசப்பட்டு இருக்கிறது போலும்.

இப்போது நான் இருப்பது இருள் அமிழ்த்தும் ஒரு இடம். குளிர் காலத்தில், குளிரும் இருட்டும் சேர்ந்து அடர்த்தியான ஒரு மகரந்த சேர்க்கையை உருவாக்கும். அது பல வாரங்கள், மாதங்கள் நீடித்து இருக்கும். அந்த நிகழ்வில் தான் நான் என்னை மறைந்து போகவும், மறைத்து வைக்கவும் வந்தேன். சூரியன் விழித்து ஒளி பரப்பும் ஒவ்வொரு நாளும் என்னை நானே நொந்து கொண்டேன். அதை தாண்டி வர இது ஒன்றே எனக்கு தேவைப்பட்டது. சூரியன் வேண்டாம், ஒளி வேண்டாம், புத்துணர்ச்சி வேண்டாம். என் கூட்டை இயற்பியல் மாற்றத்தைக்கொண்டும் அழகு படுத்திக்கொள்ள ஆசைப்பட்டேன்.

ஸ்வல்பர்ட், எனக்காக செய்து வைத்த தேவதை போல இருந்தாள். அங்கே சென்றபோது தான் உணர்ந்தேன், நான் தேடிச்சென்ற இரவும், ஒருங்கிணைந்த அட்டைக்கறுப்பு வெளியும் எனக்கு அமையாதோ என பயந்துவிட்டேன். நான் சென்று இறங்கிய பொழுது இரவு தான். இப்போது அங்கு இரவு தானே இருக்கும். இந்த மாதம் டிசம்பர். பூமிப்பந்தின் பல இடங்கள் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருக்கும், ஸ்வல்பர்ட் மட்டும் குளிரையே போர்த்திக்கொண்டு இருக்கும். நான் பயந்தது அங்கு இருந்த ஒளிப்பாய்ச்சல். இருக்கும் சிறிது இடத்தில் அவ்வளவு வெளிச்சம். மனிதன் உருவாக்கிய பல உத்திகளில் இந்த செயற்கை வெளிச்சம்  இப்போது அலுப்பு ஏற்றியது. ஆனால், கொஞ்சம் யோசித்து தான் அந்த சின்ன நகரத்தின் கடைக்கோடியில் இருந்த ஒரு வீட்டை எனக்கான ஜாகையாக தேர்வு செய்திருந்தேன். அந்த வீட்டின் அம்மணி மிக அன்பானவள். கூகுள் சாட்டில் மிகுந்த அன்போடு பேசினாள். கூகுள் நடுவில் இல்லாத நேர்மையான அந்த முகமும் மனதும் அதே அன்போடு இருக்கும் என நம்பினேன்.

இரண்டு நாட்கள் கழிந்தன. இரவு என்னை ஆராதித்துக்கொண்டே இருந்தது. அல்லது நான் அதை காதலித்துக்கொண்டே தான் இருந்தேன். இடையிடையே விழிப்பில் ரத்த காயங்கள் கண் முன்னே வந்தன. முகமில்லா முகத்தில் இருந்த வலி என் மேல் அவ்வப்போது படரத்தான் செய்தது. உதறித்தள்ள வேண்டி இருந்தது. என் சோகம் இந்த இரவுக்குள்ளும் குளிருக்குள்ளும் தற்கொலை செய்து கொள்ளட்டும் என காத்திருந்தேன். சில நாட்களில் அது புதைந்தது. அப்போது தான் அவள் திரண்டு எழுந்து வந்து என் முன் வந்தாள்.

அவளுக்கு பெயர் இருந்தது, நாஸ்தென்கா. பேசினாள், நானும் பேசினேன்.

அவள் பேசுவதைக் கேளுங்கள்.

உனக்கு ஏன் இவ்வளவு தூரம் வந்தும் சோக முகம் கொண்டுள்ளது? நீ வந்துள்ள வடிவத்தை பார்த்தால், சுற்றுலா பயணியைப்போலத்தான் இருக்கிறது. இங்குள்ள பலரும் ஒரு இரண்டு பெட்டிக்குள் அடங்கி விடுவார்கள். முதல் பெட்டியில் சுற்றுலா என்ற பெயரில் நார்த்தன் லைட்ஸ் பார்க்கும் ஒரு கட்சி. இரண்டாவது பெட்டியில் ஆராய்ச்சி செய்கிறேன் என்கிற சும்மாத்து பேர்வழிகள். இரண்டு பேராலும் இந்த ஊருக்கு ஒரு உதவியும் இல்லை. வரும் அனைவரும் சேர்ந்து அவர்களின் கழிவுகளை விட்டுவிட்டு போகும் விஷ மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இரு பிரிவினரும் எப்போதும் முகத்தின் இறுக்கத்தை காட்டிக்கொண்டதே இல்லை. ஏதோ ஒரு வகையில், இந்த நகரம் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. வானின் வண்ணக்கூடலோ அல்லது இதுவரை தொட்டிராத நிலப்பரப்பின் விந்தைகளோ, அல்லது அது வெளிப்படுத்தும் இயற்கை எச்சங்களோ என ஏதோ ஒன்று. நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாய். அது தான் எனக்கு விந்தையாக இருக்கிறது.

நானும் பேசினேன். அதற்கு முன், நீ எப்படி அவளிடம் தொடர்பு கொண்டாய், அந்த கதை எங்கே என கேட்பது எனக்கு கேட்கிறது. நான் தான் சொன்னேனல்லவா, நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும். அப்படி ஒரு ஜந்து நான். அதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை.

நான் இங்கே வந்ததற்கு காரணம் ஒரு சிறிய மரணம். அது கொடுத்த பூபாள பாரம். அதை என்னால் தாங்க முடியவில்லை. அதை தொலைக்க எந்த வழியும் இல்லை.

அது இங்கே தொலைந்து விடுமா என்ன? உன் பேச்சே விந்தையாக இருக்கிறது.

இங்கே இருக்கிறது. இருந்தால், இங்கே மட்டும் தான் இருக்கும்.

புரியாமல் பேசுகிறாய். அல்லது நீ புரிந்தும், எனக்கு புரியாமலும் இருக்கலாம்.

என் சோகத்திற்கு பரிகாரம் எனக்கு கொடுப்படும் தோள்கள். அது என் பேச்சையும், கண்ணீரையும் தாங்கி குளம் குளமாக என்னை அதில் நனைக்க விடும்.

அப்படி தோள்கள் உனக்கு கிடைக்கவில்லையா?

கிடைத்தது. 

பின் என்ன?

எத்தனை நாள் கிடைத்தது என்பது தான் கேள்வி.

எத்தனை நாள் நீ எதிர்பார்த்தாய்?

அதற்கு கணக்கு இல்லை. நான் சுமந்த பாரம், ஒரு யுகத்தின் பாரம். என் பாகங்கள் அத்தனைக்கும் உயிர் கொடுத்த இன்னொரு உயிரை, என் வாழ்வு கொடுத்த இன்னொரு உயிர் பறித்தெடுத்து என் கண் முன்னே உறித்துபோட்டது என்பது எனக்காக எழுதப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. அந்த நிகழ்வை நான் எப்பொழுதும் சந்திக்கப்போவதில்லை என்ற இறுமாப்பு இருந்தது. எல்லோருக்கும் அப்படித்தானே?

அதை நீ சொல்ல முடியாது.

இருக்கலாம். ஆனாலும், எனக்கு கிடைத்த மனிதர்கள் வெறும் தோல் கொண்ட தோள்கள். அவை வெறுமனே சதைகளின் சுமை தாங்கிகளாக மட்டுமே இருந்தன.

சரி விட்டுத்தோலை. வேறு ஏதாவது பேசலாம்.

நீ யார்? உனக்கு இந்த நகரத்தில் என்ன வேலை? சுற்றுலாவா இல்லை ஆய்வு அறிக்கை கொடுப்பவளா?

இரண்டும் இல்லை. இந்த நகரத்தின் தேவதை நான்.

தேவதையா? நீ என் கனவு என சொல்லப்போகிறாயா?

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.

இருக்க வாய்ப்பில்லை. உன்னை தொட்டு உணர்ந்தேனே! கதவைத்திறந்து நான் தானே உன்னை உள்ளே அனுமதித்தேன். கதகதப்பை உணர்ந்தேன்.

உணர வாய்ப்புண்டு. எனக்கு அப்படி ஒரு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. 

நானே முக்கால் பாகம் குழம்பிப்போயிருக்கிறேன். நீ வேறு அதை கிண்டிப்பார்க்கிறாய்.

சரி சரி, உண்மையை சொல்கிறேன். இந்த நகரத்தின் பூர்வீக குடிகளில் நானும் ஒருத்தி. என் முப்பாட்டன்களின் முப்பாட்டிகள் பிறந்து வளர்ந்த நகரம் இது.

இந்த நகரத்தின் சரிபாதி உன் பரம்பரைக்கு உட்பட்டதோ?

அதெல்லாம் இங்கு இல்லை. இயற்கையின் சுத்தமான மடியில் லௌகீக பிணைப்புகள் இருப்பதில்லை. உங்கள் இமய மலையில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். காலம் காலமாக. அவர்களுக்கு சதுரஅடி எல்லாம் தெரியாத ஒன்று. அதே போலத்தான் இங்கும்.

எப்படி குளிரை சமாளிக்கிறீர்கள்?

சமாளிக்க என்ன இருக்கிறது. எங்களுக்கு இது புனையப்பட்ட ஒன்று.

புனையப்பட்டதா? பிணையப்பட்டது என்று தானே சொல்ல வருகிறாய்?

இல்லை, புனையப்பட்டது தான். ஆதி மக்களின் வாழ்வியலில் புனைவு மிக முக்கியமானது. அந்த புனைவு பல்லாயிரம் ஆண்டுகளாக செதில் செதிலாக உள்ளே செலுத்தப்படும். செலுத்தப்பட்டவை உயிர் பெறவும் செய்யும்.

நீயும் நானும் ஒரே இனம் தான் என நினைக்கிறேன்.

நான் சொல்வது உனக்கு புரியவில்லை. நீ சொல்வது எனக்கு புரியவில்லை. 

இருந்துவிட்டு போகிறது. புரிந்து புரிந்து பேசி இந்த உலகம் என்ன அமைதிப்பூங்காவாகவே இருக்கிறதா என்ன? நிமிடத்திற்கு ஒரு முறை குரோதத்தால் உயிர் போகிறது. புரியாமல் பேசினால் நலன் தான்.

நாம் சில நொடிகள் வெளியே காற்றாட வெளியே செல்வோமா?

கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அடங்க பல நொடிகள் ஆனது. சிரிக்கும் போது தெரிந்த தெற்றுப்பல் அவளுக்கென கொல்லனிடம் கொடுத்து செய்து வைத்தது போல சில்லிட்டது.

சொல்ல ஆரம்பித்தாள்.

இங்கு வந்து இத்தனை நாள் ஆனபின்னும் உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா?

புரிகிறது. இங்கே நடை பயிலுபவர்கள் குறைவு தான்.

இல்லை, நான் சிரித்தது அந்த காரணத்திற்காக இல்லை. வேறொன்று இருக்கிறது. 

என்னது அது?

சொல்லாமலேயே இருப்பது தான் உனக்கு நல்லது. 

உனக்கு திருமணமாகி விட்டதா, என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். அவள் என்ன சொல்வாள் என தெரியும்.

எனக்கு பல திருமணங்கள் நடந்தது உண்டு.

இந்த பதிலுக்கு என்ன கேள்வி கேட்பதென்றும் தெரியவில்லை. தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதும் இல்லை.

அவள் நாளை வருகிறேன் என சொல்லிச்சென்றாள். இந்த தெருவின் கடைசி நான், முதலில் அவள் என்று அவள் சென்று அடையும் போது தெரிந்து கொண்டேன். ஐந்து வீடுகள் கொண்ட தெருவில் முதலென்ன, கடைசி என்ன. எல்லாம் ஒன்று தான்.

அடுத்த நாள் வரும் போது என் உரையாடலை அவள் விரும்பவில்லை. ஆனாலும் அவள் ஒன்றை வற்புத்திக்கொண்டே இருந்தாள். மூன்று நாட்கள் ஆகலாம், ஆனாலும் பரவாயில்லை, நீ அந்த புள்ளியில் இருந்து உன் வாழ்வை மறுமுறை மீட்டெடு என்றாள்.

எந்த புள்ளி என்ற கேள்விக்கு பதில், வட துருவப்புள்ளி என்றாள்.

அது எனக்கு முக்கியமல்ல. வேண்டாம் என்றேன். 

நீ சென்றடைய வேண்டியது அங்கு தான், என்றாள்.

மூன்று நாட்கள் வாழ்வில் இழக்க முடியாத ஒரு பயணமாக இருந்தது. இரண்டு நாட்கள் குட்டி குட்டி விமானங்கள் மூலம் சென்றோம். கடைசி விமானத்திலிருந்து அடுத்த  இலக்கிற்கு செல்வதற்கு நாய்கள் தான்  உதவின.

கடைசி கட்டம், நடந்தே செல்ல வேண்டிய நிலை. அவளுக்கு இதெல்லாம் மிகச்சுலபமாக இருந்தது. எனக்கு உதடுகள் உலர்ந்த நிலை போய், அவ்வப்போது இதயமே உலர்ந்து போனது. ஆனாலும், அவளின் தெற்றுப்பல் சிரிப்பு அவ்வப்போது மலர்வித்தது. தொட்டு உணர வேண்டும் போல இருந்தது. பல்லை அல்ல. அவளுக்கும் எனக்கும் இடையே இருபது உடைகள் இருந்தன.

வா இன்னும் இரண்டு மணி நேரம் தான் என்றாள். இடையிடையே நிறைய இடங்களில் எங்களுக்கு தடை. சுற்றி அடிக்கும் வெள்ளைக்காற்று. முதற்க்குளிரின் பிணி. இங்கிருந்து படரும் குளிர் தானே மற்ற இடங்களுக்கு. அருவியின் முதல் துளி தான் பிரவாகத்தின் தாய். உக்கிரத்தையும் கொண்டிருக்கும், ஆதாரத்தையும் கொண்டிருக்கும். இந்த குளிர் அப்படி இருந்தது. எங்கள் இருவருக்கும் அந்த நிலப்பரப்பிற்கும் இருந்த ஒரே தொடர்பு கண்கள். அந்த புலன் மட்டும் தான் அனைத்தையும் உணர்த்தியது. மற்ற புலன்கள் உறைந்திருந்தன.

நில், இனிமேல் நடக்காதே என்றாள்.

நீ நிற்பது தான் ஆதியும் அந்தமும். இங்கிருந்து அனைத்துமே வழிந்தோடல். இங்கு இருக்கும் காற்று, இங்கு உருவாகும் பிரயாணம் தான் உலகத்திற்கு ஊற்று. இதையே உண்டு வாழ்கிறார்கள். இது இல்லாவிட்டால் சிதறி ஓடும், பூமியே இல்லாமல் போகும். நீ நிற்பது தான் வட துருவப்புள்ளி. இங்கிருந்து அத்தனையும் தெற்கு. அத்தனையும் மேற்கு. அத்தனையும் கிழக்கு. நான்கு ஒன்றாகும் ஒற்றைப்புள்ளி. இங்கு இறை உண்டு, நீ உண்டு. நீயும் இறையாவாய், இரையும் ஆவாய்.

அவள் உளற ஆரம்பித்துவிட்டாள் என தோன்றியது.

சிறிது கால் உயர்த்தப்பட்டது. உடைகள் தளர்ந்தன. ஒரு விரல் தலை தொட்டது.

என் காயங்கள் உன்னை காயப்படுத்தி இருக்க வேண்டாம். உன்னை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. இங்கே தான் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறேன். உனக்கான பாதை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். நிதானமாக வா. காத்திருப்பேன். உனக்காக சீயக்காயை உலர்த்தி வைத்திருக்கிறேன்.

Wednesday, November 18, 2020

சாம்சங்

 தனித்திருந்த காலங்களில் அந்த மனிதனின் முகம் கண் முன் வந்து போகும். எத்தனை எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள், வார்த்தைகள் மறந்து போயிருக்கிறது. ஆனால், இது மட்டும் நினைவில் நங்கூரம் போட்டு நகர மாட்டேன் என நிற்கிறது. கையளவு தான் மூளை என்கிறார்கள். அதில் விறல் அளவு இந்த நினைவு மட்டும் இருக்கிறது போல. பின்னே எப்படி நீங்கும்? விரல் அளவு நினைவுகளில் பல குழப்பங்கள் தாண்டி அந்த நினைவு. கலங்கிப்போகாமல் அப்படியே மிதந்துகொண்டு இருக்கிறது.


அந்த காலத்தில் பஸ் இருந்தது. இந்த வார்த்தைக்கே நீங்கள் சண்டைக்கு வரலாம். இந்த காலத்தில் இல்லையா? பஸ் என்ன மூன்றாவது கண்ணா, விதந்து சொல்ல? இதை எல்லாம் சொல்ல வந்துவிட்டாய் என உங்கள் மனது என்னை திட்ட தயாராகலாம். அது ஒவ்வொன்றும் உண்மை தானே. அந்த காலத்தில் பஸ் இருந்தது தானே. இந்த காலத்திலும் அது இருப்பது, கடந்த காலத்தை எந்த விதத்திலும் அழித்துவிடாது. 


கவனத்துடன் என் விரல் அளவுள்ள நினைவுகளுக்குள் நீந்த தயாராகுங்கள். விரல் வலித்தால் உங்களை நானே இறக்கி விடுகிறேன். அந்த காலத்தில் பஸ் இருந்தது. இப்போது நீங்கள் திட்டப்போவதில்லை. அதையும் தெரிந்தே தான் சொல்கிறேன். காலையில் அம்மா செய்யும் இட்லியும், தேங்காய்ப்பொடியும் சமையல் அறையின் பல கேள்விகளை எதிர்கொள்ளும். சமையல் அறை கேட்கும் கேள்வி எல்லாம் ஒன்று தான். அந்த இட்லியை பார்த்து கேட்கும். உனக்கு இப்படி ஒரு இடம் கொடுத்திருப்பது அநியாயம். பக்கத்து வீட்டு அம்மணி ரசம் வைத்தால் தெருவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் மூக்கை கழட்டி அந்த அம்மணியின் சமையல் அறையில் இரண்டு நாட்களுக்கு போட்டுவிடுவார்கள். அந்த சமையல் அறைக்கு அவ்வளவு கர்வம் வரும். என்னிடம் தான் ருசி உருவாகிறது, நானே ருசியின் ராஜராணி. ஆனால், நான், இந்த இட்லிக்கு தான் கடன் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையும் இட்லி. ருசி, இல்லை. மணம், இல்லை. வண்ணம், இல்லை. ஆனாலும், அதையே தான் சமைத்து சமைத்து என் கழுத்தை நெரிக்கிறாள் என அம்மாவை கடிந்து கொள்ளும். 


இன்னும் என் விரலில் இருக்கிறீர்கள் தானே? இருப்பீர்கள். நான் இன்னும் இறக்கிவிடவில்லை.


எவர்சில்வர் பாத்திரத்தில் அம்மா இட்லியையும், அதன் மேல் எண்ணெய் விட்ட பொடியையும் நிரப்பி அனுப்புவாள். என் துணிப்பையில் அதை போட்டுக்கொண்டு, ஒண்டி மாமரத்தின் மாபெரும் பாதத்தில் வந்து நிற்கவேண்டும். சரியாக ஏழரை மணிக்கு நின்றுவிடவேண்டும். அந்த காலத்து பஸ் அப்போது தூரத்தில் திரும்பும் காட்சி வெளிப்படும். அப்போது இன்னும் சிலர் என்னுடன் நின்று கொண்டிருப்பார்கள். என் வயது ஒத்த சில பள்ளி தோழர்களும் நின்றிருப்பார்கள். ஒரு புன்முறுவலோடு என் கதவு மூடிக்கொள்ளும். எனக்குள் இருக்கும் நட்பு அறை மிகச்சிறியது. அங்கு இருவர் நிற்கலாம். மூச்சு விடமுடியும். மூன்று பேர் நின்றால் மூச்சு முட்டும். நான்கு பேர் நின்றால் ஒருவரை ஒருவர் அவச்சொல் சொல்லி அவர்களே வெளியேறி விடுவார்கள். அவ்வளவு தான் நான் கொடுத்திருந்த இடம். பெரிதாக்க முயலவில்லை. பெரிதாக்கி என்ன பயன்? கூட்டம் கூடி விடும். கூட்டுநட்பு குடும்ப அரசியல் எனக்கு வராது. 


பஸ் அதன் புன்முறுவலோடு வந்து நிற்கும். அதன் புன்முறுவலில் சாம்பல் நிறப்புகை தான் அதிகம். கொஞ்சம் நெடி அடிக்கும். ஆனாலும், சுகந்த மனம். மண்ணையும், காற்றையும் அது நீண்ட நாட்களாக காதலித்ததின் பயன். முண்டி அடித்து ஏறும் வழக்கம் அந்த பஸ் ஸ்டாப்பில் யாருக்கும் இல்லை. அவர்களுக்கு மட்டும் எங்கிருந்தோ வேறு ஒரு ஜென் மனநிலை.வாய்த்திருந்தது. அலுவலகத்திலும் அப்படியே ஜென்னர்களாகவே இருப்பார்களா?  


நான் எப்போதும் கியூவில் நடுவிலேயே இருந்திருக்கிறேன். வாழ்க்கையில் இருப்பது போல. முன் நிற்பதும் வலிக்கிறது, பின் நிற்பதும் பிடிக்கவில்லை. நடுவிலேயே சாந்திசாந்தி என நின்று இருக்கிறேன். அப்படி ஏறும்போது என் ஸ்டாப்பில் எப்போதும் நான்கு சீட்டுகள் காலியாக இருக்கும். அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் ஏறும் கூட்டம், அவர்களுக்கென சீட்டை பட்டா போட்டுக்கொண்டுவிடுகிறார்கள். எப்போதாவது விட நேர்ந்தால், அன்றைய நாள் அவர்களுக்கு வாட்டசாட்டமாக இருப்பதில்லை. சோர்ந்து போகும். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது பஸ் சீட் வரை வியாபித்திருக்கிறது. அல்லது, வியாபிக்க வைக்கும் அளவுக்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு விட்டார்கள். அம்மாவுக்கு டீ வாசம் வந்தால் மட்டும் போதும், இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும் போன்றது போல அது. 


எனக்கும் ஒரு சீட் தெரிந்துவைத்திருந்தேன். நான் நடுவில் இருப்பது என்று சொன்னேன் அல்லவா? அந்த நடு சீட் எப்போதும் எனக்காக ஒரு கிழியலை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும். அதில் உட்கார யாரும் விரும்புவதில்லை. நைந்துபோன பச்சை சீட், கிழிந்துபோய், உள்ளே இருக்கும் பஞ்சை இப்போது வெளியேற்றவா அல்லது பிறகு வெளியேற்றவா என்று பல வருடங்கள் காத்திருந்து இன்னும் வெளியேற்றாமலே இருக்கும்.


ஜன்னல் சீட் எனக்கு பிடித்தம். ஆனால், உட்கார மாட்டேன். காரணம் அவன்.


அவனுக்கு இருக்கும் ஒரு ஐம்பது வயது. அவன் என்பதில் மரியாதையை குறைப்பது போல தெரிந்தால், அது சரி தான். அவனுக்கு அந்த எதையையும் சுட்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


முதலில் ஆரம்பித்த அறிமுகம் எல்லாம் அரதபழசானது தான். எங்க படிக்கற, எங்க வீடு, நல்லா படிப்பியா, என்ன ரேங்க், எந்த சப்ஜெக்ட் பிடிக்கும், என்ன சினிமா பாத்த.. இப்படித்தான்... அவனுக்கு கேள்வி கேட்பது வழக்கம், எனக்கு பதில் சொல்வது வழக்கம். பெரியவங்கன்னா மரியாதையை குடுக்கணும், என்று சொல்லிக்கொடுத்த பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை அல்லவா. ஆற்றினேன். தினமும் ஆற்றுவேன். அவனுக்கு என்னிடம் மட்டும் பேச அவ்வளவு விருப்பம் போல.


ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்குவான். அங்கே தான் அவன் ஒரு பாட்டா ஷோரூம் வைத்திருந்தான். அவன் அணியும் சட்டை, பாண்டுகளும் கிட்டத்தட்ட வெள்ளை, ஊதா நிறங்களிலேயே இருக்கும். கடையில் இருக்கும்போது செருப்போடு செருப்பாக இருப்பான் போல.


முதலில் கேள்விகளில் ஆரம்பித்த அறிமுகம், பிறகு தேவை இல்லாத இளிப்புகளை கொண்டுவந்தது. அவன் எவ்வளவு இளித்தாலும் நான் திரும்ப ஒரு புன்முறுவலைக் கூட கொடுத்ததில்லை.


அன்றொரு நாள் அவன் கேள்விகள் கைகளில் இருந்தது போல. அவன் கைகள் என் மேல் பட்டது. சுர்ரென இழுத்தது. அது என்னவென்று இன்று வரை புரியவில்லை. கைகளை தட்டிவிட்டேன். நான்கைந்து முறை இருக்கும். பெற்றோர் சொன்ன மரியாதையும், நான் எப்போதும் நடுவிலேயே நிற்கும் முறைகளையும் வைத்துப்பார்த்தால், நான் அங்கே கூப்பாடு போட்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அக்கா, அண்ணாக்களை கூப்பிட்டு அந்த ஆள் இப்படித் தொடுகிறான் என சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.. நான் தான் நடுவிலேயே இருக்கிறேனே. அந்த நடு என்பது துணிச்சலுக்கும், எதற்கும் உதவாத பயத்திற்கும் உள்ள நடு. தட்டிவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேற மட்டும் தான் முடிந்தது. என் நட்பு வட்டாரம் பற்றி சொன்னேன் இல்லையா, அதில் இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என் அறையில் இடம் இருக்கவில்லை. சொல்லவும் இல்லை.


பயந்து பயந்து ஓடவில்லையே தவிர, இருக்கும் கையளவு மூளைக்குள் இருந்து, வேறு எந்த பஸ்ஸில் எல்லாம் போகலாம் என்று போகலானேன். சில நேரங்களில் பின் வந்தான். சில நேரங்களில் இன்னொரு இடத்தில் இருப்பான், அந்த இடத்தில் என் உடல்வாகுடன் இருக்கும் இன்னொரு என் வயதின் ஒத்த ஒருவரிடம் இருக்கும். அங்கு சென்று சொல்லக்கூட யோசனை. நடுவில் நிற்கிறேன் இல்லையா.


எல்லாம் சென்றது. பஸ் மறைந்தது. நான் வளர்ந்தேன். அவனும் இறந்திருந்தான். அவ்வப்போது அந்த பாட்டா ஷோரூம் வழியே செல்லும்போது மனம் இருட்டுக்குள் குதிக்கும். அவனும் இல்லை, அந்த கடையும் இப்போது பாட்டாவாக இல்லை. சாம்சங் ஆகி விட்டது. மூளையும் அப்படி ஆகி இருக்க கூடாதா என்ன. ஆவதே இல்லை.


Wednesday, November 04, 2020

கிட்டும்

அதற்கு பிறகு அது கிட்டும் 

அது நடந்து முடிந்த பின் 

கிட்டியதா இல்லையா 

என யார் சொல்வது? 

கிட்டப்பட்டவன் 

கிடத்தப்பட்டபின் 

கிடைப்பதென்பது 

கடைந்தெடுத்த இயற்கைத்தனம் 

போல...

Thursday, October 22, 2020

பாதி முடிந்த கதை

 அந்த ஒரு மணி நேரம் மட்டும் கடிகாரத்தை என் மகன் மாற்றாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இப்போது அந்த ஒரு மணி நேர இழப்பு அல்லது தவறு என்னை அலைக்கழிக்கிறது. அவனும் இப்போது என் தோளில் தான் பயணம் செய்கிறான். என் பாவகணக்கை அவனும் எண்ணிக்கொண்டிருக்கிறான்.

அன்றொரு நாள், என் மனைவி வழமையாக செய்யும் காலை வேலைகளை செய்து முடித்திருந்தாள். எப்போதும் என்னை எழுப்பிவிட்டு போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. எழுப்பினால் என்ன ஆகும் என அவளுக்கு நன்றாகவே தெரியும். உலகையே உலுக்கிவிட தைரியம் இல்லாவிட்டாலும், அவளை தேவை இல்லாமல் திட்டி, உருட்டி மிரட்டி, தொலைந்த தூக்கத்தை மீண்டும் தேடிக்கொண்டிருப்பேன். அதுவும் வருவேனா என அடம் பிடிக்கும். திரும்ப நான் வர இன்னொரு பன்னிரண்டு மணி நேரம் காத்திரு என தகவல் தெரிவிக்கும். கண்களுக்கு கீழே தான் உட்கார்ந்திருக்கும். உள்ளே நுழைய மாட்டேன் என்று தேவுடு காக்கும். இத்தனைக்கும் காரணமான அவளை என உருமினாலும், நன்றாகவே தெரியும், அவள் காரணமில்லாமல் என்னை எழுப்ப மாட்டாள் என்று. ஆனால், இந்த விவஸ்தை கேட்ட தூக்கம், அதுவும் தடைபட்ட தூக்கம், குழைத்து கட்டப்பட்ட காதல் கோட்டைகளை என்றும் மதித்ததில்லை.

அவளுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அது இருக்கிறது என்று. மகனுக்கு தெரியாது. அவனுக்கு அப்போது ஆறு வயது தான் ஆனது. அவனுக்கு மிகவும் பிடித்த நடிகர் அப்போதைக்கு ராமராஜன் தான். கரகாட்டக்காரன் பாட்டு வந்துவிட்டால் போதும், பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு திங்குதிங்கு என்று ஆடுவான். இளையராஜா கொஞ்சம் கனிவு காட்டி இருக்கலாம். அந்த மனிதனின் இசைக்கு நாங்கள் அனைவருமே அப்போது அடிமை. ஆனால் இவனுக்கோ ராமராஜன் தான் ஆதர்சம். அவர் திரையில், ஒலியும் ஒளியுமில் வரும் போது தான் இரண்டு மடங்கு சோறு அவன் வயிற்றுக்குள் தஞ்சம் அடைந்திருக்கும்.

இளையராஜா எனக்கு பிடிக்க ஆயிரம் காரணம் இருந்தது. உங்களுக்கும் இருக்கும். எனக்கு இருக்கும் காரணம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. என் தூக்கம் தான் காரணம். அப்போது என் நண்பர்களெல்லாம் சொல்வார்கள், எனக்கு தூக்க துணை ராஜா என்று. சமயத்தில் துக்கத்தின் துணையாகவும் மாறிப்போனார். எனக்கோ தூக்கம் இல்லாதபோது அவர் துணை. என் பிரச்சினையே இது தான். கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒன்றை நீங்கள் எப்போதோ ஒரு நாள் தான் கேள்விப்படுவீர்கள். ஆனால், கேட்ட பொழுதில் அது உங்கள் மனதில் நன்றாகவே இருந்துவிடும். நகலாது. அடுக்கி வைத்த பளிங்கு மாளிகையின் முன் ஒருவன் வேப்பங்குச்சியில் பல் விளக்கி அந்த பளிங்கின் மீதே துப்பினால், அந்த காட்சியை நீங்கள் முதல் முறை பார்த்தால், பளிங்கு மாளிகையா உங்கள் மனதில் நிற்கும்? அந்த துப்பும் துப்பாய காட்சி தானே நினைவில் இருக்கும். ஒழுங்கீனமற்ற ஒவ்வொன்றும் நம் மனதில் நன்றாகவே இடம் பெரும். அப்படி ஒன்று தான் இது.

எனக்கு நகர்ந்து கொண்டே இருக்கும் துயில் வியாதி. உங்களுக்கு எல்லாம் - எனக்கு இருக்கும் இந்த ஒன்று உங்களுக்கு இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன் - சரியான நேரத்திற்கு தூக்கம் வரும், சரியான நேரத்தில் முழிப்பும் வரும். எனக்கு அந்த சரியான நேரம் நகரும். ஒவ்வொரு நாளும் நகரும். ஒரு நாள் ஒன்பது மணியில் இருந்து காலை ஏழு மணி வரை என்றால், அடுத்த நாள் அது நகரும். அடுத்த நாள் பத்து மணி வரை தூக்கம் வராது. அதற்கு பின் வரும். காலை எட்டு மணிக்கு விழிப்பேன். இதிலென்ன அட்டகாசம், எல்லோரும் அப்படித்தானே என சொல்லாதீர்கள். எப்படியாக இருந்தாலும், தூக்கம் இரவிற்குள் வந்துவிடும், விழிப்பது காலைக்குள் வந்துவிடும். நான் சுழலும் வட்டத்தில் இருப்பதால், அந்த வட்டம் சில நாட்களில், காலை பத்து மணிக்கு தொடங்கும். சாயங்காலம் ஏழு மணிக்கு விழித்துவிடுவேன். சுழன்று கொண்டே இருப்பதால் என் வேலை எல்லாம் சுழலுமா என்ன? வட்ட வடிவில் வேலை எல்லாம் செய்ய முடியாது. வேலையே கிடைக்கவில்லை. எந்த மருத்துவருக்கும் எனக்கு மருந்து கொடுக்கும் அறிவு இருப்பதாக தெரியவில்லை. இங்கு தான் இளையராஜா வந்து விளையாடினார். நான் என் வியாதியை புரிந்து கொண்ட போது என் வயது கிட்டத்தட்ட பன்னிரெண்டு இருக்கும். அது வரை பள்ளியில் தூங்கி தூங்கி விழுவேன். வாத்தியார்கள் அடி வெளுத்து விடுவார்கள். 

அடியும் இடியும் தாங்கி வருவதென்ன சரியான படிப்பா? அத்தனைக்கும் தோல்வி தான் எனக்கு துணை. தூக்கம் சரியாக வந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும். நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். சில நாட்களில் கும்மிருட்டு நேரங்களில் கில்லி விளையாட வாருங்கள் என அழைக்கவா முடியும்? ராஜா மட்டும் தான் அழைத்த நேரத்தில் வருவார். அத்தனை கேஸட்டுகளில் எனக்காக இசையை வரித்து வைத்திருந்தார்.

அவரின் துணையிலேயே தான் என் துணையும் கிடைத்தாள். அவளுக்கும் அவர் தான் பைத்தியம். இதில் அவர் பைத்தியம் என அர்த்தம் வந்தால் நான் பொறுப்பாக முடியாது. மகனும் பிறந்தான். வேலை இல்லாமலே தான் இருந்தேன். அவளுக்கு தான் சிரமம். ஓடிக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பக்கத்து வெல்டிங் கடையில் கூப்பிடுவார்கள். அப்போது மட்டும் கைக்கு ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும். 

மகனுக்கு ஆறு வயது ஆனது. எனக்கு அப்போது வெல்டிங் கடையில் அறிமுகமான ஒருவர் என் அருகாமையை ரசித்தார். அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம். அவர்களில் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறி இருந்தார். அறிமுகமும் செய்தார். ஒரு வேலையும் கிடைத்தது. அவர்களுக்கு என் தூக்கமின்மை பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. 

Saturday, August 22, 2020

இழந்தான்

 அலுவலக மாலைகள் எப்பொழுதும் திராபையானது. ஒன்று, மொத்த உடம்பையும் பலி கேட்டு, அதை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கும். இல்லையென்றால், இன்னும் சில வாடிக்கையாள எதிரிகளிடம் பாருக்கு சென்று மறுபடியும் உரையாட வேண்டி இருக்கும். இன்னும் இல்லை என்றால், பல வீட்டு வேலைகள் காத்துக்கொண்டிருக்கும். எப்படி பார்த்தாலும், இது ஒன்றும் சிலாக்கியம் இல்லை. படுத்து உறங்கும் முன் மாலை சூரியனை அனுபவிக்க முடியாத வாழ்க்கை தான். ஆனாலும் எப்போதும் போல இந்த வாரம் இல்லை. 

லாஸ் ஏஞ்செலிஸ் என்னை ஒரு வாரம் வர வைத்திருந்தது. பெரிய வியாபார நோக்கோடு எங்கள் அலுவலகம் நகர்ந்து கொண்டிருந்தது. இருக்கும் நூறு பேரும் அந்த ஒரு பெரு வணிக வாடிக்கையாளரை எங்கள் கைப்பிடிக்குள் அமுக்கி, பத்து வருட காண்ட்ராக்ட் எழுதி விடவேண்டும் என்ற வெறியோடு இருந்தனர். அதற்கான முக்கிய சாரதியாக நான் இருக்க வேண்டி நேர்ந்தது. அதுவே வாழ்வின் மிகக்கொடிய நேரங்களில் ஒன்று. வாடிக்கையாளரிடம் வழிந்து விட்டு, நிலவையே அந்த நிறுவனத்தின் வாடிவாசலில் கட்டிவைத்து தேவைப்படும் போதெல்லாம் கவிதை எழுதலாம் என்ற அளவுக்கு கதை விடுவார்கள். அந்த கதையை என்னை வைத்து நிகழ்த்தும் படியும், இப்போதைக்கு அதை எப்படி செய்யலாம் என்ற செய்முறை மட்டும் போதும். அதை வைத்து அவர்களை நம் பத்து வருட சிறைக்குள் கொண்டு வந்துவிடலாம். அதற்கு பின் நிலாவெல்லாம் மறந்து, அவர்களே ஒரு பத்து வாட்ஸ் பல்புக்கு வந்துவிடுவார்கள். இப்படி எல்லாம் கட்டுக்கதை கட்டி, மில்லியன்களில் வியாபாரம் நடக்கும்.

அந்த நிலா வியாபாரம் ஒரு வழியாக நிறைவுக்கு வரும்படி என் வேலைகளை செய்துவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வீதியில் காப்பி கடையில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாச மூச்சை விட்டு, இருக்கும் மீதி மூன்று நாட்களில் என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. நான்காவது நாள் மறுபடியும் அந்த நிலா காண்ட்ராக்ட் பற்றி கடைசி கட்டிட பேச்சு வார்த்தை இருக்கும். அது வரைக்கும் என்னை வீடு திரும்ப அனுமதிக்க மாட்டார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், அந்த மூன்று நாள் என்னை இங்கு வா, அங்கு வா, விவாதிக்கலாம் என கத்தி வைக்க மாட்டார்கள். ஏனென்றால், பிழிந்தாகி விட்டது. இங்கு இன்னும் வருவதற்கு ரத்தம் இல்லை. ஊறவைத்து ஊறவைத்து தான் ரத்தம் பிழியப்படும். நல்ல கட்டுப்பாடு உண்டு அதில்.

பத்து வருடங்கள் முன்பு சென்றிருந்த லாஸ் வேகாஸ் நியாபகம் வந்தது. சென்று விடலாம் என்ற நொடியில், காப்பி கடையில் இருந்து, நேராக வண்டியை லாஸ் வேகாஸ் விட்டேன். வழியெல்லாம் இளையராஜா. இளையராஜாவை இன்னொருவருடன் கோர்த்து கோர்த்து ரசிப்பதில் எனக்கு அலாதி இன்பம். முதலில் ராஜாவுடன், மலேசியா. அடுத்து எஸ்பிபி. பின், எஸ் ஜானகி. சித்ரா. ஜெயச்சந்திரன். 

ஐந்து மணி நேரத்தில் இளையராஜா சமத்தாக என்னை கொண்டு சேர்த்தார். என்ன ஒன்று, மலேசியார் பாடும் போதெல்லாம், இந்த அலெக்ஸ் படுபாவி வந்துவிட்டு போனான். மோனாலிசா ஓவியத்திற்கு போட்டு வைத்தது போல். ஒரு முறை பொட்டு வைத்து பார்த்தால், அதற்கு முன் இருக்கும் பிம்பம் அழிந்தே போகும். எதிர்மறைகளுக்கே இருக்கும் பிரத்யேக குணம்.

வழியிலேயே, மூன்று நாளைக்கான ஜாகையை தேர்ந்தெடுத்து விட்டேன். காஸ்மோபாலிட்டனில் உச்சபட்ச அறை. அங்கிருந்து கீழே பார்த்தால், வேகாஸின் முக்கால்வாசி வேடிக்கைகள் வெளிவரும். ஆனாலும் எறும்புகள் போல. எறும்புகளின் வேடிக்கைகள் எல்லாம் வெளிவந்தால் எப்படி இருக்கும். வெறும் எறும்புகளென எண்ணி விட்டுவிட்டு தான் போக வேண்டும். இரவு குளித்துமுடித்து விட்டு, உடனே வெளியே கிளம்பியாகி விட்டது. இரவிற்கென்றே பெற்று எடுக்கப்பட்ட குழந்தை, லாஸ் வேகாஸ். அங்கு மட்டும் தான் இரவில் விடியல். விடிந்த பின் துயில். கீழே சென்று ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு, ஒரு சீட்டுக்கட்டு பகுதியில் உட்கார்ந்தேன். புகை மூட்டம் கொஞ்சம் என்னை கடவுளாக்கியது. புகை உருவாக்கிகள் எல்லாம் நுரையீரல் அல்லவா. சுகந்தமாக நினைத்துக்கொள்ள வேண்டியது தான். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அப்போது தான் பார்த்தேன். வேகாஸில் இதெல்லாம் புதிதா. அங்கே கண்களெல்லாம் அளவுக்கு அதிகமாக வேலை பார்க்கும். பல கண்களுக்கு வேவு பார்த்து, வேட்டையாடுவது தான் பழக்கம். சிலருக்கு அது தான் வாழ்வே. அவளுக்கு வாழ்க்கையா இல்லை பழக்கமா?

எழுந்து அடுத்த கேசினோவுக்கு நகர்ந்தேன். கடவுள் இடத்தில் இருந்து சிறிது நேரம் மனிதனானேன். சுதந்திர காற்றை சுவாசித்தேன். பின் மீண்டும் கடவுளானேன். இந்த முறை அடர்த்தியான மேகங்கள். இந்த முறை ஒரு நூறு டாலர்கள் வைத்து ரஷ்யன் ரௌலட் ஆடினேன். நான் அலுவலகத்தில் வரைந்து கொடுக்கும் வருமான வரைபடம் போல, மேலே ஏறியது, பின் இறங்கியது, பின் ஏறியது, பின் மொத்தமாக போண்டி ஆக்கியது. போனால் போகிறது. இங்கே வந்தாலே விட்டுவிட்டுதான் போக வேண்டும். வாழ்க்கையைப் போல, மரணத்தைப் போல. அவள் ஏன் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்? எனக்கும் அவளுக்கும் ஏதேனும் முன்பு தொடர்பு இருந்திருக்குமா? வாய்ப்பில்லையே. தட்டையான வாழ்க்கை வாழ்ந்த எனக்கு இப்படி ஒரு வண்ணப்பக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இரவு மூன்று மணி ஆகி இருந்தது. வேகாஸின் மனநிலை உச்சத்தில் இருந்தது. அதை சுற்றி அனைத்து நகரங்களும், மாநிலங்களும் கனவு கொண்டிருந்தன. வேகாஸ் அந்த கனவிலேயே தான் சுருண்டு கிடந்தது. மெல்ல கண்கள் இருள, மெத்தையில் போய் மயங்க தத்தி தத்தி சென்றேன். அவள் ஏன் என்னை இன்னும் பின் தொடர்கிறாள்? வாயை திறந்து கேட்டு விடலாமா? இவள் அவளாக இருப்பாளா? எவ்வளவு கேட்பாள்? திருடுபவளா? என் வண்ணத்தை பார்த்து இருப்பதை எல்லாம் அபகரிக்கலாம் என நினைக்கிறாளா? இருப்பதெல்லாம் டிஜிட்டல் காசு. எப்பொழுதும் விசா, மாஸ்டர் கார்டு கம்பெனியில் மட்டும் தான் என் பணம் இருக்கும். அவன் இவள் எங்கிருந்து லவட்ட முடியும். மூன்று மணிக்கு இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும். போய் தூங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. வேகமாக நடந்தேன்.

லிஃப்டில் ஏறி, அறையின் கதவை கார்டு கொண்டு திறக்கும் வேளையில் அவளே என்னை அழைத்தாள். இத்தனை நேரம் நான் நினைத்தது சரிதான். அவளுக்கு நான் தான் வேண்டும். அவளே பேசினாள்.

உங்கள் நண்பர்கள் உங்களுக்கு என்னை இரண்டு நாட்களுக்கு புக் செய்திருக்கிறார்கள். நான் உள்ளே வரலாமா?

என்னது, புக் செய்திருக்கிறார்களா? நானே யோசித்து தானே இங்கு வந்தேன். யாருக்குமே தெரிய வாய்ப்பில்லையே. இது என்ன புது குழப்பம்.

இல்லை, நீங்கள் ஆள் மாற்றி சொல்கிறீர்கள். அது நானாக இருக்காது. என் நண்பர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்.

இல்லை, உங்கள் நண்பர்கள் தான். கொஞ்சம் பேசலாம். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சரி வா உள்ளே, என உள்ளே அழைத்தேன்.

அவளுக்கு என் அறை பிடிக்கவில்லை போலும். அசாதாரண பார்வை ஒன்றை பார்த்தாள். எத்தனை அறைகளை பார்த்தவளோ என்று நினைத்தேன். எனக்கே ஒரு கொட்டு வைத்துக்கொண்டேன். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடை போடும் இடத்திற்கு நான் எப்படி வந்தேன். எல்லாம் இந்த இடத்திற்கு இருக்கிற மாயாஜாலம்.

அவளுக்கு என்னிடத்தில் பேச வேண்டும் என்று இருக்கும் போல.

சரி சொல், உன்னை இங்கு அனுப்பியது யார்?

உன் வாசகர்கள்.

என் வாசகர்களா? என்ன உளறுகிறாய்.

ஆமாம், உன் வாசகர்கள் தான்.

நான் என்ன எழுத்தாளனா, எனக்கு வாசகர்கள் இருக்க.

ஆமாம், நீ எழுத்தாளன் தான். இப்போது அல்ல. இன்னும் பத்து வருடங்கள் கழித்து.

அம்மாடி, வெள்ளை தேவதையே, என்னை மிகவும் குழப்புகிறாய். உனக்கு ஏதேனும் பணம் வேண்டுமென்றால் சொல், தருகிறேன். என்னை இப்படி நான்கு மணி காலையில் உலுக்கி எடுக்காதே. 

இல்லை, நீ என்னை பார்க்க வேண்டும் என்பது எனக்கு சொல்லி அனுப்பப்பட்ட ஒன்று. நீ என்னை சந்தித்து தான் ஆக வேண்டும். நான் வந்திருப்பது உன் எதிர்காலத்தில் இருந்து.

இதை நம்ப வேண்டுமா?

நம்பித்தான் பாரேன். நீ வருந்த மாட்டாய்.

சரி, எனக்கும் பொழுது போக வேண்டும். உன் நாடகத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போது என்ன செய்யவேண்டும்?

தூங்கலாம்.

சரி, தூங்கு. நாளை காலை என் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் பேசலாம். என் எதிர்காலத்தை நீ முன்பே, இல்லை, பின்பே பார்த்து விட்டாய்.

கொஞ்ச நேரம் தூக்கம் வந்தது. பின் கனவு வந்தது. கனவில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டேன். புலிகள் துரத்தின. ஒரு பெரிய மலையை ஓடியே கடக்கிறேன். என் நைஜீரிய நண்பன் தான் என்னை தரதரவென இழுத்துக்கொண்டு செல்கிறான். தீடீரென மலைக்கு நடுவே பாகுபலி போல ஒரு சிலை. அந்த சிலையின் தலையில் இருக்கிறோம். அந்த சிலையின் தலையில் இருந்து பாதம் ஒரு நாற்பதாயிரம் அடி  இருக்கும். அப்படியே வழுக்கிக்கொண்டு போனால், கீழே உள்ள அவன் வீட்டிற்கு போகலாம் என்கிறான். யோசிப்பதற்குள் அவன் கைகளை என் கைகளோடு அணைத்து அப்படியே சரசரவென சறுக்கினான். அசுர வேகத்தில் கீழே நகர்கிறேன். முகம் தாண்டி, கைகள் தாண்டி, தொடை தாண்டி, பாதம் வரை வந்துவிட்டேன். பிருஷ்டம் பாதி கிழிந்து போனது. மூச்சும், நெஞ்சும் ஒரு நொடிக்கு நாற்பதாயிரம் முறை துடித்தது. படாரென எழுந்துவிட்டேன். பக்கத்தில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

மணி இப்போது ஐந்தரை. வேகாஸின் தரைகள், காலடி தடங்களை இழந்து கொண்டிருந்தன. அனைவரும் உறங்க சென்றனர்.

அவளை எழுப்பினேன். பெயர் வேற தெரியவில்லை.

அடியே, எதிர்காலம். கொஞ்சம் எழுந்திரு. பேசலாம் என்றான்.

அவள் ஒரு துளி கூட அசையவில்லை.

கொஞ்ச நேரம் என் எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அழகாக இருந்தது. கொஞ்சம் கூட பிசிறு அடிக்காத ஒரு எதிர்காலம். மலர்ச்சி தான் முழுவதும். ஒரு பகுதி கூட குறை சொல்லும்படி இல்லை. அட முண்டமே, அவள் உன் எதிர்காலம் அல்ல. எதிர்காலத்தில் இருந்தவள், இல்லை இல்லை, இருக்கிறவள். எப்படி சொல்ல வேண்டும். இருந்தவள் என்றா, இல்லை இருக்கிறவள் என்றா. குழம்பிப்போய், இப்போதைக்கு என் பக்கத்தில் இருக்கிறாள் என்பதோடு நிறுத்திக்கொண்டேன். 

கொஞ்சம் அசைந்தாள். எழுந்தாள். பேசினாள். நானும் பேசத்தொடங்கினேன்.

வாசகர்கள் அனுப்பினார்கள் என்கிறாயே, அப்படியென்றால் நான் யார்?

நீ ஒரு எழுத்தாளன். நாவல் ஆசிரியன். உன் நாவல்கள் எல்லாம் வெகு பிரசித்தம்.

அப்படியா?

என்ன எழுதி இருக்கிறேன்?

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். இருபதுக்கும் மேற்பட்ட புதினங்கள். உனக்கு புக்கர் பரிசு கூட கிடைக்கப்போகிறது.

அப்படியா?

ஆமாம், நீ மிகப்பெரிய எழுத்தாளன். உன் பெயரை உச்சரிக்காத வாசகன் இல்லை.

அப்படியா?

ஆனால், இப்போது உன் முகத்திலும் சரி, மூளையிலும் சரி, அதற்கான சுவடுகள் தெரியவில்லை.

அப்படியா?

பின்னே!!! நீ இது வரை வாயை பிளக்கிறாயே தவிர, நல்ல கேள்விகள் எதையும் கேட்கவில்லை. எழுத்தாளன் என்றுமே கேள்வி கேட்பவனாகத்தான் இருந்திருக்கிறான்.

மௌனமாக இருந்தேன்.

சரி, கேட்கிறேன்.

கேள்.

எதற்கு வாசகர்கள் என்னை எதிர்காலத்தில், அதாவது நிகழ்காலத்தில் பார்க்காமல், இறந்த காலத்தில் பார்க்க எண்ணுகிறார்கள்?

அவர்களுக்கு சில கேள்விகள் இருக்கிறது.

அப்படி என்ன கேள்விகள்?

என்னை நீ எப்படி கையாளப்போகிறாய் என்பது முதல் கேள்வி.

இதிலென்ன சந்தேகம். உன்னை கையாள நீ என்ன கைப்பிடி களிமண்ணா? அழகான பெண்.

ஆனால், உனக்கு தெரியாத பெண்.

ஆமாம்.

என்னை போகமாக பார்ப்பாயா இல்லை தோழமையாக பார்ப்பாயா?

இப்போது போகமாகதான் பார்க்க தோன்றுகிறது. நேரம் சென்றால் தோழமையாகி விடுவாயோ என்னமோ. ஆமாம், இதை தெரிந்து கொண்டு அந்த வாசகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

காரணம் உண்டு. உன் கதைகள், புதினங்கள் எல்லாமே பெண்கள் இல்லாமல் எழுதப்பட்டது.

இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறேனா? எழுத்தாளன் என்பதையே நம்ப முடியவில்லை. இதில் இது வேறு.

ஆமாம், அதனால் தான் உன் மீது அத்தனை கேள்விகள். உலகிலேயே பெண்களை பற்றியும் சரி, பெண்கள் பாத்திரங்களும் சரி, இல்லாமல் மட்டுமே எழுதி இருக்கிறாய்.

ஆச்சரியம் தான். எனக்கு பெண்கள் என்றால் வெகு நாட்டம் உண்டு. அதனால் தான் பார், உன்னையும் என் அறைக்குள் அனுமதித்திருக்கிறேன். உன் பெயர் கூட தெரியாது. ஆனால், பெண் என்ற ஒரு காரணத்தில் நான் ஈர்க்கப்பட்டேன்.

இருக்கலாம். ஆனாலும், எழுத்தில் அது இல்லை.

எழுத்து வேறு, நான் வேறாக இருந்திருக்கிறேனோ இல்லை இருக்கிறேனோ என்னவோ. அப்படி இருந்தால் என்ன தவறு.

தவறில்லை. ஆனால், அது சரியாக தோன்றவில்லை. படைப்புகள் ஒவ்வொன்றும் பெண்கள் இல்லாவிட்டால் வெறும் குப்பைக்கூளம் தான். அதில் அன்பும் இருக்காது, அழகும் இருக்காது. வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த எந்த படைப்பையும் யோசித்துப்பார். கலைகளை யோசித்துப்பார். பெண்கள் இருப்பர். பெண்களாலேயே அந்த கலை வடிவம் பெற்றிருக்கும். இல்லையென்றால், பெண்கள் மரபை உடைத்து நவீனம் உருவாக்கி இருப்பர். 

ரொம்ப குழப்பாதே. சரி, இப்போது என்ன, பெண்களை பற்றி எழுத வேண்டுமா. எழுதுகிறேன்.

அது முடியாது.

ஏன்?

உனக்கான பெண்கள் உன்னை நேசிக்கவில்லை. 

அப்படி இல்லையே.

இப்போது இல்லை.

அப்படியென்றால், இனிமேல் அந்த விஷயம் நடக்குமா?

ஆமாம்.

அது எப்படி உனக்கு தெரியும்?

உன் எதிர்காலத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்தேன்.

பதில் தான் உனக்கே தெரியும் போலிருக்கிறது. அந்த வாசகர்களிடம் சொல்லிவிடேன்.

சொல்கிறேன். உனக்கும் தெரியவேண்டுமா?

ஆமாம், சொல்.

ஒரு வார்த்தை பிரயோகம் தான்.

என்ன வார்த்தை?

உன் அம்மா சொல்கிறாள். 

என்ன சொல்கிறாள்?

ஒரு அம்மா அப்படி ஒரு வார்த்தை சொல்லும்போது, உனக்கு எல்லாம் மாறும். நீயும் மாறினாய். உலகின் அத்தனை தளங்களும் துண்டு துண்டாகின. மலர்கள் மரண ஓலங்கள் போட்டன. உன்னை வெறுத்தாய். உலகையே வெறுத்தாய். எழுதி எழுதி துண்டாடினாய். சோகங்களை படைத்து தள்ளினாய். உன் படைப்புகள் எல்லாம் சோக காவியங்கள். அழுத்தங்கள் நிறைந்தது. உன்னால் சில தற்கொலைகள் கூட நடந்தது. துன்பவியல் படைப்புகளை உன் அளவிற்கு எழுத இனி ஏழு பிறப்பு இருக்க வேண்டும் எனும் அளவுக்கு படைத்திருக்கிறாய்.

பல நிமிட மௌனத்திற்கு பின் அவளிடம் கேட்டேன்.

இப்படி சொன்னபின் நான் எப்படி என் நிகழ்காலத்தை கடக்க முடியும். 

வேறு வழியில்லை. கடந்து வா. நீ அதற்காக படைக்கப்பட்டவன். உன்னை உருக்கியும் உடைத்தும் தான் இலக்கியம் பேரெழுச்சி பெற வேண்டி இருக்கிறது. அதற்கு உன் வாழ்க்கையை அர்ப்பணிக்க போகிறாய். நீ அழிந்து கொண்டு தான் இருப்பாய். அந்த அழிவு தான் படைப்பின் ஆதாரம். உன்னை இழ, பெரிதினும் பெரிது கொடுப்பாய். எதிர்காலத்தில் சந்திக்கலாம். என்னை வெறுக்காதே. 

Friday, August 21, 2020

சடம்

 மனசு சரியில்லை 
என்றான் நண்பன் 
எனக்கும் சரியில்லை 
நேற்று அப்பாவிடம் 
சண்டை 
பணம் குறைவாக
இருக்கிறது என்றான் 
என்னிடமும் இல்லை 
மாதக்கடைசி 
நேற்று பூக்கள் 
சரியாக பூக்கவில்லை 
எனக்கும் தான் 
நாளை எனக்கு கல்யாணம் 
அச்சச்சோ 
எனக்கு முன்பே 
கல்யாணம் ஆகிவிட்டதே 
சொல்வது எதையும் 
எனக்காக 
கேட்காத 
சட சென்மங்கள் 

கவிதை

 இன்று காலையில் இருந்து 
கவிதைகள் 
கொட்டிக்கொண்டிருந்தது 
நிற்காமல் 
காட்டிக்கொண்டிருந்தது 
நில் என்றால் 
நிற்கவில்லை 
மூச்சு முட்டிப்போனது 
வா நடை போகலாம் 
என கூட்டிப்போனேன் 
உளறிக்கொண்டே வந்தது 
வாயை மூடு என்றேன் 
அது எனக்கில்லை என்றது 
என்னதான் இருக்கிறது 
உனக்கு 
எனக்கு நீ தான் 
என்றது

Wednesday, August 19, 2020

மூட்டை

 இப்போது வரை 
நாற்பது கோடியே 
எழுபது லட்சத்தி 
ஐம்பதாயிரத்து 
சொச்ச முறை 
சுவாசத்தை 
வெளியே விட்டிருக்கிறேன்.
திரும்பி எடுத்துக் 
கொள்ள வேண்டும் 
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.
ஒன்று பள்ளியில் 
ஒன்று கக்கூஸில் 
ஒன்று வாய்க்காலில் 
ஒன்று சண்டைக்கிடையில் 
ஒன்று அம்மாவின் மடியில் 
ஒன்று கட்டிலுக்கடியில் 
ஒன்று மரத்துக்கு பின்னால் 
மூச்சு விடாமல் 
மூச்சை பிடித்துக்கொண்டு 
மூச்சை தேடிக்கொண்டிருக்கிறேன் 
பத்திரமாக மூட்டை 
கட்டவேண்டும் 
நாளை நான் 
எடுத்துச்செல்லவேண்டும் 

படி

 நகுலனைப்படி
ஆத்மாநாமைப்படி 
விக்கிரமாதிதனைப்படி 
தேவதச்சனைப்படி 
எல்லாரையும் படி 
உன்னையும் சேர்த்து 
வைத்துப் படி 
அப்போது தான் அது படி 

நானும்

 ஒரு காலத்தில் 
தவளையாய் இருந்தேன் 
இப்போது மனிதனாய் 
இருக்கிறேன் 
அண்ணாந்து பார்த்தால்
விமானம் 
அந்த ஆகாய 
வனாந்திரத்தில் 
ஒரு நாள் நானும் 
இருந்திருக்கிறேன் 
தவளை கத்தியது 
நானும் இருந்திருக்கிறேன்!!!

Wednesday, August 05, 2020

எதிரி

உயிர் நண்பன் 
விதிவிலக்காக 
ஒரு நாள் மட்டும் 
உன் பரம எதிரியாகிறேன் 
என்றான்.

இருந்துவிட்டுப்போ
அடுத்த நாள் மறுபடியும் 
நண்பன் தானே!! 

பரம எதிரியானான்
திட்டித்தீர்த்தான் 
பிடித்து சாக்கடையில் 
தள்ளினான் 
இனி உன் முகத்தில் 
முழித்தால் 
நான் மனிதனே இல்லை
என்றான். 

மறுநாள் வந்தான். 
நண்பா, நேற்று தான் 
புரிந்தது. 
எதிரியாக நான் 
உன்னை நன்றாக 
புரிந்துகொண்டேன்.
நீயும் என்னை 
எதிரியாகப்பார்.

பாதாள மனிதர்கள்

என்னை அழுத்தம் கொடுத்த 
அந்த மரண நொடிகளை 
தேடிக்கொண்டே இருக்கிறேன் 
திரும்ப கிடைக்காது 
என்கிறார்கள் 
கிடைத்தால் திரும்ப 
பார்க்க வேண்டும் 
எப்படி எல்லாம் 
அது என்னை 
சித்திரவதை படுத்தியது 
அதே நொடி தான் 
இன்னொருவனுக்கு சுகபோகத்தை 
தந்தது
கேட்டால் உன் நேரம் 
சரியில்லையாம்
நொடிக்கு என்ன 
ஆள் பார்த்து 
செய்கை செய்து 
வைக்கும் வேலையா 
அது நானே வரவழைத்துக்கொண்டது 

இப்போது சொல்கிறார்கள் 
பார், எல்லாம் உன்னால்தான் 

புரிகிறது 
நான் எங்கு விழுகிறேனோ 
அங்கு தான் அனைவரும் 
குடியிருந்து என்னை வரவேற்கிறார்கள்.

ஒரு நாள் அவர்கள் 
விழத்தானே போகிறார்கள் 
அப்போது நான் கயிறு 
கொண்டு வருகிறேன்.

விதை

மரம் கொஞ்சம் கூட 
சொரணை அற்றது போல 
விதையிலிருந்து தான் வந்தது 
பின் ஏன் மறுபடியும் 
விதைக்குள்ளேயே போய் 
அடைந்துகொள்கிறது 

Sunday, July 26, 2020

ஞானி

வாழ்க்கைக்கென்ன தெரியப்போகிறது
இன்று, இப்பொழுது
நிம்மதியை தரவேண்டுமா
ரோதனைகளை தரவேண்டுமா
இல்லை
விட்டேத்தியாக இருக்கவேண்டுமா என்று

அதற்கு ஒரு வேலையுமில்லை
நான் போகும் பாதையில்
அதுவும் கூட வருகிறது
வழுக்கி விழுந்தால்
எழும் வரை
காத்திருக்கிறது

வெடித்து சிரித்தால்
பொறுமையாக பார்க்கிறது

அழுது தீர்த்தால்
எப்போது முடிப்பேன்
என கன்னத்தில்
கைவைத்து தேவுடு
காக்கிறது

என்னமோ போகட்டும்
இந்த வாழ்க்கை
எதற்கு தான்
கூட வருகிறதோ

Monday, July 20, 2020

கனவு

அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. சொல்லப்பட்ட தகவல்களை வைத்துப்பார்த்தால், இவரைப்போல் இவர் மட்டும் தான் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருப்பதாக அலுவலகத்தில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். யாரிடமும் முகம் கொடுத்து பேசாத நான், அவரிடம் பேசப்போகும் ஆசை வழிந்து கொண்டிருந்தது.

அலுவலக நண்பர்கள் வேண்டாமே என்று தான் அறிவுறுத்தினார்கள். வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் என்னை அவமானப்படுத்திவிடப்போவதும் இல்லை, நேரத்தை வீணாக்கி விடப்போவதுமில்லை. சென்று தான் பார்க்கிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, அவரின் விலாசத்தை குறித்துக்கொண்டு அன்று இரவு என் அறைக்குப்போய் தூங்கினேன். அன்றிரவு தூக்கத்தில், கனவெல்லாம் அலறலாகவே இருந்தது. ஒரே கூச்சல். மண்டை உடைந்துபோகும் அளவுக்கு குமுறல். ஒரு நொடித்துளி கூட அமைதி இல்லை. அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மண்டைக்குள் இருந்த கனவுக்கூச்சல் எல்லாம் வெளியில் இருந்த கூச்சலுக்கு முன் பரந்துவிரிந்திருந்தது. மண்டையை நாலு முறை உலுக்கியத்தில், சில கூச்சல்கள் கீழே சிதறியதை காண முடிந்தது. அதில் ஒன்று அலுவலகத்தில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மேலாளர். இன்னொன்று, சின்ன அத்தையின் புலம்பல் கூடிய கூச்சல். இவை இரண்டும் தான் இறங்க வேண்டிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது. மற்றதெல்லாம் அடர்த்தி நிரம்பி மூளைக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும். அடுத்த நாள் இரவை எண்ணி இப்போதே தலை வலிக்க ஆரம்பித்தது.

சரி, அவரை பார்த்துவிட்டு பிறகு இதையெல்லாம் பைசல் பண்ணிக்கொள்ளலாம் என விரைந்து சென்று, இரண்டு நிமிட குளியலை போட்டுவிட்டு, இருப்பதிலேயே சாந்தமாக இருந்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, அதற்கும் சாந்தமாக இருந்த பேண்ட்டையும்  போட்டுக்கொண்டு கீழ் இறங்கினேன். வீட்டு முதலாளி வீதியில் குப்பை அள்ளும் அண்ணனை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தார். அந்த அண்ணன் திரும்ப வசைகளை அலங்காரப்படுத்தி, வசைகளுக்கெல்லாம் ராஜாவான உறவின் முறை வசவையும், உறுப்பு முறை வசவையும் அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தார். கணக்கு பார்த்தால், இவர்களின் கனவுக்கூச்சல் இன்றைக்கு இரவு என்னை விட அதிகமாக இருக்கும் போல் இருந்தது.

18-B பிடித்து, சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்தேன்.

அவருக்கு தொலைபேசினேன்.

சார், உங்க அலுவலகத்துல குமாஸ்தாவா சேர்ந்திருக்கேன். உங்களை பார்த்து சில விஷயங்களை கத்துக்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன். இங்க காலேஜ் பஸ்ஸ்டாப்பிலே இருக்கேன். உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்றீங்களா?

சொல்றேன்.

பக்கமா, தூரமா?

தூரம்.

போனுக்கு மெசேஜ் அனுப்பறீங்களா?

அனுப்பறேன்.

விரைந்து சென்றேன். அந்த வீடு நான்கு ராட்சச வீடுகளுக்கு மத்தியில் எலியின் போந்து போல இருந்தது. இந்த வீட்டினர் மூச்சு விட்டால் அந்த ராட்சச வீட்டினரின் முதுகில் தான் போய் ஓய்வெடுக்கும். அதற்குப்பின் தான் வெளியில் கலக்கும். அவ்வளவு நெருக்கம்.

சார், சார், நான்தான் வந்திருக்கேன்.

வாங்க.

உட்கார வசதி இருந்தது. பள்ளிக்கூட பெஞ்சுகள் போல. வீட்டுக்கு வந்தவர்களை அடக்கி வைத்து பாடம் எடுப்பார் போல.

காபி?

வேண்டாம் சார். வரும்போதே குடிச்சிட்டு தான் வந்தேன். உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கலாம்னு யோசிக்கறேன். கேக்கலாமா?

கேளுங்க.

நீங்க ஒரு வார்த்தை மட்டும் தான் பேசுவீங்கன்னு சொன்னாங்க.

ஆமா

அது சாத்தியமா?

ஆமா

உங்க மனைவி கிட்டயும் அப்படித்தானா?

ஆமா

முதல்ல இருந்தேவா?

ஆமா

அவரின் கடைசி நான்கு வார்த்தைகள், ஆமா என்பதை தாண்டி ஒரு மாத்திரை கூட அதிகமில்லை. அதற்கு பிறகு மூச்சு கூட விடமாட்டேன் என்கிறார். மிகச்சீரான, மெதுவான, ஆழ்ந்த முகம். அதற்கேற்றார் போல், சுவாசமும் கூட. அந்த அறையில் நீக்கமற சூரிய வெளிச்சம் இருந்தது. அவ்வளவு ஜன்னல்கள். வீட்டுக்கு சிமெண்ட் வேலை மிகக்குறைவு.

நீங்க நேர்முகத்தேர்வு எடுக்கும்போது எப்படி சமாளிச்சீங்க?

எழுதிட்டேன்.

எழுதியே, தேர்வாகிட்டீங்களா?

ஆமா

என்னை சொல்ல வேண்டும். அவரை ஆமா சொல்ல வைக்காத அளவுக்கு கேள்விகேட்க எனக்கு தெரியவில்லை. இன்னும் பயிற்சி வேண்டும்.

எதுக்கு இந்த ஒரு வார்த்தை பழக்கம்?

இந்த கேள்விக்கு மாட்டிக்கொண்டுவிடுவார் என நினைத்தேன். பதில் வந்தது,

பழக்கம்.

எங்க இருந்து?

அப்பா, அம்மா

அவங்களும் இப்படித்தான் பேசுவாங்களா?

இல்ல.

பின்ன எப்படி?

பேசவில்லை.

ஓ.. மன்னிக்கணும். அவங்க ஊமையா?

ஆமா.

அப்போ நீங்க நிறைய பேசி இருக்கணுமே?

தேவையில்லை.

நீங்க இப்படி பேசி, மத்தவங்களுக்கு கோபம் வருமே சார், எப்படி சமாளிக்கறிங்க.

வராது.

உங்க கிட்ட பேசின கொஞ்ச நேரத்துலயே எனக்கு கோபம் வருதே சார்.

வரட்டும்.

அப்புறம் திட்டிட்டேன்னா என்ன பண்ணுவீங்க?

திட்டுவேன்.

திட்டுவீங்களா? எப்படி, அதுவும் ஒரு வார்த்தையிலா?

ஆமா.

திட்டிக்காட்டுங்க..

குரங்கு.

அவ்வளவு தானா?

ஆமா.

அவரின் குரங்கு என்ற வார்த்தை பிரயோகம், அந்த சூழ்நிலைக்கு, அவரின் முன் எனக்கு மிகப்பெரிய பாரமாக இருந்தது. ஒரு முறை எனக்கும் நண்பனுக்கும் வார்த்தை தகராறு முற்றிப்போய், நான் பேசவே மாட்டேன் என நினைத்திருந்த கெட்ட வார்த்தை எல்லாம் அருவியாய் கொட்டியது. இரண்டு வாரங்களுக்கு குறையாத கோபம். இவரின் குரங்கு வார்த்தை, அமைதிக்குள் இருக்கும் சொல்லப்படாத கெட்ட வார்த்தைகளை எல்லாம் துணைக்கு கொண்டு வந்து எனக்குள் கொட்டிவிட்ட உணர்வு வந்தது.

சரி சார், எல்லாத்தையும் விட்டுடலாம்.

சரி.

எப்பவோ ஒரு முறையோ, இரண்டு முறையோ உங்களுக்கு உச்சகட்ட உணர்ச்சிகள் வந்து பேசிய ஆகணும்னு இருந்திருக்கும். நாமெல்லாம் மனுஷ ஜென்மமாச்சே, அது இல்லாம இருந்திருக்க முடியாது. அது காதலாவும் இருந்திருக்கலாம், இல்லை உங்க பிள்ளைங்களை முதல் முறை குழந்தையா பார்த்த பொழுதா இருந்திருக்கலாம். அப்போ எப்படி?

கண்ணீர்.

ஏன் சார், இப்படி?

சிரித்தார். நான் கேட்கவேண்டியதை கேட்டு விட்டேன் என நினைத்த நேரத்தில் ஒரு காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தார். வேகமென்றால் அவ்வளவு வேகம். வார்த்தைகள் பொழிந்து கொண்டு இருந்தன. கையில் கொடுத்தார்.

உங்கள் வருகைக்கு நன்றி. நான் நம்பும் ஒரு கொள்கை, வார்த்தைகள் நம் புலன்களில் இருந்து வரும்போது வெளிப்படும் உணர்ச்சிகள் கொந்தளிப்பு உடையவை. அது காதலாகட்டும், பாசமாகட்டும், சினமாகட்டும். நம் புலன்களுக்கு அவ்வாறு ஒரு வடிவத்தை நம் முன்னோர்களும், நம் சுழலும் கொடுத்திருக்கிறது. வார்த்தையின் பின் இருப்பது மொழி மட்டும் அல்ல. மொழி தாங்கி வரும் உணர்ச்சி. அந்த உணர்வு ஏனோதானோ என்றெல்லாம் வராது. பொங்கி எழுந்து தான் வரும். அது தான் அதன் நியதி. அது இன்னொருவரை கையகப்படுத்தும், இல்லை, கைவிட்டு விலக வைக்கும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ எனக்கு பிடித்தம் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதை செய்ய எனக்கு பயம். என் வார்த்தைகள் மீது நான் ஏற்றி வைக்கும் உணர்ச்சி நான் உருவாக்கும் ஒரு  குற்றம். நீங்களும் இதை முயன்று பாருங்கள். வாழ்க்கை தெளிவாகும்.

கதவை திறந்து நடையை கட்டினேன். இந்த இரவுக்கு எந்த கனவு எனக்கு வாய்த்திருக்கிறதோ?

கூர்மை

தியானம் செய்து கொண்டிருந்தேன்
எழுந்திரு என்றான்
எழுந்துவிட்டேன் 

Tuesday, July 14, 2020

திகட்டாத அருவி

எழுதி எழுதி தீர்த்தான்
பேசுவதை குறைத்தான்
சாப்பிட மறந்தான்
எழுத்துக்களும் வார்த்தைகளும்
அவனுள் ஜலமாய்
ஊர்ந்துகொண்டிருந்தது
எதற்கு இத்தனை வாதை
அந்த ஒரு வார்த்தைக்காக
அவன் எழுதிய அந்த
கடைசி வார்த்தைக்காக
ஒரு புள்ளி வைப்பான்
அந்த புள்ளிக்காக.

Sunday, July 12, 2020

அறை

இந்த குகையே
என்னோடது தானாம்
வைத்துக்கொண்டே
தெரியாமல் போனது
அறிந்துகொள்ளாமல்
இருப்பது என் எண்ணம்
அல்ல
அந்த குகையை
மிக ஆழ்ந்து
பார்த்தவர்கள் எல்லோரும்
பிறழ்ந்து போனார்களாம்
நானும் பிறழ்ந்து
போவேனோ

ஆனாலும் குகை
அட்டை கருப்பு
ஊமை கோட்டான்களே
அதிகம் இருந்தது
எத்தனை எத்தனை
அறைகள்
எவ்வளவு வண்ணங்கள்
பெரும்பாலும் சிவப்பின்
தோற்ற மயக்கங்களே

ஒரு அறைக்கு
மூப்பு தட்டியிருந்தது

ஒரு அறைக்கு
பெயர் வைக்கப்படாமல்
இருந்தது

இதோ இது
மிக முக்கியமான
அறையாம்
உஷ்ணம் அதிகம்
அலறும் ஆந்தைகள் வேறு
மூச்சு முட்டியது
குகை சுவர்களும்
பூகம்பத்தை எதிர்கொண்டது
குகை குளிர
ஆரம்பித்தது
ஆந்தைகள் அடங்கின

குகைச்சுவர் அனைத்தும்
மென்மையானது

முக்கிய அறை
முழுதும்
அசரிரீ

வந்துட்டியா?
சாப்ட்டியா?

வெளி

எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்
என்னையும்
என் வார்த்தைகளையும்
நினைவுகளையும்
வாசனையையும்
நிகழ்வுகளையும்...
நான் விடுதலை
ஆகி இருப்பேன்
அதனாலேயே
நீங்களும் விடுதலை
ஆகி இருப்பீர்கள்
ஒருவரை ஒருவர்
ஈர்த்துக்கொண்டு
வாழ்ந்துகொள்ள
நீங்களும் நானும்
என்ன
காந்தப்புலமா?
வெறும் காற்றடைத்த
இதயப்பெட்டி கொண்ட
இரு விலங்குகள்

Monday, July 06, 2020

ஒரே வார்த்தை

எழுது எழுது என்றது
எதை எழுதுவது
அதைத்தான் என்றது
சரி என்று
கவி எழுதினேன்
ஒரே வார்த்தையில்
முடிந்தது கவிதை

"என்றது"

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...