Sunday, December 10, 2006

வெயில் - ரொம்ப மோசமில்ல

ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட்.

மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஒரு திரைப்படம். ஷங்கரின் தயாரிப்பில் வந்த இரண்டு படங்களும் ஏற்படுத்திய தாக்கமும், அதன் அசாத்திய வெற்றியும் தான்.

வசந்தபாலன் பல இடங்களில் பளிச்சிடுகிறார். கதை மற்றும் கதாபாத்திர களம் ஆகியவற்றை கூடுமானவரை வித்தியாசபடுத்த முயற்சி செய்திருக்கிறார். அதில் பலனும் காண்கிறார். ஒரு டுயட் விருது நகர் வீதிகளில் மட்டுமே எடுக்கபட்டுள்ளது.

பசுபதி நிறைய அழுகிறார், கூடவே நிறைய நடித்தும். படத்திற்கு பரத் வெறும் பெயருக்கு தான் கதா நாயகன். பசுபதி தான் கதா நாயகன் என்று சொன்னால், படம் விற்குமோ விற்காதோ என்ற பயம் கூட இருக்கலாம். பசுபதி, சினிமா தியேட்டரில் வேலை செய்யும் கால கட்டம் படம் செய்த விதம் ஈர்க்கவே செய்கிறது. சினிமா பேரடிசியோ படத்தின் தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகம்.

பசுபதியின் காதலும் கூட படத்தில் சொல்ல கூடிய ஒன்று, சிறிது நேரமே வந்தாலும். யார் அந்த புது நடிகை? நல்ல தேர்வு. பசுபதி காதல் காட்சிகளில் நடிக்கும் போது தியேட்டரில் ஒரே சிரிப்பு சத்தம். தவிர்க்க முடியாதது தான்.

பசுபதி, பரத் சிறிய வயது காட்சிகள், அட போட வைக்கும் இடங்கள். அதிலும் முதல் பாட்டில் வரும் சின்ன பசங்க விளையாட்டுகள் (கில்லி, கோலி, லென்சில் பிலிம் வைத்து படம் காட்டுவது, கோணிப்பை ஒட்டம், சுடு கொட்டை, வெப்பங்காய் ஒடு, கபடி, பொன்வண்டு இப்படி பல), கிராமத்து பழைய நினைவுகளை கிளருவது நிச்சயம்.

சில பாத்திரங்கள் கண்டிப்பாக நினைவில் வருகிறார்கள். ஷ்ரெயா திமிரு படத்தில் வந்தது போல் இல்லாமல், குறைத்து பேசி அதிகம் நடித்துள்ளார். தங்கம் (பசுபதியின் காதலியாக வருபவர், நிஜ பெயர் தெரியவில்லை) வாட்ட சாட்டமான கருப்பான பசுபதியை திகட்ட திகட்ட திட்டுகிறார் & காதலிக்கிறார். கடைசியில் இறந்தும் போகிறார். தன் கண் முன்னே பசுபதியை தூக்கில் மாட்ட முயற்ச்சிப்பவர்களை தடுக்கும் போது, காதல் சந்தியா மற்றும் சில காட்சிகள் நம் கண் முன்னே. வாங்கிய காசுக்கு நல்ல நடிப்பு. பரத் (இவரை படத்தின் முக்கிய கதா பாத்திரமாக கருதாததால், சில பாத்திரங்கள் வகையறாவில் வருகிறார்), காதலை கூட கோபத்துடன் தான் செய்கிறார், தேவைக்கு ஏற்றபடி. கசாப்பு கடை வைத்திருக்கும் பசுபதி, பரத்தின் அப்பா. செய்யும் தொழில் எப்படியோ அப்படிதான் குடும்பத்துடன் பழகுகிறார், பாசத்தை படத்தின் இறுதியில் மட்டுமே வெளிபடுத்தும் நேர்த்தியான பாத்திரம். பாவனா, அழகாக பாந்தமாக போகிறார் வருகிறார். மற்றபடி வியாபார ரீதியிலான பாத்திரம். சிறு வயது பசுபதி மற்றும் பரத், நல்ல நடிப்பு அந்த சிறுவர்களிடம்.

முதல் பாதி என்ன சொல்ல வருகிறார்கள் என்ற யோசனை இல்லாமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதி, வழக்கம் போல 50% சென்டிமென்ட் 15% சத்தம் 15% ரத்தம் 20% கத்தி. கதைக்கு வெயில் என்று பெயர் வைத்ததன் காரணம்?? புரியவில்லை. ஆனால், இயக்குனரோ வெயில் படத்தில் ஒரு இம்ப்லிசிட் கேரக்டர் என்று சொல்கிறார்.

சோரம் போகாத கதை. ஆனால், நன்றாக செதுக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
கண்டிப்பாக இந்த படம் தோல்வி இல்லை, அதே நேரத்தில் ( நீங்கள் நினைப்பது போலவே) வெற்றியும் இல்லை.

எனக்கும் படம் விட்டு வெளியே வரும் போது, ஷங்கர் சிவாஜி படபிடிப்பில் பிசியாக இருப்பதால், இந்த படத்தை பார்க்கவில்லையோ என்று நினைக்கதான் தோன்றியது.

No comments: