Tuesday, February 11, 2020

அரசனின் வளாகம்

இது போன்ற சந்திப்புகள் எப்போதோ ஒரு முறை தான் நிகழும். பாரதி அண்ணா, இப்போது அவருக்கு 65 வயது, எனக்கு 39 வயது. ஆனாலும், அவர் எனக்கு அண்ணா தான். சிறு வயதில், அம்மா அவரை அண்ணா என்றழைக்க, நானும் அப்படியே அழைக்கலானேன். அப்பாவுக்கு பாரதி அண்ணன் அப்போதைக்கு எடுபிடி. ஆனாலும், நீதிமன்ற வளாகத்தில் அரசால் அவருக்கு வழங்கப்பட்ட பதவி, டைப்பிஸ்ட். அதிலும் ஜூனியர் என ஒரு முன்குறிப்பு வேறு. இவை எல்லாம் அந்த காலத்தில் பதவியை குறித்தததோ இல்லையோ, யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பிரக்ஞயை பெரும் முயற்சி இல்லாமல், பொது மக்களுக்கு கூற பயன்பட்டது.

பதினான்கு வருடங்களுக்கு பின்னரும் அமெரிக்கா அலுக்கவில்லை என்றால் அது அப்பட்டமான என்னவென்று எல்லோருக்கும் புரியும். தனியே சென்று பெற்றோர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் தொடங்கி, இப்போதைக்கு தனியே மட்டும் சென்றால் போதும், நெருக்கமான உணர்வை பெற்றால் போதும் என்ற நிலையில் தான் பெரும்பாலான பயணங்கள் முடிகின்றன. அப்படியொரு நெருக்கம் இந்த முறை. எப்போது சென்றாலும், முன்னின்றும் பின்நின்றும் தாக்கும் ஜெட்லேகை தாண்டி, இருக்கும் இரண்டு வாரங்களில், பல தலைமுறைகளாக சிலந்திகளால் பாத்தியப்பட்ட நகர தலைமை நூலகத்திற்கு சென்றேன். நூலகத்திற்கு முன், பின், இடம், வலம், வானம், பூமி எல்லாம் மாறிவிட்டது. ஆனால், உள்ளே மட்டும் படிக்கும் கூட்டம் மாறவே இல்லை. அதை கூட்டம் என்றும் சொல்ல கூச்சமாய் இருக்கிறது. அவர்கள் அனைவரும் அந்த சிலந்தி கூட்டம் பிறக்கும் போது பிரசவம் பார்த்தவர்கள். அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். நரை கூடி, கிழப்பருவம் எய்தி. முப்பத்தி ஒன்பது வயது மூளையில், பல நியூரான்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும். அதனுள் குறிக்கப்பட்ட நினைவுகள் இன்றோ என்றோ என்று எமனை எதிர்பார்த்து கொண்டிருக்கும். அப்படி ஒரு நினைவானில் இருந்த பாரதி அண்ணன், அங்கே நூலகத்திலும் இருந்தார்.

அப்போதெல்லாம் அண்ணன் சொல்வார், செய்யறது கிளார்க் வேலை, இருந்தாலும் டிப் டாப்பா இருக்கனும்டா. இல்லைன்னா, தூக்கி வேஷ்டியில் சொருகிட்டு போயிடுவானுங்க. கோர்ட் கோர்ட்ன்னு வெளிய தான் இதுக்கு மரியாத. உள்ள இறங்கினா, ஒரு பக்கம் பொண்டாட்டிய கொன்னுட்டு, வாயில பான் பராக்  போட்டுக்கிட்டு ஒருத்தன் நிப்பான். அவனுக்கு பின்னாடி செவத்துல தான் நீதியரசர் அப்படின்னு போட்டு இருக்கும். அதுக்குள்ள அரசர் உக்காந்து சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கிட்டு இருப்பாரு. இவுங்களுக்கு நடுவுல, நியாயம் காப்பாத்தறேன்னு, ஒரு கருப்பு அங்கி நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கும். இவன் அத்தனை பேருக்கும், அங்க எங்கிங்கெனாதபடி  இருக்குற நீதியை நிலைநாட்ட, என்ன மாதிரி கிளர்க்கும் உங்க அப்பா மாதிரி சிரஸ்தாரும் உக்காந்து பணிவிடை செய்யணும். நீதிமன்றத்துல நீதி கிடைக்குதோ இல்லையோ, உலகமகா உத்தம அயோக்கியனுங்களும் அயோக்கியமும் நிரவி கிடப்பாங்க. அதுல நீ ஆமாசோமா மாதிரி இருந்தென்ன, சொன்ன மாதிரி, சொருவிட்டு போயிடுவானுங்க.

அதே டிப்டாப்புடன்  தஸ்தாவெஸ்கி படித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் தலைமாட்டில் வயதான சிலந்தியும், பீட்டர்ஸ்பர்க்கை தொலைநோக்கிக்கொண்டிருந்தது.

"அண்ணா, இன்னுமா அந்த மனுசன படிச்சிட்டு இருக்கீங்க..."

"யாருடா அது" என்றார். என்னுள் தற்கொலை செய்து கொள்ளும் நினைவான்களுக்கும் அவருள் தற்கொலை செய்து கொள்ளும் நினைவான்களுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் போல். பார்த்த அடுத்த நொடி, துடித்தெழுந்த நினைவு, சட்டென காலத்தின் பூ ஒன்றை பறித்தது.

"வாடா சிரஸ்தார் மவனே... உனக்கு வெண்ணிற இரவுகள் படிச்சி காமிச்சு, நாஸ்தென்கா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் கட்டாத, ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ண கண்டிப்பா ஒரு தடவையாச்சும் காதலிச்சிடுன்னு சொன்னது மறந்து போச்சு உனக்கு... அந்த மனுசன படிக்கணும்டா, படிச்சு படிச்சே உயிரை விட்டுடனும். சப்போஸ், உயிர் விடலைன்னு வெச்சிக்கோ, அந்த மனுசன் உன்கிட்ட இன்னும் நிறைய சொல்லணும்னு வெச்சிக்கிட்டு இருக்கான்னு அர்த்தம். இதோ இன்னும் புடிச்சுகிட்டு இருக்கான். நாப்பது வயசுல கரமசோவ் சகோதரர்கள் படிச்சேன். ஒரு தலைமுடியும் புரியல. இப்போ புரியுது. இருவது வருஷத்துக்கு மேல ஆவுது. சரி, அது கெடக்குது, என்ன இந்த பக்கம். நீ அமெரிக்காவுல இருக்கன்னு  ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரிஞ்ச உன் அப்பன் ஒரு காலத்துல நிறுத்துவான்னு பாத்தா, அவனும் நிறுத்தல, நிறுத்த சொல்லி நீயும் சொல்லல போல. நீ பதில் சொல்லு, ஆனா இத கேளு மொதல்ல... நேத்தைக்கு தான் டால்ஸ்டாயோட குற்றமும் தண்டனையும் படிச்சு முடிச்சு தெளிவா இருக்கேன்..."

அப்பாவுக்கும் அவருக்கும் ஐந்து வயது வித்தியாசம் இருந்தாலும், அண்ணனுக்கு அப்பா "அவன்" தான். அதை குணப்படுத்த நானும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி. பாரதியை போன்றவர்களை, அவர் போக்கில் விட்டுவிட்டால், பல பொக்கிஷங்கள் கிடைக்கும்.

"இல்ல. அவர் சந்தோசம், சொல்லிக்கிட்டு போகட்டுமே. எழுவது வயசாகுது. இந்த வயசுக்கு மேல, அவருக்கு புத்தி சொல்லி என்ன புதுசா குடும்பமா நடத்த போறாரு. எதோ ஒரு காட்டுல, ஒரு மரம், சரியாய் வளரலைன்னா, போயிட்டு சரி பண்ணிட்டா வரோம். அது அதுவா இருந்துட்டு போவுதுன்னு இருக்கறதில்லயா?"

"பரவாயில்லையே. நீ இன்னும் படிக்கிறது நிறுத்தலை போல. ரெபெரென்ஸ் எல்லாம் இலக்கிய தரத்துல இருக்கு."

"ஆனா விதை, நீங்க போட்டது" என சிரித்தேன்.

"சரி வாயேன், நம்ம வளாகத்துக்கு போய்ட்டு வரலாம். எப்போ வந்த, எப்போ கெளம்பர அப்படின்னு எல்லாம் கேக்க மாட்டேன். குடும்பம் எப்படி இருக்குன்னு எல்லாம் கேக்க மாட்டேன். நீயும் கேக்காத, சரியா"

அண்ணனுக்கு என்ன முறையான கல்வியும், வாழ்க்கையும் கிடைத்திருக்கும், எப்படி, இப்படி தன்னை கட்டமைத்துக்கொண்டார் என பல முறை வியந்ததுண்டு. நேர்கோட்டில் பயணிக்கும் பல ஆயிரம் பயணிகளுக்கு மத்தியில், சாலையின் உள்ளடங்கிய ஒரு குடிசை வீட்டில் கூழ் வாங்கி குடிக்கும் ஒரு விட்டேத்தியான பயணியின் மனநிலை எப்போதும். எப்போதும் உச்சத்தில் இருப்பவர். ஆனால், பக்கத்தில் இருப்பவருக்கு இவரெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் முந்தி அடித்துக்கொண்டு, சீக்கிரம் மூப்பு அடையும் நோக்கில் இருப்பவர்கள். இவர் மட்டும், வரும் நேரத்தில் வரட்டும், அது வரை சிக்ஸர் அடித்து விளையாடுவோம் என இருப்பவர்.

"கார் கீர் எடுத்துட்டு வந்திருக்கியா என்ன? இருந்தா, அங்க விட்டுட்டு வந்துடு. இன்னும் செவென் கிராஸ் நம்பர் போட்டு நம்ம அரசாங்க பஸ் ஓடிகிட்டு தான் இருக்கு. உனக்கு தான் நல்ல நியாபகம் இருக்குமே. ஜாய்'னு ஓரு பொண்ண ஒர கண்ணாலேயே பாத்து, குடும்பத்தையே நடத்திட்ட. ஆனா, அந்த பொண்ணு தான் பாவம், உன்ன பாவம்னே நெனச்சி, சரி தம்பி, கல்யாணத்துக்கு வந்துடுன்னு சொல்லிடுச்சு", வெடித்து சிரித்தார். இந்த வயதில் வெடித்து சிரிப்பதெல்லாம் வரம். என் பக்கத்து வீட்டு மாமாவெல்லாம், சிரித்தால் ரத்தஅழுத்தம் அதிகமாவுதுப்பா, என்ன வரம்னே தெரியல என்று அலுத்துக் கொள்வார்.

வளாகம் வந்திருந்தது. இறங்கினோம். சிவப்பு வண்ணம். கட்டியதென்னவோ இந்த காலத்து பொறியாளர் தான். சிகப்பை தவிர எந்த வண்ணம் அடித்தாலும், இங்கு நீதி கிடைக்காது என்று அனைவருக்கும் தோன்றிவிடுமோ என்று பயம் போல இருக்கிறது. உள்ளே நுழைந்ததில் இருந்து, அண்ணன் முன்பு கூறிய அத்தனையும் இப்போதும் மாறாமல் இருந்தது. பான் பராக் (தடை செய்யப்பட்டாலும், புழங்கும்... நீதியின் தரையிலும்), அங்கி அங்கிள்கள், அரசர்கள், கிங்கரர்கள். பாவப்பட்ட முகங்கள் கூட. அந்த முகங்கள் இப்போது, குறுஞ்செய்திகளிலும், டிக்ட்டாக்கிலும் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்.

அண்ணன் ஒரு பெரியவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சில் ஒரு சிரிப்பில்லை. இறுக்கம் அதிகம் இருந்தது. அப்படி இருக்கும் தருணங்கள் மிக குறைவு. இவர்களின் பின் இருந்த இளம்பெண், யூடூப்பில் ப்ளூ சட்டை விமர்சனம் பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவரிடம் உணர்ச்சிகள் மிகுந்தது. பாத்திரம் ஒன்று கைமாறியது.

"என்னடா, எல்லாத்தையும் பாத்தியா. மனசுக்குள்ள பெருசா ஓடியிருக்கணுமே. என்னன்னு கேக்காத. அங்க ஒரு நீதி அரசர பாத்துட்டு வந்துடறேன். அவருக்கு ஆற்காடு மக்கன் பேடா'ன்னா ரொம்ப இஷ்டம். குடுத்துட்டு வந்துடறேன். மனுசன் சக்கரைக்கே சக்கரை காட்டிகிட்டு இருக்கார். பாக்கவும் சக்கரை மூட்டை போலத்தான் இருப்பாரு. இருந்தாலும், ஒரு நாளைக்கு நாப்பது மாத்திரை போட்டும், மக்கன் பேடாவுக்கு மட்டும் இன்சுலின் தானா சுரக்கும். அப்படி ஒரு அமைப்பு"

அறையும் வந்தது. உள்ளே போன அண்ணனின் உடல் மொழி மாறி இருந்தது. கூழை கும்பிடு போடும் அந்த கால கிளார்க் உள்ளே நுழைந்தார். ஒரே குழப்பம். இப்படி ஒரு வடிவத்தை இவரிடம் இது வரை கண்டதில்லை. சரி வந்த பின் கேட்கலாம் என்றால், கேட்காதே என்பார். இயற்கையின் ஒரு குழப்ப செய்திகளில் இவரும் ஒருவர். அந்த காட்டில் இவரும் ஒரு சுயம்பு மரம்.

வெளியே வந்தார். கையில் இனிப்பு இல்லை.

"என்னடா" என்கிறார்.

"ஒன்னும் கேக்கலையே.... கேட்டாலும் என்ன சொல்லுவீங்கன்னு தெரியும்"

"இத சொல்லணும்டா. சொல்லியே தீரணும். அந்த பொண்ணு இருக்கா இல்ல, அந்த பெரியவரோட பொண்ணு.தவமா தவமிருந்து பெத்தவ. இவரோட நாப்பத்தஞ்சு வயசுல பொறந்தா. இயற்கை வரம் கொடுக்கும், ஆனா பாத்து பாத்து கொடுக்கும். அதோட கால அவகாசமும், பொறுமையும், நமக்கு புரியாது. புரிஞ்சவங்க, பொறுத்திருப்பாங்க. இவரு பொறுத்திருந்தார். தங்க சிலையா பொறந்தா. ஆனா, இந்த காலத்துல தங்கத்த எவன் அலங்காரமா பாக்கறான். எப்படியாச்சும் லவட்டிட்டு போய் தன்னோட பீரோவுல வெச்சுக்கணும், இல்லைனா, ஒரு முறையாச்சும் அத உருக்கி தனக்கு மாலையா போட்டுடணும்னு இல்ல தவிக்கிரனானுங்க. அப்படி ஒருத்தன் உருக்க நெனச்சான் அந்த தங்கத்த"

அண்ணனுக்கு துடித்த உதடுகள் நிற்கவில்லை. தொடர்ச்சியாக, வசவு வார்த்தைகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த வளாகத்தில், இது ஒன்றும் புதிதில்லை. அங்கே அதிகம் புழங்குவதில், வசவு வார்த்தைகளுக்கு முதல் இடம். இரண்டாம் இடம் தான், ஐபிசி கோடுகள்.

"அந்த பாவிக்கு அப்போ வயசு ஒரு அம்பது இருக்கும். பெரிய பதவி. இந்த பொண்ணுக்கு பத்து வயசு. என்ன நடந்திருக்கும்னு நீயே யூகிக்கலாம். அவ்ளோ சாதாரணமா இந்த ரணம் எல்லா மனசுக்குள்ளயும் பரவி இருக்கு. அவ்ளோ நடக்குது. எல்லாம் நடந்த பிறகு தான் எனக்கு உண்மை தெரிஞ்சது. அந்த அம்பது வயசு கிழவனையும் எனக்கு தெரியும். கோர்ட் கேஸுன்னு எல்லாம் இழுக்கவே முடியாது. ஏன்னா, அவன் காலுக்கு கீழ தான் அத்தனையும் முடங்கி கெடந்துச்சு. அப்போ, அவன் அரசன் கிடையாது. அம்பது வயசான இளவரசன். அரசனாக இன்னும் நாலஞ்சு வருஷம் பாக்கி இருந்தது. அந்த கிழட்டு இளவரசன தான் இப்போ பாத்துட்டு மக்கன் பேடாவ குடுத்துட்டு வரேன்"

அதிர்ச்சி என்றாலும், அதை தாண்டி பேசும் பக்குவ நிலையை, சிறு வயதிலேயே அண்ணன் எனக்கு சொல்லி கொடுத்திருந்தார்.

"பிறகு, ஏன் அந்த ஆள பாக்க உள்ள போகும் போது அப்படி ஒரு முதுகெலும்பு செத்த தனம் வந்துச்சு. நான் பாத்த பாரதி அண்ணணுக்கு அங்க ரௌத்திரம் இல்ல வந்திருக்கணும். வயசானதுல உங்களுக்கும்..." என இழுத்ததில், அவருக்கு வந்தது கோபம். ஆனாலும், அவர் சொல்லி கொடுத்த பக்குவ நிலையை, அவர் குலைப்பாரா என்ன.

"அதுக்கு பேர் அது இல்ல. குற்றம் செய்யும் போது வர நடுக்கம். அதை மறக்க நான் போட்டுக்கிட்ட வேஷம். ஜெயமோகனோட அறம் படிச்சிருப்ப இல்ல..."

சத்தம் மேலோங்கி இருந்தது பின்னே. அரசனின் அவையில் பெரும் கூச்சல். அரியாசனத்தில் இருந்து, கவிழ்ந்து கிடந்தான் அரசன். சுவையான மக்கன் பேடாவின் மேற்பரப்பில், சக்கரை ததும்பிய மாவு. சக்கரை சூழ் மாவின் நடுவே இருந்திருக்க வேண்டிய உலர் பருப்பிற்கு பதில், தங்கத்தை உருக்கியதற்கான தண்டனை. 

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...