பார்க் என்றாலே, நம்ம ஊர் நடேசன் பார்க்கும், பனகல் பார்க்கும் தான் நியாபகம் வரும். வேலி போட்டு, உள்ளே சிமென்ட் பென்ச், அதில் பாட்டி தாத்தாக்கள், தோழி தோழர்கள் என நடந்தும் உட்கார்ந்தும் இருக்கும் ஒரு இடமாகவே மனதில் பதிந்து விட்டது. யோஸ்மிட்டி பார்க், இதை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் என நினைத்தால், நினைப்பில் விழுந்தது பெரிய பாலைவன மண்.
அளந்து பார்த்து, கணக்கு சொல்ல கூடிய இடம் இல்லை அது. இது வரை அங்கே மக்களால் பார்க்கபட்டிருப்பது 10% தான். மனிதன் பாதம் படாத இடம் பல. நாங்கள் சுற்றி பார்த்ததென்னவோ துக்கடா தான். மலையும், நிலமும், இயற்கையும், அழகும் சார்ந்தது இது.
வண்டியை சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து ஒட்டினோம். 4 மணி நேரம். வண்டி ஒட்ட தெரியாமல் இருந்தது நல்லதாக பட்டது. அத்தனை அழகு போகும் வழி. நிறுத்தி நிறுத்தி போனால், யோஸ்மிட்டி போக 10 நாட்களாவது ஆகும். இயற்கையை சிதைக்காமல், சாலை வழி போட்டிருக்கிறார்கள்.
யோஸ்மிட்டி கூட இப்படித்தான். அதிகம் மாற்றவில்லை. இருப்பதை இருக்கும்படியே விட்டிருக்கிறார்கள். ஹைக்கிங் பிடித்திருந்தால், இது சொர்கம். ஒரு 4 நாட்கள் டென்ட் போட்டு, கரடிகளுடன் இரவு கை கோர்த்து, மலை எல்லாம் ஏறலாம். உலகின் 5வது உயரமான நீர்வீழ்ச்சியை அதன் தலை மேலே ஏறி போட்டோ எடுக்கலாம். கால் வலிக்க, காடு மலை சுற்றலாம். சில நேரங்கள் ஆதிவாசி வாழ்க்கை வாழலாம்.
எந்த சீசனுக்கு வேண்டுமானால் வாருங்கள், நாங்கள் உங்களுக்காக புதிதாக இருப்போம் என இயற்கை உத்திரவாதம் கொடுக்கிறது.
இதயம் சீராக துடிக்க இது போன்ற சில பயணங்கள் தேவை.
[படங்கள் எல்லாம் நெட்டில் சுட்டது இல்லை. சொந்த செலவில் இல்லாமல், நண்பனிடம் ஓசியில் வாங்கிய கேமராவில் கிளிக்கியது]