Friday, September 17, 2021

மணம்

எப்பாடு பட்டாவது 
திருமணம் செய்து கொண்டுவிடு 
என்றான் நண்பன் 
ஏனென்று கேட்டால் 
தற்கொலையிலிருந்து 
விடுபடுவாய் 
ஆனால் 
கொலை செய்யப்பட 
வாய்ப்புண்டு
என்றான் 

இறை

 கடவுளின் தொல்லை தாளாமல் 
ஒரு நாள் அவனை 
இருட்டறையில் அடைத்து வைத்தேன்
அந்த நாள் 
இரவெல்லாம் 
ஒரே அழுகை 
அறையே நீரில் 
மூழ்கியது 
அடுத்த நாள் 
மக்கிப்போன வாசம் வந்தது 
திறந்து பார்த்தால் 
இறைவன் எரிந்து கொண்டிருந்தான் 
நேற்றைய தண்ணீரை 
நெருப்பாய் மாற்றி இருப்பான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
அனுப்பினால் நடக்கும் 
விபரீதங்கங்களுக்கு 
அவனும் பொறுப்பேற்க 
மாட்டேன் என்கிறான் 
என்னையும் விட்டு விலக 
மாட்டேன் என்கிறான் 
அடுத்த நாள் இரவு 
அங்கிருந்த புகை 
அடங்கிப்போனது 
உள்ளே நறுமணம்
இறைவன் வாசமாகி 
உள்ளேயே நிறைத்து வைத்தான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
வெளியே நான் மட்டும் 
சென்றேன் 
சுத்தமாக மிக இலகுவாக 
இருந்தேன் 
அன்றைய இரவு 
அவன் மக்கிப்போன 
குப்பையாகிப் போனான் 
மொத்தத்தில் 
அவனுக்கு பைத்தியம் 
பிடித்துவிட்டது என 
அறிந்து கொண்டேன் 
இனி வெளியே விட்டுவிடலாம் 
குப்பையை யார் 
கண்டுகொள்ளப்போகிறார்கள் 
கொட்டிவிட்டேன் 
ஒரு துறவி தூக்கிச்சுமந்தான்
இமயமலையில் 
கொட்டிவிடுவானாம்
இத்தனை நடந்தும் 
ஒரு வார்த்தை அவன் பேசவில்லை 
இறைவனுக்கு வாய் பேச
வராது என நினைக்கிறேன்.

Tuesday, September 14, 2021

மடி

இறந்த பின் 
நான் முன்பிருந்த 
இடத்திற்கெல்லாம் 
சென்று வரலாம் 
என்றொரு வரம் 
கிடைத்தது
ஒவ்வொருவர் மடியிலும் 
ஒரு முறை கிடந்து வந்தேன் 
மனைவியின் மடியில் 
இன்னும் என் வாசம் 
சுற்றிக்கொண்டு இருந்தது 
மகனின் மடியில் 
என் ஒற்றை 
நரை முடி தள்ளாடிக்கொண்டிருந்தது 
தந்தையின் மடியில் 
என் எச்சில் 
உலர்ந்து கிடந்தது 
தாயின் மடியை 
தேடித்தேடி 
அலைந்தேன் 
இன்னொருவன் சொன்னான் 
தாயின் மடி எப்போதும் கிடைக்காது 
அவளுக்கு நிரந்தர வரம் உண்டு 
மகவுகளுக்கு பின் 
திரிந்தலையும் வரம்
உன் பின்னால் தான் இருக்கிறாள் 
பின் பார்த்தால் 
உனக்கு நிறைய நரை முடி 
தலைக்கு எண்ணெய் வெச்சிட்டே இரு 
என்றாள்

கங்கு

 எங்கெங்கு காணினும்
என்னைத் தேடியலைந்தேன்.
கருவில் என்னைக் கேட்டேன்
அது நான் இல்லை
இந்தப்பெண்ணின் ஆங்காரம்
என்றது
பள்ளியில் என்னைக் கேட்டேன்
புத்தக அடுக்கில்
நீ ஒரு காகிதம் என்றது
மணத்தில் என்னைக் கேட்டேன்
காதலின் ஒரு தேய்பிறைத்துளி
என்றது
அலுவலில் என்னைக் கேட்டேன்
முதல் போட்டவனுக்கு
அடிமையானவன் நீ
என்றது
முதுமையில் கேட்டேன்
அமிழ்ந்து கொண்டிருக்கும் 
ஒரு துளி
என்றது
இன்னும் எப்போது தான் நான்
எனக் கேட்டேன்
காத்திரு
என்றது
சிதையில் சிதையும்
முன் கேட்டேன்
உன்னைப் பற்றிய
முதல் கங்கு தான்
நீ
என்றது!!!

நாம்

நான் நீ 
நீ நானா 
எனக்கேட்டபோது 
நீ நான் 
ஆனால் 
நான் நாம் 
என்றாள்!!

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...