Sunday, June 17, 2007

மௌனமே உன் பார்வையா, அந்த மௌனம் தானே அழகு.

இந்த வருடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ஒன்று மொழி. வந்து சில மாதங்கள் ஓடி, கேன்ஸ் வரை ஊர்கோலம் போயும் வந்தாகிவிட்டது. அவசரமில்லாமல், இரண்டரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி, அமைதியாக பார்த்தேன். விமரிசனத்துக்கு ஒன்றும் குறைவில்லாமல், எல்லாரும் பேசியாகிவிட்டது. எப்போதாவது, குடும்பத்தோடு சினிமா பார்க்கும் சில பேர், மொழி பார்க்கவேண்டும் என்று முறுக்கு, மிக்ஸருடன் தியேட்டருக்கு சென்ற பலர், பிரகாஷ் ராஜுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும்.

எனக்கு பிடித்ததை பதிவு செய்துவிட நினைத்து இந்த வார்த்தைகள். முதல் காட்சி, முடியை பிய்த்து கொள்ளாமல், உதவி இயக்குனர்களை ஓட ஓட விரட்டாமல், எதார்த்தமான யோசனை. புதிதும் கூட. அங்கேயே, யாருப்பா இந்த ராதா மோகன் என கொஞ்சமாக கேட்க வைக்கிறார். அழகிய தீயே, பொன்னியின் செல்வனில் அப்படி ஒன்றும் அசரவில்லை நான். பேசாமல் ஒரு நாயகி. இப்போது வரும் படங்கள், பெரும்பாலும் இன்றைய பெண்களை அதிகம் பேசவிட்டே பார்க்கிறது. கதையை காட்சிகளாக மாற்றுவது பெரும் திறமை. அதிலும் மாற்றிய காட்சிகளை, ஒவ்வொன்றாக இணைப்பது தேர்ந்தவர்களால் மட்டுமே முடியும். எல்லா படத்துலயும் அப்படிதானேப்பா என்று கேட்பவர்கள், வெற்றி பெற்ற படங்களை திரும்ப ஓட விட்டு பார்த்தால் தெரியும் (இங்கு வெற்றி, கமர்ஷியல் அல்ல). கடைசியில் நம் தாத்தா பாட்டி கதை சொல்வது போலத்தான். ஒவ்வொரு சம்பவத்துக்கும் கொக்கி போட்டு கடைசியில் கிளைமாக்ஸ் கொண்டு வந்து முடிப்பார்கள். டைரக்டர்களும் அப்படியே. ராதா மோகன் கவனமாக கையாண்டுள்ள ஒரு இடம், திரைக்கதை.

தேவை இல்லாமல் படத்தில் யாரும் சுத்தவில்லை. யாரும் அதிகமாக வசனம் பேசவில்லை. உணர்ச்சிகளை கொட்டி குவிக்கவில்லை. சிரிப்பு வரவைக்க வேண்டுமென்று, பெரும் ப்ரயத்தனபடவில்லை. எல்லாம் சாதாரணமாக எப்படி வாழ்க்கையில் வந்து போகுமோ அப்படியே வந்து எட்டி பார்த்து ஹலோ சொல்லிவிட்டு போகிறது. இது பெரும் பலம். நல்ல முயற்சி.

உறுத்திய சில விஷயங்கள் - பாடல்கள். எதார்த்தத்தை மீறிய ஒரு சம்பவம் இது. மொழி போன்ற ஒரு படத்துக்கு கண்டிப்பாக பாடல் தேவையே இல்லை. கமர்ஷியல் ஹிட் பார்க்க வேண்டிய படங்கள் இதை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால், பிரகாஷ் ராஜுக்கு இந்த கட்டாயம் கண்டிப்பாக இல்லை. நம்மவர்கள் எதற்கெடுத்தாலும் ஹாலிவுட் ஹாலிவுட் என்பார்கள், ஆனால் இதில் மட்டும் ஹாலிவுட் வேண்டாம். என்னப்பா நியாயம். தனி ஆல்பமாக வெளியிட்டிருக்கலாம். இதனால், மொழி படத்தின் இசை என்னவோ மட்டம் என்பதல்ல. பதிவின் முதல் வரியே பாடல்கள் எனக்கு பிடித்ததால் தான்.

கொஞ்சம் லாஜிக் தப்பிய இடம் - கார்த்திக் தன் பிறந்த நாளுக்காக, பள்ளிக்கு உதவி செய்வார். அதற்கு அங்குள்ள பிள்ளைகள் நன்றி சொல்வார்கள் கூட்டமாக. கையை மேலே ஆட்டி. இதற்கு பக்கத்திலுள்ள ஷீலா, 'உங்களுக்கு நன்றி சொல்றாங்க' என்பார். இந்த காட்சிக்கு முன்பாகவே கார்த்திக், விஜி இவர்கள் இதை பல முறை செய்வது போல சில காட்சிகள் வந்து போகும் பாடலில். கொஞ்சம் கவனித்திருக்கலாமோ?

இதற்கு மேல் தேடினாலும் எங்கும் கிடைக்காது bug. டுயட் மூவிஸுக்கு குரு உச்சத்தில்.

சிவாஜி பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனதில், மொழி பட பார்வை. ஷங்கர் சார், என்னாச்சு உங்களுக்கு. உங்களின் அழகிய குயிலே script இன்னமும் உங்களுக்குள் இருக்கும். எடுத்து எங்களை போன்ற உங்களின் ரசிகர்களை ஆசுவாசபடுத்துவீர்கள் என நம்புகிறோம். சிவாஜியில் கூகுள் search போட்டு பார்த்தும் not found நீங்கள் (அதான், முதல் பாட்டுல வந்து போறேனேன்னு காமெடி பண்ண கூடாது ஆமா)

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...