Saturday, May 26, 2007

போதும் நிறுத்திக்கலாம்

பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில...

தொடர் படங்கள் (sequel movie)

இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று நினைக்கிறார்கள் போல. இத்தனையும் Shrek the Third, Pirates of the carribean (at world's end) பார்த்தவுடன் தோன்றியது. இவை இரண்டும், அவற்றின் முதல்களை மிஞ்சும் ஆசையுடன் திரைகளில் ஒயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வந்த புதிதில், மாத்தி யோசித்த படங்கள் இவை. அதற்கு பிறகு, யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ. போர் அடிக்கவைப்பது, இதற்கு பின் வரும் அனகோன்டா நீளத்துக்கு பெரிய லிஸ்ட். அதில் நிறைய 1,2,3 மேட்டர் தான் (Ocean thirteen, Indian Jones 4, Hellboy 2, Jurassic Park 4, Rush Hour 3...). போதும்பா. (உங்களை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேறு ஒரு கூட்டம் பாலிவுட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தயவு செய்து நிறுத்தவும்.)

பாலிவுட்

அதிகம் ஹிந்தி படங்கள் பார்த்ததில்லை முன்பெல்லாம். இப்போது, பாதி ஹிந்திவாலா. ஏக் காவ்ன் மேய்ன் ஏக் கிஸான் ரகுதாதா, நிலை இல்லை. ஒரு டைரக்டர், தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார். கதை பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சொல்லும் அடுத்த வார்த்தை, இதுல அமிதாப் பச்சன் எந்த கேரக்டர்ல வராரு? கதை எந்த நாட்டுல நடக்குது, யுஸ்ஸா, யுகேவா? இப்படி ஒரு வியாதி அவர்களுக்கு. எல்லா படங்களும் இப்படி இல்லை. ஆனால், பல படங்கள் அப்படித்தான். நிறுத்தினால் நலம்.

விஜய்

யார் மனசுல யாரு? உங்க மனசுல யாரு? இந்த டயலாக் கேட்டாலே, பாலக்காடு பக்கம் ரயிலில் வித் அவுட்டில் போன அதிர்வு. அவரை தமிழில் பேச சொல்லுங்கள், இல்லை, மலையாளத்தில் பேச சொல்லுங்கள். இத்தனைக்கும், அவருடைய மேல் மாடி தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஆச்சரியம் தான், அலுக்க அலுக்க பாராட்டியாகி விட்டது. ஆனால், இந்த மல்லு தமிழ் கலப்பு, கொஞ்ச காலம் காமெடியாக இருந்து, இப்போது ட்ரேஜிடியாக மாறி விட்டது. விஜய் டிவி கவனித்தால் நலம்.

இப்போதைக்கு மீடியா போர் இவ்வளவு தான். மற்ற போர் எல்லாம், போரடிப்பதால், பிறகு.

Wednesday, May 23, 2007

எங்கெங்கு காணினும்...

கெளம்புய்யா சீக்கிரம். லேட்டா கெளம்பினா எல்லாம் மிஸ் ஆகிடும். நண்பரும் நானும் பாரம்பரியமாக பெரும்பாலான இந்திய வாழ் அமெரிக்கர்கள் (சே, அமெரிக்க வாழ் இந்தியர்கள்) ஆற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற கிளம்பினோம். வேறென்ன downtown (SFO - Bay area) விஜயம் தான்.

சரி, எப்பவும் போல ஓங்கி உலகளக்கும் பில்டிங் பார்த்து, அமெரிக்க குட்டிகளை கண் குளிர சைட்டடித்து (அட, நாய் குட்டிங்க), கால் வலித்தாலும் கூலாக நடந்து, குளிர் காற்று தான் வாங்க போகிறோம் என்று நினைத்தேன். நண்பனின் திட்டம் படு ஜோராக பின்னப்பட்டு இருந்தது, எனக்கு தெரியாமல்.

ரயிலில் போகும் போதே திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தார், 'ஜீ, எந்த ஸ்டேஷன்ல எறங்கினா நிறைய பிச்சகாரங்கள பாக்கலாம்'. நானும் பெரிதும் தெரிந்தவனாக, ' Embarcaderoல இறங்க போறோம், அங்க நிறைய பேரை பாக்கலாம்'. ஏதோ ஒரு பொது அறிவுக்காக கேட்கிறார் போல. விட்டு விட்டேன்.

Embarcaderoல் இறங்கி, படி மேலேறி,

பாத்தீங்களா, எவ்ளொ பெரிய... யோவ் அங்க என்னய்யா பண்ற.
ஜீ, அங்க பாருங்க ஒருத்தர் நம்ம அந்நியன் மாதிரியே நடந்து வாராரு.
அதுக்கு என்ன இப்போ?
ஒரு போட்டோ எடுத்துகிறவா.
இதெல்லாம் பாக்கிறதோட நிறுத்திக்கனும், போட்டோ எல்லாம் எடுத்து அப்புறம், நம்மள 911 கால் பண்ணி உள்ள போட்டுட போறாங்க, வாங்க போவோம்.
அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க இப்படி ஒட்டினாப்போல நில்லுங்க, உங்கள focus பண்றா மாதிரி, அவுர எடுத்துடறேன்.


திட்டத்தை கண கச்சிதமாக நிறைவேற்றி கொண்டிருந்தார்.

ஒகே, இப்போ கெளம்புவோமா.
சரி ஜீ.

திட்டத்தை முறியடித்த சந்தோஷத்தில் பஸ் ஸ்டாப்பில் காத்து கொண்டிருக்க ஆரம்பித்தோம். பஸ் வந்தாச்சு, வாங்க போகலாம். பக்கத்தில் ஆள் எஸ்கேப். எதிர்பார்த்தது போல, இன்னொரு பிச்சைகாரரை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்.

ஏலே, வேணாம், நான் இங்க கொஞ்ச நாள் நல்லவனா இருக்கனும்னு பாக்கறேன். நீ என்னடான்னா, அப்படியெல்லாம் இருக்கவிட மாட்டேன்னு, அலம்பல் பண்ற.

சீரியசாகவே சொல்லி பார்த்தேன். பித்தம் தலைக்கேறி விட்டிருந்தது. இந்த முறை, என்னை நிற்க வைத்து மேஜிக் எதுவும் செய்ய வில்லை. தப்பித்தேன். திட்டத்தின் அடுத்தடுத்த மைல் கல்களை கடந்து கொண்டிருந்தார் நண்பர்.

நான் சிறிது முகம் காட்டியதால், அடக்கி வாசிக்கபட்டது திட்டம். ஆனால், உள்ளுக்குள் தீரா தாகத்துடன் நடக்கும் வழி எல்லாம், அவர்களை தேடிகொண்டே வந்தார். அசந்த நேரத்தில், இன்னொரு கிளிக், இன்னொரு பிச்சைகாரார். எனக்கு தெரியாமல் திட்டதை செயல்படுத்தியதில், பெருமிதம் நண்பரிடம். நன்றாக இருந்த முகத்தை, மறுபடியும், மூக்கு மேல் கோபம் வந்தது மாதிரி வைத்துகொண்டேன்.

ஜீ, இங்க நில்லுங்க. கலக்கல், போட்டோ ஸ்பாட். இங்க போட்டோ எடுத்து, வீட்டுக்கு அனுப்புங்க, உடனே பொண்ணு உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பா. மூக்கின் மேலிருந்த கோபத்தை கொஞ்ச நேரத்திற்கு ஐஸ் வைத்து மறைத்தார். நானும் நம்பி, தலை வாரி, முகத்தை சரி செய்து நின்றால், திட்டத்தின் அடுத்த படியை கடந்து விட்டிருந்தார். எனக்கு பின், ஒரு சின்ன பிச்சைகார கும்பல். இந்த கிளிக்கும் வெற்றி.

போதுமப்பா, உன்னோட கலை ஆர்வம். Downtown வந்தோமா, வாசல்ல இருந்து கிளப் பார்த்தோமா, பர்கர் சாப்பிட்டோமா, கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா நாலு விஷயங்கள நிரப்பினோமோன்னு இல்லாம, சின்ன புள்ளதனமா, விளையாட்டு பண்ணிகிட்டிருக்க. இந்த முறை நண்பர், திருந்திய இதயத்துடன், சரி ஜீ என்றார். இப்போது கேமரா அதன் இடத்தில் பதுங்கி விட்டிருந்தது. இப்படியாக, அடுத்த இரண்டு மணி நேரம் பறந்தது.

பதுங்கிய வேதாளம் ஒரு போஸ்டரை பார்த்து விழித்தது. ஜீ, கடைசியா ஒரே ஒரு போட்டோ. இவ்ளோ நேரம் நல்லா இருந்தியேப்பா. பதில் வரவில்லை. போஸ்டரை focus செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் போஸ்டர் இருப்பது தெரியாமல் உட்கார்த்திருந்த ஆன்ட்டி, இவர் போகஸ் செய்வதை பார்த்து, என்ன போஸ்டர் அது என பார்த்து விட்டு, எங்களிடம் ஒரு பய பார்வையுடன் விலகினார்.இன்னைக்கு என்னோட ராசிக்கு பலன் பாக்க இந்த ஊருல ஒரு தினசரி காலண்டர் இல்லையே என நொந்து கொண்டிருந்தேன். இருந்திருந்தாலும், என்ன இருக்கும் என ஊகிக்க முடிந்தது. தெரிந்தவர்களால் வீண் அபாயம்.

ஒரு வழியாக, ஊர்கோலத்தை பலத்த பயத்துடன் முடித்தே விட்டோம். வரும் வழியில், சே குவேரா பற்றி ஆதி அந்தத்தை சொல்லிகொண்டிருந்தார், நான் கேட்காமலே. நாங்கள் இருப்பது, ஒரு அமெரிக்க ரயிலில். பக்கத்தில் இருப்பது பெரும்பாலும் அமெரிக்கர்கள். பேசுவது சே பற்றி. தில்லு தான்யா உனக்கு என்றேன். அவர பத்தி அப்புறமா பேசலாம். இப்போ சபையை கலைப்போம் என கூறி, சில சீட்கள் தள்ளி உட்கார்ந்திருந்த சிலரை வெறிக்க தொடங்கினேன்.

சொல்லிய விஷயத்தில், பெரும்பாலும் சுவாரஸியம் இல்லை. ஆனால், பிச்சைகாரர்கள், அதுவும் அமெரிக்காவில் என்றால் யாரும் வாயை பிளக்க மாட்டார்கள் என நினைத்தேன். முதலில் பிளந்தது என் தோழி. யுஸ்ல இவுங்க எல்லாம் இருக்காங்களா, ஆச்சரியமா இருக்குப்பா என்றாள். அப்போது உறைத்தது நண்பரின் உள் குத்து.

இவர்கள் இல்லாமல் ஒரு இடம் இருக்க முடியுமா? திருத்தி அமைத்தாலும், அனைவரும் திருந்துவதில்லை. சிலருக்கு அதன் ருசி சுண்டி இழுக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த அறிந்த விஷயம் தான். அமெரிக்கா என்பது தான் சிலரின் ஆச்சரியம். எங்கும் மனித மனம் ஒன்று தான். மனிதன் ஒன்று தான்.

Monday, May 21, 2007

எஸ்டோனியா

இந்த நாட்டின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே சில நேரம் தேடினேன். அப்படி ஒரு அந்நியம். ஒரு தடவை ஐரோப்பாவும், யுனைடட் கிங்டமும் ஒன்று தானே என்று கேட்டு, நண்பர்களால் நக்கலடிக்கபட்ட நிலையில் என்னுடைய பிற நாட்டு அறிவு. இருந்தாலும், காதில் கண்ணில் அடிப்பட்ட செய்தி கலக்கமானது, அதில் எஸ்டோனியா அடி வாங்கியிருக்கிறது. கூகுள் நியுஸில் எஸ்டோனியா என்று தேடினால், பொல பொலவென இந்த செய்தி தான்.

சைபர் வார் (தமிழில் அர்த்தபடுத்தி கொள்ள வேண்டாம்). இதில் சிக்கிய புண்ணியம் இந்த நாட்டுக்கு. சிக்கி, சின்னா பின்னமாகவில்லை. பிண்ணனி (அறுக்காமல் நாலு லைன்) - எஸ்டோனியா சோவியத் யூனியனில் கூண்டில் இருந்து இறக்கை முளைத்து பிரிந்து, பறந்த கிளி. சொல்லாமலேயே புரிந்திருக்கும். பங்காளி சண்டை யார் யாருக்கு என்று. போன மாதம் 27ம் தேதி, எஸ்டோனியர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஒரு ரஷ்ய போர் சின்னத்தை போட்டு தள்ளிவிட்டார்கள். இது பிடிக்காத (அப்படித்தாங்க செய்தி சொல்லுது) சில பெத்த ராயுடுகள், இவர்களின் ஈ ராஜ்ஜியத்தை (e-governance, e-bank, e-news) சில நேர/நாட்களுக்கு தற்காலிகமாக போட்டு தள்ளிவிட்டார்கள் (DDoS attack).

நம்ம ஊர் மாமன் மச்சான் சண்டை தான். ஆனால் அதன் முறை வேறு. அதிலும், எஸ்டோனியா இ-கவர்ன்மென்ட் போன்ற விஷயங்களில் மூத்த குடி. அதையே அசைத்து பார்த்தது இந்த சைபர் வார். அசைந்தும் போனார்கள் (எழுந்தது வேறு விஷயம்).

டிஜிட்டல் அரசாங்கம் நடத்துவதில் எல்லா நாடும், நீ நான் என்று அடித்து கொள்ளும் நல்ல நேரம். இப்படி எல்லாம் நடந்தால், டிஜிட்டலில் சீன் காட்டியது போதும், நம் தாத்தன் பாட்டன் செய்தது போல பேப்பர் அரசாங்கம் நடத்துவோம் என்று அறிக்கை வந்தாலும் வரும்.