Thursday, January 13, 2022

என் ஒரு பறவை

 பறந்திளைத்தபின் தரை தொட்டது
பல கனவுகளைச் சுமந்த அந்த பறவை
கனவுகளைத்தின்ற பறவை அது
கனவுகள் உள்ளே சென்றால்
கனவுகள் தான் வெளி வரும்
அதன் பின் பல மிருகங்கள்
சுருண்ட வயிறுடன் சுற்றும்
கனவின் மென் பக்கங்களை
களவாட வேண்டி
அதன் பாதம் வருடும்
கனவுப்பறவை காறி உமிழ்ந்து
உனக்கெல்லாம் என் கனவு
தேவை இல்லை
என் எச்சம் கொண்டு வாழ்ந்துவிடு
அதுவே உன்னை
இன்னொரு பறவையாக்கும்
நான் கடவுள்
என்னைக்கொன்று தின்ன
நீ ஒன்றும் மனிதன் அல்ல…

-

ஒவ்வொரு நாளும் ஒரு பறவையின் கனவு
செவ்வந்தி நிறத்தின் பறவை
இதயத்தின் தேகம் கொண்ட இன்னொரு பறவை
ஆங்காரம் கொண்ட இன்னொன்று
மருதாணி மணம் கொண்ட இன்னொன்று
தினம் ஒரு கனவு
பறந்து பறந்து கனா கண்டேன்
இரவுகளின் காதலில் பறவை
பிள்ளை கண்டது
கனவுப்பிள்ளை
ஒரு நாள் கனவுகள் நின்றன
பறவைகள் பஞ்சத்தில்
தற்கொலை செய்து கொண்டன
என் காலைகள் மனிதர்களுடன்
இரவுகள் இன்னும் அடுத்த
பறவைக்காக
அது வரை இரவுகள்
அனைத்திலும்
கனவுகள் அண்டா
கோட்டையில் கூகையாய்
விழித்திருப்பேன்!!

-

பறவையின் அலகுகள்
போல் வாழ்க்கை
கூராகவும்
ரத்தம் தோய்ந்ததும்
சதைகளின் நார்களின் கவுச்சியும்
உலர்ந்த பழங்களின் நாற்றமும்
கொண்டதாகி இருந்தது
ஒரு மடப்பயலும் சொல்லவில்லை
எனக்கும் புலப்படவில்லை
அந்த அலகு தான்
மென்சதையை மிருது
குலையாமல் ஈரப்படுத்துக்கொண்டே இருக்கிறதென்று
வாழ்வு இனிக்கிறது
ஆனாலும்
அலகின் வன்முறை
இல்லாமலிருந்தால்
இன்னும் மிருதுவாக இருந்திருக்கும்

-

பறவைக்கும் எனக்கும்
ஒரே கூடு
அது வெண்ணிற குச்சிகள்
அடங்கிய பகுதியில்
உறங்கும்
நான் சாக்கடையில்
அள்ளிய குச்சியின்
பக்கம்
அதற்கு இரக்கமே இல்லை
என் வாய் திறக்க
சொல்லித்தரவில்லை
வாய் திறந்தாலும்
அதன் இரையை
எனக்கு ஈந்ததில்லை
எதற்கு இப்படி ஒரு வாழ்வு
ஒரு நாள் நான்
பறவையாக முடிவெடுத்தேன்
சொன்னேன்
வேண்டாம் என்றது
உன் இரக்கத்தில்
வயிறு பிறழ்ந்து
சாவதை விட
லாரி முன் அடிபட்டு
சாவது மிக நன்று
பறந்தேன்
லாரிகள் வந்தன சென்றன
ஒரு சிறுவன் வந்தான்
கொள்ளை அடித்தான்
என்னை காதலர் பறவை என்றான்
கூண்டில் அடைத்தான்
காதல் செய் என்றான்
இதற்கு சாக்கடை குச்சி
எவ்வளவோ தேவலாம்

-

பறவைக்கு மனித வாழ்வு கிட்டியது
காலை திருநீறு இட்டுக்கொண்டது
இட்டிலி சாப்பிட்டது
தலை மயிரை வண்ணம் அடித்துக்கொண்டது
அலுவலகம் சென்றது
சக ஊழியர்களை திட்டித்தீர்த்தது
இரவில் உடல் நனைய காதலித்தது
அடுத்த நாள்
அதே இட்டிலி
அதே வண்ணம்
அதே காதல்
மீண்டும் பறவையாகவே மாறிப்போனது
பக்கத்தில் இருந்த
இன்னொரு மனிதனாய் இருந்த
பறவை சொன்னது
இது முடிவல்ல
நீ மறுமுறையும் மனிதனாவாய்
திரும்பி பறவையாவாய்
திருந்த முடியாது
மனிதனுக்கு அமிலம் சூழ் நெஞ்சு
அவன் பொசுங்கிப்போனாலும்
அந்த நெருப்பில் தான் மறுமுறை
சிறுநீர் கழிப்பான்..

-

கிழட்டுப்பறவை ஒன்று
வேண்டுமென்றே வம்பிழுக்கும்
வழியில் செல்லும்
இளம்பெண் பறவையை
காதலுக்கு அழைக்கும்
அது வராது
இன்னொரு கிழடு
அதன் கூட்டில் இருமிக்கொண்டிருக்கும்
அதற்கு வாய்முத்தம்
கொண்டு சென்று கொடுக்கும்
நிர்வாணத்தை மட்டுமே
நம்பி இருக்கும் பறவை
இனத்திற்கு
ஜிகினா உடை அணிவித்து
கெக் கெக் என சிரிக்கும்
எல்லாம் ஒரு நாள்
முடிந்தது
கடைசி மூச்சு
இன்னும் என்ன உண்டு வாழ்வில்
தன் இறகில் ஒன்றை
பிய்த்து கீழே விளையாடும்
குட்டிப்பெண்ணிடத்தில்
கொடுத்து
புத்தகத்தில் வை
என் மகன் பிறப்பான்
அவனை கூண்டில்
மட்டும் அடைக்காதே
எனச்சொல்லி வானம் பார்த்து
கடையை சாத்திக்கொண்டது

-

மேகம் தான் தன் கூடு
என ஒரே சண்டை
கூட்டுக்கிளி 
தனிக்கிளி ஆகும் போது
தான் இந்த சண்டை
மேகத்தில் உன் குச்சி
நிற்காது
எனக்கு நிற்க வேண்டிய
அவசியம் இல்லை
அதுவே என் கூடு
அங்கே உறக்கம் வராது
அது தேவை இல்லை
நான் கனவு காணப்போகிறேன்
உறங்கப்போவதில்லை
உயிர் பிரிந்துவிடும்
போனால் போகட்டும்
அம்மா போ சொல்லிவிட்டது

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...