Sunday, June 05, 2022

காயம்

என்னருகில் என் கவிதை
முதல் முறை
வெறுப்புடன் கூடிய பயம்
காதல் கவிதை தான் அது
என்னருகில் இருப்பதினால்
நான் ஒட்டியிருப்பதனால்
தூக்கி எறிந்தேன்
கவிதைக்கு பெரும் காயம்
காயத்தினில் சிறிது
காதல் காத்துக்கொண்டிருந்தது
நேரமில்லை
அடித்து கொன்றே ஆகவேண்டும்
ஒரே அடி
காதல் அலறி அடித்துக்கொண்டு
இன்னொரு கவி நோக்கி ஓடியது

காகிதப்புத்தகம்

புத்தகத்தின் அருகாமை
அப்பாவின் மூளை
போலத் தோன்றினாலும்
அது எங்கோ
தொலைந்துபோன
என் மூளையின்
சிண்டு

மாயம்

உற்று நோக்கினால்
மாயம் தெரியும்
மாறுகண்ணுடன் பார்த்தால்
இவ்வுலகம் மாயமில்லாமல்
இருக்கும்
தேமே என்றிருந்தால்
உலகம் தெள்ளத்தெளிவாக
புலப்படும்

தானம்

உங்களிடம் தர
என்னிடம் ஒன்றுமே இல்லை
நீங்கள் என்னிடம்
தந்ததைத் தவிர

தனிமை

ஆண்டாண்டு கால 
தனிமையின் முன் 
கால்கட்டி உட்கார்ந்திருந்தேன் 
அங்கே ஒரு பூ
மலரட்டுமா என 
மொட்டு வாய் திறந்தது 
என் தனிமையில் 
ஒரு பூவின் 
மகரந்தம் 
அடர்ந்த இருட்டை 
கவிழ்த்துவிடும் 
இரைச்சலுடன் இருக்கும் 
வேறொரு அறைக்கு 
என் நண்பனிடம் 
அனுப்பி வைத்தேன் 
மலர்ந்த பூ 
அவனுக்கு தியானம் 
சொல்லிக்கொடுத்தது 
தனிமையில் அவனும் 
கிடந்தது அவதிப்பட்டான்

சிறகு

வாத்தின் சிறகுகள் 
கோரப்பல்லின் புலிகள் 
அடர்ந்த நீச்சல் குளம் 
சிறகுக்கு வீரம் 
புலிக்கு பசி 
தண்ணீருக்கு அன்பு 
வாத்து அன்பில் 
திளைத்துக்கொண்டே இருந்தது

Core

எங்கிருந்தும் மழை
எனக்கான ஒரு துளி
அண்டத்தின் முதல் மவுனம்
தாயின் முதல் கரு

குப்பை

நான் எழுதிய அத்தனை
கவிதைகளும் சிறகடித்து
பறந்தன
ஒரு கவிதை மட்டும்
முடமாகி நின்றது
தினப்பொழுதெங்கும்
நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு
நாயாய் சேவகம் செய்தது
சில நாட்கள் சுகம் தான்
பின் பாரமானது
உனக்கு சிறகமைக்கிறேன் என
சொற்களை பிடுங்கி
மாற்றி அமைத்தேன்
நாய் பூனையானதே தவிர
சிறகுகள் வரவில்லை
இருக்கும் சொற்கள் தான் பிரச்சினை
ஒவ்வொன்றாக கழட்டி
குப்பைதொட்டியில் போட்டேன்
கடைசி சொல்
தூக்கி எரிய மனமில்லை
நீதான் இந்தக்கவிதையின் கனம்
உன்னைக்கொண்டு தான்
நான் விரித்தேன்
நீ மட்டும் ஒத்துழை
நான் தூக்கி எரியப்போவதில்லை
ஆனால் அது நீண்ட கால
சொல் நண்பர்களை
விட்டிருக்க முடியாமல்
கைநழுவி குப்பைக்குள்
விழுந்தது
வெறும் வெளி இப்போது
என் கண்ணில் மழை
யுகத்தின் ஏகாதிபத்திய
கவிதை பிறந்தது
அதுவே அனைத்தையும்
ஆண்டது

சலனம்

அரண்மனையில் ஒரே குழப்பம்
பரிசில் பெறப்போவது
எந்தக் கவிதை?
அனைத்திலும் சிறந்த கவிதை
பேசாமலேயே இருந்தது
மேலோட்டத்தில் இருந்த ஒன்று
சிறு சலனத்தை மட்டும் காட்டியது
ஒன்றுக்கும் உதவாத கவிதை ஒன்று
ஒவ்வொருவரின் காதுமடல் மயிரின்
மேலேறி கொருகொருவென
பேசிக்கொண்டே இருந்தது
மன்னன் மயிர்க்கவிதைக்கு
பரிசில் அளித்தான்
பிறகென்ன
நவீனக்கவிதை அந்த மன்னனின்
வாயினில் தினமும் கசந்தது!!!

பூ

தாமரைக்குளத்தினில்
ஒரு இட்லிக்கூட்டம்
கூட்டப்பட்டது
அனைத்திற்கும் ஒரே
குறை
மனுவில் இப்படி
இருந்தது
பூவாக நம்மை 
இருக்கச்சொல்வது சரி
ஆனால் பூவை
அரைத்து அரைத்து
மலமாக்கச்சொன்னது
சிலாக்கியமாக இல்லை
இனி பூவாக இருக்க வேண்டாம்
என முடிவெடுக்கப்பட்டது

அன்பு

மலரினும் மெல்லிய
திருக்குறளில்
மயங்கிக் கிடந்தேன்
அடி செருப்பால நாயே
என அன்பான குரல் கேட்க
நாயாகி மாறி
அன்பைச் சொறிந்தேன்

மன்னி

பழி வாங்குதலின்
முதல் படி
காந்திய நியதியில்
மன்னிப்பு
முதலில் பழி தீர்த்தேன்
பின் காந்திய வழியில்
என்னையே நான்
மன்னித்தேன்

கிழமை

எனக்கான ஒரு கிழமை
வேண்டி
கிழமைக்கடவுளிடம்
தபஸ் செய்துகொண்டிருந்தேன்
நாலாயிரம் வருடம் பொறுத்து
என் கண் முன்னே
பிரதிட்டை ஆனார்
கிழமைக்கடவுள்
எனக்கு கிழமைகளை
தானமாக கொடுத்துவிடுகிறேன் என்றார்
மற்றவர்களுக்கு என்ன செய்வீர்கள்
என்றேன்
அவர்களுக்கு கிழமைகள்
தேவையில்லை
அனைவரும் கருந்துளைகளுக்குள்
நிலவின் துணையுடன்
உறங்கிவிட்டனர்
நீ ஒருவன் தான் குகைக்குள்
மிச்சம்
எல்லாம் எடுத்துக்கொள்
என்றான்
இனிமேல் நானெடுத்து
என்ன செய்ய
கிழமைகள் குப்பைக்கு
போயின
நான் கிழமையில்லா
கிழவனானேன்…

காட்டினில்

பச்சை நிறக்காட்டினில்
தொலைந்துபோனேன்
கசந்து கசந்து
பச்சையமானேன்
புள்ளிமான் வேட்டையாடும்
ஒருவனின் கால்
பூட்ஸில் சிக்கி சிதிலமானேன்
சிவப்பாய் என் அன்பு மட்டும்
அவன் காலில் ஒட்டிக்கொண்டது

கடவுள்

என் கடவுளை ஒரு நாள்
கீழிறக்கினார்கள்
அவனுக்கு என் மொழி
புரியவில்லை
அவனுக்கு நான் பக்தன்
என்பதும் தெரியவில்லை
சரி இருந்துவிட்டு போகட்டும்
கொஞ்ச நாள் நம்பிவிட்டு
போகிறேன்
ஒரு நாள் நான் கடவுளாவேன்
நீ
பக்தனாய் மாறிப்போ
என்றதில் திடுக்கிட்டு
நானே கடவுளாய் இருக்கிறேன்
ததாஸ்து என்றான்…

சேர்க்கை

சேர்த்துக்கொண்டவன் இப்போது
விழித்துக்கொண்டான்
சேராதீர்கள் சேராதீர்கள்
என மண்டியிட்டு கேட்டுக்கொண்டான்
சேர்ந்த்தவர்கள் சும்மா இருப்பார்களா
இனி வேறு போக்கிடம் இல்லை
நீ வேண்டுமானால்
போய் சேர்ந்துகொள்
உன் பெயர் எங்களுக்கு போதும்
என அறிவித்தார்கள்

ஓலம்

அனைத்திற்கும் மவுனம் தான்
பதிலென முடிவெடுத்தேன்
அன்று இரவு
என் மவுனமூட்டை
திடுக்கிட்டு திறந்துகொண்டது
ஓலமோ ஓலம்
அப்படி ஒரு ஓலம்
அடக்க இருநூறு மவுன
மூட்டைகள் தேவைப்பட்டது
அதைத்தேடி கொண்டு
வருவதற்குள்
என் முதல் மவுனமூட்டை
எதிர்பார்த்தது போல
தற்கொலை செய்துகொண்டது
ஆனால் தற்கொலையின்
எச்சங்கள் எதுவுமில்லாத
மவுன மரணம் அது
இருநூறு மவுன மூட்டைகளும்
இப்போது என்ன செய்வதென
அறியாமல் பேந்தப்பேந்த
விழித்தன…

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...