எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி :) எல்லாம் படிப்பேன். அப்படி புரட்டிகொண்டிருந்த போது, அப்படி என்ன தான்பா பவி'ல சொல்லியிருக்காங்க, என்று கொஞ்சம் தடவினேன்.
விகடன் பாதி வியாபாரமாகி விட்ட காலமிது. 144 பக்கங்களில், கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு பழைய விஷயங்களை தொடர்வது, நீண்ட கால வாசகர்கள் எல்லோரும் தெரிந்திருக்கும் விஷயம். வந்த பாதையில் பலவற்றை தொலைத்து விட்டாலும், பசுமை விகடனில் தொலைத்ததை தேடியிருக்கிறார்கள் என தோன்றுகிறது.
வயலும் வாழ்வை தொடர்ந்து ஒளிபரப்பியே பாவம் கட்டி கொண்டது தூர்தர்ஷன். விவசாயம், சாகுபடி, உரம், கொள்முதல், பூச்சிகொல்லி இதையெல்லாம் கேட்டால் நடராஜன் காத தூரம் ஒடுவார் என்று நினைக்கிறேன். இவ்வளவு பார்த்த பின்பும் பசுமை விகடனை தொடங்கியது, வியாபார நோக்கம் இல்லை.
படிக்க சுவாரசியம். பக்கத்துக்கு பக்கம் பசுமை. படிக்க படிக்க இனிமை என்று இதற்கு கூவியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கணிப்பொறியில் இருந்தவர் விவசாயம் செய்வது, நார்வே Global Warming மனதில் வைத்து அழிக்க முடியாத விதை கிடங்கை ஆர்டிக்கில் அமைப்பது, போக்குவரத்து அமைச்சர் K.N.நேரு விவசாயம் பேசுவது, கொடைகானலின் பக்கத்து கிராமத்தில் மாட்டு பண்ணை நடத்தி பால் மற்றும் உற்பத்தி செய்யும் அமெரிக்க பெண், மதுர ஜில்லா ஆளுங்களை பற்றி எல்லாம் நம் மண்டைக்கு எட்டும் பாஷையில் சொல்லியிருக்கிறார்கள் இந்த மாத இதழில்.
இந்த முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கை கண்டிப்பாக இல்லை. நாணயம் விகடன் பிரதி அதிகம் போடுங்க, பசுமை விகடன் கம்மியாவே போடுங்க என்று விகடனின் நலம் விரும்பிகள் அவர்களிடம் ஜாக்கிரதையாக சொல்லியிருப்பார்கள்.
தற்சமயம் விவசாயிகளாக உள்ளவர்களை அதிலேயே நீடிக்க வைத்தால் அதுவே பெறும் புண்ணியம்.