Wednesday, January 19, 2022

என் ஒரு சூரியன்

தகிக்கும் இளமை
சிறு அண்டத்தின் முப்பாட்டன்
ஒரு நாள் என்னிடம் பேசி
ஒரு நாள் சூரியனாக இருக்கச்சொன்னான்
தகித்தேன்
உடலொன்றும் புண்ணாகவில்லை
பேரண்டத்தின் சூட்டுக்கு முன்
நான் மிகக்குளுமை என
பக்கத்து வீட்டு சூரியன் சொன்னான்
வந்துவிட்டான் என் நேற்றைய சூரியன்
நானே இருக்கிறேன் என்றேன்
இல்லை, தொண்டு கிழம் ஒன்று
துணை சென்றபின்
என்னையே துணை என்று
உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறான்
அவனுக்கு உயிர் உள்ளவரை
நானே இருக்கிறேன்
அவன் போனபின் இன்னும் பல
மில்லியன் கிழங்கள் வரும்
அவர்களுக்கு நீ தகப்பனாய்
இருந்துவிட்டுப்போ
என்றது
-
நிலவுக்கும் சூரியனுக்கும்
கட்டுப்படுத்த முடியா காதலுண்டு
அந்த காதலில் நானுமுண்டு
ஒரு நாள் நிலவாவேன்
மறு நாள் சூரியனாவேன்
குளிரும் வெயிலும்
என்னைத் தேய்த்து தேய்த்து
குழந்தை ஆக்கியது
அதனினும் தாண்டி ஒரு நாள்
சிறு புள்ளியும் ஆக்கியது
பேரண்டத்தின் பெரு வெடிப்பின்
முதல் துகளானேன்
சூரியனின் தகப்பனாகவும் ஆனேன்
-
சூரியனுக்கு பல வேண்டுதல்கள்
ஒரு மரம் மட்டும் வேண்டாது
அது நிலவினால் வளரும்
குளிரொளி வேர்களில் தென்படும்
சூரியன் வந்தால் இருண்டு கொள்ளும்
தகிக்கும் ஒரு சூரிய நாளில்
முகில் பறவை ஒன்று
குளிரொளியை திருடிக்கொண்டது
நிலவின் பிள்ளை மரம்
வலம் வந்த சூரியன் உமிழ்ந்த
வெயிலெச்சத்தில் சாம்பலாகிப் போன குழந்தை
விதையாய் மாறி கண் சிமிட்டும்
நட்சத்திரமானது
-
சூரியனில் ஒரு நாள் தண்ணீர்
வைக்க தலைப்பட்டேன்
தண்ணீர் தங்காது என சொல்லப்பட்டது
கிட்டே கூட செல்லாது
பொசுங்கி விடும்
பொல்லாப்பேச்சுகள்
அறிவியலின் அறிவிலிகள்
முன் நான் சாந்தியானேன்
சூரியனில் தண்ணீரை
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது
என் முப்பாட்டனின்
முதல் விந்து
-
உடலின் எந்தப்பகுதியிலும்
சூரியனைப் பொருத்தலாம் என வரம் கிடைத்தது
இதயத்தில் வைத்தேன்
கண்டவர்களை எல்லாம் பொசுக்கி
என்னை பொறுக்கி ஆக்கியது
மூளையில் வைத்தேன்
பணம் கொள்ளை கொள்ளையாய்
சம்பாரித்தேன்
கண்ணின் மணியில் வைத்தேன்
காதலிகளின் மடியில்
மன்மத மலையானேன்
கால் பாதத்தில் வைத்தேன்
பூமி ஒவ்வொரு அடியிலும்
கருந்துளை ஆனது
மூக்கின் நுனியில் வைத்தேன்
எதிரில் வருபவரின் முகமெல்லாம்
கருக்கி முண்டமானது
எங்கு வைத்தாலும் நிம்மதி இல்லை
எரிகின்ற மெழுகின் வசம் ஒப்படைத்தேன்
அது மொத்தமாக விழுங்கி
அதன் ஒரு துளி அலகில் 
எப்போதும் சூரியனை
பரப்பிக்கொண்டே இருந்தது
-
கவிதைகளால் வடித்த நிலா
ஒரு நாள் காய்ந்து போனது
சூரியன் கடலுடன் காதல்
கொண்டு இன்னொரு நிலவை
பெற்றெடுத்தது
அந்த நிலவுக்கு குளிர் தரும்
குணமில்லை
நெருப்பை அடிவயிற்றில்
சேர்த்துக்கொண்டே இருந்தது
நிலாக்கவிஞன் எழுதினான்
சூரியநிலா எப்போது தான்
குளிரத்தொடங்குவாய்
என் கவிதைகள் எல்லாம்
வேரில்லா இலைகளை
கடைசி மூச்சுடன்
புதுக்குளிருக்காக
காத்துக்கொண்டிருக்கிறது

மனிதன்

கடவுளாகும் வரம் கிடைக்கவில்லை
மனிதனாகிப்போனேன்
வாழ்வின் பாதியில் உணர்ந்தேன்
கடவுள் வேலை சுலபம்
மறுமுறை கடவுளானேன்
இப்போதிருக்கும் கடவுளுக்கு
நெஞ்செரிச்சல்
என்னை சொர்கத்திற்கு அனுப்பினான்
வஞ்சகன்
நரகத்திற்கு அனுப்பி இருக்கலாம்!!!

வெளியேற்றம்

 மனிதப்பிறவி வெளியேறும்
வசதி கொண்டது
பிறக்கும் பொழுதின் வெளியேற்றம்
கொண்டாட்ட வாழ்க்கையின்
முதல் சிறகடிப்பு
பெற்றோர் விட்டு வெளியேற்றம்
மிச்சமுள்ள வாழ்வின்
முதல் கல்
உடல் விட்டு உடல் வெளியேற்றம்
தனக்கு பிறகான தன்னின்
குழந்தைக் களியாட்டம்
நோய் விட்டு உடல் வெளியேற்றம்
முற்றும் முடிந்த ஒரு ஆற்றின்
கடல் சேரும் சம்பவ கூச்சல்
ஒவ்வொன்றிலும் வெளியேற்றம்
உள் சென்றது எப்போது
சிப்பியின் முத்து
சிரித்தது!!!

காதலியின் தந்தை

கவிகள் அனைவரும் நரகம் சென்றனர்
வயிறு முட்ட முட்ட மீல்ஸ் பரிமாரப்பட்டது
ஒவ்வொருவராக கை கழுவினர்
எழுதிய கவி அனைத்தும்
மேகம் வழியே கீழிறங்கி
மழையாய் பொழிந்து
ஒரு காதலனின் காதில் ஒரு சொட்டாய் இறங்கியது
அவன் கவியானான்
அன்பே! உன் பெயருக்கு முன் இனிசியல் வேண்டாம்
பூ என்று வைத்துக்கொள்
அதற்கு பிறந்தவள் தான்
நீ
என முடித்தான்
காதலியின் தந்தை
இந்த கவியையும்
முடித்தான்
மேல் சென்றவன் கைகளும் கழுவப்பட்டது

அமுக்குணி

கவிதைக்குள் எவரோ ஒருவர் பேசிக்கொண்டே இருக்கின்றனர்
பேசாக்கவிதை உண்டாவென மகாகவியிடம் கேட்டேன்
உண்டென்றான்
என்ன உத்தியில் உழைப்பது?
புத்தியை குப்பையில் போட்டுவிடு
இதயத்தை கழட்டி கோட் ஸ்டாண்டில் கவிழ்த்துவிடு
ஏதும் இல்லா முண்டமான கவியாக இரு
பேசாக்கவிதை பிறக்குமென்றான்
அப்படி ஒரு கவிதையில் சுரத்தே இருக்காதே
ஆனால் அது தான் இந்தக்கால கவிதை
பேசாக்கவிதைகள்
அவனிடமும் பேசாது
இவனிடமும் பேசாது
தன்னிடமும் பேசாது
அமுக்குணியாக உட்கார்ந்திருக்கும்
கேள்வி கேட்டால் அழுகிச்
செத்துவிடும்
மான மரிக்கொழுந்து
அதிகமுள்ளவை அவை

அகாலத் தீண்டல்

எங்கோ ஒரு தீண்டலில் விழித்துக்கொள்கிறேன்
இரவை குழிக்குள் தள்ளிவிட்டு
இன்பத்தை நிரப்பிக்கொள்கிறேன்
இன்பமும் தீண்டலும்
தேடவியலா ஒரு முடிவிலியாக
கண்கள் கணம் தாங்க இயலாமல்
இரண்டையும் அகால குழிக்குள்
தள்ளி மண் அள்ளி பூமிக்குள் புதைத்தது
ஏதும் இல்லா தத்துவார்த்தியாக அலைந்தேன்
இரண்டு நாள் பொறுத்து அங்கு ஒரு பூ முளைத்தது
நான் தீண்டலின் பிள்ளை என பிரமாண்டமாய் சிரித்துக்கொண்டது

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...