Monday, June 20, 2022

கவி வாழ்க்கை

நிறுத்தமில்லா பேருந்துகளில்
இருக்கும் பெட்ரோலென
கவி வாழ்க்கை
எரிந்துகொண்டேதானிருக்கும்
சேருமிடத்தில் ஓட்டுனருக்குத்தான்
புன்முறுவலும் கைகுலுக்கல்களும்
எரிந்த புகை
செவ்வானத்தில் இன்னொரு
கவி தேடி
செல்லும்

ஏப்பம்

கவிப்பெண்ணொருத்தி
எனக்காக கவிதை
சமைத்தாள்
சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விட்டதில்
பல அமைதிகள்
விழுந்துகிடந்தன

மதிப்பு

கவிதை விற்பதில் சலனமுண்டு
யார் வாங்குவார்
வாங்கினால் மதிப்புண்டா
வான் கோவின்
உருளைக்கு உண்டான
மதிப்பு என் கவிதைக்கு இல்லை
வாங்கவேயில்லை
விற்றால்தானே
பின் தான் தெரிந்தது
நான் கவியில்லையென்று

கவி-பசி

எந்தக்கவிதையும்
ஆரம்பத்தில்
கிளர்ச்சி
மத்தியில்
குழப்பம்
முடிவில்
சன்னதம்
கவிக்கு
பசி

காற்றில்லாப் பை

சுவாசம் எனக்கென்றாள்
நான் எனக்கென்றேன்
தத்தெடுக்கவா என்றாள்
முடியாது, 
நொடிக்கொருதரம்
அது உள் சென்று
சூல் கொள்ளும்
பின் வருமொன்று
பிள்ளைகளோடு வரும்
அதில் எதை தத்தெடுப்பாய்?
அது தாயுடனே வரும்
அதை தத்தெடுக்கிறேன்
அந்த ஆதிசுவாசம்
எனக்கு வேண்டுமென்ற என் காதலி
இரண்டாண்டு காலம்
சுவாசத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்
காற்றில்லாப் பையில்
காதல் அடைத்தாள்
பின் மறைந்தாள்
சுவாசமில்லாக் காதல்
இன்னுமொரு காதலிக்காக
காத்திருக்கவில்லை
உதடுகளுக்காக
காத்திருந்தது

கவிதை - II

அசைந்தாடும் நதி
எதிரே கவி
நடுவில் கவிதை
யாருக்கு சொந்தம்?

ரூமி

ரூமியிடம் கடன் கேட்டேன்
காதல் தரமாட்டேனென்றான்
மது கேட்டேன்
தீர்ந்து நூற்றாண்டுகள் ஆனதென்றான்
என்னதான் உண்டு
ஒன்றுமில்லை
என் கவிதைகள் உண்டு
அதைக்கொண்டு என் நாவைத்
தடவினேன்
கவிதைகள் புரண்டன
கவிப்புத்தகங்கள் திரண்டுழுந்தன
மொத்தமாய் விற்றுப்போயிற்று
ரூமி இமயமதிற சிரித்தான்
என் கவி உன் நாவில்
ஏறினால்
ஏன் இவ்வளவு பழுப்பேறியுள்ளது
ஒன்றிலும் காதலும் இல்லை
மதுவும் இல்லை
விசுக் விசுக்கென
நின்று நின்று ஓடும்
ஓணான் போல உள்ளதென்றான்
உன் கவிதைகளின் 
இண்டுகளில் சந்தம் சேர்த்தேனென்றேன்
அமைதி நிரப்ப முடியாத உன்னால்
சந்தம் தான் நிரப்ப முடியும்
இரைச்சலோடே இருந்துகொள்
இறந்தபின்னும் சந்தம்
உன்னை அழுத்தாமலிருந்தால்
சரி

புங்க மரம்

என் வீட்டின் புங்க மரம்
தூங்கிக்கொண்டிருக்கும்
எப்போதும்
பிள்ளைகள் வந்தால் விழிக்கும்
தொட்டுத்தொட்டு விளையாடும்
பிள்ளைகள் இன்னும் பிரசித்தம்
இரட்டை ஜடையின்
பெண் பிள்ளைகளிடம்
காதல் பெருத்தோடும்
ஜடைகளின் நுனியில் 
எப்படியாவது தன் கிளையை
மணம் முடித்துவிட திளைக்கும்
இன்று வரையில் மணம் முடியவில்லை
ஜடைகளுக்கு அவ்வளவு தடைகள்
ஓரிரவில் பெண்ணொருத்தி
முசுமுசுவென அழுதாள்
புங்கம் குறட்டை விட ஆரம்பித்தது
இரட்டை ஜடையின் தாய் என்றாள்
தூக்கம் கலைந்தது
நீ பிள்ளை இல்லை
ஆனால் உன் பிள்ளை
எனக்கு ஆதிக்காதலி
என்னவாயிற்று?
ஜடைகள் புதைக்கப்பட்டன
செய்தி விம்மல்களானது
புங்கம் மறுமுறை
தூங்கியது
மெல்லிய ரசக்கண்ணாடின்
உடைந்த துகள் போல
இன்னும் உடைபட ஏதுமில்லை
என்பது போல
இன்னொரு காதலுக்கு
காத்திராமல்
மண்ணுக்கடியில் ஒவ்வொரு
வேரையும் தற்கொலை
செய்துகொள்ளுங்கள் என
மன்றாடியது
வேர்களுக்கேது காதல்
விடாமல் வளர்ந்தது

ஒட்டுண்ணி

மீட்பதற்கு எதுவுமே இல்லை
நானும் இல்லை
அவளும் இல்லை
தனித்தனியே கலைந்து
விட்டிருந்த காதல் மட்டும்
ஒட்டுண்ணியாய்
இன்னொரு காதல் அணியிடம்
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது

கவிதை

அலைந்து கொண்டிருக்கும்
உணர்வுக்குழம்பில்
சிறிது சிறிதாக
மாற்றம் ஆனது
புல்லாங்குழல் இசைக்க
கவிதை நின்று போனது

மகள்

எழுந்தெழும் காதலில்
பிறந்த மகள்
மடியினில் பூவாக
மலர்ந்து கிடந்தாள்
நாளை திறப்பு
அடுத்த நாள் உள்ளிருப்பு
பிறகு மடியினில் குளம்
நீரில் பிறப்பதுதானே
என் மகளின் குணம்

காது

எம்பிக்குதித்து அடித்ததில் 
இமயமலை இரண்டு துண்டானது 
அதில் இரு முனிகள் 
ஒருவருக்கு காது அறுந்திருந்தது
இன்னொருவருக்கு கை 
ஆனாலும் அத்தனை அன்பு 
அடித்துடைத்த என் கைக்கு 
கட்டு போட்டார்கள் 
பின் தவத்தை தொடர்ந்தார்கள் 
நான் கடவுளாக
இருக்க வேண்டுமா 
என யோசித்தேன்

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...