Thursday, August 26, 2021

கலாகாரன்

 எப்பொழுதும் உம்மென்று
இருக்கும் வாய் அவனுக்கு!
இரவின் காதலன்
உரித்துக்கொண்டு 
வெளிவருவான்
நகரத்துக்கே வெளிச்சம் 
பாய்ச்சுவான் 
முகங்களை எல்லாம் 
தன் முகம் கொண்டு 
தழுவுவான் 
விடிவதற்குள் ஒரு அவசரம் 
அசுரனின் வேகத்தில் 
இரவை பருகி முடிப்பான். 
விடியும்.
சாந்தமாகி பலரின் 
காலில் படாமல் இருக்க 
பகலின் இருட்டு தளங்களில் 
உறங்கிக்கிடப்பான். 

Tuesday, August 24, 2021

அமைதி

 பழைய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
அப்போதெல்லாம் ஒரே நினைவு 
ஒன்றைத்தாண்டிய பின் 
தான் இன்னொரு நினைவு 
பின் செல்லும் 
ஒவ்வொன்றுக்கும் இரை உண்டு 
நின்று நிதானமாக 
புசிக்கும்.
பின் வரும் நினைவுக்கும்
முகமன் கூறும்.

புதிய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
நான் அத்தனை நினைவுகளையும் 
ஒரு அறைக்குள் அடைப்பேன் 
அவை பெரும் ஓலம் போடும் 
ஒன்றின் ஓலம் இன்னொன்றுக்கு 
தற்கொலை எண்ணம் கொடுக்கும்.
ஒரு கட்டத்தில் 
அனைத்துமே மூர்ச்சை ஆகி 
மரித்துவிடும்.
நான் அடுத்த நினைவு
மாநாட்டுக்கான வேலைகளை 
பார்த்துவிடுவேன்.

பழைய மேய்ப்பன் புதிய மேய்ப்பனிடம் 
சொன்னான்,
உன் கூட்டத்தில் 
என்னையும் சேர்த்துக்கொள்ளேன்.
நினைவுகளின் அமைதி என்னை 
பித்தனாக்குகிறது. 

Monday, August 23, 2021

யாதெனின்

எழுத்தாளன் எனப்படுவான்
இவனெல்லாம்
ஆளன் என்ற விளி உண்டு 
ஆனால் 
இலகுவான வாழ்க்கையை 
வாழத்தகுதி 
இல்லாதவனாக இருப்பான்.
அவனுக்கு இஸ்திரி 
போடக்கூட இந்திரியங்கள் 
உதவாது.

விழிப்பில் கனவில் 
எழுத்தும் வாசிப்பும் 
இருப்பவனுக்கு 
கண் முன் என்ன தெரிந்துவிடும்?

அவனுக்கு தனிக்குணங்கள் உண்டு.

அச்சமில்லாதவன் 
கூக்குரல் எழுப்புவான் 
நினைத்த பொழுது அழுவான் 
சில நிமிடங்கள் 
உள்ளிருக்கும் இதயத்தை 
வெளியெடுத்து ரசிப்பான்
இன்னொரு மனிதனை 
பொறுத்துப்போவான்.
ஆனால் இவை அனைத்தையும் 
மசித்து குழைத்து 
சூடாக்கிய தாளில் 
மட்டும் தான் செய்வான்.

வெளி வாழ்க்கையில் 
அவன் மற்றவனைவரைப் 
போலத்தான்.

வெந்து தணிந்த இட்லிக்குள்
மாவு அப்படியே கிடந்தால் 
தட்டை தூக்கி எறிந்து 
அறம் புரிவான்!!

நிழல்

நிழலுக்கும் நிழலுக்கும்
நிழல் யுத்தம் 
நிழலோடு ஒருவன் இருந்தான் 
நிழல் இழந்தவன் ஒருவன் இருந்தான் 
ஒருவனுக்கு அது பாரம்
இன்னொருவனுக்கு அது பலம் 
நேரம் கடந்த பயணத்தில் 
நிழலுக்கு மனிதன் 
பாரமானான் 
நிழல் பிரிந்தது 
நிழல் இல்லாத முண்ட மனிதன் 
இனி சண்டை போட 
ஏதுமில்லை
நம் வழி நாம் பார்ப்போம் 
என பிரிந்தார்கள்! 

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...