வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.
இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும் கலந்து கட்டிய முகத்துடன் பேசிக் கொண்டே, பழைய நினைவுகளை அசை போட கூடாது என்றே தன்னை எதாவது ஒரு விஷயத்தில் நுழைத்துகொண்டபடியே நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார்.
என்ன சார், நாளையில இருந்து என்ன பண்றதா உத்தேசம். காலம் காலமா எல்லாரும் பண்றா மாதிரி காலையில பால் பாக்கட், நியுஸ் பேப்பர், ரெகுலர் சாப்பாடு, சாயங்காலம் பார்க் பென்ச், இப்படித்தானா என்று கேட்டு விட்டு பதில் எதிர்பார்க்காமல் இடத்தை கலைத்தார்கள்.
பியூன் கூட்டணியும், டைப்பிஸ்ட் கூட்டணியும் வழிந்து கொண்டே, சார் நீங்க இல்லாம நாளையில இருந்து எப்படி சார் வேலை செய்வோம். அந்த ஆளு வேற உங்க சீட் கெடச்ச சந்தோஷத்துல தல கால் புரியாம ஆடறான். என்ன பண்ண போறோமோ. ஆனாலும் எப்படியாவது சமாளிச்சிடுவோம் சார். இன்னைக்கு பார்த்து எதாச்சும் செஞ்சீங்கன்னா, என்று நெளியவே, இந்தாங்க என்று சில ருபாய் நோட்டுகளை திணித்தார். நான் வரும்போதும் இதையே தான் முன்னவரிடம் சொல்லியிருப்பார்கள் என்பதெல்லாம் நினைக்கும் அளவுக்கு அன்று இல்லை அவர்.
ஜட்ஜ் வந்தது கொஞ்சம் தாமதம் என்றாலும், சம்பிரதாயத்துக்கு ஒரு காபி டம்ளர் மட்டும் எடுத்து கொண்டு, இவரிடம் அப்புறம் வேற என்ன சமாச்சாரம் என ஆரம்பித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சொல்லிவிட்டு, எடுத்த காபியை அப்படியே வைத்து விட்டு கிளம்பினார். மகனை கல்லூரியில் சேர்க்க இவரின் சிபாரிசில் பேங்க் லோன் வாங்கியதும் அவருக்கு நினைவில் வரவில்லை. சிடு சிடுவென திட்டிய தருணங்களும் நினைவில் வரவில்லை.
அப்புறம் நாளையில இருந்து நம்ம ஜோதியில கலந்துருங்க என்றார் சென்ற வருடம் ரிடையர் ஆன நண்பர். அவரின் பார்ட்டியில் கலந்து கொண்டு காபி குடித்த போன வருடம் நினைவுக்கு... வரவே இல்லை.
எல்லாம் முடிந்து, கசங்கிய மாலையை வீட்டுக்கு எடுத்து போகலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல், தேவையில்லாத குழப்பத்தில் தடுமாறிகொண்டே, கடைசியில் தூக்கி போட்டார். எப்போதும் டிவியெஸில் நேராக வீட்டுக்கு அடித்து விரட்டி செல்பவர், அன்றைக்கு ஏனோ ரோட்டுக்கு அப்பால் தள்ளிக்கொண்டே நடக்கிறார். சார் பார்த்து போங்க என்ற குரல் கேட்டு, ரோட்டின் மேல் வண்டியை தள்ளிகொண்டு வருவதை உணர்ந்து உடனே மறுபடியும் ஓரமாக வர, தன்னையும் அறியாமல் நுழைந்து கொண்ட கவலையை நொந்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
எப்போதும் பார்க்கும் விஷயங்கள், நாளை என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கிறது. 35 வருட உழைப்பில் மனித வாழ்க்கையில் பார்க்க முடிகிற அத்தனையும் பார்த்திருந்தாலும், இந்த உணர்வை இதற்கு முன் சந்திக்காத ஒரு அன்னியம் அவரிடம்.
எழுதியுள்ள அனைத்தும் ஒரு கற்பனை மட்டுமே. வேலையில் இருந்து ஒய்வு என்பது எப்போதுமே சந்தோஷ நிகழ்வாக இல்லாத ஒரு சாதாரண அரசாங்க ஊழியரான அப்பாவின் ஒய்வு நாளை எதிர்கொள்ளபோகும் நேரத்தில் எழுதப்பட்ட பதிவு இது.