Wednesday, December 27, 2006

சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்...

வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்) உதவி தான். எப்போதும், பட படவென்று திருப்பிவிட்டு, என் போக்கில் பாட்டு கேட்பது வழக்கம். இன்றைக்கு கொஞ்சம் படிக்கவும் செய்தேன். படித்தது சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிகல் (San Francisco Chronicle), செய்தி நம்ம ஊர் தோசை பற்றியது. இந்தியா என்ற வார்த்தை பார்த்தாலே விட மாட்டேன், இதில் (மசாலா) தோசை படம் போட்டு, அதை பற்றி எழுதியிருந்தால், படிக்காமல் இருக்க தோன்றாது.

சுவாரஸ்யம் தான், ஒரு வெளி நாட்டவர் (Michael Bauer) நம் ஊர் தோசை வார்க்கும் உணவகம் தான் சிறந்த பத்தில் (in San Francisco) முதல் என்கிறார். அமெரிக்காவில் எப்போதுமே வித விதமான இதர நாட்டு உணவு வகைகள் மட்டுமே பெயர் பெறுகிறது. அந்த வகையில், இந்திய உணவு வகைகள், இந்தியர் அல்லாத பலரால் விரும்பபடுவது உங்களில் பலர் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. நானும் நண்பரும் அடிக்கடி போகும் பஞ்சாபி உணவகத்தில் எங்கள் இரண்டு பேரை தவிர வெறு இந்தியர்களை பார்ப்பது கடினம். அவ்வளவும் அமெரிக்கர்களும், மற்ற நாட்டவரும் தான். அப்படி என்ன தான் ஈர்த்து விட்டது இவர்களை? நம் நாட்டின் கார சாரமான சமையல் முறையாக இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. அதுவும் இல்லாமல், இவர்களுக்கு எப்போதும் ஒரு மாதிரி வித்தியாசபடுத்தி சாப்பிடும் எண்ணம் பலரிடம் உள்ளது.

இந்த செய்தியை படித்தவுடன், கண்டிப்பாக இந்த வார இறுதியில் தோசா உணவகத்துக்கு சென்று விடுவேன் என்று தான் நினைக்கிறேன். நீங்களும் சான் பிரான்ஸிஸ்கோ பக்கம் இருந்து, தோசை பிரியராய் இருந்தால், வாங்களேன் அங்கே போய் ஒரு கை பார்போம்.

Tuesday, December 26, 2006

இருட்டு கடை

காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும் இடத்தில் போனால் அங்கே தான் என்று வழி காட்டினார். கூடவே, 'இப்போ போகாதீங்க, சாயங்காலம் 5 மணிக்கு தான் திறப்பாங்க'. ரயில் 5:45க்கு. இருந்தாலும், அந்த கடையை பார்த்து விட்டு, அல்வாவையும் நேரில் வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை என்னை காத்திருந்து கண்டிப்பாக போக சொன்னது.

கொஞ்ச நேரம் ரயில் நிலையத்தின் வெயிட்டிங் அறையில் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி நெல்லையப்பர் கோவிலில் இறங்கினேன். எதிர்ப்பார்க்கவில்லை, அந்த கோவில் இத்தனை பெரியதென்று. அந்த சாயங்காலமும் மதியமும் சேர்ந்த நேரத்தில் கோவிலில் அதிகம் பேர் இல்லை. ஆசை தீர, சுற்றி பார்த்தேன். கோவிலை அமைதியாக, யாரும் இல்லாத போது சென்று பாருங்கள். அதன் ரம்மியம் தனி. எண்ணை வாசனை, மெல்லிய காற்று, எங்கோ தூரத்தில் ஒலிக்கும் மணி சத்தம், தூணுக்கு பின் தோழியிடம் சண்டை போட்டு கொண்டிருக்கும் தோழன், இரும்பு கம்பிகளுக்கு பின் அருள் பாலிக்கும் பல கடவுள்கள், கோவில் தோட்டத்து சல சல சத்தம். ஏகாந்தம்! இத்தனையும் இருட்டு கடை அல்வா வாங்க வேண்டும் என்ற ஆசையால் கிடைத்தது.

வெளியே வந்து செருப்பை வாங்கும் போது, பக்கத்தில் இருப்பவரிடம் 'இருட்டு கடை எங்கங்க இருக்கு'. 'அதோ' என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் பல கடைகள் கொண்ட இடம். சரி, எதாவது போர்ட் இருக்கும் என்று, கிட்டே போய் கேட்டால், பக்கத்தில் டீ கடை அளவுள்ள, சில பலகைகள் கொண்டு முடப்படும் அந்த காலத்திய அமைப்புள்ள ஒரு கடை. அதை பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், நேரில் பார்க்கும் போது பெரும் வியப்பே மிஞ்சியது. அப்போது அங்கு யாரும் இருக்கவில்லை, ஒருவரை தவிர. அவரை விசாரித்த போது, அல்வா வாங்கத்தான் அவரும் காத்திருப்பதாக சொன்னார். வாங்கி விட்டு, அவரும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும் என்றார். பரவாயில்லை, நான் எடுத்த முடிவு கொஞ்சம் சரியானது தான் என்று நினைத்து கொண்டேன். பேச்சு கொடுத்தபின் தான் தெரிந்தது, அவர் என்னை போல் அல்லாமல் அதிகம் பேசுவார் என்று. நிறைய பேசி கொண்டிருந்தார். சொன்னதில் நான் பற்றி கொண்டது ஒன்று தான். அவரின் வீட்டு பக்கம் தான் இருட்டு கடை அல்வா பாக்டரி இருக்கிறது. அவரின் தாத்தா, அப்பாவுக்கு இந்த இருட்டு கடை முதலாளியிடம் நல்ல பெயரும் உள்ளது. அப்புறம் என்ன, அங்கேயே வாங்கி கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு கிடைத்த பதில், 'இங்க தவிர வேற எங்கயும் யாருக்கும் இவுங்க குடுக்கவோ விக்கவோ மாட்டாங்க'.

மார்க்கெட்டிங் என்ற பெயரால் இன்றைய விளம்பர வித்வான்கள் பலர் உயிரை கொடுத்து தன் பொருள் விற்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்திலும், கடைக்கு ஒரு பெயர் கூட வைக்காமல், ஆரம்பித்த அதே நிலையில் ஒரு மாற்றமும் இல்லாமல், செய்யும் பொருளின் தரத்திலும் கூட ஒரு மாற்றமும் இல்லாமல் உலக தரத்திற்கு பேசபடும் இவர்களின் முன் பலர் கண்டிப்பாக பாடம் கற்று கொள்ள வேண்டும்.

ரயிலுக்கு நேரமாகி விடும், கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது என்று கறாரான பதில், கடையில் வேலை செய்பவரிடம். அது வரையில் கிட்ட தட்ட பத்து பேராவது காத்து கொண்டிருந்தார்கள். முதலாளி வந்தே விட்டார். எங்கு இருந்து தான் வந்ததோ தெரியவில்லை அத்தனை கூட்டம். குறைந்து நாற்பது பேராவது முற்றுகை இட்டார்கள். சற்றே பின் வாங்கினேன். எனக்கு கில்லி சினிமா டிக்கட் வாங்க போய், முச்சு முட்டியது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், அலுவலக சகாக்களுக்கு அல்வா கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்று சொன்னதால், துணிந்து, வியர்வை பொங்க, முச்சு இறைக்க, அடுத்தவர்கள் திட்ட முன்னே போய் வாங்கியே விட்டேன். பக்கத்தில் நான் முன்பு பேசி கொண்டிருந்த நண்பரும் அவருக்கான கொள்முதல் செய்து விட்டிருந்தார். கூட்டத்தை தள்ளி கொண்டு இரண்டு பேரும் ஒரு பெருமித புன்னகையை பரிமாறி கொண்டு கிளம்பினோம்.

இந்த அனுபவத்தில் அதிகம் திரில் இல்லை என்றாலும் இருட்டு கடை என்ற அந்த வியாபார தலம் என்னை ஈர்க்கவே செய்த்தது. அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏன் உலகின் எந்த முலையிலுமே விளம்பரபடுத்தி கொள்ளாவிட்டால் எப்பேர்பட்ட கொம்பாக இருந்தாலும், சறுக்கி விழ வேண்டிய அபாய பொருளாதார நிலைமை மற்றும் கால மாற்றம் இப்போது. இது எல்லாம் தெரிந்தும், உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மட்டுமே நிஜம், மற்றவை எல்லாம் கண் துடைப்பு என்ற வியாபார கொள்கை உடைய இவர்களை நெல்லையப்பரின் கடைக்கண் பார்வை காக்கவே செய்கிறது.

(கடையின் படம், ramz பதிவிலிருந்து)

Sunday, December 24, 2006

Happy Christmas

எல்லோரும் Happy Holidays சொல்லி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள்.

Jesus Christ. இவரின் பிறந்த நாள், கண்டிப்பாக சிறந்த தினமே. மனிதமும், அமைதியும், இரக்கமும் சொல்லி கொடுத்த இவரின் குரல் நம்மில் பலருள் இன்னும் எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் போதித்த அத்தனையும் பின்பற்ற முடியாத கால கட்டங்கள் இப்போது. ஆனாலும் கண்டிப்பாக அதை நினைக்கவாவது செய்வது அவரை சந்தோஷ படுத்தும்.

மனிதம் எல்லோருக்குள்ளும் பல நேரங்களில் மறைந்து போகும், தன் வாழ்க்கை, தன் பாதுகாப்பு என்று நினைக்கும் போது. என்னுள்ளும் பல சமயங்கள், மனிதமும் அன்பும் இறந்து போனதை, இவரை பார்க்கும் போதெல்லாம் நியாபகம் வந்து, தலை குனிந்து போன பல தருணங்கள் உண்டு.

மதம் போதிக்காமல், மனிதம் போதித்த இவரை பற்றி நம் தேச தந்தை,

A man who was completely innocent, offered himself as a sacrifice for the good of others, including his enemies, and became the ransom of the world. It was a perfect act.

Roman Holiday

மறுபடியும் ஒரு பழைய படத்தின் பார்வை.

என்ன தான் இது போன்ற படங்கள் பலரால் விமர்சிக்கபட்டு, சிலாகிக்கபட்டு இருந்தாலும் இதை பற்றி எழுதும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

Audrey Hepburn , இவர் மட்டுமே இந்த படத்தை தன் பார்வையால், தன் சிரிப்பால், தன் பேச்சால், தன் குரலால், தன் வசன உச்சரிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார். முதல் படமான இந்த படத்தில் அவருக்கு சிறந்த கதா நாயகிக்கான அகாடமி விருது கிடைத்ததில் தவறே இல்லை.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஒரு கவிதையாகவே உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் ஆச்சரியபடுவது நடக்கும்.

ஒரு இயக்குனரின் திறமை, திரைக்கதையிலும் அதை முறையாக வெளிபடுத்த கூடிய நடிகர்களும் அமைந்து விட்டால் போதும். கண்டிப்பாக அந்த படம் அரங்கு நிறைந்த வெற்றி தான், இந்த படம் போல.

ப்ரபலம்னாலே ப்ராப்ளம் தான். இந்த ஒரு வரி கூட போதும், இந்த படத்தின் கதையை சொல்வதற்கு. அதை பார்பவர்களுக்கு புரிய வைக்க, இயக்குனர் பிரம்ம ப்ரயத்தனம் எதுவும் செய்யவில்லை. முதல் காட்சியில், அதை வார்த்தைகள் இல்லாமல், அழகாய் சொல்லி இருப்பார். பார்த்து மட்டுமே புரிய கூடிய விஷயம் இது.

Audrey Helpburn, எத்தனை அழகு. வியந்து போனேன். தூக்க மாத்திரை போட்டு, அந்த கலக்கத்தில் அவர் பேசும் அத்தனை வார்த்தைகளும் (Thank you. No Thank you. You have my permission to withdraw இப்படி பல), கொள்ளை அழகு. இப்படி கூட சாதாரணமாக மனதை திருட முடியுமா என்று வியப்பு தான். சில நாயகிகள் அவர்களின் முதல் படத்தில் ரசிகனின் இதயத்தில் சுலபமாக சம்மனம் போட்டு உட்கார்ந்து விடுவார்கள். இவரும் அப்படித்தான். அரச வம்சத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும், எந்த உணர்ச்சியையும் சராசரி மனிதர்கள் போல வெளிபடுத்தும் முறை இல்லை. அதை, பல காட்சிகளில் கஷ்டமே இல்லாமல் செய்திருக்கிறார். அவர்களுக்குள் இருக்கும் வெளிபடுத்தாத எண்ணங்களும் சரி, அடடா இவங்களுக்குள்ளும் இத்தனை இருக்கிறதா என்று நிஜமாக நினைக்க தோன்றுகிறது.

1953ல் எடுக்கபட்ட, இந்த படத்தின் பல காட்சிகள் (ஏன் கதை கூட) பலரால் உபயோகபடுத்தபட்டுள்ளது என்பது புரிந்தது. நம் ஷங்கர் கூட விதி விலக்கில்லை. Mouth of truth, இந்த காட்சியின் அச்சு அசலான காட்சி காதலனில் பார்க்கலாம். கண்களாலேயெ பேசும் உத்தி நம் அத்தனை பா இயக்குனர்களும் இன்றைக்கும் பயன் படுத்துகிறார்கள்.

இந்த படத்தில் நடித்த Audrey Hepburn, Gregory Peck, Eddie Albert மற்றும் இயக்குனர் William Wyler யாரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்கள் இறக்கும் தருவாயில் கண்டிப்பாக இந்த படம் அவர்கள் கண் முன் இருந்திருக்கும்.

நிறைவேறிய காதலை விட, நிறைவேறாத காதல் கதைகள் மனதின் அடியை தொட்டு விட்டு செல்வது சாத்தியமே, இந்த இளவரசி மற்றும் பத்திரியாளனின் காதலை போன்று.

உலக சினிமாவில் இன்னும் நான் பார்க்காத, இது போன்ற அத்தனை படங்களையும் ஒரு மாதம் லீவ் போட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்து பார்க்க ஆசை.

பார்க்கவில்லை என்றால், கண்டிப்பாக பாருங்கள். உங்களை நீங்கள் மறப்பது நிச்சயம்.

Roman(ce) Holiday

( Mouth of Truth scene, Confernce scene, Parting scene

நன்றி - Youtube )

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...