Saturday, June 30, 2007

டயட்

சப்வே (மவுண்ட் ரோட் சப்வே இல்லை. பல நாடுகளில் கிளை விரித்து பரந்திருக்கும் ஒரு பிரட் - சான்ட்விச் விக்கிற கடை) - இந்த பெயரை கேட்டாலே (அதிராதுங்க!!), 12" பிரட் காய்கறிகளுடன் பிதுங்கி கண் முன் வந்து நிற்கும். இங்கு வந்த முதல் நாளே எனக்கு அறிமுகமான இந்த ஊர் உணவு இது. வருவதற்கு முன் வெஜிடேரியன் மட்டும் தான் சாப்பிடுவேன் என சத்தியபிரமாணம் எதுவும் எடுத்துகொள்ளவில்லை. ஆனால், இப்படியே புல் பூண்டு சாப்பிட்டு வாழ்க்கையை நகர்த்திவிட ஆசை இருந்தது. அந்த ஆசையை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம் என சப்வே பிரட் வகைகள் சத்தியம் செய்தன. அப்போது, பர்கர் கிங்கும், மக்டோனால்ட்ஸும், டேகோவும், கஸ்டமைஸ்ட் சாலட் முறைகளும் அறிமுகமாகவில்லை. அறிமுகமான பின்னரும், அடிக்கடி எங்களை சாப்பிட்டால் உன் வயறு கடமுடா வித்தைகள் செய்யும் என தெரிந்தது.

வீட்டில் சாம்பாரும், ரசமும் கைவிடும் போது சப்வே இருக்க பயமின்றி இருந்திருக்கிறேன். இப்படியாக சப்வேவும் சாம்பாருமாக வாழ்க்கை தறிகெட்டு ஓடிகொண்டிருக்க, தீடீரென என் அறை நண்பருக்கு எவரோ ஒரு புண்ணியவான் டயட் வார்த்தையை உருட்டிவிட, பிடித்து கொண்டவர், என்னையும் அதை செய்யசொல்லி டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டார். அரிசி சாப்பிடறத குறைக்கணும் (யோவ், நான் பொண்டாட்டியை கூட பார்க்காம இருந்துடுவேன், அரிசி பாக்காம!?!? இது ஓவரா இல்ல), சாப்பாடு அப்படின்றது 3 இல்ல 4 நிமிஷத்துல சாப்பிட்டு முடிக்கிற அளவுக்கு அளவா இருக்கணும் (நீ சொல்றது அப்போ சாப்பிடறது இல்ல, பாக்கிறது. எங்க ஊரு கல்யாண பந்தியை வந்து பாரு. பாக்கவே 10 நிமிஷம் ஆகும்.), பட்டர் யுஸ் பண்ண கூடாது (இத அபிராம பட்டர் வந்து சொல்லட்டும், கேக்கறேன்), ஜீரோ பர்சன்ட் கொழுப்பு இருக்கிற பால் தான் குடிக்கணும் (இந்த நாலரை பால் கூட தப்புன்னு சொல்றியா?), எந்த சாப்பிடற ஐட்டம் வாங்கினாலும் கொலஸ்ட்ரால், கொக்கு, மக்கு எல்லாம் பாக்கணும் (ஒரு தடவை பித்தம் தலைக்கேறி குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் கூட பார்த்தார் அறை நண்பர்), உருளைகிழங்குக்கு தடா போடனும் (அத உருளையை விதைக்கிறவங்க கிட்ட போய் சொல்லுடி), முறுக்கு செஞ்சா கூட எண்ணை இல்லாம செய்ய பழகிக்கணும் (ஓ, அப்போ மாவை அப்படியே சாப்பிட சொல்ற...), சாக்லேட் பாத்தா தலை தெறிக்க ஓடணும் (அதுல என்ன ஹெராயின் பவுடரா கலந்திருக்கு?) என ஆத்திசூடி பாட ஆரம்பித்தார். ஓதிய மந்திரம் உடம்புக்குள் எந்த பாகத்திலும் உள்ளே போக மறுத்தது. ஆனால், சுற்றியிருக்கும் மனிதர்கள் எப்படியோ அப்படி நீங்கள் மாற அதிக காலம் பிடிக்காது. என்னையும் வீழ்த்தியது, டயட் மோகம். முதல் சட்ட நடவடிக்கை, 12" பிரட்டை 6" பிரட்டாக மாற்றும் தீர்மானம் கையெழுத்தானது.

கையெழுத்தான முதல் நாள் - நான் போய் நின்றாலே, 12" இட்டாலியன் பிரட்டின் வயிற்றை கிழிக்கும் தங்க மனசுக்காரரை, மனசில்லாமல், 'அப்படியே நிறுத்துங்க. இன்னைக்கு 6"'. 'பார்டன் மீ, ஆர் யூ ஆல்ரைட்? ஈஸ் இட் foot long(12")?' 'இல்லப்பா மார்க்கு, 6" தான்.' 1 வருஷத்தில் அவர் முகத்தில் அப்படி ஒரு உணர்ச்சியை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு வருத்தம். வேண்டா வெறுப்பாக வெட்டி, அந்த பக்கம் தள்ளினார். வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது சப்வே போவதின் விளைவு இது.

கடைசியில் வசூலிக்கும் அம்மணி, என் கையில் அடக்கமான இந்த மேட்டரை பார்த்தவுடன், என்னப்பா ஆச்சு? உடம்பு எதாச்சும் சரியில்லையா என்ற ரீதியில் துக்கம் விசாரிக்க, எனக்கோ, அப்படி என்னப்பா தப்பு பண்ணிட்டேன் நான். தமிழர்களோட பாரம்பரிய கடமையான சிவாஜி பாக்குறத கூட தவறாம பண்ணிட்டேனேப்பா. அப்புறமும், இப்படி மாத்தி மாத்தி மொத்தறீங்க.
அன்றைக்கு விட்டது தான், திரும்ப யாராவது டயட் சொன்னால், போங்க போயி விவசாயம் பாருங்க என லாஜிக் இல்லாமல் சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

கணிப்பொறியில் கணக்கு பண்ணிகொண்டிருக்கும் என்னை போல் சில-பல பேர், டயட் தான் மூச்சு, பேச்சு, வாட்சு என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே (எங்கியோ யாரோ ஒருவர், 'மாப்ள, வகதொகயில்லாம சீன் போடறான் பாரு' என சொல்லுவது அட்சர சுத்தமாக கேட்கிறது) கான்செப்ட் எல்லாம் சரிதான். ஆனால், ருசி மறந்து பசி மறந்து, 25 வயதிலேயே 50 வயதுக்கான வாழ்க்கை வாழ எனக்கு உடன்பாடில்லை. சீட்டை சூடு படுத்தும் நிரந்தர வேலையை சுத்தமாக விட்டு விட்டு, 1 மணிக்கொரு தடவை சும்மாகாட்டியும் காலாற நடந்து, தூரத்து சீட் மின்னலை (நீங்களே மின்னலாய் இருந்தால், மேடியை என மாற்றிகொள்ளவும்) சுற்றி விட்டு வாருங்கள். கண் கால் உடல் எல்லாம், கரடு முரடான வாழ்க்கை தடத்தில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் போல குஜால்ஸாக ஓடும்.

Tuesday, June 26, 2007

ஆவியுடன் ஒரு இரவு

கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.

ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா. போட்டோ பாத்து கவிதை எழுத தெரியுது இல்ல, அங்க இல்லயா கற்பனை. எல்லாம் வரும், எழுதலாம். ஏன் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்ட நீ? அப்படித்தான் பண்ணுவேன், எழுத முடியுமா முடியாதா? உனக்கு ஒன்னு சொல்றேன் கேளு, பதிவுலகம் அப்படின்றது அறிவிக்கபடாத ஒரு இலக்கிய உலகம். ஒரு வகையில எழுத்தாளர்களோட அடுத்த ரகுவம்சம் தான் இது. இதுனால என்ன சொல்ல வர? என்ன சொல்ல வரேன்னா, எழுத்து அப்படின்றது தானா உள்ளுக்குள்ள அப்படியே உருகி வரனும். நீ சொல்ற இந்த டாபிக் எழுத ஒரு feel கிடைக்காது கண்ணா. அதுவும் இல்லாம, நீ சொன்ன இந்த தலைப்பு வேற மலையாள வாடை அடிக்குது. ஒரு எழுத்தாளனோட உள்ளகிடைக்கையை புரிஞ்சிக்கோ ராசாத்தி. போடா லூசு, blog எழுதறதே ஒரு வெட்டி வேலை. போனா போகட்டும்னு, அத கொஞ்சம் மதிச்சு, சும்மா ரவுசு பண்ணினா இவ்ளோ டயாலாக் பேசுற. போதும் இதோட நிறுத்திக்கோ.

நிகழ் உலகம் - ஏலே மொக்க, இவன் தொல்லை தாங்க முடியலடா. நைட் ஆனா, அவனவன் கனவுல ஆஞ்ஜலீனா கூட காபி பப் போய்கிட்டு இருப்பான். அப்போ வந்து ராசாத்தி, blog அது இதுன்னு நடுராத்திரியில டிஸ்டர்ப் பண்றானுங்க. விடுறா. அவன் நிலமை தெரிஞ்சும் நாம அப்படி பேசறது எப்படி நியாயமாகும். இருக்கட்டுமே, ஒரு நாள் சரி, ரெண்டு நாள் சரி. அஞ்சாறு மாசமா இதே தொல்லையா போச்சேடா. இவனோட ஆளு செத்ததுக்கு, இவன் எங்கயாச்சும் விழுந்திருக்கலாம்.

கொஞ்சம் குரல் உயர்த்தி பேசியதில் விழித்தே விட்டிருந்தான். ஆனால், அசைவு காட்டாமல். கோவத்தில் சொன்னாலும், அதன் உண்மை இவன் கண்களை கொஞ்சம் கசக்கிவிட்டிருந்தது. அப்படி ஆகியிருக்கலாமோ?

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...