வெகு நாட்களாகவே ஜேபி எக்ஸ்பிரஸ் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு வந்தபின் BARTல் போகும் போது, அடிக்கடி ஜேபி நியாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, வேறு வேறு நாட்டில் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.
ஆனாலும், ஜேபி ஏற்படுத்திய பாதிப்பை கொடுக்கவில்லை BART.
அப்பொழுதெல்லாம், அதிகம் ரயிலில் போய் பழக்கம் இல்லை. ஆனால், 3 மாதத்திற்கு தினமும் காட்பாடியில் இருந்து சென்னை சென்று வர வேண்டும், அதுவும் ரயிலில் என்ற போது, மனதிற்குள் மகிழ்ச்சியே. அதிகம் கேள்விபட்டதில்லை, இந்த ஜேபி பற்றி. காலை, 6:20க்கு காட்பாடி ஸ்டேஷனிற்கு வரும், ஜோலார்பேட்டையில் இருந்து. ஒரு வாரம், எழுந்து போய்விட்டு வந்ததிற்கே, தாவு தீர்ந்து விட்டது. காலை, 5 மணிக்கு ஸ்டேஷனை பார்க்க வேண்டுமே, எங்க இருந்துடா வந்தாங்க என்ற மலைப்பே மிஞ்சும். இதை போன்று பல வருடங்களாக போய் வருகிறோம் என்று அவர்கள் கூற, சற்று வாழ்க்கையை பற்றிய கவலை வந்தது, நானெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு.
எல்லோரிடமும், இரண்டு உணவு மூட்டை இருக்கும். ஒன்று, அரக்கோணம் தாண்டியவுடன் சாப்பிட வேண்டிய காலை உணவு. இரண்டு, வழக்கம் போல, மதியம். அரக்கோணம் நெருங்கும் போதும், தாண்டிய பின்னரும், எல்லா கோச்களிலும், கண்டிப்பாக இட்லி, தோசை, பொங்கல், பழைய சாதம் சாம்பார், உப்புமா வாசனை வீசும். அதிலும் சிலர், காலை உணவு மட்டும் எடுத்து கொண்டு வருவதில்லை. நடுவில் பொட்டலம் கட்டி, இட்லி தோசை விற்கும் ஒருவரின் சமையல் ருசி கண்டவர்கள் இவர்கள். சில சமயம், அதை சாப்பிட்டு பார்த்ததும் உண்டு. சொல்வதற்கு குறை ஒன்றும் இல்லாத பொட்டலங்கள் அவை.
கீழே இந்த பக்கம் 5 பேர், அந்த பக்கம் 5 பேர். மேலே இந்த பக்கம் 3 பேர், அந்த பக்கம் 3 பேர். வார நாட்களில் போனீர்களானால் உங்களுக்கே தெரியும். தாங்கள் வாங்கிய வீட்டை யாராவது அபகறித்தால் கூட இப்படியெல்லாம் கோபம் வருமா என்று சொல்வதிற்கில்லை. அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தை தெரியாமல் புதிதாக வரும் யாரவது பிடித்தால், கண்டிப்பாக அந்த கோச்சில் குருஷேத்திரம் தான். தூக்கம் தொலைந்த அத்தனை கோபத்தையும், புதியவரின் மேல் காட்டாமல் விட மாட்டார்கள். இவர்கள் அத்தனை பேரும் நிச்சியமாக கல்லூரி மாணவர்கள் கிடையாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று, தொந்தி விழுந்து, வழுக்கையில் வாடும் நடுத்தர அரசாங்க ஊழியர்களே. இவர்களின் இந்த இரண்டரை மணி நேர பயணங்கள் இல்லாவிட்டால், பேனா இல்லாத கவிஞர்கள் போலாகி விடுவார்கள்.
சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் முதலில் இருக்கும் மகளிர் கோச் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். பலர், கண்ணாடி பவுடர் சகிதம் மேக்கப் போட்டு கொண்டிருப்பதை எல்லாரும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். பாவம், இவர்களின் பிழைப்பு. பெரும்பாலும், ஒரு வழிசல் மேனேஜரிடம் மாட்டி கொண்டுள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சொல்ல நிறைய இருக்கிறது. பலரின் தூக்கத்தையும், கவலையையும், சீட்டு கச்சேரிகளையும், சிரிப்புகளையும், கிண்டலையும் சுமந்து இன்றும் ஒடிக்கொண்டு தான் உள்ளது என்று நினைக்கிறேன், இந்த ஜேபி. ரயில்வே அதிகாரிகள், இந்த ரயிலை நிறுத்தினால் பலருக்கு இருதய ஓட்டம் சிறிது நின்று ஓடும்.