Wednesday, September 28, 2022

சாமி

ஒவ்வொரு கடவுளிடமும் 
ஒவ்வொரு வார்த்தையை 
காணிக்கை ஆக்குவது என் வழக்கம் 
நிறைய கோவில்கள் 
நிறைய சாமிகள் 
எல்லா வார்த்தைகளும் 
இப்போது சாமிகளின் வயிற்றில் 
கடைசி ஒரு வார்த்தை தான் இருந்தது 
எந்த சாமியும் மிச்சமில்லை 
எனக்கே காணிக்கை ஆக்கினேன் 
அனைத்து சாமிகளும் 
அத்தனை வார்த்தைகளையும் 
என் காலடியில் கொட்டினர் 
நான் சாமியானேன்

கூன்

கனமாய் இருந்தது 
நான் பேசிய ஒரு வார்த்தை 
இருவத்தியெட்டாம் வயதில் 
பேசினேன் 
இப்போது எண்பத்து ஒன்பது வயது 
ஆகிறது 
அந்த வார்த்தை பேசி இருக்க வேண்டாம் 
அது முதுகில் உட்கார்ந்து உட்கார்ந்து 
கூன் விழுந்ததுதான் மிச்சம் 

வார்த்தை இல்லை

நான் பிறந்தேன் 
அதிகம் பேசுவேன் 
என்றாள் பெற்றவள் 
பிறந்தபோது 
எவ்வளவு பேசினேன் என்றேன் 
அப்போது அழுதாய் 
வார்த்தை இல்லையென்ற 
அழுகை இல்லை 
இனி எவ்வளவு பேசி 
வாழ்வை வாழ வேண்டும் 
என்று அழுததாக 
அந்த அமைதித்தாய் 
சொன்னாள் 

நாக்கு

எப்படியும் பேசுவாள் 
என்று நானிருந்தேன் 
நான் பேசுவேன் 
என்று அவளிருந்தாள்
நடுவில் இருந்த அமைதி 
உயர் ரத்த அழுத்தத்தில் 
எங்களின் நாக்குகள்
வழியே இதயத்தில் 
இறங்கிக்கொண்டிருந்தது

மூக்கு நுனி

அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் 
பேசும் ஆசை வந்தது 
மண் பிளந்தது 
நனைந்த சாம்பல் புகை கிளப்பியது 
தொண்டை செருமிக்கொண்டன 
அடங்கியவை இப்படி பேசின
இப்போதாவது குறையுங்கள்
நீங்கள் பேசும் பேச்செல்லாம் 
எங்களின் அமைதியை 
நோக்கி வருகின்றன 
நாங்கள் அமைதி இழந்தால் 
உங்களுக்கு வாரிசுகள் அமையாது 
அப்படியே அமைந்தாலும் அது 
பேரிரைச்சலோடு பிறக்கும் 
குறைவாக பேசுங்கள்
உங்கள் காலடி மண்ணில் இருக்கும் 
எங்களின் மூக்கு நுனி 
உங்களை எப்போதும் பாராட்டும்

அமைதி

குழந்தைக்கென ஒரு மொழி 
புலவனுக்கென ஒரு மொழி 
காதலுக்கென ஒரு மொழி 
அழுகைக்கென ஒரு மொழி 
பேசுபவனுக்கு ஒரே மொழி 
அமைதி

இன்னுமொரு புதிய நிலா

 ஒரு நாள் 
பூமியின் அத்தனை
மனிதரிடமிருந்தும் 
குரல்வளை பிடுங்கப்பட்டது 
ரோஜாக்கள் புதிதாய் பிறந்தன 
இன்னுமொரு புதிய நிலா தோன்றியது 
அலைகள் ஆலோலம் பாடின 
கிளிக்கூட்டம் வெட்டவெளியில் காதல் புரிந்தன
தாள்கள் எல்லாம் புதிய உலகை நோக்கின 
கவி என்று சொன்ன ஒவ்வொருவரும் 
கவிதைகள் எழுதுவதை மறந்தனர் 
இலக்கியம் செழித்து வளர்ந்தது

அவள்

பேசிக்கொண்டிருந்தால் போதும் 
இப்படியே இருந்துவிடுவேன் என்றாள் 
பேசாமல் இருந்தால்
கொன்றுவிடுவேன் என்றாள் 
உயிர்த்திருப்பதற்காக 
பேசிக்கொண்டிருக்கிறேன் 
அவள் இறந்த பின்னரும் 

ஈரம்

 பேசுதலின் நடுவே 
அவ்வப்போது அமைதி 
வந்து செல்லும் 
அமைதிக்கு பின் 
சொல்லும் செல்லும் 
கேட்டுக்கொண்டிருந்த காதுகள் 
அமைதியை நோக்கிச் செல்லும்
இதயங்கள் மட்டும் அங்கேயே 
அணைத்துக்கொண்டு 
மெழுகுவர்த்தியுடன் காத்துக்கொண்டிருக்கும் 
காத்துக்கொண்டிருப்பது 
அமைதிக்கல்ல 
சொல்லுக்கும் அல்ல 
வறண்ட காற்றுக்குள் 
கொஞ்சம் ஈரம் புக

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...