குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப்பாடுகளாகவும், எதார்த்தத்தின் மீது வீழும் சிறு அழுத்தமாகவும் தான் .இருக்க முடியும். இப்படி ஒரு பத்தியில் எழுதுவேன் என நினைத்து பார்த்ததில்லை.
2012'ல் மிச்சிகன் மாகாணத்தில் நான் கால் வைத்தபோது வெப்பநிலை கிட்டத்தட்ட நூறை (farenheit) தொட்டிருந்தது. என் உடல் வெயிலில் பிறந்தது. தகனத்தில் இருக்கும்படி விதிக்கப்பட்ட ஒரு இடம் தான் வேலூர். அங்கும் அதன் சுற்றத்திலும் இருக்கும் சிறுநகரங்களில் தான் என் சிறு வாழ்க்கை இருந்துகொண்டிருந்தது. அதன் அக்கம்பக்கமான சென்னையிலும் வெயில் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருந்த உடலுக்கு மிச்சிகனின் முதல் மூன்று மாதங்கள் மிகச்சரியான ஒரு இடமாகவே பட்டது. ஆனாலும், உண்மை வேறுபட்டது. தெரிந்தது தான். குளிரை முதல் முறை சந்தித்தபோது ஆணவத்தில் எதிர்கொண்டேன். அதன் பின் அதன் ஆணவத்தில் தான் வாழ்க்கை ஓடியது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சூரியனை அணைத்துக்கொள்ளும் ஒரு வாழ்க்கை தான் தேவைப்பட்டது. பன்னிரண்டு மாதங்களில் மூன்றே மாதங்கள் வெயில் படலம். மற்ற மாதங்களில் குளிர்.
அப்படி ஒரு நிலப்பரப்பில், உள்ளிருப்பு வாழ்வு விதந்தோதி வாழப்படும். நான்கு சுவர்களும் அதற்குள் மனதிற்கினிய மக்களும் தான் இங்கே துடிப்புடன் வைத்திருக்கும். அதற்கேற்ப அன்றாடங்கள், வார இறுதிகள், திரைப்படங்கள், அரசியல் பேச்சுகள், அண்டை வீட்டினரின் புதிய வாகனங்கள், பிள்ளைகளின் கல்வி, என பேச்சுக்கச்சேரிகள் நிரம்பிய ஓரிடம். அங்கு சிறிய ஒரு ஓட்டை போட்டுக்கூட இலக்கியம் உள்ளே நுழையாது. ஓட்டை போட யாருக்கும் நேரமில்லை. ஆனால், வாசிப்பு ஒரு தனி மனித இயக்கம். தனித்தே இருப்பது, ஆனால் தனியர்கள் கூட்டுப்புழுக்கள் ஆக நேரம் எடுப்பதில்லை. தன்னைப்போல் இன்னொருவரும் அந்த புழு தான் என்பதை அறிவதில் தான் தயக்கம். தெரிந்த பின் கூட்டு சேர்வதில் குழப்பம் இல்லை.
அப்படி ஒரு குழுவில் இணைந்தபின் தான் குளிர் எங்கோ தள்ளிப்போனது. எனக்குள் இருந்த வாசிப்பு, இன்னொருவரின் வாசிப்பின் அருகாமையை ரசித்துக்கொண்டது. குழுவாக இணைந்து தேர் கட்டமைக்கப்பட்டது. தேர் ஒவ்வொரு சரியான நேரத்திலும் வலம் வருகிறது. சிறிய தேர் தான். இழுத்து வர பிஞ்சுக்கைகள் இருந்தாலும் சரி, பூத்துப்போன கைகளாக இருந்தாலும் சரி, அனைவரையும் தேர் தன்னோடு சேர்த்துக்கொண்டது. தமிழ் ஆர்வலர்கள் குழு என்ற தேரில், சிறிது வருடங்கள் குளிர் வடங்கள் இழுத்திருந்தேன் என்பது இப்போதும் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பெருமை வார்த்தைகள்.
பல்கிப்பெருகி எழுந்த கலை, இலக்கிய செயல்பாடு எனக்கே புதிதானது. ஆனால் அந்த வேட்கையை அது கேட்கும். தெரியாதவரை தான் அது இருட்டு அறை. தெரிந்தபின் கைகொள்ளா சூரியன். கனன்று எரிந்தது. இங்கு நான் செய்திருந்த சில காரியங்கள் எப்போதும் மனதிற்கு இனிய நறுமணத்தை என்னுள் பரப்பிக்கொண்டே இருக்கும்.
- கதைகள் சொல்வேன் என்பதை அறிந்தேன்
- வாசிப்பில் கல்கியையும், சுஜாதாவையும் தாண்டிய இலக்கிய மரபு உண்டு, அதைத் தொடரலாம் என்ற போக்கை ஒவ்வொரு முறையும் அறைகூவுவேன் என அறிந்தேன்
- என் வாசிப்பில் திரண்டெழுந்த மென்பிள்ளையென முளைத்த கதைகள் அச்சுக்கு செல்லும் என்பதை உணர்ந்தேன்
- இலக்கிய மரபில் மாண்புடன் படைப்புகளை எடுத்து முன் செல்லும் எழுத்தாளர்களிடம் நேரில் பேசினேன்
- என்னை வழிநடத்தவே நான்கு பேர் தேவை என்றிருக்கும் போது, கை விட்டு எண்ணும் அளவிற்கு நிகழ்வுகளை வழிநடத்தி இருந்திருக்கிறேன்
- ஒரு மேடை நாடகத்தை திரைக்கதைக்காகவும், வசனத்திற்காகவும், சிறிய இணை இயக்கத்திற்காகவும் பயன்பட்டிருக்கிறேன்.
- ஒரு சிறிய ஒளிப்படத்திற்கு எழுதி இருக்கிறேன்
- என்னிடம் இலக்கியம் பேசலாம் என்று எப்பெரும் கூட்டத்திலும் தேடி வரும் நண்பர்களை பெற்றிருக்கிறேன்
- மூன்று மின் புத்தகங்கள் என் பெயர் தாங்கி வந்ததில் இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்
- எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியத்திலும் அதன் மகத்துவத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்
இலக்கியமும் என் பெரும் தந்தை சூரியனும் என்னை இன்னும் வழி நடத்தும் என்ற நம்பிக்கையுடன், இன்னும் வாசிப்பேன், இன்னும் எழுதுவேன்!!