Saturday, August 22, 2020

இழந்தான்

 அலுவலக மாலைகள் எப்பொழுதும் திராபையானது. ஒன்று, மொத்த உடம்பையும் பலி கேட்டு, அதை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கும். இல்லையென்றால், இன்னும் சில வாடிக்கையாள எதிரிகளிடம் பாருக்கு சென்று மறுபடியும் உரையாட வேண்டி இருக்கும். இன்னும் இல்லை என்றால், பல வீட்டு வேலைகள் காத்துக்கொண்டிருக்கும். எப்படி பார்த்தாலும், இது ஒன்றும் சிலாக்கியம் இல்லை. படுத்து உறங்கும் முன் மாலை சூரியனை அனுபவிக்க முடியாத வாழ்க்கை தான். ஆனாலும் எப்போதும் போல இந்த வாரம் இல்லை. 

லாஸ் ஏஞ்செலிஸ் என்னை ஒரு வாரம் வர வைத்திருந்தது. பெரிய வியாபார நோக்கோடு எங்கள் அலுவலகம் நகர்ந்து கொண்டிருந்தது. இருக்கும் நூறு பேரும் அந்த ஒரு பெரு வணிக வாடிக்கையாளரை எங்கள் கைப்பிடிக்குள் அமுக்கி, பத்து வருட காண்ட்ராக்ட் எழுதி விடவேண்டும் என்ற வெறியோடு இருந்தனர். அதற்கான முக்கிய சாரதியாக நான் இருக்க வேண்டி நேர்ந்தது. அதுவே வாழ்வின் மிகக்கொடிய நேரங்களில் ஒன்று. வாடிக்கையாளரிடம் வழிந்து விட்டு, நிலவையே அந்த நிறுவனத்தின் வாடிவாசலில் கட்டிவைத்து தேவைப்படும் போதெல்லாம் கவிதை எழுதலாம் என்ற அளவுக்கு கதை விடுவார்கள். அந்த கதையை என்னை வைத்து நிகழ்த்தும் படியும், இப்போதைக்கு அதை எப்படி செய்யலாம் என்ற செய்முறை மட்டும் போதும். அதை வைத்து அவர்களை நம் பத்து வருட சிறைக்குள் கொண்டு வந்துவிடலாம். அதற்கு பின் நிலாவெல்லாம் மறந்து, அவர்களே ஒரு பத்து வாட்ஸ் பல்புக்கு வந்துவிடுவார்கள். இப்படி எல்லாம் கட்டுக்கதை கட்டி, மில்லியன்களில் வியாபாரம் நடக்கும்.

அந்த நிலா வியாபாரம் ஒரு வழியாக நிறைவுக்கு வரும்படி என் வேலைகளை செய்துவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வீதியில் காப்பி கடையில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாச மூச்சை விட்டு, இருக்கும் மீதி மூன்று நாட்களில் என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. நான்காவது நாள் மறுபடியும் அந்த நிலா காண்ட்ராக்ட் பற்றி கடைசி கட்டிட பேச்சு வார்த்தை இருக்கும். அது வரைக்கும் என்னை வீடு திரும்ப அனுமதிக்க மாட்டார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், அந்த மூன்று நாள் என்னை இங்கு வா, அங்கு வா, விவாதிக்கலாம் என கத்தி வைக்க மாட்டார்கள். ஏனென்றால், பிழிந்தாகி விட்டது. இங்கு இன்னும் வருவதற்கு ரத்தம் இல்லை. ஊறவைத்து ஊறவைத்து தான் ரத்தம் பிழியப்படும். நல்ல கட்டுப்பாடு உண்டு அதில்.

பத்து வருடங்கள் முன்பு சென்றிருந்த லாஸ் வேகாஸ் நியாபகம் வந்தது. சென்று விடலாம் என்ற நொடியில், காப்பி கடையில் இருந்து, நேராக வண்டியை லாஸ் வேகாஸ் விட்டேன். வழியெல்லாம் இளையராஜா. இளையராஜாவை இன்னொருவருடன் கோர்த்து கோர்த்து ரசிப்பதில் எனக்கு அலாதி இன்பம். முதலில் ராஜாவுடன், மலேசியா. அடுத்து எஸ்பிபி. பின், எஸ் ஜானகி. சித்ரா. ஜெயச்சந்திரன். 

ஐந்து மணி நேரத்தில் இளையராஜா சமத்தாக என்னை கொண்டு சேர்த்தார். என்ன ஒன்று, மலேசியார் பாடும் போதெல்லாம், இந்த அலெக்ஸ் படுபாவி வந்துவிட்டு போனான். மோனாலிசா ஓவியத்திற்கு போட்டு வைத்தது போல். ஒரு முறை பொட்டு வைத்து பார்த்தால், அதற்கு முன் இருக்கும் பிம்பம் அழிந்தே போகும். எதிர்மறைகளுக்கே இருக்கும் பிரத்யேக குணம்.

வழியிலேயே, மூன்று நாளைக்கான ஜாகையை தேர்ந்தெடுத்து விட்டேன். காஸ்மோபாலிட்டனில் உச்சபட்ச அறை. அங்கிருந்து கீழே பார்த்தால், வேகாஸின் முக்கால்வாசி வேடிக்கைகள் வெளிவரும். ஆனாலும் எறும்புகள் போல. எறும்புகளின் வேடிக்கைகள் எல்லாம் வெளிவந்தால் எப்படி இருக்கும். வெறும் எறும்புகளென எண்ணி விட்டுவிட்டு தான் போக வேண்டும். இரவு குளித்துமுடித்து விட்டு, உடனே வெளியே கிளம்பியாகி விட்டது. இரவிற்கென்றே பெற்று எடுக்கப்பட்ட குழந்தை, லாஸ் வேகாஸ். அங்கு மட்டும் தான் இரவில் விடியல். விடிந்த பின் துயில். கீழே சென்று ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு, ஒரு சீட்டுக்கட்டு பகுதியில் உட்கார்ந்தேன். புகை மூட்டம் கொஞ்சம் என்னை கடவுளாக்கியது. புகை உருவாக்கிகள் எல்லாம் நுரையீரல் அல்லவா. சுகந்தமாக நினைத்துக்கொள்ள வேண்டியது தான். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அப்போது தான் பார்த்தேன். வேகாஸில் இதெல்லாம் புதிதா. அங்கே கண்களெல்லாம் அளவுக்கு அதிகமாக வேலை பார்க்கும். பல கண்களுக்கு வேவு பார்த்து, வேட்டையாடுவது தான் பழக்கம். சிலருக்கு அது தான் வாழ்வே. அவளுக்கு வாழ்க்கையா இல்லை பழக்கமா?

எழுந்து அடுத்த கேசினோவுக்கு நகர்ந்தேன். கடவுள் இடத்தில் இருந்து சிறிது நேரம் மனிதனானேன். சுதந்திர காற்றை சுவாசித்தேன். பின் மீண்டும் கடவுளானேன். இந்த முறை அடர்த்தியான மேகங்கள். இந்த முறை ஒரு நூறு டாலர்கள் வைத்து ரஷ்யன் ரௌலட் ஆடினேன். நான் அலுவலகத்தில் வரைந்து கொடுக்கும் வருமான வரைபடம் போல, மேலே ஏறியது, பின் இறங்கியது, பின் ஏறியது, பின் மொத்தமாக போண்டி ஆக்கியது. போனால் போகிறது. இங்கே வந்தாலே விட்டுவிட்டுதான் போக வேண்டும். வாழ்க்கையைப் போல, மரணத்தைப் போல. அவள் ஏன் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்? எனக்கும் அவளுக்கும் ஏதேனும் முன்பு தொடர்பு இருந்திருக்குமா? வாய்ப்பில்லையே. தட்டையான வாழ்க்கை வாழ்ந்த எனக்கு இப்படி ஒரு வண்ணப்பக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இரவு மூன்று மணி ஆகி இருந்தது. வேகாஸின் மனநிலை உச்சத்தில் இருந்தது. அதை சுற்றி அனைத்து நகரங்களும், மாநிலங்களும் கனவு கொண்டிருந்தன. வேகாஸ் அந்த கனவிலேயே தான் சுருண்டு கிடந்தது. மெல்ல கண்கள் இருள, மெத்தையில் போய் மயங்க தத்தி தத்தி சென்றேன். அவள் ஏன் என்னை இன்னும் பின் தொடர்கிறாள்? வாயை திறந்து கேட்டு விடலாமா? இவள் அவளாக இருப்பாளா? எவ்வளவு கேட்பாள்? திருடுபவளா? என் வண்ணத்தை பார்த்து இருப்பதை எல்லாம் அபகரிக்கலாம் என நினைக்கிறாளா? இருப்பதெல்லாம் டிஜிட்டல் காசு. எப்பொழுதும் விசா, மாஸ்டர் கார்டு கம்பெனியில் மட்டும் தான் என் பணம் இருக்கும். அவன் இவள் எங்கிருந்து லவட்ட முடியும். மூன்று மணிக்கு இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும். போய் தூங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. வேகமாக நடந்தேன்.

லிஃப்டில் ஏறி, அறையின் கதவை கார்டு கொண்டு திறக்கும் வேளையில் அவளே என்னை அழைத்தாள். இத்தனை நேரம் நான் நினைத்தது சரிதான். அவளுக்கு நான் தான் வேண்டும். அவளே பேசினாள்.

உங்கள் நண்பர்கள் உங்களுக்கு என்னை இரண்டு நாட்களுக்கு புக் செய்திருக்கிறார்கள். நான் உள்ளே வரலாமா?

என்னது, புக் செய்திருக்கிறார்களா? நானே யோசித்து தானே இங்கு வந்தேன். யாருக்குமே தெரிய வாய்ப்பில்லையே. இது என்ன புது குழப்பம்.

இல்லை, நீங்கள் ஆள் மாற்றி சொல்கிறீர்கள். அது நானாக இருக்காது. என் நண்பர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்.

இல்லை, உங்கள் நண்பர்கள் தான். கொஞ்சம் பேசலாம். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சரி வா உள்ளே, என உள்ளே அழைத்தேன்.

அவளுக்கு என் அறை பிடிக்கவில்லை போலும். அசாதாரண பார்வை ஒன்றை பார்த்தாள். எத்தனை அறைகளை பார்த்தவளோ என்று நினைத்தேன். எனக்கே ஒரு கொட்டு வைத்துக்கொண்டேன். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடை போடும் இடத்திற்கு நான் எப்படி வந்தேன். எல்லாம் இந்த இடத்திற்கு இருக்கிற மாயாஜாலம்.

அவளுக்கு என்னிடத்தில் பேச வேண்டும் என்று இருக்கும் போல.

சரி சொல், உன்னை இங்கு அனுப்பியது யார்?

உன் வாசகர்கள்.

என் வாசகர்களா? என்ன உளறுகிறாய்.

ஆமாம், உன் வாசகர்கள் தான்.

நான் என்ன எழுத்தாளனா, எனக்கு வாசகர்கள் இருக்க.

ஆமாம், நீ எழுத்தாளன் தான். இப்போது அல்ல. இன்னும் பத்து வருடங்கள் கழித்து.

அம்மாடி, வெள்ளை தேவதையே, என்னை மிகவும் குழப்புகிறாய். உனக்கு ஏதேனும் பணம் வேண்டுமென்றால் சொல், தருகிறேன். என்னை இப்படி நான்கு மணி காலையில் உலுக்கி எடுக்காதே. 

இல்லை, நீ என்னை பார்க்க வேண்டும் என்பது எனக்கு சொல்லி அனுப்பப்பட்ட ஒன்று. நீ என்னை சந்தித்து தான் ஆக வேண்டும். நான் வந்திருப்பது உன் எதிர்காலத்தில் இருந்து.

இதை நம்ப வேண்டுமா?

நம்பித்தான் பாரேன். நீ வருந்த மாட்டாய்.

சரி, எனக்கும் பொழுது போக வேண்டும். உன் நாடகத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போது என்ன செய்யவேண்டும்?

தூங்கலாம்.

சரி, தூங்கு. நாளை காலை என் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் பேசலாம். என் எதிர்காலத்தை நீ முன்பே, இல்லை, பின்பே பார்த்து விட்டாய்.

கொஞ்ச நேரம் தூக்கம் வந்தது. பின் கனவு வந்தது. கனவில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டேன். புலிகள் துரத்தின. ஒரு பெரிய மலையை ஓடியே கடக்கிறேன். என் நைஜீரிய நண்பன் தான் என்னை தரதரவென இழுத்துக்கொண்டு செல்கிறான். தீடீரென மலைக்கு நடுவே பாகுபலி போல ஒரு சிலை. அந்த சிலையின் தலையில் இருக்கிறோம். அந்த சிலையின் தலையில் இருந்து பாதம் ஒரு நாற்பதாயிரம் அடி  இருக்கும். அப்படியே வழுக்கிக்கொண்டு போனால், கீழே உள்ள அவன் வீட்டிற்கு போகலாம் என்கிறான். யோசிப்பதற்குள் அவன் கைகளை என் கைகளோடு அணைத்து அப்படியே சரசரவென சறுக்கினான். அசுர வேகத்தில் கீழே நகர்கிறேன். முகம் தாண்டி, கைகள் தாண்டி, தொடை தாண்டி, பாதம் வரை வந்துவிட்டேன். பிருஷ்டம் பாதி கிழிந்து போனது. மூச்சும், நெஞ்சும் ஒரு நொடிக்கு நாற்பதாயிரம் முறை துடித்தது. படாரென எழுந்துவிட்டேன். பக்கத்தில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

மணி இப்போது ஐந்தரை. வேகாஸின் தரைகள், காலடி தடங்களை இழந்து கொண்டிருந்தன. அனைவரும் உறங்க சென்றனர்.

அவளை எழுப்பினேன். பெயர் வேற தெரியவில்லை.

அடியே, எதிர்காலம். கொஞ்சம் எழுந்திரு. பேசலாம் என்றான்.

அவள் ஒரு துளி கூட அசையவில்லை.

கொஞ்ச நேரம் என் எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அழகாக இருந்தது. கொஞ்சம் கூட பிசிறு அடிக்காத ஒரு எதிர்காலம். மலர்ச்சி தான் முழுவதும். ஒரு பகுதி கூட குறை சொல்லும்படி இல்லை. அட முண்டமே, அவள் உன் எதிர்காலம் அல்ல. எதிர்காலத்தில் இருந்தவள், இல்லை இல்லை, இருக்கிறவள். எப்படி சொல்ல வேண்டும். இருந்தவள் என்றா, இல்லை இருக்கிறவள் என்றா. குழம்பிப்போய், இப்போதைக்கு என் பக்கத்தில் இருக்கிறாள் என்பதோடு நிறுத்திக்கொண்டேன். 

கொஞ்சம் அசைந்தாள். எழுந்தாள். பேசினாள். நானும் பேசத்தொடங்கினேன்.

வாசகர்கள் அனுப்பினார்கள் என்கிறாயே, அப்படியென்றால் நான் யார்?

நீ ஒரு எழுத்தாளன். நாவல் ஆசிரியன். உன் நாவல்கள் எல்லாம் வெகு பிரசித்தம்.

அப்படியா?

என்ன எழுதி இருக்கிறேன்?

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். இருபதுக்கும் மேற்பட்ட புதினங்கள். உனக்கு புக்கர் பரிசு கூட கிடைக்கப்போகிறது.

அப்படியா?

ஆமாம், நீ மிகப்பெரிய எழுத்தாளன். உன் பெயரை உச்சரிக்காத வாசகன் இல்லை.

அப்படியா?

ஆனால், இப்போது உன் முகத்திலும் சரி, மூளையிலும் சரி, அதற்கான சுவடுகள் தெரியவில்லை.

அப்படியா?

பின்னே!!! நீ இது வரை வாயை பிளக்கிறாயே தவிர, நல்ல கேள்விகள் எதையும் கேட்கவில்லை. எழுத்தாளன் என்றுமே கேள்வி கேட்பவனாகத்தான் இருந்திருக்கிறான்.

மௌனமாக இருந்தேன்.

சரி, கேட்கிறேன்.

கேள்.

எதற்கு வாசகர்கள் என்னை எதிர்காலத்தில், அதாவது நிகழ்காலத்தில் பார்க்காமல், இறந்த காலத்தில் பார்க்க எண்ணுகிறார்கள்?

அவர்களுக்கு சில கேள்விகள் இருக்கிறது.

அப்படி என்ன கேள்விகள்?

என்னை நீ எப்படி கையாளப்போகிறாய் என்பது முதல் கேள்வி.

இதிலென்ன சந்தேகம். உன்னை கையாள நீ என்ன கைப்பிடி களிமண்ணா? அழகான பெண்.

ஆனால், உனக்கு தெரியாத பெண்.

ஆமாம்.

என்னை போகமாக பார்ப்பாயா இல்லை தோழமையாக பார்ப்பாயா?

இப்போது போகமாகதான் பார்க்க தோன்றுகிறது. நேரம் சென்றால் தோழமையாகி விடுவாயோ என்னமோ. ஆமாம், இதை தெரிந்து கொண்டு அந்த வாசகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

காரணம் உண்டு. உன் கதைகள், புதினங்கள் எல்லாமே பெண்கள் இல்லாமல் எழுதப்பட்டது.

இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறேனா? எழுத்தாளன் என்பதையே நம்ப முடியவில்லை. இதில் இது வேறு.

ஆமாம், அதனால் தான் உன் மீது அத்தனை கேள்விகள். உலகிலேயே பெண்களை பற்றியும் சரி, பெண்கள் பாத்திரங்களும் சரி, இல்லாமல் மட்டுமே எழுதி இருக்கிறாய்.

ஆச்சரியம் தான். எனக்கு பெண்கள் என்றால் வெகு நாட்டம் உண்டு. அதனால் தான் பார், உன்னையும் என் அறைக்குள் அனுமதித்திருக்கிறேன். உன் பெயர் கூட தெரியாது. ஆனால், பெண் என்ற ஒரு காரணத்தில் நான் ஈர்க்கப்பட்டேன்.

இருக்கலாம். ஆனாலும், எழுத்தில் அது இல்லை.

எழுத்து வேறு, நான் வேறாக இருந்திருக்கிறேனோ இல்லை இருக்கிறேனோ என்னவோ. அப்படி இருந்தால் என்ன தவறு.

தவறில்லை. ஆனால், அது சரியாக தோன்றவில்லை. படைப்புகள் ஒவ்வொன்றும் பெண்கள் இல்லாவிட்டால் வெறும் குப்பைக்கூளம் தான். அதில் அன்பும் இருக்காது, அழகும் இருக்காது. வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த எந்த படைப்பையும் யோசித்துப்பார். கலைகளை யோசித்துப்பார். பெண்கள் இருப்பர். பெண்களாலேயே அந்த கலை வடிவம் பெற்றிருக்கும். இல்லையென்றால், பெண்கள் மரபை உடைத்து நவீனம் உருவாக்கி இருப்பர். 

ரொம்ப குழப்பாதே. சரி, இப்போது என்ன, பெண்களை பற்றி எழுத வேண்டுமா. எழுதுகிறேன்.

அது முடியாது.

ஏன்?

உனக்கான பெண்கள் உன்னை நேசிக்கவில்லை. 

அப்படி இல்லையே.

இப்போது இல்லை.

அப்படியென்றால், இனிமேல் அந்த விஷயம் நடக்குமா?

ஆமாம்.

அது எப்படி உனக்கு தெரியும்?

உன் எதிர்காலத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்தேன்.

பதில் தான் உனக்கே தெரியும் போலிருக்கிறது. அந்த வாசகர்களிடம் சொல்லிவிடேன்.

சொல்கிறேன். உனக்கும் தெரியவேண்டுமா?

ஆமாம், சொல்.

ஒரு வார்த்தை பிரயோகம் தான்.

என்ன வார்த்தை?

உன் அம்மா சொல்கிறாள். 

என்ன சொல்கிறாள்?

ஒரு அம்மா அப்படி ஒரு வார்த்தை சொல்லும்போது, உனக்கு எல்லாம் மாறும். நீயும் மாறினாய். உலகின் அத்தனை தளங்களும் துண்டு துண்டாகின. மலர்கள் மரண ஓலங்கள் போட்டன. உன்னை வெறுத்தாய். உலகையே வெறுத்தாய். எழுதி எழுதி துண்டாடினாய். சோகங்களை படைத்து தள்ளினாய். உன் படைப்புகள் எல்லாம் சோக காவியங்கள். அழுத்தங்கள் நிறைந்தது. உன்னால் சில தற்கொலைகள் கூட நடந்தது. துன்பவியல் படைப்புகளை உன் அளவிற்கு எழுத இனி ஏழு பிறப்பு இருக்க வேண்டும் எனும் அளவுக்கு படைத்திருக்கிறாய்.

பல நிமிட மௌனத்திற்கு பின் அவளிடம் கேட்டேன்.

இப்படி சொன்னபின் நான் எப்படி என் நிகழ்காலத்தை கடக்க முடியும். 

வேறு வழியில்லை. கடந்து வா. நீ அதற்காக படைக்கப்பட்டவன். உன்னை உருக்கியும் உடைத்தும் தான் இலக்கியம் பேரெழுச்சி பெற வேண்டி இருக்கிறது. அதற்கு உன் வாழ்க்கையை அர்ப்பணிக்க போகிறாய். நீ அழிந்து கொண்டு தான் இருப்பாய். அந்த அழிவு தான் படைப்பின் ஆதாரம். உன்னை இழ, பெரிதினும் பெரிது கொடுப்பாய். எதிர்காலத்தில் சந்திக்கலாம். என்னை வெறுக்காதே. 

Friday, August 21, 2020

சடம்

 மனசு சரியில்லை 
என்றான் நண்பன் 
எனக்கும் சரியில்லை 
நேற்று அப்பாவிடம் 
சண்டை 
பணம் குறைவாக
இருக்கிறது என்றான் 
என்னிடமும் இல்லை 
மாதக்கடைசி 
நேற்று பூக்கள் 
சரியாக பூக்கவில்லை 
எனக்கும் தான் 
நாளை எனக்கு கல்யாணம் 
அச்சச்சோ 
எனக்கு முன்பே 
கல்யாணம் ஆகிவிட்டதே 
சொல்வது எதையும் 
எனக்காக 
கேட்காத 
சட சென்மங்கள் 

கவிதை

 இன்று காலையில் இருந்து 
கவிதைகள் 
கொட்டிக்கொண்டிருந்தது 
நிற்காமல் 
காட்டிக்கொண்டிருந்தது 
நில் என்றால் 
நிற்கவில்லை 
மூச்சு முட்டிப்போனது 
வா நடை போகலாம் 
என கூட்டிப்போனேன் 
உளறிக்கொண்டே வந்தது 
வாயை மூடு என்றேன் 
அது எனக்கில்லை என்றது 
என்னதான் இருக்கிறது 
உனக்கு 
எனக்கு நீ தான் 
என்றது

Wednesday, August 19, 2020

மூட்டை

 இப்போது வரை 
நாற்பது கோடியே 
எழுபது லட்சத்தி 
ஐம்பதாயிரத்து 
சொச்ச முறை 
சுவாசத்தை 
வெளியே விட்டிருக்கிறேன்.
திரும்பி எடுத்துக் 
கொள்ள வேண்டும் 
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.
ஒன்று பள்ளியில் 
ஒன்று கக்கூஸில் 
ஒன்று வாய்க்காலில் 
ஒன்று சண்டைக்கிடையில் 
ஒன்று அம்மாவின் மடியில் 
ஒன்று கட்டிலுக்கடியில் 
ஒன்று மரத்துக்கு பின்னால் 
மூச்சு விடாமல் 
மூச்சை பிடித்துக்கொண்டு 
மூச்சை தேடிக்கொண்டிருக்கிறேன் 
பத்திரமாக மூட்டை 
கட்டவேண்டும் 
நாளை நான் 
எடுத்துச்செல்லவேண்டும் 

படி

 நகுலனைப்படி
ஆத்மாநாமைப்படி 
விக்கிரமாதிதனைப்படி 
தேவதச்சனைப்படி 
எல்லாரையும் படி 
உன்னையும் சேர்த்து 
வைத்துப் படி 
அப்போது தான் அது படி 

நானும்

 ஒரு காலத்தில் 
தவளையாய் இருந்தேன் 
இப்போது மனிதனாய் 
இருக்கிறேன் 
அண்ணாந்து பார்த்தால்
விமானம் 
அந்த ஆகாய 
வனாந்திரத்தில் 
ஒரு நாள் நானும் 
இருந்திருக்கிறேன் 
தவளை கத்தியது 
நானும் இருந்திருக்கிறேன்!!!

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...