Monday, June 04, 2007

கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது...

என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி கண் சிவப்பு காட்டும் BPகாரர். பிள்ளைவாள், இதற்கு அப்புறம் தான், உதயமூர்த்தியின் தந்தை. சுத்த தன்யாசி எங்கெங்கே பாட வேண்டும் என்று தியாக ப்ரம்மம் சொல்லாததை, தன் மகனுக்கு சொன்னவர். இத்தனையும் தாண்டி உங்களுக்கு ஜெமினி கணேசன் தெரிந்தால், நிறைய சினிமா பார்ப்பவர் இல்லை நீங்கள்.

பூர்ணம் விஸ்வநாதன் - வருமையின் நிறம் சிவப்பு: இவரின் பாத்திரபெயர் சுத்தமாக நியாபகம் இல்லை. ஆனால், கமல் இவரின் வீணையை விற்று விட்டு வந்து அல்வா குடுக்கும்போது, பார்க்கும் பார்வையும் பேச்சும், இன்னும் மறக்கவில்லை. 'இப்போ சொல்றதுக்கு பாரதி பாட்டு எதுவும் இல்லயோ?' என சொல்லி, மகனின் வாயில் பாரதி வார்த்தைகளை போட்டு வாங்கியவர். பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளைக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. பிள்ளைவாளும், பூர்ணம் சாரும் மகனை மகனாகவே பார்த்தவர்கள். தனி ஒருவன் அவன் என நினைத்துபார்க்கும் சரியானதை செய்யவில்லை. கடைசியில் ஷேவ் செய்ய மகனிடமே போய் நிற்கும் நிலை. கடைசி வரை, நான் சொன்னது போல் இவன் வரவில்லையே என ஏங்கும் அப்பாக்களின் சுத்தமான நகல்.

பாலக்காடு மணி ஐயர் - காமேஸ்வரனை சமையல் கட்டிற்குள்ளே வளைத்து போட்டு, வரதுகுட்டியை துணைக்கு அமர்த்திய, அக்மார்க் மாமா (ஐயராத்து மாமா). கையை பிடித்து இழுத்துவிட்டான் என்பதற்காக, திரிபுரசுந்தரியை மகனுக்கு கைகோர்த்துவிட்ட அப்பா, திருட்டுபாட்டி கூட இருப்பது தெரிந்தும். செல்லபெட்டியை மகனுக்கும் மேலாக தூக்கி கொஞ்சியவர். மகனுடன் சேர்ந்து, சாம்பாரில் கலந்துவிட்ட மீனை எல்லா இலையிலும் தேடிய சமையல்காரர். ஏ பாலகாட்டு மணி ஐயரே, கிரேஸி மோகனோட பாலகாட்டு காமெடியை நன்னாயிட்டு நடிச்சேளாக்கும். இன்னொரு தடவை, இவரே நினைத்தாலும் அப்படி ஒரு சாம்பார் செய்ய முடியாது.

பெரிய தேவர் -
'அதான், சொல்றாக இல்ல. டிக்கெட்ட மாத்தி போடுங்க.'
'இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல உங்கொப்பனும் ஒருத்தந்தேன்றத மறந்துறாத'
'தீடீர்னு அவன வேல் கம்ப தூக்கி போட்டுட்டு விஞ்சானம் பேச வாடான்னா எப்படி வருவான்.'
'போ, செத்து போ, நான் தடுக்கமுடியுமா. எல்லா பயபுள்ளயும் ஒரு நாளக்கி சாக வேண்டியதுதேன்.'
'ஆனா, வெத, நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா, கடம ஒவ்வொருத்தனோட கடம'
'என் பேத்திக தான்பா எனக்கு மருந்து'
'குட்டி கழுத, அம்மா பாட்டுதேன்'.
தெலுங்கு பெண்ணை பட்டாசு வெடிக்கும்போது எதேச்சையாக கை பிடித்த மகனை, ஒரு பார்வையால் அதட்டியவர். அப்பளத்தை கறமுறவென கடிக்கும் பானுவை, மறுபடியும் பார்வையில் நிறுத்தியவர். தேவர் காலடி மண்ணே பாட்டை பெருசுகள் பாட, நாந்தேன் பெரியதேவன் என்ற அழகான கம்பீரத்தை அமைதியாக பரப்புவார். சுரம் ஏற்றி கொள்ளும் பெரிய மகனை என்ன செய்வதென தெரியாமல், விட்டுவிட்ட பெரிய மனுசன். சின்னதேவரை நேரில் பார்த்து பேசாமல், தேவையான அளவு கோபத்தை கொட்டிவிட்ட பெரியதேவர். கொஞ்சமும் மதிக்காத, மாயனை எப்படி மாற்றுவது என யோசித்து யோசித்து பேத்திகளிடம் சொர்க்க வரம் வாங்கியவர். மிரட்டும் உடல் வாகு இல்லை, ஆனால், இவரின் ஊர் மொத்தமும் அடங்கியே நடக்கும். மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் ஆரம்பிக்க இருந்த மகனை, வேப்பென்னை தடவும் பஞ்சவர்ணத்துக்கு கணவனாக மாற்றிய பெரியதேவர்.

தசாவதாரத்தில் இப்படி ஒரு அப்பாவை ஒரு அவதாரத்திற்காவது உருவாக்கி இருக்கிறாரா என தெரியவில்லை. கையும் மூளையும் நமநமவென அரித்ததால், இப்படி ஒரு பெரிய சினிமா அப்பா பதிவு. வெட்டியாக இருப்பதாக நினைத்துகொண்டால், நான் பொறுப்பில்லீங்கோவ்.

Sunday, June 03, 2007

ரஹ்மான் - 3rd Dimension tour

பக்கோரா - 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட போகிறார்கள், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு போக அவசரபட்டுகொண்டிருந்தோம். உள்ளே, Blaze குரல் கொடுக்க ஆரம்பித்தார். ரஹ்மான் பெயரை சொல்ல, கியுவில் நின்றிருந்த 3 இளசுகள் (பெண்கள் தான், 25 - 23 வயசுக்கு மத்தியில் தான்), ஏதோ மிதிக்க கூடாததை மிதித்தது போல, ஆ ஆ என்று அலற, நமக்கு பர பரவென பற்றி கொண்டது. போய்யா நீயும் உன் பக்கோராவும் என எள்ளி நகையாடிவிட்டு, ஜூட் ஆனோம்.

உட்காரவும், சித்ரா ஹிந்தி பாடல் ஒன்றை காற்றில் கசிந்து கொண்டிருந்தார். எங்கே இருந்து தான் இந்த குரலை இப்படியே இத்தனை நாளைக்கு வைத்திருக்கிறாரோ, சின்னகுயில். முடிந்தவுடன், வந்தேவிட்டார், இசைபுயல். ஷெர்வானியில் வழக்கம் போல அமைதியாக வந்து நின்றார். ஆடிட்டோரியம் அடங்க சிறிது நேரம் ஆனது (பேசாமல் நின்றதற்கே. That's A.R.). அப்படி ஒரு அலறல். 1992ல், நான் வந்துட்டேன் - இனி நம்ம ராஜாங்கம் தான் என அழுத்தி முத்திரையை குத்திய A.R.ரஹ்மான். பார்த்தேவிட்டேன். தலைவா என கத்தவேண்டும் போலிருந்தது. இளையராஜா செய்யாத ஒன்றை இவர் என்ன செய்து விட்டார் என அடிக்கடி கேள்வி தோன்றும். அத்தனையும், அவரின் தில் சே'வும், பாட்ஷாலா'வும், புது வெள்ளை மழையும், காதல் ரோஜாவும் கேட்டால் ரெண்டு பேரும் நமக்கு தீனி போடறாங்க, அப்புறம் என்ன needless comparison என சொல்லும், உள்ளே.
நிகழ்ச்சி - A.R Rahman 3rd dimension tour, இடம் - Oracle arena, Oakland, California.
கல்பலி ஹே கல்பலி (Rang De Basanti) - இப்படி ஆரம்பித்தார். அதற்கு பின் சுத்தமான அதிரடி. அதிகம் பேசவில்லை, வழக்கம் போல. பேசியது, விசா, டிக்கட் பிரச்சினைகள் எல்லாம் முடித்து வர இத்தனை காலம் பிடித்தது என்றார். தாஜ் மஹால் இன்னமும் அதிகாரபூர்வ உலக அதிசயம் இல்லை. அதை உலக அதிசயமாக்க உங்களின் ஒட்டு பதிவு செய்யுங்கள் என்றார். Pray for me brother ஆல்பம் - UN'க்காக செய்ததை சொன்னார். இந்த இடத்தில் பேசியிருக்கலாமோ என தோன்றியது, இன்றைய நாள் (Jun 02 2007 alone) Oakland Cityல் A.R.ரஹ்மான் தினமாக அறிவித்திருக்கிறோம் என Oakland City Council president சொல்லியும், அதற்கு பதில் எதுவும் பேசாமல் நன்றியுடன் (அதுவும் மைக்கில் இல்லை) முடித்து கொண்டார். எப்போதாவது, கிளையன்டிடம் இருந்து வரும் one-line appreciation mail பார்த்து விட்ட நாள் முழுவதும் ஏதோ, இன்று என்னால் தான் எல்லாமே என கொஞ்சம் தலை தூக்கி நடந்த நாட்கள் சட்டென நினைவில்.
சி..வா..ஜி.. நிகழ்ச்சியின் ஹைலைட். பல்லேலக்கா தவிர அத்தனை பாட்டும், ரஹ்மான் கீபோர்டில் கண்ணுக்கு முன் வாசிக்க, இதற்கு மேல் என்ன சொல்ல. கை தட்டி தட்டி கை வலி, கத்தி கத்தி வாய் வலி. வாஜி வாஜியுடன் ஹரிஹரன் சுழி போட்டார். கூடவே Madhushree, ஆடிகொண்டே. அப்போது தான் தெரிந்தது, ஆடிட்டோரியத்தில் அத்தனை சிவாஜி ஆர்வலர்கள், என்னையும் சேர்த்து. தமிழ் பாட்டு பாடலாமா என ஹரிஹரன் கேட்கும் போதே, சிவாஜீஈஈ என குரல்வலை கதற கத்தியவர்கள், வாஜி என ஆரம்பித்ததும், உட்காரவில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். Blaze, வாடா வாங்க்கிட்டு வாடா பாட, மறுபடி குத்தாட்டம். சஹானா அடுத்தது, விஜய் யேசுதாஸும் சித்ராவும். விஜய் - அப்பா நிறைய டிப்ஸ் குடுக்கிறார் போல. கண்ணை இந்த பக்கம் அந்த பக்கம் நகர விடவில்லை. பாடு ராசா பாடு, என கேட்டு கொண்டே இருக்கலாம் போல. சுகம். சித்ரா - கோமதி ஷ்ரீ பாடிய திருவெம்பாவை வரிகளை பாடி உருக்க போகிறார் என எதிர்பார்த்தால், அந்த வரிகள் மிஸ்ஸிங். காலம் கருதி, நிறைய பாடல்கள் வெட்டி ஒட்டபட்டிருந்தன. சிவாஜியை பொருத்தவரையில், கடைசியில் பாடபட்டது, அதிரடிகாரன் மச்சான் மச்சானே. அச்சு அசல் பாடியவரே நேரில் பாடினார். ரஹ்மான் பாய், வீட்டுல சுத்தி போடற பழக்கம் இருந்தா சுத்தி போட சொல்லுங்க. ரொம்பவும் உணர்ச்சிவசபட வைக்கிறீர்கள்.
ஆடிட்டோரியம் குலுங்கிய பாடல்கள் - தேரே பினா, மையா மையா (குரு), ஹம்மா (பாம்பே), சரி க மே (பாய்ஸ்), கண்ணாளனே (ஹிந்தி பாம்பே). தில் சே ரே, சய்ய சய்யா (தில் சே), Lose control, Rang de basanti (Rang de basanti).
சுக்விந்தர் சிங் - சைய சைய்யா, வழக்கம் போல பின்னி பெடலெடுத்து விட்டார். கூட பாடியது A.R. ரேஹானா. அடுத்து பாடிய ஒரு ஹிந்தி பாட்டு நன்றாக இருந்தது. ஆனால், கொஞ்சம் இழு இழுவென இழுத்து, ஆடியன்ஸ் கையசைத்து நிறுத்துங்க சாமி என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.
நரேஷ் ஐயர் - ஆள் பார்க்கத்தான், தயிர் சாதம் போல் இருக்கிறார். மைக் எடுத்தால், சிக்கன் பிரியாணி தான். ச ரி க மே'ல் (பாய்ஸ்) புகுந்து விளையாடினார்.
Blaze - இவர் ஸ்டைல் மாற்றவே மாட்டார் போல. நடப்பதையும், கை ஆட்டுவதையும் சொல்கிறேன். அக்மார்க் அசைவுகள். சி..வா..ஜி பாடியபோது, அவரே ஆச்சரியபட்டு போயிருப்பார். கம்பீரம். வேகம்.
ஹரிஹரன் - சந்தா ரே (ஹிந்தி மின்சார கனவு). இது போதும் என்று நினைக்கிறேன். வேறு வாக்கியம் தேவை இல்லை.
Madhushree - அம்மாடி, இத்தனை நாள் நீங்க பாடினது தான் கேட்டிருக்கேன். ஆடிகிட்டே பாடினத நான் இன்னைக்கு தான் பார்த்தேன். வாவ். மிஸ் பண்ணாதீங்க மக்களே. இவரின் அசைவுகளிலிலும், குரலிலும் அப்படி ஒரு கொஞ்சல்ஸ்.
சிவமணி - ஆரம்பித்த சில நேரம் அதிகம் தலை காட்டவில்லை இவர். ஆனால், சிவமணி என்று பெயர் சொன்ன போதெல்லாம் விசில் சத்தம் பக்கத்தில் பேஸ்பால் விளையாடி கொண்டிருந்த Oakland playersக்கு கேட்டிருக்கும். இவருக்கென தனியாக ஆவர்த்தனம் செய்து, சூடேற்றினார்கள். சிவமணி அப்போது ட்ரம்ஸ் தொட்டவர் தான், பின் எங்களின் கை வலிக்க ஆரம்பித்து விட்டது. நம் ஊர் டன்டனக்கர இசையையும் நடுநடுவில் நுழைத்து, பார்ப்பவர்களை தொலஞ்சீங்க நீங்க என ஆக்கிவிட்டார். பேஸின்ப்ரிட்ஜ் ஆள், இன்றைக்கு ஸ்டான்போர்ட் யுனிவர்ஸிட்டியில் வாசிக்கும் அளவுக்கு வந்ததில் யாருக்கும் சந்தேகம் வந்தால், இவர் சுற்றி சுற்றி ட்ரம்ஸ் வாசிப்பதை பார்த்தால், சந்தேகம் வாபஸ். ரிதமே மனிதனாக.
Pray for me brother - யுனைடட் நேஷன்ஸ்'காக ரஹ்மான் செய்த ஆல்பம். இதன் பாடலை பாடியது ரஹ்மானும், Blazeம். ரஹ்மான் பியானோ முன் தனியாக. இந்த ஆல்பத்தின் காரணம் முன்பே சொன்னதால், ஆடிட்டோரியத்தில் மக்கள் சின்ன ஒளி வெள்ளத்தை ஊற்றினார்கள். மெழுகுவர்த்தி இல்லை எவரிடமும், ஆனால் மொபைல் இருந்தது. விளக்குகள் அணைய, கொஞ்சம் கொஞ்சமாக செல்போன் விளக்குகள் அனைவரின் கைகளிலும் ஆட, ரஹ்மான் நெகிழ்ந்து போயிருக்க வேண்டும். முடித்தவுடன், எதுவும் சொல்லாமல், மெதுவாய் கீ போர்ட் பக்கம் சென்றார். பலது நினைத்திருப்பார்.
வந்தே மாதரம் - முற்றும் போட ரஹ்மான் பாடியது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் எழுந்து நிற்க ஆரம்பித்து, கடைசியில் மா துஜே சலாம், வந்தே மாதரம் என அத்தனை பேரும் ஒரு மெகா கோரஸாக பாட, பிண்ணனியில் நம் கொடி டிஜிட்டலில். அம்மாவுக்கு போன் செய்து, இந்தியா வரேன்மா என சொல்ல வேண்டும் போல இருந்தது.
சில பாடல்களில், பின்னிசை கொஞ்சம் பிசகினாலும் ரஹ்மான் முகம் பார்த்தால், சுத்தமாக மறைந்து விடுகிறது. நடந்த 2:30 மணி நேரத்தில், அதிகம் இவரைத்தான் பார்த்தபடியே இருந்தேன். மிக அருகே இல்லையென்றாலும், அவர் கண் மூடி கீ போர்ட் வாசிக்கும் காட்சி பார்க்க கொள்ளை அழகு. வாழ்க நீர் பல்லாயிரம் ஆண்டு. அடிக்கடி தமிழ் படமும் செய்யுங்க பாஸ்.
(Narsidude உதவியில் சிக்கிய வீடியோ. Thanks dude.)

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...