Tuesday, December 20, 2022

வாழ்வை வாழ்ந்துகொண்டே
இருக்கிறேன்
அதற்கும் வேறு வேலை
இருப்பதாக தெரியவில்லை
சேரலாம்
சேராமலிருந்தால்

தலைப்பும் நானும்

என் குழுவில்
இப்போது யாருமில்லை
தலைப்பும் நானும்
அதன் அமைதியும்
மட்டும் தான்

கவிதை ஆவதில்லை

மூளை கவிதை எழுதினால்
இலக்கணம் அதிகம் ஆகிறது
இதயம் கவிதை எழுதினால்
சோகம் அதிகம் ஆகிறது
மூலாதாரங்கள் கவிதை எழுதினால்
காரம் அதிகம் ஆகிறது
எது எழுதினாலும்
கவிதை ஆவதில்லை

உப்புசம்

கவிதைகளின் இருண்ட துளை
எப்போதும் காலியாகத்தான் இருக்கும்
ஆனால் கவிகள் எப்போதும்
நிறைந்திருக்கிறார்கள்
உப்புசம் அதிகம் ஆகிறது
தாத்தா பாட்டி கதைகள்
இல்லா வாழ்க்கை
ஒன்றும் பிழையில்லை
பிழைத்திருப்பீர்கள்
எந்த சொல்லும்
இல்லாத ஒரு
கவிதை எழுத நினைக்கிறேன்
சொல் கவிதை
எழுதிய நேரங்கள் போக
பிறகெப்போதும் நான்
வாழ்ந்த வாழ்க்கை
அந்த சொல்லில்லா
கவிதைகள் தானாம்
முன்பே சொல்லியிருக்கலாம்
என்னுடைய எந்தக்கவிதை
கதைகள் எழுத வைக்கும்?
இது இல்லை என்று தெரிகிறது
கடவுளுக்கும் எனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவனுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை
எனக்கு வைத்திருக்கிறது

எது

நிலா இல்லாவிட்டாலும்
கவிதைகள் இருந்திருக்கும்
ரோஜா இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
நாம் இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
எது இருப்பதனால்
அது இருக்கிறது?

நாளைக்கான இரை

எழுதித்தான் சொல்ல வேண்டும்
என்பதில்லை
புறாக்களின் கூடுகளில்
எச்சங்கள் தாண்டி
அவை இரவில் சிந்தும்
சிறுதுளி கண்ணீரில்
நாளைக்கான இரை
கிடைக்கும் என்ற
நம்பிக்கை
கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள்
கேட்காததால்
நகுலனைப்போல
நானிருந்திருக்கிறேன்
நானிப்படி இருந்திருப்பேன்
என தெரிந்திருந்தால்
அவர் இன்னும்
சில நாள்
இருந்திருப்பார்
பூங்காவின் அழகிய
பூக்களில் தான்
எத்தனை வன்முறை!
என்னையும் அவளையும்
அவரையும் அதையும்
ஒரு சேர
முகர்ந்துகொண்டே
இருக்கிறது
சரி என்பதில்
தான்
தவறும் இருந்தது
எல்லா நாளும்
நல்ல நாள்தான்
ஆனால்
நேற்று ஏன்
அப்படி ஆனது?
என்ன செய்தேன்
என்பதில் எந்த
குழப்பமும் இல்லை
ஏன் என்பதில் தான்
அடங்கிப்போய்
கிடக்கிறது
உனைப்பிரிந்ததில் எனக்குத்தான்
உயிர் அழுத்தம்
எனைப்பிரிந்ததில் யாருக்குமே
அழுத்தமில்லை
அந்த இயற்கைக்கும்!!
ஏற்றுக்கொள்ளும் தூரத்தில்
தான் இருந்தாய்
ஆனாலும் ஏற்றுக்கொண்டால்
நான் மனிதனல்லவா?
அதுவல்லவே நான்
நாளைக்குள் நானும்
நேற்றைக்குள் நீயும்
இருந்ததில் தான்
பிளவு இருக்கிறது
எதிர்காற்றில் ஒரு நாள்
நான் இழந்தேன்
தேடியதில்
நீ தான்
கிடைத்தாய்
நான்
நீ
மறுமுறையும்
நான்
என்ன செய்தால்
நீ?

இயற்கை

இயற்கை பிறழ்ந்தபோது தான்
நான் பிறந்தேன்
நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்
பிறழ்ந்த இயற்கை தான்
பிறழ்ந்துகொண்டே இருக்கிறது
ஆனாலும் என் தாய் இயற்கையை
நன்றாகவே புரிந்துகொள்கிறேன்

நீ கவிதை

நான் கவிதைகள்
எழுதி நீயானேன்
நீ கவிதைகள்
எழுதும்போது 
நான் நானாகவே
இல்லை

நானாக நான்

அனைவராகவும் நான்
இருக்கும்போது தான்
நானாக நான்
இல்லாததை மறந்தேன்

இயல்பின் இயற்கை

வரண்ட தாள்கள்
இயல்பின் இயற்கை
இருப்பதே இல்லை
தாள் சில நேரம்
சருகாகிக் கிடக்கிறது
காற்று நகர்ந்தாலே
உடைந்து போகிறது
இவையெல்லாம்
என் கவிதைகள்
என்றால்
நம்பவா போகிறீர்கள்?

கவிப்பொருள்

பேச விட்டிருந்தால்
பேசித்தான் இருப்பான்
பேசுபொருளாக அவர்கள்
இருப்பதால் இவனுக்கு
கவிப்பொருள் தான்
சரிப்பட்டு வருகிறது
அது பேசினால்
பேசுபொருளெல்லாம்
என்னவாகும் என்பதில்
கவிதைக்கு ஒரு
பொருட்டும் இல்லை

நாற்பத்தி ஐந்து

என் மீது நாற்பத்தி ஐந்து
கிலோ எடை
அதன் மீது
மொத்த பிரபஞ்சமே
எடையாக இருந்தது
பிரபஞ்சம் இலேசாகத்தான் இருக்கிறது
நாற்பத்தி ஐந்து தான்
பஞ்சாகவே இருந்தாலும்
கனக்கிறது

ஒளி கக்கும் மிருகம்

எழுத்தாள நண்பர்களிடம்
கவிதைகள் கொடுப்பதில்லை
ஆப்பிரிக்காவில்
தங்கம் புதைந்திருக்கும்
போது பக்கத்தில் இருக்கும்
கருங்கல் தங்கத்தை
ஒளி கக்கும் மிருகமாகத்தான்
பார்த்திருக்கும்

எந்தக்கவிதை

தமிழ்க்கவிதை எழுதினால்
ஆங்கிலக்கவிதை தோள் மீதேறும்
ஸ்பானியக்கவிதை எழுதினால்
ஜப்பானியக்கவிதை தோள் மீதேறும்
எந்தக்கவிதை எழுதினால்
நானே தோள் மீதேறுவேன்!!

வக்காலத்து

எந்தவொரு கவிதையிலும்
ஒரே கேள்வி
இதெல்லாம் கவிதையா
கவிதை ஒவ்வொரு
முறையும்
வக்காலத்து வாங்கும்
நான் அதுவல்ல எனில்
நீயும் அதுவல்ல எனும்

தீர்ப்பு

அந்த பஞ்சாயத்தில்
சரியாகத்தான் பேசினேன்
அனைவரும் ஆமோதித்தனர்
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
அடுத்த முறை
அமைதியாக இருந்து
வாதாடினேன்
ஒரு வார்த்தையும் இல்லாமல்
அப்போதும்
தீர்ப்பு எனக்கெதிராக!
இன்னொருமுறை
நீதிபதியே எனக்காக
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
என் தீர்ப்பை
ஒவ்வொரு முறையும்
நானே எழுதி இருக்கிறேன்

புனைப்பெயர்

என் கவிதைகளுக்கு
நான் தான் பெயரிட்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
நான் பெயரிடவில்லை
இதனால் நானே
ஒரு கவிதையென்றும்
பொருள்படாது
எனக்கு நானே
பெயரிட்டிருந்தால்
புனைப்பெயர் தேடி
ஓடியிருக்க மாட்டேன்

ஒர் இரவில் என் கவிதை

ஒர் இரவில்
என் கவிதை அனைத்தும்
கடலில் மிதந்தது
ஒரு கவிதை மட்டும்
சுவாசத்தை ஒவ்வொரு
மிடறாக உமிழ்ந்தது
அது ஒன்றில் தான்
நிலா அழகாய்
வர்ணிக்கப்பட்டிருந்தது
மற்ற கவிதைகளில்
எல்லாம்
மனித மனங்களின்
எச்சம் தான்
கடும் கனம்

நானே

எங்கு சென்றாலும்
நானே இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சி
முடிவிலும் நான் மட்டுமே
இருப்பது தான்
வருத்தம்

கல்லும் கலையும்

ஒரே ஒரு குறைதான்
எந்த ஓவியத்திற்கும்
எந்த சிலைக்கும்
வேர்ப்பதில்லை
அங்கு இருப்பதெல்லாம்
கல்லும் கலையும்
வேலையை பார்த்துக்கொண்டு
இருந்துகொள்ளலாம்

சிறு விதை

எப்படியாவது மீட்டுவிடுங்கள்
உங்களுக்கு ஒரு பெரும்கவி கிடைப்பான்
அல்லது
ஒரு மாபெரும் ஞானி
அல்லது
அறம் தோய்ந்த அரசியல்வாதி
அல்லது
அன்பே உருவான தாய்
சரி உங்களுக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்
ஒரு சிறு விதையாவது

எண்பது

ஒவ்வொரு சொல்லிலும்
ஒரு வருடம்
வசிக்கிறேன்
அப்படியானால்
பல மில்லியன் வருடங்கள்
ஆனால் எண்பதில்
இறந்தேன்
எண்பதில் எண்பதும்
என் என்பதுதான்
அடர்த்தி போல

சிலை

இங்கு தான் இருக்கிறேன்
இன்று இங்கு தான் இருக்கிறேன்
நேற்றும் இருந்திருக்கலாம்
நாளை இல்லாமலிருக்கலாம்
எப்போதும் ஓரிடத்தில்
ஒர் மனதில்
இருப்பது எப்படி
இந்த சிலைகளுக்கு
வாய்க்கிறது!!!

அவனின் ஒளி

நான் தேடிக்கொண்டிருந்த ஒளி
இன்று இப்போது என் முன்னே
சிலை போல நின்றது
அதனின் கைப்பிடியில் தான்
என் வாழ்வின் முதல் ஒளி
அதனுள் என் முப்பாட்டனும்
அவனின் ஒளியும்
சுவாசித்தது
என் ஒளி அவர்களிடம்
கடன் வாங்கி வந்தது
அவர்கள் கேட்கும்போது
கொடுத்தாக வேண்டும்
கேட்கக்கூடாதென
என்றும் எரியும்
சூரியன் கட்டளையிட்டான்

நான் கவிதை

நீ நீயாகவே இரு
நான் கவிஞனாகவே இருக்கிறேன்
இல்லாவிட்டால்
நீ நானாகி விடுகிறேன்
நான் யாராகிவிடுகிறேன்
என்பதில் குழம்பி
இன்னுமொரு கவிதை
எழுதுகிறேன்

வெளியே

கவிதைகளுக்குள்ளேயே என்னை இருக்க விடுங்கள்
வெளியே வந்தால் சகமனிதனாகவே இருக்கிறேன்

ஓரிலை

காட்டு வழியில் அவள்
தனித்தென்னை காட்டு மரத்தின்
நடுவே சேர்த்தனைக்கிறாள்
உச்சாணி மரக்கிளையில்
தொட்டனைத்து ஏறியது எங்கள் கிளர்ச்சி
கீழ் இறங்கியதும் அவள் ஓரிலையானாள்
என்னை வேராகச்சொன்னாள்
அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கும்
மண் படர்ந்த வேரானேன்
வருடங்கள் அலைந்தோடியது
கிழடு தட்டிய வேரானேன்
இளங்காற்று அசைத்ததில்
அவள் கால் இடறி
என் மேல் தான் விழுகிறாள்
வயது தட்டவில்லை
அதே கிளர்ச்சி
இதயம் தான் இல்லை

இசை

உடையும் பொழுதெல்லாம்
என் மேல் அவனின் இசையை கவிழ்த்துக்கொள்கிறேன்
அவனுக்கும் வேறு வேலையில்லை
எச்சில் இலையை கிருஸ்துவாக்குகிறான்
இன்னொரு இசை வந்தென்னை
பிரித்துச்செல்கிறது

சிதை

சிதைந்ததில் இருந்து தான் பிறந்தேன்
உருவாகிக்கொண்டு இருக்கும்பொழுதில் தான் இறந்துவிட்டேன்
என்னைத்தொகுத்தால் நான் இறக்கிறேன்
உடைத்தால் பிறக்கிறேன்
சேர்க்கும் விசையில்
யார் இருப்பார்?
யார் இருந்தாலும்
அதில் நான் இருப்பதாய் இல்லை

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...