Monday, December 18, 2006

ஜோசப் பார்பரா

இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.

பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த இருட்டுடனேயே வாழ்ந்து அதிலேயே இறந்தும் போகிறார்கள். திரையில் தோன்றும் அனைவரும் அதற்கு மாறாக வான்புகழ் அடைகிறார்கள். இவரின் படைப்பு என்னவென்று கேட்கிறீர்களா? டாம் அன்ட் ஜெர்ரி. இதை பார்க்காமல் வளர்ந்த குழந்தை எங்காவது உண்டா? அத்தனை குழந்தைகளின் சந்தோஷத்தையும் இந்த கார்ட்டூன் மூலம் பல மடங்கு அதிகரித்த பெயர் இவருக்கும், William Hanna என்பவருக்கும் மட்டுமே சொந்தம்.

நிலா காண்பித்து சோறு ஊட்டிய காலம் போய், டாம் அன்ட் ஜெர்ரி காட்டி சோறுட்டிய அத்தனை அம்மாக்களும் நன்றி சொல்ல வேண்டிய மகானுபாவர். இத்தனை வயதானாலும், நம்மில் எத்தனை பேர் வரிந்து கட்டி கொண்டு, மடியில் தலைகாணி, இரு கன்னங்களிலும் கைகள், கண்களில் குழந்தைதனம் என்று டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கிறோம். இன்று கார்ட்டூன் படங்களுக்கு உள்ள மவுசு அதிகரிக்க காரணம் ஒரு வகையில் டாம் அன்ட் ஜெர்ரி வெற்றியும் தான்.

நிஜ மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, இதையெல்லாம் காட்டும் சினிமாவை விட இந்த கார்ட்டூன் படங்கள் நிச்சயம் ஒரு படி மேல் நிற்பது மறுக்க முடியாத உண்மை. இதை எடுப்பது சாதாரண காரியம் அல்ல. Finding Nemo - Behind the scenes பார்த்த போது தான் தெரிந்தது. இத்தனை உழைப்பா? இதற்கு பின் இத்தனை நுணுக்கமா என்று கண்களையும் மனதையும் ஆச்சரியபடுத்தவே செய்தது. நாம் செய்யும் ப்ரொகிராம் வெட்டி வேலையை விட்டு விட்டு அனிமேஷன் கற்று கொண்டு இந்த துறைக்கு வந்து விடலாமா என்று இன்றைக்கும் யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு முறை அலுவலகம் செல்லும் போதும் பிக்சார் ஸ்டுடியொஸ் வாசலில் இறங்கி உள்ளே செல்லும் அனைவரையும் பார்க்கும் ஏக்கம் இன்னும் தீர்ந்த பாடில்லை.

உலகத்தின் எந்த மூலையில் குழந்தைகள், டாம் அன்ட் ஜெர்ரி பார்த்து சிரிக்கும் போதும், ஜொசப் பார்பரா ஒரு அகாடமி விருது பெற்று கொண்டு தான் இருப்பார்.

விக்கி தகவல்கள்

Sunday, December 17, 2006

அவள் அப்படித்தான்...

அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்... அவள் அப்படித்தான்...

அழகாய் முடிகிறது 'அவள் அப்படித்தான்' படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த உலகத்தில் பிறக்க கூட இல்லை. ஆனால், இன்று விவாதிக்கப்படும் பல விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது பெறும் ஆச்சரியமே.

இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது என்னவோ உண்மை தான். இயக்குனர் ருத்ரையாவிடம் நிறைய தில் அப்போதே. நிச்சயம், இந்த படத்தை இப்பொது யாராவது எடுத்தால் அவர்களுக்கு, மக்கள் போராட்டம், கலவரம் போன்ற விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும். இந்த படம் எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பலரின் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

கலர் படங்கள் நன்றாக வெளிவந்த அந்த காலகட்டத்தில், கருப்பு வெள்ளையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது, ஆச்சரியமான விஷயம். கதையின் தாக்கத்தை இதுவும் கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது.

நடித்த அத்தனை பேருக்கும் என்ன சொல்வது? அவர்களின் நடிப்பு வாழ்க்கையில் மற்றவர்களிடம், சிலாகித்து சொல்ல நிறைய செய்திருக்கிறார்கள்.

முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை உங்களை உட்கார வைக்கும் வேகமான த்ரில்லர் போல, உங்கள் மனதை கண்டிப்பாக உணர வைக்கும். ஒரு பெண்ணை சுற்றியே படம், அதுவும் அவள் மற்ற சராசரி பெண்கள் போல கண்டிப்பாக அல்ல. ஆண் சமுதாயத்தின் மீது கட்டுகடங்காத கோபமும், பெண்ணுக்கே உரிய, தன் சோகம் கேட்கும் ஆணிடம் தன்னை பறி கொடுக்கும் வித்தியாசமானவள். பல நேரங்களில் இது போன்ற நிழல் நாயகிகள், நம் வாழ்க்கையிலும் வருவதுண்டு. நான் பார்த்த, பழகிய, எனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண் என் நினைவுக்கு அடிக்கடி வந்தார். நிழல் சில நேரங்களில் நிஜத்தை உரசி பார்ப்பதென்னவோ உண்மை தான். சராசரிக்கும், வித்தியாசத்துக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ள, இப்போதைய, பல பெண்கள் இந்த படத்தில் தங்களை உணர்வார்கள்.

ரஜினி சில காட்சிகள் வந்தாலும், அட போட வைத்திருக்கிறார். நெற்றி பட்டையுடன், அதற்கு சம்மந்தமில்லாத பல விஷயங்களை பேச வைத்திருப்பது, இயக்குனரின் திறமை. அதை சுப்பர் ஸ்டார் கையாண்டுள்ள விதம், அதை விட திறமை. கமல், சொல்ல என்ன இருக்கிறது. பல இடங்களில் கண்களால் மட்டுமே நடித்துள்ளார். இவரை வேட்டையாட விளையாட விட்டுள்ளது, இந்த கால கமர்சியல் கட்டாயம். Sri Priya, இவர் நடித்து அதிகம் பார்த்ததில்லை. இந்த படம் பார்த்த பின், இவரை தவிர்த்து யாராவது செய்திருந்தால் ???

இளையராஜா. எப்போதும் போல ரசிகனின் மன அரியாசனத்தில் ராஜாங்கம் நடத்துகிறார். பாடல்களை விட, பல இடங்களில் நுட்பமான பின்னிசை கேட்க கேட்க பிரமிப்பு.

கத்தி, காதல் என்ற வட்டத்துக்குள் சிக்கி கொண்டுள்ள இன்றைய திரைப்படங்களை பார்த்து பார்த்து சிவந்த கண்களுக்கும், மனதுக்கும் இந்த பழைய படம் நிச்சயம் ஒரு ஆறுதல்.