Tuesday, December 26, 2006

இருட்டு கடை

காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும் இடத்தில் போனால் அங்கே தான் என்று வழி காட்டினார். கூடவே, 'இப்போ போகாதீங்க, சாயங்காலம் 5 மணிக்கு தான் திறப்பாங்க'. ரயில் 5:45க்கு. இருந்தாலும், அந்த கடையை பார்த்து விட்டு, அல்வாவையும் நேரில் வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை என்னை காத்திருந்து கண்டிப்பாக போக சொன்னது.

கொஞ்ச நேரம் ரயில் நிலையத்தின் வெயிட்டிங் அறையில் அமர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பி நெல்லையப்பர் கோவிலில் இறங்கினேன். எதிர்ப்பார்க்கவில்லை, அந்த கோவில் இத்தனை பெரியதென்று. அந்த சாயங்காலமும் மதியமும் சேர்ந்த நேரத்தில் கோவிலில் அதிகம் பேர் இல்லை. ஆசை தீர, சுற்றி பார்த்தேன். கோவிலை அமைதியாக, யாரும் இல்லாத போது சென்று பாருங்கள். அதன் ரம்மியம் தனி. எண்ணை வாசனை, மெல்லிய காற்று, எங்கோ தூரத்தில் ஒலிக்கும் மணி சத்தம், தூணுக்கு பின் தோழியிடம் சண்டை போட்டு கொண்டிருக்கும் தோழன், இரும்பு கம்பிகளுக்கு பின் அருள் பாலிக்கும் பல கடவுள்கள், கோவில் தோட்டத்து சல சல சத்தம். ஏகாந்தம்! இத்தனையும் இருட்டு கடை அல்வா வாங்க வேண்டும் என்ற ஆசையால் கிடைத்தது.

வெளியே வந்து செருப்பை வாங்கும் போது, பக்கத்தில் இருப்பவரிடம் 'இருட்டு கடை எங்கங்க இருக்கு'. 'அதோ' என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் பல கடைகள் கொண்ட இடம். சரி, எதாவது போர்ட் இருக்கும் என்று, கிட்டே போய் கேட்டால், பக்கத்தில் டீ கடை அளவுள்ள, சில பலகைகள் கொண்டு முடப்படும் அந்த காலத்திய அமைப்புள்ள ஒரு கடை. அதை பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், நேரில் பார்க்கும் போது பெரும் வியப்பே மிஞ்சியது. அப்போது அங்கு யாரும் இருக்கவில்லை, ஒருவரை தவிர. அவரை விசாரித்த போது, அல்வா வாங்கத்தான் அவரும் காத்திருப்பதாக சொன்னார். வாங்கி விட்டு, அவரும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும் என்றார். பரவாயில்லை, நான் எடுத்த முடிவு கொஞ்சம் சரியானது தான் என்று நினைத்து கொண்டேன். பேச்சு கொடுத்தபின் தான் தெரிந்தது, அவர் என்னை போல் அல்லாமல் அதிகம் பேசுவார் என்று. நிறைய பேசி கொண்டிருந்தார். சொன்னதில் நான் பற்றி கொண்டது ஒன்று தான். அவரின் வீட்டு பக்கம் தான் இருட்டு கடை அல்வா பாக்டரி இருக்கிறது. அவரின் தாத்தா, அப்பாவுக்கு இந்த இருட்டு கடை முதலாளியிடம் நல்ல பெயரும் உள்ளது. அப்புறம் என்ன, அங்கேயே வாங்கி கொள்ளலாமே என்று கேட்டேன். எனக்கு கிடைத்த பதில், 'இங்க தவிர வேற எங்கயும் யாருக்கும் இவுங்க குடுக்கவோ விக்கவோ மாட்டாங்க'.

மார்க்கெட்டிங் என்ற பெயரால் இன்றைய விளம்பர வித்வான்கள் பலர் உயிரை கொடுத்து தன் பொருள் விற்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்திலும், கடைக்கு ஒரு பெயர் கூட வைக்காமல், ஆரம்பித்த அதே நிலையில் ஒரு மாற்றமும் இல்லாமல், செய்யும் பொருளின் தரத்திலும் கூட ஒரு மாற்றமும் இல்லாமல் உலக தரத்திற்கு பேசபடும் இவர்களின் முன் பலர் கண்டிப்பாக பாடம் கற்று கொள்ள வேண்டும்.

ரயிலுக்கு நேரமாகி விடும், கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது என்று கறாரான பதில், கடையில் வேலை செய்பவரிடம். அது வரையில் கிட்ட தட்ட பத்து பேராவது காத்து கொண்டிருந்தார்கள். முதலாளி வந்தே விட்டார். எங்கு இருந்து தான் வந்ததோ தெரியவில்லை அத்தனை கூட்டம். குறைந்து நாற்பது பேராவது முற்றுகை இட்டார்கள். சற்றே பின் வாங்கினேன். எனக்கு கில்லி சினிமா டிக்கட் வாங்க போய், முச்சு முட்டியது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், அலுவலக சகாக்களுக்கு அல்வா கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்று சொன்னதால், துணிந்து, வியர்வை பொங்க, முச்சு இறைக்க, அடுத்தவர்கள் திட்ட முன்னே போய் வாங்கியே விட்டேன். பக்கத்தில் நான் முன்பு பேசி கொண்டிருந்த நண்பரும் அவருக்கான கொள்முதல் செய்து விட்டிருந்தார். கூட்டத்தை தள்ளி கொண்டு இரண்டு பேரும் ஒரு பெருமித புன்னகையை பரிமாறி கொண்டு கிளம்பினோம்.

இந்த அனுபவத்தில் அதிகம் திரில் இல்லை என்றாலும் இருட்டு கடை என்ற அந்த வியாபார தலம் என்னை ஈர்க்கவே செய்த்தது. அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, ஏன் உலகின் எந்த முலையிலுமே விளம்பரபடுத்தி கொள்ளாவிட்டால் எப்பேர்பட்ட கொம்பாக இருந்தாலும், சறுக்கி விழ வேண்டிய அபாய பொருளாதார நிலைமை மற்றும் கால மாற்றம் இப்போது. இது எல்லாம் தெரிந்தும், உற்பத்தி செய்யும் பொருளின் தரம் மட்டுமே நிஜம், மற்றவை எல்லாம் கண் துடைப்பு என்ற வியாபார கொள்கை உடைய இவர்களை நெல்லையப்பரின் கடைக்கண் பார்வை காக்கவே செய்கிறது.

(கடையின் படம், ramz பதிவிலிருந்து)

4 comments:

Anonymous said...

அட !! அட !! கலக்கற சந்துரு.

Lakshman said...

வாங்க வாங்க சுப்புடு. வருகைக்கு நன்றி.

Anonymous said...

அடடே! அல்வா வாங்கிவிட்டு ரயிலேறி விட்டீர்களே !! அங்கேயே
வாழையிலையில் சுடச்சுட கொஞ்சம்
வாங்கி வாயில் போட்டால் தொண்டையில் அது வழுக்கியோடும்
சுகத்தில் ரயிலைக்கூட விட்டிருப்பீர்கள் !!!
நானானி

Lakshman said...

ஆசை இருந்தது தான். ஆனால், ரயிலை மிஸ் செய்துவிட்டு, பேந்த பேந்த முழிக்க கூடாது என்று உள்ளுக்குள் ஒரு உள்ளுணர்வு அல்வாவை மீறி மனதை துளைத்து கொண்டிருந்ததே காரணம்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...