Monday, June 20, 2022

புங்க மரம்

என் வீட்டின் புங்க மரம்
தூங்கிக்கொண்டிருக்கும்
எப்போதும்
பிள்ளைகள் வந்தால் விழிக்கும்
தொட்டுத்தொட்டு விளையாடும்
பிள்ளைகள் இன்னும் பிரசித்தம்
இரட்டை ஜடையின்
பெண் பிள்ளைகளிடம்
காதல் பெருத்தோடும்
ஜடைகளின் நுனியில் 
எப்படியாவது தன் கிளையை
மணம் முடித்துவிட திளைக்கும்
இன்று வரையில் மணம் முடியவில்லை
ஜடைகளுக்கு அவ்வளவு தடைகள்
ஓரிரவில் பெண்ணொருத்தி
முசுமுசுவென அழுதாள்
புங்கம் குறட்டை விட ஆரம்பித்தது
இரட்டை ஜடையின் தாய் என்றாள்
தூக்கம் கலைந்தது
நீ பிள்ளை இல்லை
ஆனால் உன் பிள்ளை
எனக்கு ஆதிக்காதலி
என்னவாயிற்று?
ஜடைகள் புதைக்கப்பட்டன
செய்தி விம்மல்களானது
புங்கம் மறுமுறை
தூங்கியது
மெல்லிய ரசக்கண்ணாடின்
உடைந்த துகள் போல
இன்னும் உடைபட ஏதுமில்லை
என்பது போல
இன்னொரு காதலுக்கு
காத்திராமல்
மண்ணுக்கடியில் ஒவ்வொரு
வேரையும் தற்கொலை
செய்துகொள்ளுங்கள் என
மன்றாடியது
வேர்களுக்கேது காதல்
விடாமல் வளர்ந்தது

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...