புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. ஒருக்களித்து படுத்ததில் கொஞ்சம் ஆறுதல். நாற்பத்தியைந்து வயதில் எவ்வளவு தான் படுத்தி எடுக்கும்? எல்லாம் புகுத்திக்கொண்டது, தானே தொத்திக்கொண்டது அல்ல. வர வேண்டாம் என நினைப்பதெல்லாம் வராமல் தான் இருக்கும். வந்து விடுமோ, வந்தால் என்ன ஆகுமோ, வந்தே விட்டதோ என விட்டத்தை பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் வந்து தான் தொலைக்கும். என்னவோ இதயத்தையே இழந்து விட்டதை போல சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். வெத்துவேட்டான ஒரு பிரச்சினை தான். வாய்வு தொல்லை. யாருக்குத்தான் இல்லை என நீங்கள் சொல்லும் வெறுப்பு வார்த்தைகள் எனக்கு கேட்கத்தான் செய்கிறது. தெரிந்தே கடந்து செல்கிறேன்.
இவ்வளவு விரிவாக ஜவ்வு போல வாய்வு தொல்லை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கும் போது தான் குளிரை உணர்கிறேன். உறைகிறேன், இதற்காகத்தான் வந்தேன். குளிர் என்னை அடை காக்க வேண்டும் என்று தான் வந்தேன். அதையும் தாண்டி வேறு என்னவெல்லாம் என்னை அமிழ்த்தும் எனும் போது தான் ஒன்று புரிந்தது. உள்ள பரிமாற்றத்திற்கும், அதன் மேல் கீழ் இயக்கத்திற்கும் ஒரு இயற்கை நிகழ்வு எப்போதும் பக்கத்திலேயே இருந்திருக்கிறது. அந்த இயக்கம் ஒரு நேரம் மகிழ்வின் உச்சத்தில் கொண்டு செல்கிறது. இன்னொரு நேரம் சோகத்தின் அந்தத்திற்கு கொண்டு செல்கிறது. இப்போது அந்த அந்தத்திற்கு தான் ஏங்கி வந்திருக்கிறேன். அந்த அமிழ்த்துதல் இப்போதைக்கு தேவைப்படுகிறது. என்னதான் அது சொல்லித்தொலையேன் என சொல்வது கேட்கிறது. எப்படி நாங்கள் நினைப்பது உனக்கு கேட்கிறது என நீங்கள் கேட்பதும் எனக்கு கேட்கிறது. நாங்கள் சொல்வதையும், அதை நீ புரிந்து கொண்டாய் என சொல்லும் மேதாவித்தனத்தையும் கேட்பதற்கு தான் நாங்கள் உனக்கு பத்து நிமிடங்கள் கொடுத்திருக்கிறோமா என கேட்க வாய்ப்பும் இருக்கிறது. கேட்டு விடுங்கள். அந்த ஆசுவாசத்திற்கு பின் பதில் சொல்கிறேன்.
அந்த ஒரு நொடி தான் எனக்கு இத்தனை நெருக்கடியை கொடுத்தது. அவளுக்கு என் மேல் மிகப்பிரியம். பிரியம் என்றால் அவ்வளவு பிரியம். எனக்கு சமைத்து போடுவாள். தலையை கசக்கி பிழிந்து சீயக்காய் போட்டு, பட்டு போல தலை முடியை அலை போல மாற்றி விடுவாள். கொஞ்சம் முகம் சுளித்தால் போதும், அடுத்த நிகழ்வு அத்தனையும் என்னை பேரன்பில் ஆழ்த்தும். கொஞ்சம் கூட சுணங்கி போக விட மாட்டாள். ஏன் இவ்வளவு காதல் என்று கேட்டால், அதை அன்பு என்று சொல்வாள். சரி அது கூட எதற்கு இவ்வளவு என கேட்டாள், பதில் இருக்காது. அடுத்த சமையலில் அதற்கு பதில் இருக்கும். நாக்கில் இருக்கும் சுவை நரம்புக்கும் அவளுக்கும் பெருத்த நட்பு உண்டென்பது பல வருடங்களுக்கு பின்பு தான் எனக்கு புரிந்தது. ஏதோ கொடுத்து வைத்தவள் போல, அவள் சமைத்தால் மட்டும், நாக்கை வழித்துக்கொண்டு அந்த சுவை நரம்புகள் பல் இளிக்கும். எத்தனை நாள் தான் இதையே செய்து கொண்டிருப்பாள். அதற்கும் பதில் இல்லை. அவளுக்கு அன்பை பொழிந்து கொண்டிருக்கும் ஒரே சாபம் மட்டும் விதிக்கப்பட்டு இருந்தது போல. அதுவும் எனக்கு மட்டும். அது என்ன சாபம் என்று கேட்டால், ஆமாம் பின்னே எனக்கு, அதுவும் என்னைப்போன்ற நிரந்தர மனிதத்தன்மை இழந்தவனிடம் இவள் அத்தனை கொடுப்பது சாபம் தான். அவளுக்கு என்னமோ என்னை பார்த்தால், அவள் சொல்லும் அன்பு, பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அப்படி வந்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி.
அந்த ஒரு நொடி. நொடிக்கு பின் அவள் மீது பல ரத்த தடங்கள். முகத்தில் தான் அத்தனையும் இருந்தன. என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தன. காரணம் கேட்க கூட எனக்கு திராணி இல்லாமல் இருந்தேன். என் மரியாதைக்குரிய ஒருவன் தான் அதை செய்து வைத்திருந்தான். அவனிடம் எனக்கு கொடுக்க நன்றிகள் மட்டுமே இதற்கு முன் இருந்தன. என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவன் தான் செதுக்கி இருந்தான். அவன் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன். அது இல்லாவிட்டால் எதுவும் இல்லாமல் போய் இருப்பேன். அவனுக்கு அப்படி என்ன ஒரு காழ்ப்பு! அதற்கு முன் அடித்து ரத்த காயம் வரும் வரவைக்கும் வரை அவள் ஏன் பூப்பறித்துக் கொண்டு இருந்தாள்? அவளுக்கு மட்டுமே வெளிச்சம். அந்த காய காட்சிகளுக்கு பின் நான் எனக்கான கூட்டில் அடைந்து விட்டேன். அந்த கூட்டில் எனக்கு இருந்தது ஒன்றே ஒன்று தான். தாழ்வு மனப்பான்மை. அது சரி, அதற்கும் உன்னை விரும்பிய ஒருவரை, உன்னை உருவாக்கிய இன்னொருவர் அடித்து திருப்பிய பின்னர், கேள்வி கேட்காமல் இருப்பாயா என்று. உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எல்லா கன்றாவியும் சேர்த்து தான் மனிதனை உருவாக்கி இருக்கிறது. அது எனக்கு அதிகம் பூசப்பட்டு இருக்கிறது போலும்.
இப்போது நான் இருப்பது இருள் அமிழ்த்தும் ஒரு இடம். குளிர் காலத்தில், குளிரும் இருட்டும் சேர்ந்து அடர்த்தியான ஒரு மகரந்த சேர்க்கையை உருவாக்கும். அது பல வாரங்கள், மாதங்கள் நீடித்து இருக்கும். அந்த நிகழ்வில் தான் நான் என்னை மறைந்து போகவும், மறைத்து வைக்கவும் வந்தேன். சூரியன் விழித்து ஒளி பரப்பும் ஒவ்வொரு நாளும் என்னை நானே நொந்து கொண்டேன். அதை தாண்டி வர இது ஒன்றே எனக்கு தேவைப்பட்டது. சூரியன் வேண்டாம், ஒளி வேண்டாம், புத்துணர்ச்சி வேண்டாம். என் கூட்டை இயற்பியல் மாற்றத்தைக்கொண்டும் அழகு படுத்திக்கொள்ள ஆசைப்பட்டேன்.
ஸ்வல்பர்ட், எனக்காக செய்து வைத்த தேவதை போல இருந்தாள். அங்கே சென்றபோது தான் உணர்ந்தேன், நான் தேடிச்சென்ற இரவும், ஒருங்கிணைந்த அட்டைக்கறுப்பு வெளியும் எனக்கு அமையாதோ என பயந்துவிட்டேன். நான் சென்று இறங்கிய பொழுது இரவு தான். இப்போது அங்கு இரவு தானே இருக்கும். இந்த மாதம் டிசம்பர். பூமிப்பந்தின் பல இடங்கள் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருக்கும், ஸ்வல்பர்ட் மட்டும் குளிரையே போர்த்திக்கொண்டு இருக்கும். நான் பயந்தது அங்கு இருந்த ஒளிப்பாய்ச்சல். இருக்கும் சிறிது இடத்தில் அவ்வளவு வெளிச்சம். மனிதன் உருவாக்கிய பல உத்திகளில் இந்த செயற்கை வெளிச்சம் இப்போது அலுப்பு ஏற்றியது. ஆனால், கொஞ்சம் யோசித்து தான் அந்த சின்ன நகரத்தின் கடைக்கோடியில் இருந்த ஒரு வீட்டை எனக்கான ஜாகையாக தேர்வு செய்திருந்தேன். அந்த வீட்டின் அம்மணி மிக அன்பானவள். கூகுள் சாட்டில் மிகுந்த அன்போடு பேசினாள். கூகுள் நடுவில் இல்லாத நேர்மையான அந்த முகமும் மனதும் அதே அன்போடு இருக்கும் என நம்பினேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன. இரவு என்னை ஆராதித்துக்கொண்டே இருந்தது. அல்லது நான் அதை காதலித்துக்கொண்டே தான் இருந்தேன். இடையிடையே விழிப்பில் ரத்த காயங்கள் கண் முன்னே வந்தன. முகமில்லா முகத்தில் இருந்த வலி என் மேல் அவ்வப்போது படரத்தான் செய்தது. உதறித்தள்ள வேண்டி இருந்தது. என் சோகம் இந்த இரவுக்குள்ளும் குளிருக்குள்ளும் தற்கொலை செய்து கொள்ளட்டும் என காத்திருந்தேன். சில நாட்களில் அது புதைந்தது. அப்போது தான் அவள் திரண்டு எழுந்து வந்து என் முன் வந்தாள்.
அவளுக்கு பெயர் இருந்தது, நாஸ்தென்கா. பேசினாள், நானும் பேசினேன்.
அவள் பேசுவதைக் கேளுங்கள்.
உனக்கு ஏன் இவ்வளவு தூரம் வந்தும் சோக முகம் கொண்டுள்ளது? நீ வந்துள்ள வடிவத்தை பார்த்தால், சுற்றுலா பயணியைப்போலத்தான் இருக்கிறது. இங்குள்ள பலரும் ஒரு இரண்டு பெட்டிக்குள் அடங்கி விடுவார்கள். முதல் பெட்டியில் சுற்றுலா என்ற பெயரில் நார்த்தன் லைட்ஸ் பார்க்கும் ஒரு கட்சி. இரண்டாவது பெட்டியில் ஆராய்ச்சி செய்கிறேன் என்கிற சும்மாத்து பேர்வழிகள். இரண்டு பேராலும் இந்த ஊருக்கு ஒரு உதவியும் இல்லை. வரும் அனைவரும் சேர்ந்து அவர்களின் கழிவுகளை விட்டுவிட்டு போகும் விஷ மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இரு பிரிவினரும் எப்போதும் முகத்தின் இறுக்கத்தை காட்டிக்கொண்டதே இல்லை. ஏதோ ஒரு வகையில், இந்த நகரம் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. வானின் வண்ணக்கூடலோ அல்லது இதுவரை தொட்டிராத நிலப்பரப்பின் விந்தைகளோ, அல்லது அது வெளிப்படுத்தும் இயற்கை எச்சங்களோ என ஏதோ ஒன்று. நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாய். அது தான் எனக்கு விந்தையாக இருக்கிறது.
நானும் பேசினேன். அதற்கு முன், நீ எப்படி அவளிடம் தொடர்பு கொண்டாய், அந்த கதை எங்கே என கேட்பது எனக்கு கேட்கிறது. நான் தான் சொன்னேனல்லவா, நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும். அப்படி ஒரு ஜந்து நான். அதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை.
நான் இங்கே வந்ததற்கு காரணம் ஒரு சிறிய மரணம். அது கொடுத்த பூபாள பாரம். அதை என்னால் தாங்க முடியவில்லை. அதை தொலைக்க எந்த வழியும் இல்லை.
அது இங்கே தொலைந்து விடுமா என்ன? உன் பேச்சே விந்தையாக இருக்கிறது.
இங்கே இருக்கிறது. இருந்தால், இங்கே மட்டும் தான் இருக்கும்.
புரியாமல் பேசுகிறாய். அல்லது நீ புரிந்தும், எனக்கு புரியாமலும் இருக்கலாம்.
என் சோகத்திற்கு பரிகாரம் எனக்கு கொடுப்படும் தோள்கள். அது என் பேச்சையும், கண்ணீரையும் தாங்கி குளம் குளமாக என்னை அதில் நனைக்க விடும்.
அப்படி தோள்கள் உனக்கு கிடைக்கவில்லையா?
கிடைத்தது.
பின் என்ன?
எத்தனை நாள் கிடைத்தது என்பது தான் கேள்வி.
எத்தனை நாள் நீ எதிர்பார்த்தாய்?
அதற்கு கணக்கு இல்லை. நான் சுமந்த பாரம், ஒரு யுகத்தின் பாரம். என் பாகங்கள் அத்தனைக்கும் உயிர் கொடுத்த இன்னொரு உயிரை, என் வாழ்வு கொடுத்த இன்னொரு உயிர் பறித்தெடுத்து என் கண் முன்னே உறித்துபோட்டது என்பது எனக்காக எழுதப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. அந்த நிகழ்வை நான் எப்பொழுதும் சந்திக்கப்போவதில்லை என்ற இறுமாப்பு இருந்தது. எல்லோருக்கும் அப்படித்தானே?
அதை நீ சொல்ல முடியாது.
இருக்கலாம். ஆனாலும், எனக்கு கிடைத்த மனிதர்கள் வெறும் தோல் கொண்ட தோள்கள். அவை வெறுமனே சதைகளின் சுமை தாங்கிகளாக மட்டுமே இருந்தன.
சரி விட்டுத்தோலை. வேறு ஏதாவது பேசலாம்.
நீ யார்? உனக்கு இந்த நகரத்தில் என்ன வேலை? சுற்றுலாவா இல்லை ஆய்வு அறிக்கை கொடுப்பவளா?
இரண்டும் இல்லை. இந்த நகரத்தின் தேவதை நான்.
தேவதையா? நீ என் கனவு என சொல்லப்போகிறாயா?
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.
இருக்க வாய்ப்பில்லை. உன்னை தொட்டு உணர்ந்தேனே! கதவைத்திறந்து நான் தானே உன்னை உள்ளே அனுமதித்தேன். கதகதப்பை உணர்ந்தேன்.
உணர வாய்ப்புண்டு. எனக்கு அப்படி ஒரு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
நானே முக்கால் பாகம் குழம்பிப்போயிருக்கிறேன். நீ வேறு அதை கிண்டிப்பார்க்கிறாய்.
சரி சரி, உண்மையை சொல்கிறேன். இந்த நகரத்தின் பூர்வீக குடிகளில் நானும் ஒருத்தி. என் முப்பாட்டன்களின் முப்பாட்டிகள் பிறந்து வளர்ந்த நகரம் இது.
இந்த நகரத்தின் சரிபாதி உன் பரம்பரைக்கு உட்பட்டதோ?
அதெல்லாம் இங்கு இல்லை. இயற்கையின் சுத்தமான மடியில் லௌகீக பிணைப்புகள் இருப்பதில்லை. உங்கள் இமய மலையில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். காலம் காலமாக. அவர்களுக்கு சதுரஅடி எல்லாம் தெரியாத ஒன்று. அதே போலத்தான் இங்கும்.
எப்படி குளிரை சமாளிக்கிறீர்கள்?
சமாளிக்க என்ன இருக்கிறது. எங்களுக்கு இது புனையப்பட்ட ஒன்று.
புனையப்பட்டதா? பிணையப்பட்டது என்று தானே சொல்ல வருகிறாய்?
இல்லை, புனையப்பட்டது தான். ஆதி மக்களின் வாழ்வியலில் புனைவு மிக முக்கியமானது. அந்த புனைவு பல்லாயிரம் ஆண்டுகளாக செதில் செதிலாக உள்ளே செலுத்தப்படும். செலுத்தப்பட்டவை உயிர் பெறவும் செய்யும்.
நீயும் நானும் ஒரே இனம் தான் என நினைக்கிறேன்.
நான் சொல்வது உனக்கு புரியவில்லை. நீ சொல்வது எனக்கு புரியவில்லை.
இருந்துவிட்டு போகிறது. புரிந்து புரிந்து பேசி இந்த உலகம் என்ன அமைதிப்பூங்காவாகவே இருக்கிறதா என்ன? நிமிடத்திற்கு ஒரு முறை குரோதத்தால் உயிர் போகிறது. புரியாமல் பேசினால் நலன் தான்.
நாம் சில நொடிகள் வெளியே காற்றாட வெளியே செல்வோமா?
கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அடங்க பல நொடிகள் ஆனது. சிரிக்கும் போது தெரிந்த தெற்றுப்பல் அவளுக்கென கொல்லனிடம் கொடுத்து செய்து வைத்தது போல சில்லிட்டது.
சொல்ல ஆரம்பித்தாள்.
இங்கு வந்து இத்தனை நாள் ஆனபின்னும் உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா?
புரிகிறது. இங்கே நடை பயிலுபவர்கள் குறைவு தான்.
இல்லை, நான் சிரித்தது அந்த காரணத்திற்காக இல்லை. வேறொன்று இருக்கிறது.
என்னது அது?
சொல்லாமலேயே இருப்பது தான் உனக்கு நல்லது.
உனக்கு திருமணமாகி விட்டதா, என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். அவள் என்ன சொல்வாள் என தெரியும்.
எனக்கு பல திருமணங்கள் நடந்தது உண்டு.
இந்த பதிலுக்கு என்ன கேள்வி கேட்பதென்றும் தெரியவில்லை. தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதும் இல்லை.
அவள் நாளை வருகிறேன் என சொல்லிச்சென்றாள். இந்த தெருவின் கடைசி நான், முதலில் அவள் என்று அவள் சென்று அடையும் போது தெரிந்து கொண்டேன். ஐந்து வீடுகள் கொண்ட தெருவில் முதலென்ன, கடைசி என்ன. எல்லாம் ஒன்று தான்.
அடுத்த நாள் வரும் போது என் உரையாடலை அவள் விரும்பவில்லை. ஆனாலும் அவள் ஒன்றை வற்புத்திக்கொண்டே இருந்தாள். மூன்று நாட்கள் ஆகலாம், ஆனாலும் பரவாயில்லை, நீ அந்த புள்ளியில் இருந்து உன் வாழ்வை மறுமுறை மீட்டெடு என்றாள்.
எந்த புள்ளி என்ற கேள்விக்கு பதில், வட துருவப்புள்ளி என்றாள்.
அது எனக்கு முக்கியமல்ல. வேண்டாம் என்றேன்.
நீ சென்றடைய வேண்டியது அங்கு தான், என்றாள்.
மூன்று நாட்கள் வாழ்வில் இழக்க முடியாத ஒரு பயணமாக இருந்தது. இரண்டு நாட்கள் குட்டி குட்டி விமானங்கள் மூலம் சென்றோம். கடைசி விமானத்திலிருந்து அடுத்த இலக்கிற்கு செல்வதற்கு நாய்கள் தான் உதவின.
கடைசி கட்டம், நடந்தே செல்ல வேண்டிய நிலை. அவளுக்கு இதெல்லாம் மிகச்சுலபமாக இருந்தது. எனக்கு உதடுகள் உலர்ந்த நிலை போய், அவ்வப்போது இதயமே உலர்ந்து போனது. ஆனாலும், அவளின் தெற்றுப்பல் சிரிப்பு அவ்வப்போது மலர்வித்தது. தொட்டு உணர வேண்டும் போல இருந்தது. பல்லை அல்ல. அவளுக்கும் எனக்கும் இடையே இருபது உடைகள் இருந்தன.
வா இன்னும் இரண்டு மணி நேரம் தான் என்றாள். இடையிடையே நிறைய இடங்களில் எங்களுக்கு தடை. சுற்றி அடிக்கும் வெள்ளைக்காற்று. முதற்க்குளிரின் பிணி. இங்கிருந்து படரும் குளிர் தானே மற்ற இடங்களுக்கு. அருவியின் முதல் துளி தான் பிரவாகத்தின் தாய். உக்கிரத்தையும் கொண்டிருக்கும், ஆதாரத்தையும் கொண்டிருக்கும். இந்த குளிர் அப்படி இருந்தது. எங்கள் இருவருக்கும் அந்த நிலப்பரப்பிற்கும் இருந்த ஒரே தொடர்பு கண்கள். அந்த புலன் மட்டும் தான் அனைத்தையும் உணர்த்தியது. மற்ற புலன்கள் உறைந்திருந்தன.
நில், இனிமேல் நடக்காதே என்றாள்.
நீ நிற்பது தான் ஆதியும் அந்தமும். இங்கிருந்து அனைத்துமே வழிந்தோடல். இங்கு இருக்கும் காற்று, இங்கு உருவாகும் பிரயாணம் தான் உலகத்திற்கு ஊற்று. இதையே உண்டு வாழ்கிறார்கள். இது இல்லாவிட்டால் சிதறி ஓடும், பூமியே இல்லாமல் போகும். நீ நிற்பது தான் வட துருவப்புள்ளி. இங்கிருந்து அத்தனையும் தெற்கு. அத்தனையும் மேற்கு. அத்தனையும் கிழக்கு. நான்கு ஒன்றாகும் ஒற்றைப்புள்ளி. இங்கு இறை உண்டு, நீ உண்டு. நீயும் இறையாவாய், இரையும் ஆவாய்.
அவள் உளற ஆரம்பித்துவிட்டாள் என தோன்றியது.
சிறிது கால் உயர்த்தப்பட்டது. உடைகள் தளர்ந்தன. ஒரு விரல் தலை தொட்டது.
என் காயங்கள் உன்னை காயப்படுத்தி இருக்க வேண்டாம். உன்னை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. இங்கே தான் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறேன். உனக்கான பாதை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். நிதானமாக வா. காத்திருப்பேன். உனக்காக சீயக்காயை உலர்த்தி வைத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment