Friday, August 03, 2007

Operation Tumbler

பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு அல்லது வலுக்கட்டாயமாக தன் வாயில் திணித்த என் அறை நண்பரின் அதீத அமைதி ஞாபகம் வந்து தொலைத்தது. இப்போதைக்கு, மணக்க மணக்க எந்த கன்றாவியும் செய்யும் நிதானம் இல்லாததால், ரசமான அவர் சாதத்துடன் கலக்கபட்டார். அப்பளம் வறுப்போம் என மைக்ரோவேவில் வைத்தேன். இங்கு குறிக்கபட்டிருந்தது என் 2 மணி நேர சனி. என்னடா, மைக்ரோவேவில் மேகமெல்லாம் உருவாகுது என பக்கி மாதிரி யோசித்ததில் உறைத்தது, அதன் சமையல் நிமிடங்கள் இரண்டை தாண்டி புகை மூட்டத்தை பரப்பிவிட்டு கொண்டிருந்தது. திறந்ததில், இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ பாடிக்கொண்டே fire alarm இருக்கும் பக்கம் அசைந்தாடி ஓட, நான் இன்னொரு பக்கம் ஓடி திறக்க வேண்டியதை திறந்து, நிறுத்த வேண்டியதை நிறுத்தி, எல்லாம் செய்து அப்பாடா என திரும்பியதில், நான் இங்கே இருக்கேன் என சனி பகவான் சின்க்கில் சப்பலாங்கால் போட்டு உட்கார்ந்திருந்தார். இப்போ என்னப்பா?

அவசரத்தில் அரட்டி உருட்டியதில், அந்த தண்ணீர் குடிக்கும் tumbler சரியாக sink ஓட்டையில் செட்டில் ஆகி விட்டிருந்தது. சரி, நல்ல வேளை பெரிய ஏழரை இல்லை, என நினைத்து, ஒரே அமுக்காக கையை விட்டதில் சற்றே உள்ளே போய் பட்டா போட்டு விட்டு கொண்டுவிட்டது. சுற்றி ரப்பர் மேட்டர் வேறு. சரி, இந்த தடவை smart அமுக் குடுக்கவேண்டும் என்று முயற்சி செய்தால், ம்ம். நான் வர மாட்டேன் என ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் அக்கவுண்டன்ட் மாதிரி கல்லாகி விட்டிருந்தார். எவன்யா அது, சின்க் ஓட்டையையும் க்ளாஸ் சைசையும் சரியா பிட் ஆகற மாதிரி வச்சு, என்ன கலாய்க்கறீங்க.

எத்தனையோ பிரயத்தனம். சைடில் ஸ்பூன் வைத்து நெம்பியதில், ஸ்பூன் வளைந்து கொடுத்து நீ அங்கியே இரு ராஜா. நான் உன்ன எதுவும் செய்யல, என முடிவுக்கு வந்து விட்டிருந்தார். இப்போதைக்கு டென்ஷன் கழுத்துக்கு கீழ் வரைக்கும் வந்து விட்டிருந்தது. என்னப்பா ஒரு சின்ன tumbler மேட்டருக்கா இவ்ளோ அதகளம் பண்ற என்பவர்களுக்கு, நான் கொஞ்சம் வித்தியாசமுங்கோ. இதுல என்னா வித்தியாசமென்று கேட்பவர்களுக்கு, பதில் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த உபகரணம் கத்தி. எதுக்குப்பா? இந்தியாவுல இருந்தா கரடு முரடா கண்ட கஸ்மாலமும் கிடைக்கும். இங்கே எல்லாம், தொட்டால் பூ மலரும் டைப்பில் தான் பல மேட்டர்கள். கத்தி, என்னால முடியாது பாஸ். வேற ஆள் பாத்துக்கோங்க என கூர் பல் காட்டியது. சரி, ஸ்பூன் ஒரு பக்கம் கத்தி இன்னொரு பக்கம், ரெண்டு resource குறைவான பில்லிங் ரேட்டில் வேலைக்கு வைத்து, அப் ஹெலா ஹைலசா பாடி இழுக்க, வளைந்து கொடுத்த அவர், நீ பாடினத்துகாக இந்த வளைவு எல்லாம். மத்தபடி நான் வரதா இல்ல என்றார்.

தெனாலியில் ஏதோ நெட்டை மரம் ஜோவின் மேலும், தேவயானி மேலும் விழுந்து விட,கமல் 'டொக்டர், நீங்களும் தூக்குங்கோ, அந்த கண்டி கதிர்காம கந்தனும் தூக்கி தருவான்' என சொல்லி, கீழே ஜோவுக்கு கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். அந்த நிலைமைக்கு வந்த நான், திருமலை பாலாஜி சார் - இந்தியா வரும்போது உங்களுக்கு வடை மாலை சாத்தறேன் என வம்படிக்கு வேண்டிகொண்டும், ஓரணுவும் அசையவில்லை. அப்புறம் தான் உறைத்தது, வடை மாலை நங்கநல்லூர் சாருக்கு ஆச்சே.

சரி போனா போகட்டும், டெமாலிஷ் செய்து விடலாம் என்று பார்த்தால், உடைந்த பாகங்கள் சின்க்கின் உள்ளே விழுந்து, அடுத்த தலைவலியை கொடுக்கலாம் என்பதால், மெதுவாக டம்ளரின் ஓரத்தை சிராய்த்து, பீஸ் பீஸாக்கி ஒரு வழியாக எல்லா பாகத்தையும் எடுத்து என் 2 மணி நேர சனி திசையை முற்றும் போட்டேன்.

பள்ளியில் physics ஒழுங்காக படித்திருந்தால், இல்லை, logic சரியாக போட தெரிந்திருந்தால் இத்தனை குஸ்டமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியோ அபார்ட்மெண்ட் தாத்தாவிடம் திட்டு வாங்குவத்தில் இருந்து தப்பித்து விட்டேன், கையில் சில பல வெட்டு காயங்களுடன். உடனே band-aid போட்டேன், பந்தாவாக வலம் வர வசதி. இதுல என்ன பந்தா என கேட்பவர்களுக்கு, உங்கள் மெயிலில் பதில் அனுப்பபடும்.

இத்தனையும் படித்து இங்கே வந்திருந்தால், டிஸ்னி லேண்டின் சில தேவதைகளின் கடைபார்வையை கஷ்பட்டாவது fed-ex செய்து வைக்கிறேன். உங்கள் வெள்ளெலியையோ, கருப்பெலியையோ உருட்டி உருட்டி நேராக (படிக்காமல்) இங்கே வந்திருந்தால், விஜய டி. ராஜேந்திரரின் அடுத்த பட DVD அனுப்பி வைக்கப்படும்.

சமத்தாக படித்து விட்டு, அவ்ளோ கஷ்டமாவா இருந்தது என அப்பாவியாய் கேட்டால், பதில் மெயிலில் எல்லாம் இல்லை. இங்கேயே. உங்கள் வீட்டு சின்க்கில் அந்த ஓட்டைக்கு சரி சமமான டம்ளரை போட்டு எடுங்கள் பார்ப்போம்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...