Wednesday, June 03, 2020

சிறை

உலகம் அழியப்போகிறதோ என்னமோ, இன்றைக்கு தோசை நன்றாக வந்திருந்தது. வழக்கமாக பாதி பிய்ந்து போகும், இல்லையெனில், நானா நீயா என என்னிடம் சண்டை போடும், அதே நேரத்தில் கல்லுடன் காதல் கொண்டிருக்கும். பசை போட்ட காதல். இத்தனைக்கும் நடுவே இதுவும் தோன்றியது. நான்கு கழுதை வயசாகி விட்டது, முதல் கழுதை வயசான போது இருந்த வீடு இங்கு தானே இருக்கிறது. போய்த்தான் பார்ப்போம் என்று, எங்குமில்லாத மனம் சொன்னது. அங்கு சென்றால், என்னவெல்லாம் உருளுமோ என்ற பயம் வேறு. இந்த மனம் தானே அங்கு காயப்பட்டது. காயத்தை நாக்கால் வருடும் நாய்க்குட்டி போல, எனக்குள் ஏதோ வருடிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. இந்த நேரமும், நொடியும் அதற்கான தொடுதலை ஏற்படுத்திக்கொண்டது போலும்.

தோசை கல்லை நிறுத்திவிட்டு, பைக்கை தொட்டு தொடக்கினேன். மெதுவாகவே செல்ல தோன்றியது. அதற்குள் மனம் தயாராகிறதோ என்னமோ. அதற்கும் ஆண்டாண்டு காலங்கள் முன்பிருந்த நினைவுகளை கோப்பில் இருந்து வெளியே கொண்டுவரவேண்டுமல்லவா. என்னை தாண்டி போன பாண்டியன் சித்தப்பா, என்ன என் மகனுக்கு மெதுவா கூட வண்டி ஓட்டத்தெரியுமா என்று கேட்டுக்கொண்டே போனார். அவர் என்னை சீறும் சிட்டெறும்பாக தான் பார்த்திருக்கிறார். அசலில் இருந்து வெளியே வந்தாலே, வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பா, சும்மா என்று சொல்லி முடிப்பதற்குள்ளே, அங்க சைக்கிள் கடை அண்ணாச்சியிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் உலகம் இப்படித்தான். நாம் பதில் சொல்வதற்குள், அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறது. அதற்கு யார் தான் வேகத்தடைகளை எல்லாம் நீக்கி விட்டார்களோ தெரியவில்லை. மனம் இன்னும் மனனம் செய்து கொண்டிருந்தது. எப்படி வைத்து செய்யப்போகிறது என்று தோன்றவில்லை. அதற்கு இன்னொரு மனம் இல்லை. இல்லாத மனதிற்கு இரு உருவம் எப்படி கொடுப்பது. குழப்பம் தான்.

தூரத்தில் மக்கிப்போன சாம்பல் வண்ணத்தில், குவார்ட்டர்ஸ் நின்று கொண்டிருந்தது. எத்தனை கால தவம். வலி என்று ஒன்று இருந்திருந்தால், அது இந்நேரம், இந்த குவார்ட்டர்ஸை படுத்த படுக்கை ஆக்கி இருக்கும். யாரோ ஒருவர், அல்லது பல பேர் அதனுள் எத்தனை வலிகளையும், சிரிப்பையும், அழுகையையும், ஆணவத்தையும், கேணைத்தனங்களையும் பதித்து வைத்துள்ளனர். அதுவே மிகப்பெரும் துயர். எதனை ரசிப்பது, எதனை விடுப்பது. அதுவும் குழம்பித்தான் போயிருக்கும், என்னைப்போலவே. செங்கல்லுக்கும், சிமென்டிற்கும் மனமுண்டு என்று ஒரு நாள் சொன்னபோது அப்பா என்னை பக்கத்து மசூதியில் கொண்டு சென்று மந்தரித்துக்கொண்டு வந்தார். அஃறிணைக்கு ஒரு உயிர் உண்டு. அதனுள் ஆராய்ந்தால், நாமும் இருந்திருப்போம். அந்த குவார்ட்டர்ஸில் நான் இருந்ததை போல.

சுவாசப்புகையை நிறுத்தி, பைக் ஸ்டான்ட் போட்டேன். என் பழைய, முதல் கழுதையை சுமந்த டி-54, சாந்தமாக என்னை கண்டு இளித்தது. பழைய வீடாகிப்போன வீட்டிற்கு, புதிய கதவு இருந்தது. அரசாங்கம் எப்போதோ ஒரு நாள், ஒரு சின்ன விஷயத்தை சரி செய்யும். அந்த கதவிற்கு சரியான வண்ணம் அடித்திருக்கலாம். அங்கங்கு உள்ளிருந்த மர தசைகள் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தன. தட்டினேன்.

யாருப்பா!!!

என கேட்ட அந்த பெண்மணிக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கும். ஒருவரை குறிப்பதற்கு வயதை கொண்டு தான் குறிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு மேல் போனால், உடற்கூறுகளை குறிப்பிட வேண்டும். இதில் எல்லாம் எங்கே அந்த மனம்.... அது சரி, எதற்கு அந்த புதிய பெண்மணியின் மனத்தை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்பா, என்னை மசூதிக்கு கொண்டு சென்றது சரி தான்.

நான், அங்க ரிலையன்ஸ் பிரெஷ் பக்கத்துல இருக்குற அபார்ட்மெண்ட்ல குடியிருக்கறேன்.

நாங்க அங்க எல்லாம் காய்கறி வாங்கறது இல்லைங்க.

நான் காய்கறி விக்க வரலைங்க...

ஓ, அப்படியா, மன்னிச்சிடுங்க. அப்புறம் எதுக்கு கதவை தட்டினீங்க...

பின்னால் ஒரு குழந்தை காலை சுற்றிக்கொண்டிருந்தது. குழந்தைக்கும், காலுக்கும் நடுவே இருந்த ஒரு தரைப்பிளவில் என் நினைவு குத்தி நின்றது. இங்கு தானே, ஒரு நாள் தவறி விழுந்து மண்டைக்கு நடுவே சிவப்பு துளிகள் வியர்த்தது.

இந்த நினைவுக்குழிக்குள் நான் இருக்க, அந்த பெண்மணி கதவை மூடிவிட்டாள். சொல்லவந்ததை சொல்லி முடிக்கும் முன் இந்த மனம், அப்பா மசூதிக்கு கொண்டு சென்றது சரி தான்.

மறுபடியும் தட்டினேன்.

என்னதாங்க வேணும்..

கொஞ்சம் கடுப்பேறி இருந்தார். இந்த முறை தரைப்பிளவை எல்லாம் நோக்காமல், சொல்ல வந்ததை சொன்னேன்.

முப்பது வருஷத்திற்கு முன்னாடி, நாங்க இங்க தான் குடி இருந்தோம். அப்பா, தாசில்தார் ஆபிஸ்ல குமாஸ்தாவா இருந்தாரு. இப்போ ரிடையர் ஆயிட்டாரு. நாங்க ஒரு பதினஞ்சு வருஷம் இங்க தான் இருந்ததா அப்பா சொல்லி இருந்தாரு. நான் ஹை ஸ்குல் போற வரைக்கும் இங்க தான் இருந்தேன்.

அதுக்கு என்ன இப்போ?

பின்னிலிருந்த காலை சுற்றிய குழந்தை இப்போது சமையல் அறைக்குள் எதையோ உருட்டிக்கொண்டிருந்தது. அந்த பெண்மணி, பின் திரும்பி, குழந்தையை வையக்கூடாத வார்த்தையை கொண்டு வைதார். அது ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அம்மா அங்கே தான் பல நாட்கள் தனியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். சமைக்கும் வரைக்கும் அம்மா தான் ராணி. பரிமாறும் போது, கொஞ்சம் வேலைக்காரி ஆவாள். பரிமாறி முடித்து, எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின், சிறைக்கைதி ஆவாள். அந்த சமையலறையில் தான் சிறை புகுவாள். அங்கேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து, மீதமுள்ளவற்றை சாப்பிடுவாள். எப்போதோ ஒரு நாள் கூட, சாப்பிட்டு முடித்த என்னை போன்ற ஜென்மமும், மசூதிக்கு இட்டு சென்ற அப்பாவும் அவள் கூட உட்கார்ந்து சாப்பிடும் வரை துணை இருந்ததாக நியாபகம் இல்லை. அந்த குழந்தை இப்பொது பெரிதாக எதையோ உருட்டியது. அந்த பெண்மணி அம்மா உக்கிரமானாள். இப்போது எனக்கும் சேர்த்து விழுந்தது.

கதவு மூடப்பட்டது.

மறுபடியும் தட்டினேன்.

திறக்கவில்லை.

ஐந்து நிமிடம் காத்திருந்தேன். பக்கத்து வீட்டு பெரியவர் மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, இவனை எந்த போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து கொடுக்கலாம் என்பது போல கண்ணை உருட்டினார். ரிட்டயர்டு கான்ஸ்டபிளாக இருக்க வாய்ப்புண்டு. அவருக்கு ஒரு மனம்.... வேண்டாம் வேண்டாம், மசூதி வேறு வந்து தொலைக்கும்...

கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக்கொண்டு, மறுபடியும் தட்டினேன். பெண்மணி திறந்தார்.

வெளிய போறியா இல்ல பக்கத்துல இருக்கறவங்கள கூப்பிட்டு வெளிய தொரத்தணுமா?

கோபத்தின் எல்லையில் இருந்தார். நான் பதில் சொல்ல எத்தனித்த பொது, என் பின்னே ஒருவரின் கை என் தோளை தொட்டது.

யாரு நீங்க? என்கிறார்.

நான், ஒரு விஷயமா இங்க வந்தேன். இப்போதான் அத பத்தி சொல்லிட்டு இருந்தேன்.

தடுமாற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்போது நடந்து கொண்டு இருக்கும் விவகாரத்தினால் அல்ல. ஆனால், கண் முன்னே விரிந்து கிடந்த பழைய நினைவுகள். அம்மா உள்ளிருந்தாள். அவள் விட்டு சென்ற வார்த்தைகள், சிந்திய கண்ணீர், சொல்லிய கதைகள், போட்ட சண்டைகள், எனக்காக அவள் உடல் வெளிப்படுத்திய வாசனை, எத்தனை எத்தனை... இதெல்லாம் விட்டு விலகி விடுமா என்ன? பிரபஞ்சத்தை ஆள்வது நான்கு சுவர்கள் அல்ல. சுவர்கள் இல்லாத மனங்கள் மட்டும் தான். அவை விட்டுச்சென்ற அத்தனையும், அதன் வெளியில் மிதந்து கொண்டு தான் இருக்கும். மனிதனுக்கு இருக்கும் நெருக்கடி, அதை நாலு சுவற்றுக்குள் தான் விட்டுத்தொலைக்க வேண்டி இருக்கிறது. பரிணாம வளர்ச்சியில், அழிந்து போன சில விஷயங்களில் ஒன்று, வெட்டவெளியில் வாழ்ந்த வாழ்க்கை. அப்போது அனைவருக்கும் அனைவரும் சொந்தப்பட்டு போயிருந்தனர். சொன்னவையும் நினைத்தவையும் அடுத்தவருக்கும் சொந்தமாகி இருந்தது. இப்போது, இந்த நான்கு சுவர் அம்மாவின் உணர்வுகளை அடைத்து வைத்திருந்தது. அவள் தான் சொல்ல நினைத்த எவற்றையும் வெளியில் சொல்லவே இல்லையே. அந்த அடுப்பிடம் சொல்லி இருப்பாளோ என்னமோ.

தம்பி, நீங்க ரொம்ப யோசிக்கறீங்க... கொஞ்சம் உள்ள வாங்க.. காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...

நல்ல மனிதராக இருந்தார்.

உள்ளே நுழைந்தோம்.

அடித்து துவைத்தது அம்மாவின் அத்தனை நினைவுகளும். கண் முன்னே கால அடுக்குகள் சரமாரியாக வெளுத்துவாங்கியது. கொஞ்சம் நிலை குலைந்தேன். நல்ல வேலை உட்கார்ந்து பேசுவதற்கு அவர் அவகாசம் கொடுத்தார்.

என்ன பாத்துகிட்டே இருக்க. இந்த தம்பிய நான் நம்ம லைப்ரரியில் நிறைய பாத்திருக்கேன். புக்கும், கையுமா இருப்பாரு. அவரை பத்தி நான் கொஞ்சம் விசாரிச்சும் இருக்கேன். தப்ப நெனச்சுக்காதீங்க தம்பி. நீங்க அப்பப்போ, கொஞ்சம் நிலை மாறிக்கிட்டே இருப்பீங்க. என்னோட தம்பி இப்படித்தான், அதனால ஒரு கரிசனத்துல கேட்டது தான்.

ரொம்ப நன்றி சார்... உங்க வீட்டுக்காரம்மாவ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்... தெரிஞ்சு பண்ணல...

பரவாயில்ல.. என்ன விஷயம் சொல்லுங்க...

நாங்க இங்க தான் பல வருஷத்துக்கு முன்னாடி குடி இருந்தோம்...

தெரியும்...

எப்படி சார்?

உங்கள பத்தி விசாரிச்சப்போ, நம்ம காளி சலூன் கடைக்காரர் சொன்னாரு. அவரு இங்க தானே நாப்பது வருஷமா குப்பை கொட்டிக்கிட்டு இருக்காரு...

ஆமா, அவரு கிட்ட தான் நான் முடி வெட்ட போவேன்..

உங்களுக்கு வீட்டை பாக்கணுமா?

ஆமா சார்...

பாருங்க... தாராளமா ஒரு ரெண்டு மணி நேரம் இருங்க.. பேசிகிட்டு இருப்போம்... நீங்க நினைக்கிறது தப்பில்ல. இது உங்க வீடு தான். நாங்க தான் இப்போ உங்க வீட்டுல குடி இருக்கோம்.

நல்ல மனசுங்க உங்களுக்கு.

அப்படி இல்ல தம்பி, ஒரு வீட்டை விட்டு போனா, நாம இருந்த இடம் என்ன அப்படியே நம்மள விட்டுட்டா போயிடும். அங்க பொழங்கினது எல்லாம் இல்லைன்னு ஆயிடுமா. நாளாகும் தம்பி. ஆனா உங்களுக்கு பல வருஷங்களாகியும் இந்த வீட்டு நினைப்பு இருக்குன்னா, ஆழமா எதோ நடந்திருக்கலாம்.

ஆமா...

பல சண்டைகள் சார். இந்த வீடு எனக்கு நரகமா தான் இருந்திருக்கு. அவ்ளோ சண்டை. எனக்கும் அப்பாக்கும் சண்டை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. எப்போ பாத்தாலும் சத்தம் தான் இந்த வீட்டுல. நான் வாழ்ந்த காலத்துல, இங்க இருந்து ஓடியே போயிடனும், இந்த இடத்தோட வாடையே வேண்டாம்னு எத்தனையோ நாள் யோசிச்சு இருக்கேன். ஒரு நாள் ஓடியும் போய்ட்டேன். அந்த காலத்துல, எப்படி ஓடினாலும், நம்மள திரும்ப வர வெச்சிடும், அது பசியோ, பாசமோ, எப்படியோ ஒன்னு இங்க கூட்டிகிட்டு வந்துடுது...

அப்புறம் எதுக்கு அந்த கனமான நினைவுகளை திரும்ப அசைபோடணும்னு நினைக்கறீங்க..

காலம் எல்லாத்தையும் ஆத்துப்படுத்துது சார்... இத்தனை நாளாச்சு, அந்த வார்த்தைகளை எல்லாம் என் மனசுக்குள்ள இருந்து வெளிய எடுத்து, ஒவ்வொண்ணா அலசி பாத்து, அதுக்குள்ளே இருந்த உணர்வை புரிஞ்சிக்க...

சரியா சொன்னிங்க... இப்போ நீங்க நல்லா இருக்கீங்க இல்ல.

சந்தோஷமா இருக்கேன் சார். இதுக்கு மேல சந்தோசம் வேண்டாம். திகட்டிடும்.

அது தான் தம்பி வேணும்.

காபி வந்தது. அந்த பெண்மணி இன்னும் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தார். என்னை தம்பியாக அழைத்த அவருக்கு வேண்டுமானால், வேற்று வீட்டுக்காரன், சக மனிதனாக தெரியலாம். அந்த பெண்மணிக்கு நான் இப்போதைக்கு ஒரு அச்சுறுத்தல். எங்கே இன்னொரு நாள் வெளியே பார்த்து ஏதாவது செய்து விடுவேனோ என்று பயம் இருக்கலாம். மனித மனங்கள் அப்படியே தான் உருவாக்கம் கொண்டிருந்தன. நான் நல்லது கூட செய்யலாம். அதை புரிந்தும் தெரிந்தும் கொள்ள, இரண்டு மணி நேரம் பத்தாது...

வீட்ட சுத்தி பாக்கறீங்களா? இருக்குற ஒரு பெட்ரும், ஒரு சமையல் அறை, ஒரு பாத்ரூம், எவ்ளோ துடைச்சாலும் போகாத நாத்தம், இத தாண்டி இந்த வீட்டுல ஒண்ணுமே இல்ல தம்பி. ஆனா, நீங்க அத பாக்க வரல.

ஆமா!!! நான் பாக்கறத நீங்க பாக்கல.. ஆனா புரிஞ்சிக்கறீங்க, அதுவே பெரிய விஷயம். சரி சார், நேரமாச்சு கெளம்பட்டுமா?

சாப்பிட்டுட்டு போகலாம்.

இல்ல சார் வேண்டாம். ஆனா ஒரே ஒரு உதவி செய்யறீங்களா?

சொல்லுங்க..

யோசனையில் மூழ்க, மசூதி மறுபடியும் வந்தது. அம்மா, அங்கிருந்து போய்ட்டு வா என்றாள்.

ஒன்னும் இல்ல சார், நாம இன்னொரு முறை லைப்ரரியில் சந்திக்கலாம்.

சரிங்க தம்பி... குட் நைட்...

கதவு மூடப்பட்டது.

சமையல் முடிந்து, பரிமாறல்கள் முடிந்து, அந்த பெண்மணி தனியே அந்த சமையல் அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...