Sunday, October 14, 2007

ஆல்பிரட் நோபல்

ஆல்பிரட் நோபல் மீது எப்போதுமே எனக்கொரு கண் இருந்ததுண்டு. ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அனுதாபம் தான். இவர் கடைசி காலத்தில் என்னடா இப்படி செய்து விட்டோமே என வருந்தி இருக்க ஏக காரணங்கள் உலகம் அறிய உண்டு.

டைனமைட் போன்ற குட்டிசாத்தானை உலகத்திற்கு பிரசவித்து விட்டு, நல்லது செய்யும் என கற்பனை கண்டுவிட்டார் இந்த அறிவியல்வாதி. இவர் இருந்த காலம் (1833 - 1896), அறிவியலை மக்கள் அரியணையில் வைத்து பார்த்து கொண்டிருந்த நேரம். எதை கண்டுபிடித்தாலும் அது பரபரவென பற்றி கொண்டிருந்தது. இவரின் அப்பாவும் அறிவியல்வாதி. குடும்ப தர்மத்தின்படி அதே படியில் பயணித்துவிட்டார். நைட்ரோகிளிசரினின் வேதியியல் மாற்றத்தை, வெடி மாற்றமாக பூலோகத்திற்கு அறிமுகபடுத்தியது 1867. அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத கலாச்சாரம் நாடுகளின் நாகரீகமாகி போனது. இரண்டு உலக போருமே இதற்கு பிறகு நிகழ்ந்தது தான். கை துப்பாக்கியை வைத்து எத்தனை பேரை சுட்டு விட முடியும். டைனமைட் போன்ற வஸ்த்துக்கள், அதன் பரிணாம வளர்ச்சி பெற்ற அதன் அண்ணன்கள், உலக போரை முடிந்த வரை வளர்த்து விட்டார்கள்.

நோபலின் கடைசி காலம், அவ்வளவாக திருப்தியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தன் சொத்து பத்து பதினொன்றை எல்லாம் தன் பெயரிட்ட பரிசுக்காக நேர்ந்து விட்டதில் இருந்தே அது தெரிந்திருக்கும். அவர் விட்டு சென்ற போது 4,223,500 USD என்று விக்கிபீடியா கணக்கு சொல்கிறது. அப்துல் கலாமிடம் எவ்வளவு சொத்திருக்கிறது என்று கணக்கு கேட்டால், அவரே, 'காமெடி பண்ணாதீங்க' என்று ஹாஸ்யம் செய்வார்.

அந்த காலத்தில் எத்தனை பேர் நோபலை எள்ளி நகையாடினார்களோ தெரியவில்லை. பெரிதாய் பாதிக்கபட்டு தானபிரபு ஆகிவிட்டார். இப்போது நோபலை பெற பெரும் போராட்டம். பல சமயங்களில் இவர்கள் பரிசை அறிவிக்கும் போது, சில பல இணை துணை அறிவியல்வாதிகள், எலக்கியவாதிகள், அமைதிவாதிகளுக்கு (எளிதாக - பரிசு கிடைக்காதவர்களுக்கு) டாப் டூ பாட்டம் எரிவதாய் மீடியா எழுதி தள்ளுகிறது. எத்தனை எத்தனை அரசியலோ?

2007. நோபல் பரிசில் அல் கோர் அமைதிக்கான பரிசை அலேக்காக அள்ளி விட்டார். கூடவே IPCC (Intergovermental Panel on Climate Change) என்ற அமைப்பும். அவர்களும், அல் கோரும் ஒரே நேர் கோட்டில், பூமி பந்தை பச்சை பந்தாக மாற்ற கூவி கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். IPCC சேர்மேன் ஒரு இந்தியர் போல. ராஜேந்திர பச்சொரி. பச்சை வெஜிடேரியனாம். இதுவும் விக்கிபீடியா உபயம். இந்தியன் ஆயிலில் சில காலம் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறார். இந்த நோபல் பரிசுக்கான அந்தஸ்த்தை தன் விஞ்சானிகளுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

மற்றபடி, இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் பெரிதாய் ஈர்க்கவில்லை. அதை ஏதாவது இந்தியர் வாங்கியிருந்தால், வெடி வெடித்து கொண்டாடி, 'ஆமாம், யாரு இவங்க' என்று வெடியின் புகை அடங்கியபின் கேட்டிருப்போம். 15 வருடம் கழித்து புத்தகத்தில் பதித்து, நம் சந்ததிகள் மாங்கு மாங்கென, புத்தகத்தில் தலை மோதி மனபாடம் செய்திருப்பார்கள்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...