திருமணம் செய்து கொண்டுவிடு
என்றான் நண்பன்
ஏனென்று கேட்டால்
தற்கொலையிலிருந்து
விடுபடுவாய்
ஆனால்
கொலை செய்யப்பட
வாய்ப்புண்டு
என்றான்
அந்த அம்மாளுக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. சிறிய ஊசியை வைத்துக்கொள்ள அனுமதி இருந்தது. அதன் மூலம் ஒரு சிறிய வலியை அவள் மற்றவர்களுக்கு கடத்திக்கொண்டே இருந்தாள். அவருக்கு மட்டும் எதற்கு இந்த விபரீத வசதி என்று கேட்டுப்பார்த்தாகி விட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் டீன் அதற்கு பதில் சொல்லாமலே நகர்ந்து விடுவார். ஆனால், அதற்கான வழிமுறைகளையும், விதிமீறல்களை பற்றி விரிவாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களிடம் தெரிவித்து அதற்கான சம்மதத்தையும் வாங்கி விட்டேன் என்று கூறுவார். எப்படி இருந்தாலும், அந்த நடவடிக்கை பலரை முகம் சுளிக்க வைத்தது.
அது ஒரு மனநல காப்பகம். எங்கு சென்றாலும் எனக்கு மனநல காப்பகங்களுக்கு சென்று வருவது வாடிக்கை. அங்கே தான் மனிதர்கள் இருப்பதாகவும், வெளியே இருப்பவர்கள் திணிக்கப்பட்டவர்கள். திணிக்கப்பட்டு, உப்பிப்போய், என்ன வாழ்க்கை இது என்று எச்சில் துப்பி அந்த எச்சிலிலேயே உட்கார்ந்து சேவகம் செய்பவர்கள் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறுவதுண்டு. இதை எல்லாம் சொல்லும்போது, நண்பன் சொல்லுவான், நீ அங்க இருக்க வேண்டியவன் தான். இங்க தான் நீ மனநிலை பாதிச்சு போய் இருக்க, அங்க போனா சுத்தமா மொழுவிட்டு வந்துடலாம்..
அவளுக்கு என் மேல் தனிப்பிரியம் என்று நினைக்கிறேன். எப்போது போனாலும் வாஞ்சையாக தடவிக்கொடுத்து பேசுவாள். பெரும்பாலும் அவளிடம் நெருங்கிப்பேச நிறைய பேர் வருவதில்லை. அவளின் சக உறைவிட நண்பர்களும் கூட பேசுவதில்லை. ஒரு மூன்று வாரங்களுக்கு பின்பு தான் அதற்கான காரணம் தெரிய வந்தது. அதுவும் அவள் கூறித்தான் தெரிந்தது. காப்பகங்களில் மூன்று வகையான மனிதர்கள் உண்டு. இதில் ஒரு வகையினர் குணமடைந்துவிட்ட, ஆனாலும், திரும்ப அழைத்துச்செல்ல இயலாத அல்லது திரும்ப அழைத்துக்கொள்ளப்படாமல் இருப்பவர்கள். அவள் அப்படித்தான். அவளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒருவனும் சீண்டுவதில்லை. விட்ட காலத்தில் கொடுத்த காசும், முறைத்த முறைப்பும் தான் அவர்களின் கடைசிப்பாசம். ஆனால், குறை சொல்ல ஒன்றுமில்லாமல் தான் இருந்தது. அந்த இரு மகன்களுக்கும் அப்படி ஒரு சம்பவ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த நாள், வழக்கம் போல ஒரு சனிக்கிழமை. அவளின் அறை மட்டும் எப்போதும் மரக்கிளைகள் தொட்டு உரசிக்கொண்டிருக்கும் படி இருந்தது. அங்கு அவர்களுக்கு தனி அறை என்பது ஒரு சின்ன வன்முறை மட்டுமே. சேர்த்து வைத்திருந்தால் கூட சரியாகி இருப்பார்களோ என்னவோ. அந்த அறைக்கு கடைசியாக போய் உட்கார்ந்து பேசிவிட்டு வருவது தான் வாடிக்கை. அன்று அவளின் அறைக்கு செல்வதற்கு மதியம் போல் ஆகி விட்டது. சூடான வெய்யில் மழை போல பேய்ந்து கொண்டிருந்தது. அவள் அறைக்குள், அவளும் அவளின் மதிய உணவும். அந்த உணவு காய்ந்து போக இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. அவள் மரக்கிளையில் ஒரு புழுவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
வாடா, இன்னைக்கு வர மாட்டேன்னு நெனச்சேன்.
இல்லையே, கண்டிப்பா வருவேன்னு உங்களுக்கு தெரியுமே.
தெரியும், ஆனாலும், சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கு. இல்லைன்னா, எல்லாம் தெளிவாகி இருக்குமே. எல்லாரும் தெளிவாவே இருந்துட்டா எதுக்கு பிரச்சினை வரப்போகுது.
சரி, நீங்க ஏன் சாப்பிடல?
இன்னைக்கு வேண்டாம். பசிக்கல. அது எனக்கு செஞ்சு வெச்சிருந்த சாப்பாடு இல்ல. வேற யாருக்கோ. எனக்கு எப்போ செஞ்சிருக்கோ, அப்போ சாப்பிடறேன்.
உங்க டீன் உங்களுக்காக தனியாவே தானே சமையல் செய்ய சொல்றாரு. அப்புறமென்ன..
அது மட்டும் போதுமா? சாப்பாடு தனியா செஞ்சிட்டா, அது நமக்கானது ஆகிடுமா.
சரி விடுங்க, இப்போ சாப்பிடுங்க. இல்லைன்னா, உங்களுக்கு தூக்கம் வராது.
வராமயே இருக்கட்டும். ஒன்னும் குத்தமில்ல.
அவளுக்கு புரிந்தே தான் இந்த நடவடிக்கைகள் நடக்கிறது. அவள் இதை வேண்டுமென்றே தான் பதிய வைக்கிறாள். அவளுக்கு இன்றைய இரவு முக்கியம். அந்த விடுதலை முக்கியம். அதற்கு இந்த உணவு பெரும் தடைக்கல். இது எனக்கு புரிந்தே தான் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் அவளை நான் புரிந்து கொண்டது எவ்வளவோ, ஆனால், இந்த விஷயத்தை எனக்கு முதல் ஆறு மாதங்களிலேயே புரிய வைத்துவிட்டாள். மற்றவர்களும் புரிய வைத்துவிட்டார்கள். எப்போது குமுறும் என்று தெரியாத எரிமலைகள் எத்தனையோ உண்டென்பது போல, அவள் எப்போதெல்லாம் தன்னைவிட்டு விலகி இருப்பாள், எப்போதெல்லாம் தன்னுடனே தங்கி இருப்பாள் என்பதெல்லாம் உணவில் தான் ஆரம்பிக்கும். அவள் உணவு உண்ண மறுக்கும் பொழுதெல்லாம், ஒரு பெரிய பாரத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று டீன் சொல்வார். அது ஒரு இரண்டு நாட்களாவது தொடரும். மூன்றாவது நாள், அவளின் மலைகள் வெடிக்கும். அவள் பெண்ணாகவே இருக்க மாட்டாள். எரியும் தீ உடை போட்டுக்கொண்டா இருக்கும். அன்று அவளின் அறை இரண்டு பூட்டுக்கள் போடப்பட்டு, பின் சில மரப்பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும். தீயின் ஜுவாலைகள் அந்த மரப்பலகைகள் தாண்டி கனன்று கொண்டு வெளி வரும். காதுக்கும் மனதுக்குமான தீ. அவள் உண்ணாத உணவிலிருந்து புறப்பட்டு வரும். தீர்க்காத பசியிலிருந்து வரும். அந்த சொற்களையும், வசவுகளை கூர் தீட்டிய வெளியே அனுப்புவாள். அதை பொறுக்கி எடுத்து, விவாதித்தால் கூட அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அதை கேட்கும் பக்குவம் அங்கு யாருக்கும் இருக்காது என்பார் டீன்.
இன்று இரவு அதற்காகத்தான் தயாராகிறாளோ என்று பயம் வந்தது. இது மாதத்திற்கு ஒரு முறை நடப்பது என்றாலும், அதை அனைவரும் கடந்து போய்விட பக்குவம் பெற்றிருந்தாலும், அவளின் உடலையும் நரம்புகளையும் அந்த இரவுகள் பதம் பார்த்திருந்தன. அதை தவிர்த்துவிடவே நினைத்தேன். பல முறை அதில் வெற்றி பெறுவேன். சில முறை பெறுவதில்லை. அந்த தோல்வி தருணங்களில், அவளின் தீ ஜுவாலைகளில் நான் கூட வந்து செல்வேன் என்று சிலர் சொல்வார்கள். சரியாகவே இருக்கும், எனக்கான வசவுகளை, பெட்டி போட்டு, உச்ச ஸ்தாயியில் சொல்வாள் என்பார்கள்.
நீங்க சாப்பிட்டா நல்லது.
அதான் சொன்னேனே. இது எனக்கானது இல்ல.
நான் வேணா உங்களுக்கு ஒரு டீ போட்டு கொண்டு வரவா?
உன்ன இங்க இருக்கிற சமையல் அறையில உள்ள விட மாட்டாங்க, தெரியுமில்ல.
அதெல்லாம் டீன் கிட்ட சொல்லிக்கலாம்.
என்ன சொன்னாலும், அதுக்குள்ள போக அனுமதி குடுக்க மாட்டாங்க.
சரி, நீங்களும் வாங்க, உங்களையும் கூட்டிகிட்டு போறேன். நீங்க எனக்கு சமைச்சு குடுங்க. ரெண்டு பெரும் சாப்பிடலாம்.
அவள் முகம் விரிந்தது. உதடுகளுக்குள் மெல்லிய பூ ஒன்று பூத்து அடங்கியது. அதன் பின்னர் ஒரு சேர ஒரு வசவும் வந்து இறங்கியது.
அங்க போக எனக்கு இஷ்டம் இல்ல.
நீங்க இங்க வர்றத்துக்கு முன்னாடி, நிறைய நேரம் கிச்சன்ல தான் இருப்பீங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களோட குறிப்புல எழுதி இருந்தது.
அது செத்தவங்களோட நினைவுக்குறிப்பு மாதிரி. அங்க தான் நான் இருந்தேன், அங்க தான் நான் இறக்கவும் செஞ்சேன்.
ஏன் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு அப்படி என்ன கோவம்.
இந்த நேரத்தில் கேட்டு விடுவதே உத்தமம் என்று நினைத்தேன்.
உங்களுக்கு உடம்புல என்ன பிரச்சினை இருக்குன்னு தெரியும் இல்லையா. அதுக்கு காரணம் என்ன, உங்களோட கோபம். அது யாரு மேல வேணாலும் இருக்கட்டும், ஆனா அதை ஏன் உங்க மேலயே காட்டிக்கறீங்க. உங்க கோபம் உங்களைத்தான் பலி கேக்குது.
சில நிமிட மௌனங்கள். அவள் இதன் பின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இப்போது நான் செய்து கொண்டிருப்பது தேவையற்றது. இதனால் அவளின் கோபம் இரண்டாகலாம், இல்லை ஒன்றுமில்லாமல் போகலாம்.
பேச ஆரம்பித்தாள்.
எனக்கு எத்தனை பசங்கன்னு உனக்கு தெரியும் தானே?
ஆமா
அவங்க என்னை கொண்டு வந்து விட்டாங்கன்னும் தெரியும் தானே?
ஆமா
எதுக்குன்னு தெரியுமா?
தெரியல
அவங்க அப்பாவை நான் கொன்னுட்டேன்னு அவங்களுக்கு கோபம்.
சில நிமிட மௌனங்களை நான் தயார் செய்து கொண்டிருந்தேன். அதனுள் ஆச்சரியங்களையும் கோர்த்துக்கொண்டேன். கொஞ்சம் பயமும் சேர்ந்து கொண்டது. ஆனாலும், வயதுக்கேற்ற பலம் இருந்தது.
நீங்களா? ஏன் அப்படி செஞ்சீங்க.
எனக்கு சமையல் அறை அவ்வளவு பிடிக்கும். அங்க தான் பொறந்துட்டமோ அப்படின்னு கூட யோசிப்பேன். அங்க தான் உறுதியா நான் நானாவே இருப்பேன்னு ஒரு சத்தியம் எனக்குள்ள இருந்தது. என்னோட அம்மா எனக்கு அவளோட சந்தோஷத்தையும், சோகத்தையும், எனக்கான பாடத்தையும் அங்க தான் சொல்லித்தந்தா. அங்கேயே இருன்னு சொல்லவே இல்ல, ஆனா அவ அங்க தான் இருந்தா. அதுனாலயே என்னவோ எனக்கு அங்க இருந்தாலே போதும் அப்படின்னு இருக்கும். அதுக்காக வேலை செஞ்சிகிட்டே இருப்பேன்னு அர்த்தம் இல்ல. சமைக்க பிடிக்கும், அதையும் தாண்டி அந்த அறையில ஓடுற ஈர்ப்பு விசைக்கு நான் அடிமையா இருந்தேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் அறை அப்படித்தான் இருக்கும். அங்க தான் உதிக்கும், அங்க தான் அஸ்தமிக்கும். வீட்டுக்கு யாராச்சும் வந்தா கூட, ஒரு நிமிஷம் பேசிட்டு, இதோ இருங்க வந்துடறேன்னு சொல்லிட்டு எதையாச்சும் உருட்டிகிட்டு இருந்தா, வீட்டுக்கு வந்தவங்களும் அங்க வந்து பேசிகிட்டு இருப்பாங்க. ஒரு வகையில அதை நானே டிசைன் செஞ்சிக்கிட்ட கூண்டு. பிடிச்சுதான் இருப்பேன்.
அப்புறமென்ன, அந்த அறைக்கு மேல இவ்வளவு கோபம்.
அங்க தான் எனக்கு காதல் வந்தது. அவருக்கு என் மேல காதல் வரணும்னா, அவர் எனக்கு காதல் வர்ற இடத்துல இருக்கணும்னு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருந்தார். ஆனா அங்க தான் அவனோட கடைசி நிமிஷமும் இருந்தது.
அவரிலிருந்து அவன் மாறியதில் தான் எல்லா கோலங்களும் வரையப்பட்டிருந்தன.
ஏன் அப்படி செஞ்சீங்க?
சுதந்திரம் கிடைச்சப்புறமும் கூட நான் போய் வெள்ளைக்காரனை குத்தி கொன்னு போடறேன்னு சொன்னா எப்படி இருக்கும்?
புரியலையே
வெள்ளைக்காரன் தப்பு பண்ணான். அவனை எதிர்த்து போராடினோம். அதுல பல துக்கமான சம்பவங்கள் இருந்தது. ஆனா ஒரு ராத்திரி, எல்லாம் சரிதான் நான் கெளம்பறேன்னு கிளம்பிட்டான் இல்லையா. அதோட அவனுக்கு புரிஞ்சது. போராடின போராட்டமெல்லாம் அதோட நின்னுடுச்சு. அதுக்கு பிறகும், தீடிர் தீடிர்னு ராத்திரி எழுந்திருச்சு நீ எதுக்கு அப்படி பண்ண, உன்ன சும்மா விடமாட்டேன் அப்படின்னு கிளம்பினா அந்த வெள்ளைக்காரன் உன்ன பைத்தியக்காரன்னு நினைக்க மாட்டானா..
ஆமாம், நினைப்பான்.
அது தான் அங்க நடந்துச்சு.
தப்பு ஒன்னு நடந்தது, பல வருஷம் முன்னாடி. அது கடைசியில வடிஞ்சு, சுத்தமா மன்னிப்பெல்லாம் கேட்டு, மறந்து போச்சுன்னு நெனச்சா, அதையே ஆறு மாசத்துக்கு ஒரு முறை கிளறினா என்ன நடக்கும்?
கோபம் வரும்.
அம்பது வருஷத்துக்கும் அதையே பண்ணா?
கசப்பா தான் இருக்கும்.
ஒரு நாள், அதே சமையல் அறையில தான், முப்பதாயிரத்து முறையா அந்த பிரச்சினை வந்தது. திரும்ப பேசினேன். முதல் முறையா எதிர்த்து பேசினேன்.
மூண்ட தீயை என் முன்னே மூட்டி அந்த வெளிச்சத்தை எனக்கும் வெளிப்படுத்தினாள்.
எல்லாம் புரிந்தது.
அதன் பின் தான் அவளை இழந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவளை அந்த சமையல் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தோன்றியது.
டீன் என்னிடம் பேசினார். இது தேவை இல்லாதது என்றார். இல்லை, அவளுக்கு அங்கே ஒரு விடிவு இருக்க வாய்ப்புண்டு என்றேன்.
கையையும், காலையும் கட்டி வைத்து, அவளை சக்கர நாற்காலியில் தான் கொண்டு சென்றோம். அங்கு சென்றபின் அவளுக்கு சிறிது உதறல் எடுத்து. அவளின் அறையை விட, இந்த அறை பெரியது. ஆனாலும், அவளின் நடுக்கம் குறையவே இல்லை.
ஒரு இரண்டு மணி நேரம் இருந்திருப்போம். சிறிது அமைதியானாள்.
முடிவு செய்தபடி, அவரின் மகனிடம் தொலைபேசியில் பேசி, அவளுக்கு பிடித்த (அவளின் முறைப்படியே) வண்ணமில்லாத கேசரியை கிண்டி வைத்திருந்தோம்.
ஒவ்வொரு கரண்டியாக கொடுத்தோம். தளர்ந்து கொண்டே இருந்தாள். இயக்கம் தடைப்பட்டது போல இருந்தது. திரும்ப அறைக்கு சென்று படுத்தாள்.
அடுத்த நாள், அவள் கொண்டிருந்த சிறிய ஊசியை அவளின் தொண்டைக்குழியில் அவளே செலுத்திக்கொண்டு இறந்திருந்தாள்.
எப்படி பார்த்தாலும் அவனுக்கு ரெட்டை நாடி தான். நடக்கும் போது அப்படி மூச்சு வாங்கும். கணிப்பொறியில் ப்ரோக்ராம் அடிக்கும் போது மட்டும் அந்த மூச்சு மட்டுப்படும். தியான நிலைக்கு செல்வான். ஒவ்வொரு படி நிலையாக மாறிக்கொண்டே இருப்பான். அவன் பெயர் சரவணன் என வைத்துக்கொள்ளலாம்.
சரவணனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பத்து கணினி ப்ரோக்ராம் டீபக் செய்யாவிட்டால் அன்று இரவு கனவில் பாட்டி வந்து வடை சுட்டு, புகை பறக்கும் வடையை அவன் கன்னத்தில் அழுந்த தேய்த்து விடும் ராட்சத கனவுகள் வந்துவிடும். அவனுக்கு பாட்டியிடம் அன்பு நிறைய தான் கிடைத்திருக்கிறது. ஆனால் அவள் இறக்கும் முன் அவனுக்கு நிறைய புத்தி சொல்லி இருந்தாள். "இந்த பொட்டிய கட்டிக்கிட்டு எத்தனை புள்ள பெத்துக்க போற? பொறந்தாலும் அது உன்ன வெச்சு காப்பாத்தாது. உன் முளைக்குள்ள உக்காந்து கொஞ்சம் கொஞ்சமா கடிச்சு புத்தி கெட்டவனா தான் மாத்தி விடும்", என்பாள். சரவணனுக்கு எதுவுமே உரைக்காது. பாக்ஸ்ப்ரோ என்ற நிரலில் ஆரம்பித்த அவனின் வாழ்க்கை இப்போது வந்து நிற்பது தொலைபேசியின் பின் இருக்கும் கட்டமைப்பில் ஒரு முக்கிய இடம்.
எப்படி இங்கு வந்து சேர்ந்தான் என யோசித்தால் கொஞ்சம் கலங்கலாகத்தான் நினைவில் நிற்கிறது. அவனின் மேலாளர் ஒரு முறை சொன்னார், "நீயெல்லாம் கோட் எழுத வந்தியா இல்ல, காலையில சாப்பிட்ட இட்லியை கீ போர்டு மேல தினம் தினம் வாந்தி எடுக்க வந்தியா" என வண்டி வண்டியாக கேட்டு வைத்தார். அதன் முன்னரும் பின்னரும் சிறிது அவ-பாராளுமன்ற வார்த்தைகளையும் போட்டு வைத்தார். அவமானம் பிய்த்து தின்றது. தனி அறையில் திட்டினால், அடுத்த நாளும் அந்த வாந்தியை எடுப்பதில் அவனுக்கு பெரிய பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை. சொன்ன சூழலும், அவன் இருந்த நிலையும் தான் காரணம். கணக்கு போட்டு பார்த்தால் அன்று ஜெயித்தது என்னமோ அந்த மேலாளர் தான். அந்த சம்பவம் நடந்த போது தளத்தில் இருந்த சில குட்டி குளுவான்கள் அவரின் அல்லக்கை ஆனார்கள். அதற்கு பின் அவருக்கு மிக்ஸர் என்ன, ஜூஸ் என்ன, வார இறுதி ஆனால் பார்ட்டி என்ன என அவர்கள் ஒரு குடும்பமானார்கள். அதற்கு பின் அலுவலகம் குடும்பமானது, குடும்பம் அலுவலகமானது. அதெல்லாம் அவர்களின் ராமாயணம். அது எதற்கு.
அன்று இரவு சரவணன் சரியான குடி. தேடித்தேடி குடித்தான். அந்த மேலாளர் சொல்லி வைத்த வாந்தி வேறு வந்து தொலைத்தது. எங்கு பார்த்தாலும் அவனே வந்து தொலைத்தான். மேலாளர் என்றால் மேலேயே வந்து உட்கார்ந்திருக்கும் மனித இனம் என்று எந்த தஸ்தாவேஜுகளிலும் சொல்லவில்லை. அப்போது தான் முடிவெடுத்தான். இனிமேல் கூட்டத்தில் கும்மாளமடித்து பத்து வரிகள் எழுதி, அதற்கு நாற்பது பக்க டாக்குமென்டுகள் எழுதி, அதை ஒரு டெஸ்டிங் டீம் வந்து மானபங்கப்படுத்தி, பத்து வரியை பத்தாயிரம் வரிகளாக்கி விடும். பத்து வரியிலேயே அது சரியாக வேலை செய்திருக்கும். பத்தாயிரம் வரிகளில் அது பக்கத்து வீட்டில் போய் பத்து பாத்திரம் தேய்த்து விடும் அளவுக்கு சுமாரான ப்ரோகிராமாகி இருந்தது. ஆனால், அதுவே அவர்களுக்கு அளப்பரிய வெற்றி. அதை ஒரு நட்சத்திர விடுதியில் கொண்டாடுவார்கள். பத்து வரி அங்கு அனாதையாகி இவன் மூளைக்குள் மட்டும் உட்கார்ந்திருக்கும். என்னை நீ வேறு எங்காவது போய் சுவீகாரம் கொடுத்துவிடு, இவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்லும்.
இது எதுவுமே வேண்டாமென தேடிக்கொண்டு இருக்கும்போது தான் அந்த வேலைவாய்ப்பு அவனை ஈர்த்தது. பெங்களூரில் இருக்கும் ஒரு சுமாரான, பெயர் தெரியாத அலுவலகத்திற்கு, குறைவான சம்பளத்தில், ஆனால் உலகத்தர டெக்னாலஜியில் வேலை செய்யலாம் என விளம்பரப்படுத்தி இருந்தார்கள். மேலே உட்கார்ந்திருந்த மேலாளரை கீழிறங்கும் பொருட்டு, வேலைக்கு விண்ணப்பித்தான். ஒரு வாரத்தில் நேர்முக தேர்வு நடைப்பெற்றது. நேர்காணலில் சரவணனை கேள்வி கேட்டவரையும் சேர்த்து அந்த அலுவலகத்தில் இருவது பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடம். ஐடி பார்க் எல்லாம் இவர்களின் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஆனால், அங்கிருந்த இருவது பெரும் சிரித்து சிரித்து வேலை பார்ப்பது மனதிற்கு இதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலாளர் கீழாளர் ஆனார்.
ஒரு நல்ல முகூர்த்த நாளில் தாலி கட்டிக்கொண்டு வேலைக்கு சேர்ந்தான். சரவ், சரவ் என்ற பெயர் இடப்பட்டது. இவனுக்கு அது சரஸ், சரஸ் என்ற தொனியிலேயே கேட்டது. என்ன எப்படி இருந்தால் என்ன, மேல், கீழ் குழப்பம் தீர்ந்து இப்போது ஒரு புதிய தெளிவுடன் இருந்தான். புதியதாக கற்க நேர்ந்தது. அனைத்தும் தொலைபேசிகளை பற்றியும், அது இயங்கும் முறைகள் பற்றியும் தான் வேலை அனைத்தும். அனைத்து தொலைபேசியிலும் மேற்பரப்பு இன்னும் செங்கல் தான். வெளிப்பூச்சு கொஞ்சம் பார்க்க ஆடம்பர சீமாட்டி போலத்தான் இருக்கும். ஆனால், அதன் இதயம் தான் அதற்கு சூர்யா போல. இதுவரை நன்றாக சென்றிருக்கும் போக்கில் சூர்யா எங்கிருந்து வந்தார் என தோன்றலாம். அங்கு ஒரே சினிமா வாடை அடிக்கும். எப்போது பார்த்தாலும் சினிமா பற்றிய பேச்சு இல்லாத நாளே இல்லை. அங்கு ஜோஸ் என்ற ஒரு அலுவலக நண்பர், ரஜினி பற்றி பேசிக்கொண்டு இருந்தார். "உனக்கு தெரியுமா சரவணா, ரஜினிக்கு மட்டும் தான் எந்த டிரஸ் போட்டாலும் டிப்டாப்பா செட் ஆவும். மத்தவனுக்கு எல்லாம் சர்க்கஸ் கூடாரம் மாதிரி செட் ஆன மாதிரியும் இருக்கும், செட் ஆவாத மாதிரியும் இருக்கும்" என்பார். அவர் அடிக்கடி தேவா, சூர்யா பற்றி பேசிக்கொண்டே இருப்பார். அது தான் அந்த சூர்யா. தொலைபேசியின் மேற்பரப்பு தேவா என்றால், சூர்யா அதன் இதயம். அதனால் தான் அது ஹிட் ஆகுது என்பார். திக் திக் என்று நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் இரவு ஜோஸுக்கும், சரவணனுக்கு ஒரே வார்த்தை தகராறு. அவருக்கு அமெரிக்க நண்பர்கள் அதிகம். அங்கிருந்து ஒரு நண்பர் முக்கியமான ஒரு ப்ராஜக்ட் இருப்பதாகவும் அது கொஞ்சம் முறைதவறியதாக இருப்பதாகவும், ஆனால் அதை செய்வது என முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். தேவை இல்லாத வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்றும், அது சரியாக போய் முடிவடையாது என்றும் தலையில் அடித்து சொல்லிப்பார்த்தான். ஆனாலும் கேட்கவில்லை. நாம போற வழி தப்பா இருந்தாலும், போய் சேருற இடம் கோவிலா இருக்கணும் என்றார்.
அடுத்த இரண்டு மாதங்கள் ஜோஸ் முகத்தில் களை குறைந்தது. எடை குறைந்து மிகவும் வறிந்து காணப்பட்டார். இவனுக்கு கேட்க விருப்பமில்லை. ஆனாலும், வருத்தமாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு வேலை. அதிலும் ஒன்று நிலை தவறிய ஒன்று. அதற்கு இப்படி உடலையும், மனதையும் கொடுக்க வேண்டுமா என்று வருந்தினான். ஒரு நாள் இரவு அவரின் வீட்டுக்கு சென்று அப்படி என்னதான் செய்கிறார், மனது இடம் கொடுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் ஒத்தாசை செய்துவிட்டு வரலாம் என்று சென்றான். சரவணன் சென்றதில் ஜோஸுக்கு மிகவும் மகிழ்ச்சி. குறைந்த களை, மீண்டும் வளரலாம் என யோசித்தது. மூளையில் பிறப்பது தானே களை. இதயத்தில் இருந்து பிறந்தது தானே மூளை.
ஜோஸ் விவரித்தார். சரவணனுக்கு பழக்கப்பட்ட நிரல்கள் தான். கண்ணை மூடி ரூபிக்ஸ் கியூபை முப்பது நொடிகளில் முடிக்கும் பக்குவம் அவனிடம் இருக்கிறது. அது நிரல்களிலும் நடக்கும். உட்கார்ந்தால் டெலிவரி பார்க்காமல் விடமாட்டான். சிசேரியன் செய்யும் பழக்கம் இல்லை, சுகப்பிரவசம் தான். உட்கார்ந்தான்.
ஜோஸ், நீங்க போய் கொஞ்சம் வெளிய ஆக்சிஜன் இருக்கான்னு பாத்துட்டு வாங்க. இருந்தா கொஞ்சம் அது கூட பேசிகிட்டு இருங்க.. நான் கொஞ்சம் இத ஒரு கை பாத்துட்டு வரேன்.
அதெல்லாம் இருக்குது. நீ கைய வெச்சிக்கிட்டு நல்லா இருக்குற ப்ரோகிராம, சரி செய்யறேன்னு, அது என்ன செய்யணுமோ அத மாத்தி விட்டுடாத...
இது என்ன பெரிய வால்மீகி சூத்திரமா? பாத்தாலே தெரியுது, போன் பேசும்போது பேசுறவன் வாய்ச டெக்ஸ்ட்டா மாத்திக்கிட்டு இருக்கீங்க. இதுல என்ன இருக்கு. நாம செய்யுறது தானே. இப்போ இருக்குற லைப்ரரியில எல்லாத்துலயும் இத செய்யுறதுக்கு வழி இருக்கு. நீங்க என்னடான்னா ஊர் பேர் தெரியாத ஒரு லைப்ரரிய வெச்சிக்கிட்டு தடவிகிட்டு இருக்கீங்க.
அது ஊர் பேர் தெரியாதது தான். ஆனா, அது அப்படித்தான் இருக்கணும்.
ஏன்?
தெரிஞ்சா, பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
இது என்ன, டீப் வெப்'ல இருந்து வர அயிட்டமா?
ஆமா. அதானே பாத்தேன். இங்க தான் அந்த மேட்டர் உக்காந்திருக்குதா. அது சரி, ஆனா, கோட் எல்லாம் பாத்தா இது நம்ம ரெகுலரா யூஸ் செய்யற மாதிரியாவே இருக்கே. அதே போல பன்க்ஷன்ஸ், நியூரல் நெட்ஒர்க்.
நம்ம மேட்டர் உக்காந்திருக்குற கோட் தனியா பிரைவேட் க்ளவுட்ல இருக்கு. அத எனக்கே பாக்க பெர்மிஷன் இல்ல.
அது என்ன செய்யும்?
மியூட் பட்டன ஒன்னும் இல்லாம செய்யுறது தான் அதோட வேலை.
எமகாதகனுங்கய்யா நீங்க...
நான் இல்ல, ஆனா அந்த கோட் எழுதியவன் தான். அது மட்டும் வெளிய தெரிஞ்சதோ, அத மொதல்ல பிக்ஸ் பண்ணிடுவாங்க... அதுக்கப்புறம், எழுதினவனையும், கூடவே அத பிரதி எடுத்த என்னோட அமெரிக்கா தோஸ்த்தையும், என்னையும் எண்ணெய் சட்டியில போட்டு போரட்டி எடுத்துடுவாங்க.
சரி, இப்போ என்ன நிலைமையில இருக்கு?
அல்மோஸ்ட் முடிஞ்சு போச்சு...இப்போ டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
இதுக்கு பேரு டெஸ்ட் இல்ல. இன்னொருத்தன் வேட்டியில் இருந்த ஓணானை, உன்னோட வேட்டியில் விட்டா என்னாகும், அவனோட வெட்டியில விட்டா என்னாகும்ன்ற கதை தான். டெஸ்ட்'னு வேற ரொம்ப டிசன்ட்டா சொல்றீங்க. சரி, இப்போ அத டெஸ்ட் செய்ய முடியுமா?
முடியும்.
எனக்கு ஒரு நம்பர் இருக்கு. அதுல செய்யலாம்..
சரி, நான் வெளிய போயிட்டு வரேன். நீ, ரொம்ப நோண்டாம, சீக்கிரம் மூடி வை.
சரவணனுக்கு கால் பரபரப்பரத்தது. இரவு நேரம் வேறு ஆதலால் யார் இந்த நேரத்தில் முழித்திருக்க போகிறார்கள். அமெரிக்க நண்பர்கள் தான் இந்நேரம் மாங்கு மாங்கு என்று உழைப்பார்கள். அவனின் நண்பர்களிடம் பேசலாம், அதில் மியூட் டெஸ்ட் செய்யலாம் என யோசித்தான்.
மணி அடித்தது. மறுமுனையில் தொலைபேசி எடுக்கப்பட்டது.
சரவணா... சரவ் என்கிற சரவணா, எப்படி இருக்க?
நல்லா இருக்கேன்டா.. பல வருஷத்துக்கு அப்புறமா பேசுறோமா?
இல்லையே, ஆறு மாசம் முன்னாடி பேசினோமே!
அட, ஆமா. சரி தான்.
குசல விசாரிப்புகள் எல்லாம் முடிந்தது. இப்போது மியூட் நிலைக்கு அவனை கொண்டு வர வேண்டும். சரி, இவனே ஒரு நிமிடம் அப்படியே லைனில் இருக்கிறேன், ஒரு நிமிடம் என்று சொன்னால், அவன் மியூட்டில் இருப்பான் என்ற யுகத்தில் சொன்னான்.
"சரி, நான் லைன்லேயே இருக்கேன்." மியூட் போடப்பட்டது.
நிரல் ஓட ஆரம்பித்தது. இருட்டில் அமர்ந்திருந்த அந்த நிரல் அமெரிக்க நண்பரின் தொலைபேசியில் சிம்மாசனம் போட ஆரம்பித்தது.
படாரென ஒரு சத்தம். அமெரிக்க நண்பன் உளற ஆரம்பித்தானா இல்லை திட்ட ஆரம்பித்தானா என தெரியவில்லை. புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு குரல். மியூட் போட்டுவிட்டு என்னமோ செய்து கொண்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் ஒரு விசும்பல் கேட்டது. குழந்தையின் விசும்பல். குழந்தை பேச ஆரம்பித்தது.
"அப்பா, நான் எனக்கு தெரியலைன்னு தானே உன் கிட்ட கேட்டேன்"
"எந்த நேரமும் என் கிட்டயே கேட்டுகிட்டு இருந்தா நீ எப்போ தெரிஞ்சிப்ப. போ, என் பக்கத்துலயே நிக்காத, போய்த்தொலை."
குழந்தை விசும்பல் அதிகரித்தது. இவனும் கத்த ஆரம்பித்தான். பின்னாலேயே இன்னொரு குரலும் சேர்ந்து கொண்டது. குழந்தைக்கு யார் அவளுக்காக பேசுகிறார்கள், யார் அவளுக்காக பேசவில்லை என தெரியவில்லை. ஆனால், அம்மா, அப்பா இரண்டு பேரும் கத்திய கத்தில், அவளின் விசும்பல் அடங்கிப்போனது. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு நண்பனின் முகமும், அவனின் அணுக்கமும், பழைய கால சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. சுற்றி என்ன நடந்தாலும், சூழலே கடுமையாகிப்போனாலும் எவரிடமும் முகம் காட்ட மாட்டான்.
இதற்கு மேலும் அவனுக்கு பொறுமை இல்லை. எக்கேடோ கெட்டு போகட்டும் என விட்டுவிட்டான். நிரலில் அந்த நம்பரின் மியூட் வசதியை மறுபடியும் திரும்ப கொடுத்துவிட்டான். பேசுகிறார்கள்.
தொலைபேசிக்கான வாஞ்சை திரும்ப வந்துவிட்டது. ஆள் மாறாட்டத்தில் மறுபடியும் குதித்தான். நண்பனிடம் நண்பனான்.
"என்ன சரவணா, குழந்தைங்க எப்படி இருக்காங்க! என்ன படிக்கிறாங்க! என்ன படம் பாத்த"
குழந்தையின் விசும்பல் குறைந்து, அவள் பாடம் படிக்க போய்விட்டாள் என நினைக்கிறேன்.
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வர மறுத்தது. ஒருக்களித்து படுத்ததில் கொஞ்சம் ஆறுதல். நாற்பத்தியைந்து வயதில் எவ்வளவு தான் படுத்தி எடுக்கும்? எல்லாம் புகுத்திக்கொண்டது, தானே தொத்திக்கொண்டது அல்ல. வர வேண்டாம் என நினைப்பதெல்லாம் வராமல் தான் இருக்கும். வந்து விடுமோ, வந்தால் என்ன ஆகுமோ, வந்தே விட்டதோ என விட்டத்தை பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் வந்து தான் தொலைக்கும். என்னவோ இதயத்தையே இழந்து விட்டதை போல சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். வெத்துவேட்டான ஒரு பிரச்சினை தான். வாய்வு தொல்லை. யாருக்குத்தான் இல்லை என நீங்கள் சொல்லும் வெறுப்பு வார்த்தைகள் எனக்கு கேட்கத்தான் செய்கிறது. தெரிந்தே கடந்து செல்கிறேன்.
இவ்வளவு விரிவாக ஜவ்வு போல வாய்வு தொல்லை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கும் போது தான் குளிரை உணர்கிறேன். உறைகிறேன், இதற்காகத்தான் வந்தேன். குளிர் என்னை அடை காக்க வேண்டும் என்று தான் வந்தேன். அதையும் தாண்டி வேறு என்னவெல்லாம் என்னை அமிழ்த்தும் எனும் போது தான் ஒன்று புரிந்தது. உள்ள பரிமாற்றத்திற்கும், அதன் மேல் கீழ் இயக்கத்திற்கும் ஒரு இயற்கை நிகழ்வு எப்போதும் பக்கத்திலேயே இருந்திருக்கிறது. அந்த இயக்கம் ஒரு நேரம் மகிழ்வின் உச்சத்தில் கொண்டு செல்கிறது. இன்னொரு நேரம் சோகத்தின் அந்தத்திற்கு கொண்டு செல்கிறது. இப்போது அந்த அந்தத்திற்கு தான் ஏங்கி வந்திருக்கிறேன். அந்த அமிழ்த்துதல் இப்போதைக்கு தேவைப்படுகிறது. என்னதான் அது சொல்லித்தொலையேன் என சொல்வது கேட்கிறது. எப்படி நாங்கள் நினைப்பது உனக்கு கேட்கிறது என நீங்கள் கேட்பதும் எனக்கு கேட்கிறது. நாங்கள் சொல்வதையும், அதை நீ புரிந்து கொண்டாய் என சொல்லும் மேதாவித்தனத்தையும் கேட்பதற்கு தான் நாங்கள் உனக்கு பத்து நிமிடங்கள் கொடுத்திருக்கிறோமா என கேட்க வாய்ப்பும் இருக்கிறது. கேட்டு விடுங்கள். அந்த ஆசுவாசத்திற்கு பின் பதில் சொல்கிறேன்.
அந்த ஒரு நொடி தான் எனக்கு இத்தனை நெருக்கடியை கொடுத்தது. அவளுக்கு என் மேல் மிகப்பிரியம். பிரியம் என்றால் அவ்வளவு பிரியம். எனக்கு சமைத்து போடுவாள். தலையை கசக்கி பிழிந்து சீயக்காய் போட்டு, பட்டு போல தலை முடியை அலை போல மாற்றி விடுவாள். கொஞ்சம் முகம் சுளித்தால் போதும், அடுத்த நிகழ்வு அத்தனையும் என்னை பேரன்பில் ஆழ்த்தும். கொஞ்சம் கூட சுணங்கி போக விட மாட்டாள். ஏன் இவ்வளவு காதல் என்று கேட்டால், அதை அன்பு என்று சொல்வாள். சரி அது கூட எதற்கு இவ்வளவு என கேட்டாள், பதில் இருக்காது. அடுத்த சமையலில் அதற்கு பதில் இருக்கும். நாக்கில் இருக்கும் சுவை நரம்புக்கும் அவளுக்கும் பெருத்த நட்பு உண்டென்பது பல வருடங்களுக்கு பின்பு தான் எனக்கு புரிந்தது. ஏதோ கொடுத்து வைத்தவள் போல, அவள் சமைத்தால் மட்டும், நாக்கை வழித்துக்கொண்டு அந்த சுவை நரம்புகள் பல் இளிக்கும். எத்தனை நாள் தான் இதையே செய்து கொண்டிருப்பாள். அதற்கும் பதில் இல்லை. அவளுக்கு அன்பை பொழிந்து கொண்டிருக்கும் ஒரே சாபம் மட்டும் விதிக்கப்பட்டு இருந்தது போல. அதுவும் எனக்கு மட்டும். அது என்ன சாபம் என்று கேட்டால், ஆமாம் பின்னே எனக்கு, அதுவும் என்னைப்போன்ற நிரந்தர மனிதத்தன்மை இழந்தவனிடம் இவள் அத்தனை கொடுப்பது சாபம் தான். அவளுக்கு என்னமோ என்னை பார்த்தால், அவள் சொல்லும் அன்பு, பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அப்படி வந்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி.
அந்த ஒரு நொடி. நொடிக்கு பின் அவள் மீது பல ரத்த தடங்கள். முகத்தில் தான் அத்தனையும் இருந்தன. என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தன. காரணம் கேட்க கூட எனக்கு திராணி இல்லாமல் இருந்தேன். என் மரியாதைக்குரிய ஒருவன் தான் அதை செய்து வைத்திருந்தான். அவனிடம் எனக்கு கொடுக்க நன்றிகள் மட்டுமே இதற்கு முன் இருந்தன. என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவன் தான் செதுக்கி இருந்தான். அவன் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன். அது இல்லாவிட்டால் எதுவும் இல்லாமல் போய் இருப்பேன். அவனுக்கு அப்படி என்ன ஒரு காழ்ப்பு! அதற்கு முன் அடித்து ரத்த காயம் வரும் வரவைக்கும் வரை அவள் ஏன் பூப்பறித்துக் கொண்டு இருந்தாள்? அவளுக்கு மட்டுமே வெளிச்சம். அந்த காய காட்சிகளுக்கு பின் நான் எனக்கான கூட்டில் அடைந்து விட்டேன். அந்த கூட்டில் எனக்கு இருந்தது ஒன்றே ஒன்று தான். தாழ்வு மனப்பான்மை. அது சரி, அதற்கும் உன்னை விரும்பிய ஒருவரை, உன்னை உருவாக்கிய இன்னொருவர் அடித்து திருப்பிய பின்னர், கேள்வி கேட்காமல் இருப்பாயா என்று. உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எல்லா கன்றாவியும் சேர்த்து தான் மனிதனை உருவாக்கி இருக்கிறது. அது எனக்கு அதிகம் பூசப்பட்டு இருக்கிறது போலும்.
இப்போது நான் இருப்பது இருள் அமிழ்த்தும் ஒரு இடம். குளிர் காலத்தில், குளிரும் இருட்டும் சேர்ந்து அடர்த்தியான ஒரு மகரந்த சேர்க்கையை உருவாக்கும். அது பல வாரங்கள், மாதங்கள் நீடித்து இருக்கும். அந்த நிகழ்வில் தான் நான் என்னை மறைந்து போகவும், மறைத்து வைக்கவும் வந்தேன். சூரியன் விழித்து ஒளி பரப்பும் ஒவ்வொரு நாளும் என்னை நானே நொந்து கொண்டேன். அதை தாண்டி வர இது ஒன்றே எனக்கு தேவைப்பட்டது. சூரியன் வேண்டாம், ஒளி வேண்டாம், புத்துணர்ச்சி வேண்டாம். என் கூட்டை இயற்பியல் மாற்றத்தைக்கொண்டும் அழகு படுத்திக்கொள்ள ஆசைப்பட்டேன்.
ஸ்வல்பர்ட், எனக்காக செய்து வைத்த தேவதை போல இருந்தாள். அங்கே சென்றபோது தான் உணர்ந்தேன், நான் தேடிச்சென்ற இரவும், ஒருங்கிணைந்த அட்டைக்கறுப்பு வெளியும் எனக்கு அமையாதோ என பயந்துவிட்டேன். நான் சென்று இறங்கிய பொழுது இரவு தான். இப்போது அங்கு இரவு தானே இருக்கும். இந்த மாதம் டிசம்பர். பூமிப்பந்தின் பல இடங்கள் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருக்கும், ஸ்வல்பர்ட் மட்டும் குளிரையே போர்த்திக்கொண்டு இருக்கும். நான் பயந்தது அங்கு இருந்த ஒளிப்பாய்ச்சல். இருக்கும் சிறிது இடத்தில் அவ்வளவு வெளிச்சம். மனிதன் உருவாக்கிய பல உத்திகளில் இந்த செயற்கை வெளிச்சம் இப்போது அலுப்பு ஏற்றியது. ஆனால், கொஞ்சம் யோசித்து தான் அந்த சின்ன நகரத்தின் கடைக்கோடியில் இருந்த ஒரு வீட்டை எனக்கான ஜாகையாக தேர்வு செய்திருந்தேன். அந்த வீட்டின் அம்மணி மிக அன்பானவள். கூகுள் சாட்டில் மிகுந்த அன்போடு பேசினாள். கூகுள் நடுவில் இல்லாத நேர்மையான அந்த முகமும் மனதும் அதே அன்போடு இருக்கும் என நம்பினேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன. இரவு என்னை ஆராதித்துக்கொண்டே இருந்தது. அல்லது நான் அதை காதலித்துக்கொண்டே தான் இருந்தேன். இடையிடையே விழிப்பில் ரத்த காயங்கள் கண் முன்னே வந்தன. முகமில்லா முகத்தில் இருந்த வலி என் மேல் அவ்வப்போது படரத்தான் செய்தது. உதறித்தள்ள வேண்டி இருந்தது. என் சோகம் இந்த இரவுக்குள்ளும் குளிருக்குள்ளும் தற்கொலை செய்து கொள்ளட்டும் என காத்திருந்தேன். சில நாட்களில் அது புதைந்தது. அப்போது தான் அவள் திரண்டு எழுந்து வந்து என் முன் வந்தாள்.
அவளுக்கு பெயர் இருந்தது, நாஸ்தென்கா. பேசினாள், நானும் பேசினேன்.
அவள் பேசுவதைக் கேளுங்கள்.
உனக்கு ஏன் இவ்வளவு தூரம் வந்தும் சோக முகம் கொண்டுள்ளது? நீ வந்துள்ள வடிவத்தை பார்த்தால், சுற்றுலா பயணியைப்போலத்தான் இருக்கிறது. இங்குள்ள பலரும் ஒரு இரண்டு பெட்டிக்குள் அடங்கி விடுவார்கள். முதல் பெட்டியில் சுற்றுலா என்ற பெயரில் நார்த்தன் லைட்ஸ் பார்க்கும் ஒரு கட்சி. இரண்டாவது பெட்டியில் ஆராய்ச்சி செய்கிறேன் என்கிற சும்மாத்து பேர்வழிகள். இரண்டு பேராலும் இந்த ஊருக்கு ஒரு உதவியும் இல்லை. வரும் அனைவரும் சேர்ந்து அவர்களின் கழிவுகளை விட்டுவிட்டு போகும் விஷ மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இரு பிரிவினரும் எப்போதும் முகத்தின் இறுக்கத்தை காட்டிக்கொண்டதே இல்லை. ஏதோ ஒரு வகையில், இந்த நகரம் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. வானின் வண்ணக்கூடலோ அல்லது இதுவரை தொட்டிராத நிலப்பரப்பின் விந்தைகளோ, அல்லது அது வெளிப்படுத்தும் இயற்கை எச்சங்களோ என ஏதோ ஒன்று. நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாய். அது தான் எனக்கு விந்தையாக இருக்கிறது.
நானும் பேசினேன். அதற்கு முன், நீ எப்படி அவளிடம் தொடர்பு கொண்டாய், அந்த கதை எங்கே என கேட்பது எனக்கு கேட்கிறது. நான் தான் சொன்னேனல்லவா, நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும். அப்படி ஒரு ஜந்து நான். அதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை.
நான் இங்கே வந்ததற்கு காரணம் ஒரு சிறிய மரணம். அது கொடுத்த பூபாள பாரம். அதை என்னால் தாங்க முடியவில்லை. அதை தொலைக்க எந்த வழியும் இல்லை.
அது இங்கே தொலைந்து விடுமா என்ன? உன் பேச்சே விந்தையாக இருக்கிறது.
இங்கே இருக்கிறது. இருந்தால், இங்கே மட்டும் தான் இருக்கும்.
புரியாமல் பேசுகிறாய். அல்லது நீ புரிந்தும், எனக்கு புரியாமலும் இருக்கலாம்.
என் சோகத்திற்கு பரிகாரம் எனக்கு கொடுப்படும் தோள்கள். அது என் பேச்சையும், கண்ணீரையும் தாங்கி குளம் குளமாக என்னை அதில் நனைக்க விடும்.
அப்படி தோள்கள் உனக்கு கிடைக்கவில்லையா?
கிடைத்தது.
பின் என்ன?
எத்தனை நாள் கிடைத்தது என்பது தான் கேள்வி.
எத்தனை நாள் நீ எதிர்பார்த்தாய்?
அதற்கு கணக்கு இல்லை. நான் சுமந்த பாரம், ஒரு யுகத்தின் பாரம். என் பாகங்கள் அத்தனைக்கும் உயிர் கொடுத்த இன்னொரு உயிரை, என் வாழ்வு கொடுத்த இன்னொரு உயிர் பறித்தெடுத்து என் கண் முன்னே உறித்துபோட்டது என்பது எனக்காக எழுதப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. அந்த நிகழ்வை நான் எப்பொழுதும் சந்திக்கப்போவதில்லை என்ற இறுமாப்பு இருந்தது. எல்லோருக்கும் அப்படித்தானே?
அதை நீ சொல்ல முடியாது.
இருக்கலாம். ஆனாலும், எனக்கு கிடைத்த மனிதர்கள் வெறும் தோல் கொண்ட தோள்கள். அவை வெறுமனே சதைகளின் சுமை தாங்கிகளாக மட்டுமே இருந்தன.
சரி விட்டுத்தோலை. வேறு ஏதாவது பேசலாம்.
நீ யார்? உனக்கு இந்த நகரத்தில் என்ன வேலை? சுற்றுலாவா இல்லை ஆய்வு அறிக்கை கொடுப்பவளா?
இரண்டும் இல்லை. இந்த நகரத்தின் தேவதை நான்.
தேவதையா? நீ என் கனவு என சொல்லப்போகிறாயா?
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.
இருக்க வாய்ப்பில்லை. உன்னை தொட்டு உணர்ந்தேனே! கதவைத்திறந்து நான் தானே உன்னை உள்ளே அனுமதித்தேன். கதகதப்பை உணர்ந்தேன்.
உணர வாய்ப்புண்டு. எனக்கு அப்படி ஒரு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
நானே முக்கால் பாகம் குழம்பிப்போயிருக்கிறேன். நீ வேறு அதை கிண்டிப்பார்க்கிறாய்.
சரி சரி, உண்மையை சொல்கிறேன். இந்த நகரத்தின் பூர்வீக குடிகளில் நானும் ஒருத்தி. என் முப்பாட்டன்களின் முப்பாட்டிகள் பிறந்து வளர்ந்த நகரம் இது.
இந்த நகரத்தின் சரிபாதி உன் பரம்பரைக்கு உட்பட்டதோ?
அதெல்லாம் இங்கு இல்லை. இயற்கையின் சுத்தமான மடியில் லௌகீக பிணைப்புகள் இருப்பதில்லை. உங்கள் இமய மலையில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். காலம் காலமாக. அவர்களுக்கு சதுரஅடி எல்லாம் தெரியாத ஒன்று. அதே போலத்தான் இங்கும்.
எப்படி குளிரை சமாளிக்கிறீர்கள்?
சமாளிக்க என்ன இருக்கிறது. எங்களுக்கு இது புனையப்பட்ட ஒன்று.
புனையப்பட்டதா? பிணையப்பட்டது என்று தானே சொல்ல வருகிறாய்?
இல்லை, புனையப்பட்டது தான். ஆதி மக்களின் வாழ்வியலில் புனைவு மிக முக்கியமானது. அந்த புனைவு பல்லாயிரம் ஆண்டுகளாக செதில் செதிலாக உள்ளே செலுத்தப்படும். செலுத்தப்பட்டவை உயிர் பெறவும் செய்யும்.
நீயும் நானும் ஒரே இனம் தான் என நினைக்கிறேன்.
நான் சொல்வது உனக்கு புரியவில்லை. நீ சொல்வது எனக்கு புரியவில்லை.
இருந்துவிட்டு போகிறது. புரிந்து புரிந்து பேசி இந்த உலகம் என்ன அமைதிப்பூங்காவாகவே இருக்கிறதா என்ன? நிமிடத்திற்கு ஒரு முறை குரோதத்தால் உயிர் போகிறது. புரியாமல் பேசினால் நலன் தான்.
நாம் சில நொடிகள் வெளியே காற்றாட வெளியே செல்வோமா?
கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அடங்க பல நொடிகள் ஆனது. சிரிக்கும் போது தெரிந்த தெற்றுப்பல் அவளுக்கென கொல்லனிடம் கொடுத்து செய்து வைத்தது போல சில்லிட்டது.
சொல்ல ஆரம்பித்தாள்.
இங்கு வந்து இத்தனை நாள் ஆனபின்னும் உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா?
புரிகிறது. இங்கே நடை பயிலுபவர்கள் குறைவு தான்.
இல்லை, நான் சிரித்தது அந்த காரணத்திற்காக இல்லை. வேறொன்று இருக்கிறது.
என்னது அது?
சொல்லாமலேயே இருப்பது தான் உனக்கு நல்லது.
உனக்கு திருமணமாகி விட்டதா, என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். அவள் என்ன சொல்வாள் என தெரியும்.
எனக்கு பல திருமணங்கள் நடந்தது உண்டு.
இந்த பதிலுக்கு என்ன கேள்வி கேட்பதென்றும் தெரியவில்லை. தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப்போவதும் இல்லை.
அவள் நாளை வருகிறேன் என சொல்லிச்சென்றாள். இந்த தெருவின் கடைசி நான், முதலில் அவள் என்று அவள் சென்று அடையும் போது தெரிந்து கொண்டேன். ஐந்து வீடுகள் கொண்ட தெருவில் முதலென்ன, கடைசி என்ன. எல்லாம் ஒன்று தான்.
அடுத்த நாள் வரும் போது என் உரையாடலை அவள் விரும்பவில்லை. ஆனாலும் அவள் ஒன்றை வற்புத்திக்கொண்டே இருந்தாள். மூன்று நாட்கள் ஆகலாம், ஆனாலும் பரவாயில்லை, நீ அந்த புள்ளியில் இருந்து உன் வாழ்வை மறுமுறை மீட்டெடு என்றாள்.
எந்த புள்ளி என்ற கேள்விக்கு பதில், வட துருவப்புள்ளி என்றாள்.
அது எனக்கு முக்கியமல்ல. வேண்டாம் என்றேன்.
நீ சென்றடைய வேண்டியது அங்கு தான், என்றாள்.
மூன்று நாட்கள் வாழ்வில் இழக்க முடியாத ஒரு பயணமாக இருந்தது. இரண்டு நாட்கள் குட்டி குட்டி விமானங்கள் மூலம் சென்றோம். கடைசி விமானத்திலிருந்து அடுத்த இலக்கிற்கு செல்வதற்கு நாய்கள் தான் உதவின.
கடைசி கட்டம், நடந்தே செல்ல வேண்டிய நிலை. அவளுக்கு இதெல்லாம் மிகச்சுலபமாக இருந்தது. எனக்கு உதடுகள் உலர்ந்த நிலை போய், அவ்வப்போது இதயமே உலர்ந்து போனது. ஆனாலும், அவளின் தெற்றுப்பல் சிரிப்பு அவ்வப்போது மலர்வித்தது. தொட்டு உணர வேண்டும் போல இருந்தது. பல்லை அல்ல. அவளுக்கும் எனக்கும் இடையே இருபது உடைகள் இருந்தன.
வா இன்னும் இரண்டு மணி நேரம் தான் என்றாள். இடையிடையே நிறைய இடங்களில் எங்களுக்கு தடை. சுற்றி அடிக்கும் வெள்ளைக்காற்று. முதற்க்குளிரின் பிணி. இங்கிருந்து படரும் குளிர் தானே மற்ற இடங்களுக்கு. அருவியின் முதல் துளி தான் பிரவாகத்தின் தாய். உக்கிரத்தையும் கொண்டிருக்கும், ஆதாரத்தையும் கொண்டிருக்கும். இந்த குளிர் அப்படி இருந்தது. எங்கள் இருவருக்கும் அந்த நிலப்பரப்பிற்கும் இருந்த ஒரே தொடர்பு கண்கள். அந்த புலன் மட்டும் தான் அனைத்தையும் உணர்த்தியது. மற்ற புலன்கள் உறைந்திருந்தன.
நில், இனிமேல் நடக்காதே என்றாள்.
நீ நிற்பது தான் ஆதியும் அந்தமும். இங்கிருந்து அனைத்துமே வழிந்தோடல். இங்கு இருக்கும் காற்று, இங்கு உருவாகும் பிரயாணம் தான் உலகத்திற்கு ஊற்று. இதையே உண்டு வாழ்கிறார்கள். இது இல்லாவிட்டால் சிதறி ஓடும், பூமியே இல்லாமல் போகும். நீ நிற்பது தான் வட துருவப்புள்ளி. இங்கிருந்து அத்தனையும் தெற்கு. அத்தனையும் மேற்கு. அத்தனையும் கிழக்கு. நான்கு ஒன்றாகும் ஒற்றைப்புள்ளி. இங்கு இறை உண்டு, நீ உண்டு. நீயும் இறையாவாய், இரையும் ஆவாய்.
அவள் உளற ஆரம்பித்துவிட்டாள் என தோன்றியது.
சிறிது கால் உயர்த்தப்பட்டது. உடைகள் தளர்ந்தன. ஒரு விரல் தலை தொட்டது.
என் காயங்கள் உன்னை காயப்படுத்தி இருக்க வேண்டாம். உன்னை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. இங்கே தான் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறேன். உனக்கான பாதை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். நிதானமாக வா. காத்திருப்பேன். உனக்காக சீயக்காயை உலர்த்தி வைத்திருக்கிறேன்.
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...