Wednesday, November 18, 2020

சாம்சங்

 தனித்திருந்த காலங்களில் அந்த மனிதனின் முகம் கண் முன் வந்து போகும். எத்தனை எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள், வார்த்தைகள் மறந்து போயிருக்கிறது. ஆனால், இது மட்டும் நினைவில் நங்கூரம் போட்டு நகர மாட்டேன் என நிற்கிறது. கையளவு தான் மூளை என்கிறார்கள். அதில் விறல் அளவு இந்த நினைவு மட்டும் இருக்கிறது போல. பின்னே எப்படி நீங்கும்? விரல் அளவு நினைவுகளில் பல குழப்பங்கள் தாண்டி அந்த நினைவு. கலங்கிப்போகாமல் அப்படியே மிதந்துகொண்டு இருக்கிறது.


அந்த காலத்தில் பஸ் இருந்தது. இந்த வார்த்தைக்கே நீங்கள் சண்டைக்கு வரலாம். இந்த காலத்தில் இல்லையா? பஸ் என்ன மூன்றாவது கண்ணா, விதந்து சொல்ல? இதை எல்லாம் சொல்ல வந்துவிட்டாய் என உங்கள் மனது என்னை திட்ட தயாராகலாம். அது ஒவ்வொன்றும் உண்மை தானே. அந்த காலத்தில் பஸ் இருந்தது தானே. இந்த காலத்திலும் அது இருப்பது, கடந்த காலத்தை எந்த விதத்திலும் அழித்துவிடாது. 


கவனத்துடன் என் விரல் அளவுள்ள நினைவுகளுக்குள் நீந்த தயாராகுங்கள். விரல் வலித்தால் உங்களை நானே இறக்கி விடுகிறேன். அந்த காலத்தில் பஸ் இருந்தது. இப்போது நீங்கள் திட்டப்போவதில்லை. அதையும் தெரிந்தே தான் சொல்கிறேன். காலையில் அம்மா செய்யும் இட்லியும், தேங்காய்ப்பொடியும் சமையல் அறையின் பல கேள்விகளை எதிர்கொள்ளும். சமையல் அறை கேட்கும் கேள்வி எல்லாம் ஒன்று தான். அந்த இட்லியை பார்த்து கேட்கும். உனக்கு இப்படி ஒரு இடம் கொடுத்திருப்பது அநியாயம். பக்கத்து வீட்டு அம்மணி ரசம் வைத்தால் தெருவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் மூக்கை கழட்டி அந்த அம்மணியின் சமையல் அறையில் இரண்டு நாட்களுக்கு போட்டுவிடுவார்கள். அந்த சமையல் அறைக்கு அவ்வளவு கர்வம் வரும். என்னிடம் தான் ருசி உருவாகிறது, நானே ருசியின் ராஜராணி. ஆனால், நான், இந்த இட்லிக்கு தான் கடன் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையும் இட்லி. ருசி, இல்லை. மணம், இல்லை. வண்ணம், இல்லை. ஆனாலும், அதையே தான் சமைத்து சமைத்து என் கழுத்தை நெரிக்கிறாள் என அம்மாவை கடிந்து கொள்ளும். 


இன்னும் என் விரலில் இருக்கிறீர்கள் தானே? இருப்பீர்கள். நான் இன்னும் இறக்கிவிடவில்லை.


எவர்சில்வர் பாத்திரத்தில் அம்மா இட்லியையும், அதன் மேல் எண்ணெய் விட்ட பொடியையும் நிரப்பி அனுப்புவாள். என் துணிப்பையில் அதை போட்டுக்கொண்டு, ஒண்டி மாமரத்தின் மாபெரும் பாதத்தில் வந்து நிற்கவேண்டும். சரியாக ஏழரை மணிக்கு நின்றுவிடவேண்டும். அந்த காலத்து பஸ் அப்போது தூரத்தில் திரும்பும் காட்சி வெளிப்படும். அப்போது இன்னும் சிலர் என்னுடன் நின்று கொண்டிருப்பார்கள். என் வயது ஒத்த சில பள்ளி தோழர்களும் நின்றிருப்பார்கள். ஒரு புன்முறுவலோடு என் கதவு மூடிக்கொள்ளும். எனக்குள் இருக்கும் நட்பு அறை மிகச்சிறியது. அங்கு இருவர் நிற்கலாம். மூச்சு விடமுடியும். மூன்று பேர் நின்றால் மூச்சு முட்டும். நான்கு பேர் நின்றால் ஒருவரை ஒருவர் அவச்சொல் சொல்லி அவர்களே வெளியேறி விடுவார்கள். அவ்வளவு தான் நான் கொடுத்திருந்த இடம். பெரிதாக்க முயலவில்லை. பெரிதாக்கி என்ன பயன்? கூட்டம் கூடி விடும். கூட்டுநட்பு குடும்ப அரசியல் எனக்கு வராது. 


பஸ் அதன் புன்முறுவலோடு வந்து நிற்கும். அதன் புன்முறுவலில் சாம்பல் நிறப்புகை தான் அதிகம். கொஞ்சம் நெடி அடிக்கும். ஆனாலும், சுகந்த மனம். மண்ணையும், காற்றையும் அது நீண்ட நாட்களாக காதலித்ததின் பயன். முண்டி அடித்து ஏறும் வழக்கம் அந்த பஸ் ஸ்டாப்பில் யாருக்கும் இல்லை. அவர்களுக்கு மட்டும் எங்கிருந்தோ வேறு ஒரு ஜென் மனநிலை.வாய்த்திருந்தது. அலுவலகத்திலும் அப்படியே ஜென்னர்களாகவே இருப்பார்களா?  


நான் எப்போதும் கியூவில் நடுவிலேயே இருந்திருக்கிறேன். வாழ்க்கையில் இருப்பது போல. முன் நிற்பதும் வலிக்கிறது, பின் நிற்பதும் பிடிக்கவில்லை. நடுவிலேயே சாந்திசாந்தி என நின்று இருக்கிறேன். அப்படி ஏறும்போது என் ஸ்டாப்பில் எப்போதும் நான்கு சீட்டுகள் காலியாக இருக்கும். அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் ஏறும் கூட்டம், அவர்களுக்கென சீட்டை பட்டா போட்டுக்கொண்டுவிடுகிறார்கள். எப்போதாவது விட நேர்ந்தால், அன்றைய நாள் அவர்களுக்கு வாட்டசாட்டமாக இருப்பதில்லை. சோர்ந்து போகும். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது பஸ் சீட் வரை வியாபித்திருக்கிறது. அல்லது, வியாபிக்க வைக்கும் அளவுக்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு விட்டார்கள். அம்மாவுக்கு டீ வாசம் வந்தால் மட்டும் போதும், இல்லாவிட்டால் தலைவலி வந்துவிடும் போன்றது போல அது. 


எனக்கும் ஒரு சீட் தெரிந்துவைத்திருந்தேன். நான் நடுவில் இருப்பது என்று சொன்னேன் அல்லவா? அந்த நடு சீட் எப்போதும் எனக்காக ஒரு கிழியலை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும். அதில் உட்கார யாரும் விரும்புவதில்லை. நைந்துபோன பச்சை சீட், கிழிந்துபோய், உள்ளே இருக்கும் பஞ்சை இப்போது வெளியேற்றவா அல்லது பிறகு வெளியேற்றவா என்று பல வருடங்கள் காத்திருந்து இன்னும் வெளியேற்றாமலே இருக்கும்.


ஜன்னல் சீட் எனக்கு பிடித்தம். ஆனால், உட்கார மாட்டேன். காரணம் அவன்.


அவனுக்கு இருக்கும் ஒரு ஐம்பது வயது. அவன் என்பதில் மரியாதையை குறைப்பது போல தெரிந்தால், அது சரி தான். அவனுக்கு அந்த எதையையும் சுட்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


முதலில் ஆரம்பித்த அறிமுகம் எல்லாம் அரதபழசானது தான். எங்க படிக்கற, எங்க வீடு, நல்லா படிப்பியா, என்ன ரேங்க், எந்த சப்ஜெக்ட் பிடிக்கும், என்ன சினிமா பாத்த.. இப்படித்தான்... அவனுக்கு கேள்வி கேட்பது வழக்கம், எனக்கு பதில் சொல்வது வழக்கம். பெரியவங்கன்னா மரியாதையை குடுக்கணும், என்று சொல்லிக்கொடுத்த பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை அல்லவா. ஆற்றினேன். தினமும் ஆற்றுவேன். அவனுக்கு என்னிடம் மட்டும் பேச அவ்வளவு விருப்பம் போல.


ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்குவான். அங்கே தான் அவன் ஒரு பாட்டா ஷோரூம் வைத்திருந்தான். அவன் அணியும் சட்டை, பாண்டுகளும் கிட்டத்தட்ட வெள்ளை, ஊதா நிறங்களிலேயே இருக்கும். கடையில் இருக்கும்போது செருப்போடு செருப்பாக இருப்பான் போல.


முதலில் கேள்விகளில் ஆரம்பித்த அறிமுகம், பிறகு தேவை இல்லாத இளிப்புகளை கொண்டுவந்தது. அவன் எவ்வளவு இளித்தாலும் நான் திரும்ப ஒரு புன்முறுவலைக் கூட கொடுத்ததில்லை.


அன்றொரு நாள் அவன் கேள்விகள் கைகளில் இருந்தது போல. அவன் கைகள் என் மேல் பட்டது. சுர்ரென இழுத்தது. அது என்னவென்று இன்று வரை புரியவில்லை. கைகளை தட்டிவிட்டேன். நான்கைந்து முறை இருக்கும். பெற்றோர் சொன்ன மரியாதையும், நான் எப்போதும் நடுவிலேயே நிற்கும் முறைகளையும் வைத்துப்பார்த்தால், நான் அங்கே கூப்பாடு போட்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அக்கா, அண்ணாக்களை கூப்பிட்டு அந்த ஆள் இப்படித் தொடுகிறான் என சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.. நான் தான் நடுவிலேயே இருக்கிறேனே. அந்த நடு என்பது துணிச்சலுக்கும், எதற்கும் உதவாத பயத்திற்கும் உள்ள நடு. தட்டிவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேற மட்டும் தான் முடிந்தது. என் நட்பு வட்டாரம் பற்றி சொன்னேன் இல்லையா, அதில் இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என் அறையில் இடம் இருக்கவில்லை. சொல்லவும் இல்லை.


பயந்து பயந்து ஓடவில்லையே தவிர, இருக்கும் கையளவு மூளைக்குள் இருந்து, வேறு எந்த பஸ்ஸில் எல்லாம் போகலாம் என்று போகலானேன். சில நேரங்களில் பின் வந்தான். சில நேரங்களில் இன்னொரு இடத்தில் இருப்பான், அந்த இடத்தில் என் உடல்வாகுடன் இருக்கும் இன்னொரு என் வயதின் ஒத்த ஒருவரிடம் இருக்கும். அங்கு சென்று சொல்லக்கூட யோசனை. நடுவில் நிற்கிறேன் இல்லையா.


எல்லாம் சென்றது. பஸ் மறைந்தது. நான் வளர்ந்தேன். அவனும் இறந்திருந்தான். அவ்வப்போது அந்த பாட்டா ஷோரூம் வழியே செல்லும்போது மனம் இருட்டுக்குள் குதிக்கும். அவனும் இல்லை, அந்த கடையும் இப்போது பாட்டாவாக இல்லை. சாம்சங் ஆகி விட்டது. மூளையும் அப்படி ஆகி இருக்க கூடாதா என்ன. ஆவதே இல்லை.


Wednesday, November 04, 2020

கிட்டும்

அதற்கு பிறகு அது கிட்டும் 

அது நடந்து முடிந்த பின் 

கிட்டியதா இல்லையா 

என யார் சொல்வது? 

கிட்டப்பட்டவன் 

கிடத்தப்பட்டபின் 

கிடைப்பதென்பது 

கடைந்தெடுத்த இயற்கைத்தனம் 

போல...

Thursday, October 22, 2020

பாதி முடிந்த கதை

 அந்த ஒரு மணி நேரம் மட்டும் கடிகாரத்தை என் மகன் மாற்றாமல் இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும். இப்போது அந்த ஒரு மணி நேர இழப்பு அல்லது தவறு என்னை அலைக்கழிக்கிறது. அவனும் இப்போது என் தோளில் தான் பயணம் செய்கிறான். என் பாவகணக்கை அவனும் எண்ணிக்கொண்டிருக்கிறான்.

அன்றொரு நாள், என் மனைவி வழமையாக செய்யும் காலை வேலைகளை செய்து முடித்திருந்தாள். எப்போதும் என்னை எழுப்பிவிட்டு போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. எழுப்பினால் என்ன ஆகும் என அவளுக்கு நன்றாகவே தெரியும். உலகையே உலுக்கிவிட தைரியம் இல்லாவிட்டாலும், அவளை தேவை இல்லாமல் திட்டி, உருட்டி மிரட்டி, தொலைந்த தூக்கத்தை மீண்டும் தேடிக்கொண்டிருப்பேன். அதுவும் வருவேனா என அடம் பிடிக்கும். திரும்ப நான் வர இன்னொரு பன்னிரண்டு மணி நேரம் காத்திரு என தகவல் தெரிவிக்கும். கண்களுக்கு கீழே தான் உட்கார்ந்திருக்கும். உள்ளே நுழைய மாட்டேன் என்று தேவுடு காக்கும். இத்தனைக்கும் காரணமான அவளை என உருமினாலும், நன்றாகவே தெரியும், அவள் காரணமில்லாமல் என்னை எழுப்ப மாட்டாள் என்று. ஆனால், இந்த விவஸ்தை கேட்ட தூக்கம், அதுவும் தடைபட்ட தூக்கம், குழைத்து கட்டப்பட்ட காதல் கோட்டைகளை என்றும் மதித்ததில்லை.

அவளுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அது இருக்கிறது என்று. மகனுக்கு தெரியாது. அவனுக்கு அப்போது ஆறு வயது தான் ஆனது. அவனுக்கு மிகவும் பிடித்த நடிகர் அப்போதைக்கு ராமராஜன் தான். கரகாட்டக்காரன் பாட்டு வந்துவிட்டால் போதும், பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு திங்குதிங்கு என்று ஆடுவான். இளையராஜா கொஞ்சம் கனிவு காட்டி இருக்கலாம். அந்த மனிதனின் இசைக்கு நாங்கள் அனைவருமே அப்போது அடிமை. ஆனால் இவனுக்கோ ராமராஜன் தான் ஆதர்சம். அவர் திரையில், ஒலியும் ஒளியுமில் வரும் போது தான் இரண்டு மடங்கு சோறு அவன் வயிற்றுக்குள் தஞ்சம் அடைந்திருக்கும்.

இளையராஜா எனக்கு பிடிக்க ஆயிரம் காரணம் இருந்தது. உங்களுக்கும் இருக்கும். எனக்கு இருக்கும் காரணம் உங்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. என் தூக்கம் தான் காரணம். அப்போது என் நண்பர்களெல்லாம் சொல்வார்கள், எனக்கு தூக்க துணை ராஜா என்று. சமயத்தில் துக்கத்தின் துணையாகவும் மாறிப்போனார். எனக்கோ தூக்கம் இல்லாதபோது அவர் துணை. என் பிரச்சினையே இது தான். கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒன்றை நீங்கள் எப்போதோ ஒரு நாள் தான் கேள்விப்படுவீர்கள். ஆனால், கேட்ட பொழுதில் அது உங்கள் மனதில் நன்றாகவே இருந்துவிடும். நகலாது. அடுக்கி வைத்த பளிங்கு மாளிகையின் முன் ஒருவன் வேப்பங்குச்சியில் பல் விளக்கி அந்த பளிங்கின் மீதே துப்பினால், அந்த காட்சியை நீங்கள் முதல் முறை பார்த்தால், பளிங்கு மாளிகையா உங்கள் மனதில் நிற்கும்? அந்த துப்பும் துப்பாய காட்சி தானே நினைவில் இருக்கும். ஒழுங்கீனமற்ற ஒவ்வொன்றும் நம் மனதில் நன்றாகவே இடம் பெரும். அப்படி ஒன்று தான் இது.

எனக்கு நகர்ந்து கொண்டே இருக்கும் துயில் வியாதி. உங்களுக்கு எல்லாம் - எனக்கு இருக்கும் இந்த ஒன்று உங்களுக்கு இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன் - சரியான நேரத்திற்கு தூக்கம் வரும், சரியான நேரத்தில் முழிப்பும் வரும். எனக்கு அந்த சரியான நேரம் நகரும். ஒவ்வொரு நாளும் நகரும். ஒரு நாள் ஒன்பது மணியில் இருந்து காலை ஏழு மணி வரை என்றால், அடுத்த நாள் அது நகரும். அடுத்த நாள் பத்து மணி வரை தூக்கம் வராது. அதற்கு பின் வரும். காலை எட்டு மணிக்கு விழிப்பேன். இதிலென்ன அட்டகாசம், எல்லோரும் அப்படித்தானே என சொல்லாதீர்கள். எப்படியாக இருந்தாலும், தூக்கம் இரவிற்குள் வந்துவிடும், விழிப்பது காலைக்குள் வந்துவிடும். நான் சுழலும் வட்டத்தில் இருப்பதால், அந்த வட்டம் சில நாட்களில், காலை பத்து மணிக்கு தொடங்கும். சாயங்காலம் ஏழு மணிக்கு விழித்துவிடுவேன். சுழன்று கொண்டே இருப்பதால் என் வேலை எல்லாம் சுழலுமா என்ன? வட்ட வடிவில் வேலை எல்லாம் செய்ய முடியாது. வேலையே கிடைக்கவில்லை. எந்த மருத்துவருக்கும் எனக்கு மருந்து கொடுக்கும் அறிவு இருப்பதாக தெரியவில்லை. இங்கு தான் இளையராஜா வந்து விளையாடினார். நான் என் வியாதியை புரிந்து கொண்ட போது என் வயது கிட்டத்தட்ட பன்னிரெண்டு இருக்கும். அது வரை பள்ளியில் தூங்கி தூங்கி விழுவேன். வாத்தியார்கள் அடி வெளுத்து விடுவார்கள். 

அடியும் இடியும் தாங்கி வருவதென்ன சரியான படிப்பா? அத்தனைக்கும் தோல்வி தான் எனக்கு துணை. தூக்கம் சரியாக வந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும். நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். சில நாட்களில் கும்மிருட்டு நேரங்களில் கில்லி விளையாட வாருங்கள் என அழைக்கவா முடியும்? ராஜா மட்டும் தான் அழைத்த நேரத்தில் வருவார். அத்தனை கேஸட்டுகளில் எனக்காக இசையை வரித்து வைத்திருந்தார்.

அவரின் துணையிலேயே தான் என் துணையும் கிடைத்தாள். அவளுக்கும் அவர் தான் பைத்தியம். இதில் அவர் பைத்தியம் என அர்த்தம் வந்தால் நான் பொறுப்பாக முடியாது. மகனும் பிறந்தான். வேலை இல்லாமலே தான் இருந்தேன். அவளுக்கு தான் சிரமம். ஓடிக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பக்கத்து வெல்டிங் கடையில் கூப்பிடுவார்கள். அப்போது மட்டும் கைக்கு ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும். 

மகனுக்கு ஆறு வயது ஆனது. எனக்கு அப்போது வெல்டிங் கடையில் அறிமுகமான ஒருவர் என் அருகாமையை ரசித்தார். அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம். அவர்களில் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறி இருந்தார். அறிமுகமும் செய்தார். ஒரு வேலையும் கிடைத்தது. அவர்களுக்கு என் தூக்கமின்மை பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. 

Saturday, August 22, 2020

இழந்தான்

 அலுவலக மாலைகள் எப்பொழுதும் திராபையானது. ஒன்று, மொத்த உடம்பையும் பலி கேட்டு, அதை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கும். இல்லையென்றால், இன்னும் சில வாடிக்கையாள எதிரிகளிடம் பாருக்கு சென்று மறுபடியும் உரையாட வேண்டி இருக்கும். இன்னும் இல்லை என்றால், பல வீட்டு வேலைகள் காத்துக்கொண்டிருக்கும். எப்படி பார்த்தாலும், இது ஒன்றும் சிலாக்கியம் இல்லை. படுத்து உறங்கும் முன் மாலை சூரியனை அனுபவிக்க முடியாத வாழ்க்கை தான். ஆனாலும் எப்போதும் போல இந்த வாரம் இல்லை. 

லாஸ் ஏஞ்செலிஸ் என்னை ஒரு வாரம் வர வைத்திருந்தது. பெரிய வியாபார நோக்கோடு எங்கள் அலுவலகம் நகர்ந்து கொண்டிருந்தது. இருக்கும் நூறு பேரும் அந்த ஒரு பெரு வணிக வாடிக்கையாளரை எங்கள் கைப்பிடிக்குள் அமுக்கி, பத்து வருட காண்ட்ராக்ட் எழுதி விடவேண்டும் என்ற வெறியோடு இருந்தனர். அதற்கான முக்கிய சாரதியாக நான் இருக்க வேண்டி நேர்ந்தது. அதுவே வாழ்வின் மிகக்கொடிய நேரங்களில் ஒன்று. வாடிக்கையாளரிடம் வழிந்து விட்டு, நிலவையே அந்த நிறுவனத்தின் வாடிவாசலில் கட்டிவைத்து தேவைப்படும் போதெல்லாம் கவிதை எழுதலாம் என்ற அளவுக்கு கதை விடுவார்கள். அந்த கதையை என்னை வைத்து நிகழ்த்தும் படியும், இப்போதைக்கு அதை எப்படி செய்யலாம் என்ற செய்முறை மட்டும் போதும். அதை வைத்து அவர்களை நம் பத்து வருட சிறைக்குள் கொண்டு வந்துவிடலாம். அதற்கு பின் நிலாவெல்லாம் மறந்து, அவர்களே ஒரு பத்து வாட்ஸ் பல்புக்கு வந்துவிடுவார்கள். இப்படி எல்லாம் கட்டுக்கதை கட்டி, மில்லியன்களில் வியாபாரம் நடக்கும்.

அந்த நிலா வியாபாரம் ஒரு வழியாக நிறைவுக்கு வரும்படி என் வேலைகளை செய்துவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வீதியில் காப்பி கடையில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாச மூச்சை விட்டு, இருக்கும் மீதி மூன்று நாட்களில் என்ன செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. நான்காவது நாள் மறுபடியும் அந்த நிலா காண்ட்ராக்ட் பற்றி கடைசி கட்டிட பேச்சு வார்த்தை இருக்கும். அது வரைக்கும் என்னை வீடு திரும்ப அனுமதிக்க மாட்டார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், அந்த மூன்று நாள் என்னை இங்கு வா, அங்கு வா, விவாதிக்கலாம் என கத்தி வைக்க மாட்டார்கள். ஏனென்றால், பிழிந்தாகி விட்டது. இங்கு இன்னும் வருவதற்கு ரத்தம் இல்லை. ஊறவைத்து ஊறவைத்து தான் ரத்தம் பிழியப்படும். நல்ல கட்டுப்பாடு உண்டு அதில்.

பத்து வருடங்கள் முன்பு சென்றிருந்த லாஸ் வேகாஸ் நியாபகம் வந்தது. சென்று விடலாம் என்ற நொடியில், காப்பி கடையில் இருந்து, நேராக வண்டியை லாஸ் வேகாஸ் விட்டேன். வழியெல்லாம் இளையராஜா. இளையராஜாவை இன்னொருவருடன் கோர்த்து கோர்த்து ரசிப்பதில் எனக்கு அலாதி இன்பம். முதலில் ராஜாவுடன், மலேசியா. அடுத்து எஸ்பிபி. பின், எஸ் ஜானகி. சித்ரா. ஜெயச்சந்திரன். 

ஐந்து மணி நேரத்தில் இளையராஜா சமத்தாக என்னை கொண்டு சேர்த்தார். என்ன ஒன்று, மலேசியார் பாடும் போதெல்லாம், இந்த அலெக்ஸ் படுபாவி வந்துவிட்டு போனான். மோனாலிசா ஓவியத்திற்கு போட்டு வைத்தது போல். ஒரு முறை பொட்டு வைத்து பார்த்தால், அதற்கு முன் இருக்கும் பிம்பம் அழிந்தே போகும். எதிர்மறைகளுக்கே இருக்கும் பிரத்யேக குணம்.

வழியிலேயே, மூன்று நாளைக்கான ஜாகையை தேர்ந்தெடுத்து விட்டேன். காஸ்மோபாலிட்டனில் உச்சபட்ச அறை. அங்கிருந்து கீழே பார்த்தால், வேகாஸின் முக்கால்வாசி வேடிக்கைகள் வெளிவரும். ஆனாலும் எறும்புகள் போல. எறும்புகளின் வேடிக்கைகள் எல்லாம் வெளிவந்தால் எப்படி இருக்கும். வெறும் எறும்புகளென எண்ணி விட்டுவிட்டு தான் போக வேண்டும். இரவு குளித்துமுடித்து விட்டு, உடனே வெளியே கிளம்பியாகி விட்டது. இரவிற்கென்றே பெற்று எடுக்கப்பட்ட குழந்தை, லாஸ் வேகாஸ். அங்கு மட்டும் தான் இரவில் விடியல். விடிந்த பின் துயில். கீழே சென்று ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு, ஒரு சீட்டுக்கட்டு பகுதியில் உட்கார்ந்தேன். புகை மூட்டம் கொஞ்சம் என்னை கடவுளாக்கியது. புகை உருவாக்கிகள் எல்லாம் நுரையீரல் அல்லவா. சுகந்தமாக நினைத்துக்கொள்ள வேண்டியது தான். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அப்போது தான் பார்த்தேன். வேகாஸில் இதெல்லாம் புதிதா. அங்கே கண்களெல்லாம் அளவுக்கு அதிகமாக வேலை பார்க்கும். பல கண்களுக்கு வேவு பார்த்து, வேட்டையாடுவது தான் பழக்கம். சிலருக்கு அது தான் வாழ்வே. அவளுக்கு வாழ்க்கையா இல்லை பழக்கமா?

எழுந்து அடுத்த கேசினோவுக்கு நகர்ந்தேன். கடவுள் இடத்தில் இருந்து சிறிது நேரம் மனிதனானேன். சுதந்திர காற்றை சுவாசித்தேன். பின் மீண்டும் கடவுளானேன். இந்த முறை அடர்த்தியான மேகங்கள். இந்த முறை ஒரு நூறு டாலர்கள் வைத்து ரஷ்யன் ரௌலட் ஆடினேன். நான் அலுவலகத்தில் வரைந்து கொடுக்கும் வருமான வரைபடம் போல, மேலே ஏறியது, பின் இறங்கியது, பின் ஏறியது, பின் மொத்தமாக போண்டி ஆக்கியது. போனால் போகிறது. இங்கே வந்தாலே விட்டுவிட்டுதான் போக வேண்டும். வாழ்க்கையைப் போல, மரணத்தைப் போல. அவள் ஏன் என்னை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்? எனக்கும் அவளுக்கும் ஏதேனும் முன்பு தொடர்பு இருந்திருக்குமா? வாய்ப்பில்லையே. தட்டையான வாழ்க்கை வாழ்ந்த எனக்கு இப்படி ஒரு வண்ணப்பக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இரவு மூன்று மணி ஆகி இருந்தது. வேகாஸின் மனநிலை உச்சத்தில் இருந்தது. அதை சுற்றி அனைத்து நகரங்களும், மாநிலங்களும் கனவு கொண்டிருந்தன. வேகாஸ் அந்த கனவிலேயே தான் சுருண்டு கிடந்தது. மெல்ல கண்கள் இருள, மெத்தையில் போய் மயங்க தத்தி தத்தி சென்றேன். அவள் ஏன் என்னை இன்னும் பின் தொடர்கிறாள்? வாயை திறந்து கேட்டு விடலாமா? இவள் அவளாக இருப்பாளா? எவ்வளவு கேட்பாள்? திருடுபவளா? என் வண்ணத்தை பார்த்து இருப்பதை எல்லாம் அபகரிக்கலாம் என நினைக்கிறாளா? இருப்பதெல்லாம் டிஜிட்டல் காசு. எப்பொழுதும் விசா, மாஸ்டர் கார்டு கம்பெனியில் மட்டும் தான் என் பணம் இருக்கும். அவன் இவள் எங்கிருந்து லவட்ட முடியும். மூன்று மணிக்கு இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும். போய் தூங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. வேகமாக நடந்தேன்.

லிஃப்டில் ஏறி, அறையின் கதவை கார்டு கொண்டு திறக்கும் வேளையில் அவளே என்னை அழைத்தாள். இத்தனை நேரம் நான் நினைத்தது சரிதான். அவளுக்கு நான் தான் வேண்டும். அவளே பேசினாள்.

உங்கள் நண்பர்கள் உங்களுக்கு என்னை இரண்டு நாட்களுக்கு புக் செய்திருக்கிறார்கள். நான் உள்ளே வரலாமா?

என்னது, புக் செய்திருக்கிறார்களா? நானே யோசித்து தானே இங்கு வந்தேன். யாருக்குமே தெரிய வாய்ப்பில்லையே. இது என்ன புது குழப்பம்.

இல்லை, நீங்கள் ஆள் மாற்றி சொல்கிறீர்கள். அது நானாக இருக்காது. என் நண்பர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்.

இல்லை, உங்கள் நண்பர்கள் தான். கொஞ்சம் பேசலாம். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சரி வா உள்ளே, என உள்ளே அழைத்தேன்.

அவளுக்கு என் அறை பிடிக்கவில்லை போலும். அசாதாரண பார்வை ஒன்றை பார்த்தாள். எத்தனை அறைகளை பார்த்தவளோ என்று நினைத்தேன். எனக்கே ஒரு கொட்டு வைத்துக்கொண்டேன். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடை போடும் இடத்திற்கு நான் எப்படி வந்தேன். எல்லாம் இந்த இடத்திற்கு இருக்கிற மாயாஜாலம்.

அவளுக்கு என்னிடத்தில் பேச வேண்டும் என்று இருக்கும் போல.

சரி சொல், உன்னை இங்கு அனுப்பியது யார்?

உன் வாசகர்கள்.

என் வாசகர்களா? என்ன உளறுகிறாய்.

ஆமாம், உன் வாசகர்கள் தான்.

நான் என்ன எழுத்தாளனா, எனக்கு வாசகர்கள் இருக்க.

ஆமாம், நீ எழுத்தாளன் தான். இப்போது அல்ல. இன்னும் பத்து வருடங்கள் கழித்து.

அம்மாடி, வெள்ளை தேவதையே, என்னை மிகவும் குழப்புகிறாய். உனக்கு ஏதேனும் பணம் வேண்டுமென்றால் சொல், தருகிறேன். என்னை இப்படி நான்கு மணி காலையில் உலுக்கி எடுக்காதே. 

இல்லை, நீ என்னை பார்க்க வேண்டும் என்பது எனக்கு சொல்லி அனுப்பப்பட்ட ஒன்று. நீ என்னை சந்தித்து தான் ஆக வேண்டும். நான் வந்திருப்பது உன் எதிர்காலத்தில் இருந்து.

இதை நம்ப வேண்டுமா?

நம்பித்தான் பாரேன். நீ வருந்த மாட்டாய்.

சரி, எனக்கும் பொழுது போக வேண்டும். உன் நாடகத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போது என்ன செய்யவேண்டும்?

தூங்கலாம்.

சரி, தூங்கு. நாளை காலை என் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் பேசலாம். என் எதிர்காலத்தை நீ முன்பே, இல்லை, பின்பே பார்த்து விட்டாய்.

கொஞ்ச நேரம் தூக்கம் வந்தது. பின் கனவு வந்தது. கனவில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டேன். புலிகள் துரத்தின. ஒரு பெரிய மலையை ஓடியே கடக்கிறேன். என் நைஜீரிய நண்பன் தான் என்னை தரதரவென இழுத்துக்கொண்டு செல்கிறான். தீடீரென மலைக்கு நடுவே பாகுபலி போல ஒரு சிலை. அந்த சிலையின் தலையில் இருக்கிறோம். அந்த சிலையின் தலையில் இருந்து பாதம் ஒரு நாற்பதாயிரம் அடி  இருக்கும். அப்படியே வழுக்கிக்கொண்டு போனால், கீழே உள்ள அவன் வீட்டிற்கு போகலாம் என்கிறான். யோசிப்பதற்குள் அவன் கைகளை என் கைகளோடு அணைத்து அப்படியே சரசரவென சறுக்கினான். அசுர வேகத்தில் கீழே நகர்கிறேன். முகம் தாண்டி, கைகள் தாண்டி, தொடை தாண்டி, பாதம் வரை வந்துவிட்டேன். பிருஷ்டம் பாதி கிழிந்து போனது. மூச்சும், நெஞ்சும் ஒரு நொடிக்கு நாற்பதாயிரம் முறை துடித்தது. படாரென எழுந்துவிட்டேன். பக்கத்தில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

மணி இப்போது ஐந்தரை. வேகாஸின் தரைகள், காலடி தடங்களை இழந்து கொண்டிருந்தன. அனைவரும் உறங்க சென்றனர்.

அவளை எழுப்பினேன். பெயர் வேற தெரியவில்லை.

அடியே, எதிர்காலம். கொஞ்சம் எழுந்திரு. பேசலாம் என்றான்.

அவள் ஒரு துளி கூட அசையவில்லை.

கொஞ்ச நேரம் என் எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அழகாக இருந்தது. கொஞ்சம் கூட பிசிறு அடிக்காத ஒரு எதிர்காலம். மலர்ச்சி தான் முழுவதும். ஒரு பகுதி கூட குறை சொல்லும்படி இல்லை. அட முண்டமே, அவள் உன் எதிர்காலம் அல்ல. எதிர்காலத்தில் இருந்தவள், இல்லை இல்லை, இருக்கிறவள். எப்படி சொல்ல வேண்டும். இருந்தவள் என்றா, இல்லை இருக்கிறவள் என்றா. குழம்பிப்போய், இப்போதைக்கு என் பக்கத்தில் இருக்கிறாள் என்பதோடு நிறுத்திக்கொண்டேன். 

கொஞ்சம் அசைந்தாள். எழுந்தாள். பேசினாள். நானும் பேசத்தொடங்கினேன்.

வாசகர்கள் அனுப்பினார்கள் என்கிறாயே, அப்படியென்றால் நான் யார்?

நீ ஒரு எழுத்தாளன். நாவல் ஆசிரியன். உன் நாவல்கள் எல்லாம் வெகு பிரசித்தம்.

அப்படியா?

என்ன எழுதி இருக்கிறேன்?

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். இருபதுக்கும் மேற்பட்ட புதினங்கள். உனக்கு புக்கர் பரிசு கூட கிடைக்கப்போகிறது.

அப்படியா?

ஆமாம், நீ மிகப்பெரிய எழுத்தாளன். உன் பெயரை உச்சரிக்காத வாசகன் இல்லை.

அப்படியா?

ஆனால், இப்போது உன் முகத்திலும் சரி, மூளையிலும் சரி, அதற்கான சுவடுகள் தெரியவில்லை.

அப்படியா?

பின்னே!!! நீ இது வரை வாயை பிளக்கிறாயே தவிர, நல்ல கேள்விகள் எதையும் கேட்கவில்லை. எழுத்தாளன் என்றுமே கேள்வி கேட்பவனாகத்தான் இருந்திருக்கிறான்.

மௌனமாக இருந்தேன்.

சரி, கேட்கிறேன்.

கேள்.

எதற்கு வாசகர்கள் என்னை எதிர்காலத்தில், அதாவது நிகழ்காலத்தில் பார்க்காமல், இறந்த காலத்தில் பார்க்க எண்ணுகிறார்கள்?

அவர்களுக்கு சில கேள்விகள் இருக்கிறது.

அப்படி என்ன கேள்விகள்?

என்னை நீ எப்படி கையாளப்போகிறாய் என்பது முதல் கேள்வி.

இதிலென்ன சந்தேகம். உன்னை கையாள நீ என்ன கைப்பிடி களிமண்ணா? அழகான பெண்.

ஆனால், உனக்கு தெரியாத பெண்.

ஆமாம்.

என்னை போகமாக பார்ப்பாயா இல்லை தோழமையாக பார்ப்பாயா?

இப்போது போகமாகதான் பார்க்க தோன்றுகிறது. நேரம் சென்றால் தோழமையாகி விடுவாயோ என்னமோ. ஆமாம், இதை தெரிந்து கொண்டு அந்த வாசகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

காரணம் உண்டு. உன் கதைகள், புதினங்கள் எல்லாமே பெண்கள் இல்லாமல் எழுதப்பட்டது.

இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறேனா? எழுத்தாளன் என்பதையே நம்ப முடியவில்லை. இதில் இது வேறு.

ஆமாம், அதனால் தான் உன் மீது அத்தனை கேள்விகள். உலகிலேயே பெண்களை பற்றியும் சரி, பெண்கள் பாத்திரங்களும் சரி, இல்லாமல் மட்டுமே எழுதி இருக்கிறாய்.

ஆச்சரியம் தான். எனக்கு பெண்கள் என்றால் வெகு நாட்டம் உண்டு. அதனால் தான் பார், உன்னையும் என் அறைக்குள் அனுமதித்திருக்கிறேன். உன் பெயர் கூட தெரியாது. ஆனால், பெண் என்ற ஒரு காரணத்தில் நான் ஈர்க்கப்பட்டேன்.

இருக்கலாம். ஆனாலும், எழுத்தில் அது இல்லை.

எழுத்து வேறு, நான் வேறாக இருந்திருக்கிறேனோ இல்லை இருக்கிறேனோ என்னவோ. அப்படி இருந்தால் என்ன தவறு.

தவறில்லை. ஆனால், அது சரியாக தோன்றவில்லை. படைப்புகள் ஒவ்வொன்றும் பெண்கள் இல்லாவிட்டால் வெறும் குப்பைக்கூளம் தான். அதில் அன்பும் இருக்காது, அழகும் இருக்காது. வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த எந்த படைப்பையும் யோசித்துப்பார். கலைகளை யோசித்துப்பார். பெண்கள் இருப்பர். பெண்களாலேயே அந்த கலை வடிவம் பெற்றிருக்கும். இல்லையென்றால், பெண்கள் மரபை உடைத்து நவீனம் உருவாக்கி இருப்பர். 

ரொம்ப குழப்பாதே. சரி, இப்போது என்ன, பெண்களை பற்றி எழுத வேண்டுமா. எழுதுகிறேன்.

அது முடியாது.

ஏன்?

உனக்கான பெண்கள் உன்னை நேசிக்கவில்லை. 

அப்படி இல்லையே.

இப்போது இல்லை.

அப்படியென்றால், இனிமேல் அந்த விஷயம் நடக்குமா?

ஆமாம்.

அது எப்படி உனக்கு தெரியும்?

உன் எதிர்காலத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்தேன்.

பதில் தான் உனக்கே தெரியும் போலிருக்கிறது. அந்த வாசகர்களிடம் சொல்லிவிடேன்.

சொல்கிறேன். உனக்கும் தெரியவேண்டுமா?

ஆமாம், சொல்.

ஒரு வார்த்தை பிரயோகம் தான்.

என்ன வார்த்தை?

உன் அம்மா சொல்கிறாள். 

என்ன சொல்கிறாள்?

ஒரு அம்மா அப்படி ஒரு வார்த்தை சொல்லும்போது, உனக்கு எல்லாம் மாறும். நீயும் மாறினாய். உலகின் அத்தனை தளங்களும் துண்டு துண்டாகின. மலர்கள் மரண ஓலங்கள் போட்டன. உன்னை வெறுத்தாய். உலகையே வெறுத்தாய். எழுதி எழுதி துண்டாடினாய். சோகங்களை படைத்து தள்ளினாய். உன் படைப்புகள் எல்லாம் சோக காவியங்கள். அழுத்தங்கள் நிறைந்தது. உன்னால் சில தற்கொலைகள் கூட நடந்தது. துன்பவியல் படைப்புகளை உன் அளவிற்கு எழுத இனி ஏழு பிறப்பு இருக்க வேண்டும் எனும் அளவுக்கு படைத்திருக்கிறாய்.

பல நிமிட மௌனத்திற்கு பின் அவளிடம் கேட்டேன்.

இப்படி சொன்னபின் நான் எப்படி என் நிகழ்காலத்தை கடக்க முடியும். 

வேறு வழியில்லை. கடந்து வா. நீ அதற்காக படைக்கப்பட்டவன். உன்னை உருக்கியும் உடைத்தும் தான் இலக்கியம் பேரெழுச்சி பெற வேண்டி இருக்கிறது. அதற்கு உன் வாழ்க்கையை அர்ப்பணிக்க போகிறாய். நீ அழிந்து கொண்டு தான் இருப்பாய். அந்த அழிவு தான் படைப்பின் ஆதாரம். உன்னை இழ, பெரிதினும் பெரிது கொடுப்பாய். எதிர்காலத்தில் சந்திக்கலாம். என்னை வெறுக்காதே. 

Friday, August 21, 2020

சடம்

 மனசு சரியில்லை 
என்றான் நண்பன் 
எனக்கும் சரியில்லை 
நேற்று அப்பாவிடம் 
சண்டை 
பணம் குறைவாக
இருக்கிறது என்றான் 
என்னிடமும் இல்லை 
மாதக்கடைசி 
நேற்று பூக்கள் 
சரியாக பூக்கவில்லை 
எனக்கும் தான் 
நாளை எனக்கு கல்யாணம் 
அச்சச்சோ 
எனக்கு முன்பே 
கல்யாணம் ஆகிவிட்டதே 
சொல்வது எதையும் 
எனக்காக 
கேட்காத 
சட சென்மங்கள் 

கவிதை

 இன்று காலையில் இருந்து 
கவிதைகள் 
கொட்டிக்கொண்டிருந்தது 
நிற்காமல் 
காட்டிக்கொண்டிருந்தது 
நில் என்றால் 
நிற்கவில்லை 
மூச்சு முட்டிப்போனது 
வா நடை போகலாம் 
என கூட்டிப்போனேன் 
உளறிக்கொண்டே வந்தது 
வாயை மூடு என்றேன் 
அது எனக்கில்லை என்றது 
என்னதான் இருக்கிறது 
உனக்கு 
எனக்கு நீ தான் 
என்றது

Wednesday, August 19, 2020

மூட்டை

 இப்போது வரை 
நாற்பது கோடியே 
எழுபது லட்சத்தி 
ஐம்பதாயிரத்து 
சொச்ச முறை 
சுவாசத்தை 
வெளியே விட்டிருக்கிறேன்.
திரும்பி எடுத்துக் 
கொள்ள வேண்டும் 
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்.
ஒன்று பள்ளியில் 
ஒன்று கக்கூஸில் 
ஒன்று வாய்க்காலில் 
ஒன்று சண்டைக்கிடையில் 
ஒன்று அம்மாவின் மடியில் 
ஒன்று கட்டிலுக்கடியில் 
ஒன்று மரத்துக்கு பின்னால் 
மூச்சு விடாமல் 
மூச்சை பிடித்துக்கொண்டு 
மூச்சை தேடிக்கொண்டிருக்கிறேன் 
பத்திரமாக மூட்டை 
கட்டவேண்டும் 
நாளை நான் 
எடுத்துச்செல்லவேண்டும் 

படி

 நகுலனைப்படி
ஆத்மாநாமைப்படி 
விக்கிரமாதிதனைப்படி 
தேவதச்சனைப்படி 
எல்லாரையும் படி 
உன்னையும் சேர்த்து 
வைத்துப் படி 
அப்போது தான் அது படி 

நானும்

 ஒரு காலத்தில் 
தவளையாய் இருந்தேன் 
இப்போது மனிதனாய் 
இருக்கிறேன் 
அண்ணாந்து பார்த்தால்
விமானம் 
அந்த ஆகாய 
வனாந்திரத்தில் 
ஒரு நாள் நானும் 
இருந்திருக்கிறேன் 
தவளை கத்தியது 
நானும் இருந்திருக்கிறேன்!!!

Wednesday, August 05, 2020

எதிரி

உயிர் நண்பன் 
விதிவிலக்காக 
ஒரு நாள் மட்டும் 
உன் பரம எதிரியாகிறேன் 
என்றான்.

இருந்துவிட்டுப்போ
அடுத்த நாள் மறுபடியும் 
நண்பன் தானே!! 

பரம எதிரியானான்
திட்டித்தீர்த்தான் 
பிடித்து சாக்கடையில் 
தள்ளினான் 
இனி உன் முகத்தில் 
முழித்தால் 
நான் மனிதனே இல்லை
என்றான். 

மறுநாள் வந்தான். 
நண்பா, நேற்று தான் 
புரிந்தது. 
எதிரியாக நான் 
உன்னை நன்றாக 
புரிந்துகொண்டேன்.
நீயும் என்னை 
எதிரியாகப்பார்.

பாதாள மனிதர்கள்

என்னை அழுத்தம் கொடுத்த 
அந்த மரண நொடிகளை 
தேடிக்கொண்டே இருக்கிறேன் 
திரும்ப கிடைக்காது 
என்கிறார்கள் 
கிடைத்தால் திரும்ப 
பார்க்க வேண்டும் 
எப்படி எல்லாம் 
அது என்னை 
சித்திரவதை படுத்தியது 
அதே நொடி தான் 
இன்னொருவனுக்கு சுகபோகத்தை 
தந்தது
கேட்டால் உன் நேரம் 
சரியில்லையாம்
நொடிக்கு என்ன 
ஆள் பார்த்து 
செய்கை செய்து 
வைக்கும் வேலையா 
அது நானே வரவழைத்துக்கொண்டது 

இப்போது சொல்கிறார்கள் 
பார், எல்லாம் உன்னால்தான் 

புரிகிறது 
நான் எங்கு விழுகிறேனோ 
அங்கு தான் அனைவரும் 
குடியிருந்து என்னை வரவேற்கிறார்கள்.

ஒரு நாள் அவர்கள் 
விழத்தானே போகிறார்கள் 
அப்போது நான் கயிறு 
கொண்டு வருகிறேன்.

விதை

மரம் கொஞ்சம் கூட 
சொரணை அற்றது போல 
விதையிலிருந்து தான் வந்தது 
பின் ஏன் மறுபடியும் 
விதைக்குள்ளேயே போய் 
அடைந்துகொள்கிறது 

Sunday, July 26, 2020

ஞானி

வாழ்க்கைக்கென்ன தெரியப்போகிறது
இன்று, இப்பொழுது
நிம்மதியை தரவேண்டுமா
ரோதனைகளை தரவேண்டுமா
இல்லை
விட்டேத்தியாக இருக்கவேண்டுமா என்று

அதற்கு ஒரு வேலையுமில்லை
நான் போகும் பாதையில்
அதுவும் கூட வருகிறது
வழுக்கி விழுந்தால்
எழும் வரை
காத்திருக்கிறது

வெடித்து சிரித்தால்
பொறுமையாக பார்க்கிறது

அழுது தீர்த்தால்
எப்போது முடிப்பேன்
என கன்னத்தில்
கைவைத்து தேவுடு
காக்கிறது

என்னமோ போகட்டும்
இந்த வாழ்க்கை
எதற்கு தான்
கூட வருகிறதோ

Monday, July 20, 2020

கனவு

அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. சொல்லப்பட்ட தகவல்களை வைத்துப்பார்த்தால், இவரைப்போல் இவர் மட்டும் தான் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருப்பதாக அலுவலகத்தில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். யாரிடமும் முகம் கொடுத்து பேசாத நான், அவரிடம் பேசப்போகும் ஆசை வழிந்து கொண்டிருந்தது.

அலுவலக நண்பர்கள் வேண்டாமே என்று தான் அறிவுறுத்தினார்கள். வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் என்னை அவமானப்படுத்திவிடப்போவதும் இல்லை, நேரத்தை வீணாக்கி விடப்போவதுமில்லை. சென்று தான் பார்க்கிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, அவரின் விலாசத்தை குறித்துக்கொண்டு அன்று இரவு என் அறைக்குப்போய் தூங்கினேன். அன்றிரவு தூக்கத்தில், கனவெல்லாம் அலறலாகவே இருந்தது. ஒரே கூச்சல். மண்டை உடைந்துபோகும் அளவுக்கு குமுறல். ஒரு நொடித்துளி கூட அமைதி இல்லை. அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மண்டைக்குள் இருந்த கனவுக்கூச்சல் எல்லாம் வெளியில் இருந்த கூச்சலுக்கு முன் பரந்துவிரிந்திருந்தது. மண்டையை நாலு முறை உலுக்கியத்தில், சில கூச்சல்கள் கீழே சிதறியதை காண முடிந்தது. அதில் ஒன்று அலுவலகத்தில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மேலாளர். இன்னொன்று, சின்ன அத்தையின் புலம்பல் கூடிய கூச்சல். இவை இரண்டும் தான் இறங்க வேண்டிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது. மற்றதெல்லாம் அடர்த்தி நிரம்பி மூளைக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும். அடுத்த நாள் இரவை எண்ணி இப்போதே தலை வலிக்க ஆரம்பித்தது.

சரி, அவரை பார்த்துவிட்டு பிறகு இதையெல்லாம் பைசல் பண்ணிக்கொள்ளலாம் என விரைந்து சென்று, இரண்டு நிமிட குளியலை போட்டுவிட்டு, இருப்பதிலேயே சாந்தமாக இருந்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, அதற்கும் சாந்தமாக இருந்த பேண்ட்டையும்  போட்டுக்கொண்டு கீழ் இறங்கினேன். வீட்டு முதலாளி வீதியில் குப்பை அள்ளும் அண்ணனை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தார். அந்த அண்ணன் திரும்ப வசைகளை அலங்காரப்படுத்தி, வசைகளுக்கெல்லாம் ராஜாவான உறவின் முறை வசவையும், உறுப்பு முறை வசவையும் அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தார். கணக்கு பார்த்தால், இவர்களின் கனவுக்கூச்சல் இன்றைக்கு இரவு என்னை விட அதிகமாக இருக்கும் போல் இருந்தது.

18-B பிடித்து, சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்தேன்.

அவருக்கு தொலைபேசினேன்.

சார், உங்க அலுவலகத்துல குமாஸ்தாவா சேர்ந்திருக்கேன். உங்களை பார்த்து சில விஷயங்களை கத்துக்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன். இங்க காலேஜ் பஸ்ஸ்டாப்பிலே இருக்கேன். உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்றீங்களா?

சொல்றேன்.

பக்கமா, தூரமா?

தூரம்.

போனுக்கு மெசேஜ் அனுப்பறீங்களா?

அனுப்பறேன்.

விரைந்து சென்றேன். அந்த வீடு நான்கு ராட்சச வீடுகளுக்கு மத்தியில் எலியின் போந்து போல இருந்தது. இந்த வீட்டினர் மூச்சு விட்டால் அந்த ராட்சச வீட்டினரின் முதுகில் தான் போய் ஓய்வெடுக்கும். அதற்குப்பின் தான் வெளியில் கலக்கும். அவ்வளவு நெருக்கம்.

சார், சார், நான்தான் வந்திருக்கேன்.

வாங்க.

உட்கார வசதி இருந்தது. பள்ளிக்கூட பெஞ்சுகள் போல. வீட்டுக்கு வந்தவர்களை அடக்கி வைத்து பாடம் எடுப்பார் போல.

காபி?

வேண்டாம் சார். வரும்போதே குடிச்சிட்டு தான் வந்தேன். உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கலாம்னு யோசிக்கறேன். கேக்கலாமா?

கேளுங்க.

நீங்க ஒரு வார்த்தை மட்டும் தான் பேசுவீங்கன்னு சொன்னாங்க.

ஆமா

அது சாத்தியமா?

ஆமா

உங்க மனைவி கிட்டயும் அப்படித்தானா?

ஆமா

முதல்ல இருந்தேவா?

ஆமா

அவரின் கடைசி நான்கு வார்த்தைகள், ஆமா என்பதை தாண்டி ஒரு மாத்திரை கூட அதிகமில்லை. அதற்கு பிறகு மூச்சு கூட விடமாட்டேன் என்கிறார். மிகச்சீரான, மெதுவான, ஆழ்ந்த முகம். அதற்கேற்றார் போல், சுவாசமும் கூட. அந்த அறையில் நீக்கமற சூரிய வெளிச்சம் இருந்தது. அவ்வளவு ஜன்னல்கள். வீட்டுக்கு சிமெண்ட் வேலை மிகக்குறைவு.

நீங்க நேர்முகத்தேர்வு எடுக்கும்போது எப்படி சமாளிச்சீங்க?

எழுதிட்டேன்.

எழுதியே, தேர்வாகிட்டீங்களா?

ஆமா

என்னை சொல்ல வேண்டும். அவரை ஆமா சொல்ல வைக்காத அளவுக்கு கேள்விகேட்க எனக்கு தெரியவில்லை. இன்னும் பயிற்சி வேண்டும்.

எதுக்கு இந்த ஒரு வார்த்தை பழக்கம்?

இந்த கேள்விக்கு மாட்டிக்கொண்டுவிடுவார் என நினைத்தேன். பதில் வந்தது,

பழக்கம்.

எங்க இருந்து?

அப்பா, அம்மா

அவங்களும் இப்படித்தான் பேசுவாங்களா?

இல்ல.

பின்ன எப்படி?

பேசவில்லை.

ஓ.. மன்னிக்கணும். அவங்க ஊமையா?

ஆமா.

அப்போ நீங்க நிறைய பேசி இருக்கணுமே?

தேவையில்லை.

நீங்க இப்படி பேசி, மத்தவங்களுக்கு கோபம் வருமே சார், எப்படி சமாளிக்கறிங்க.

வராது.

உங்க கிட்ட பேசின கொஞ்ச நேரத்துலயே எனக்கு கோபம் வருதே சார்.

வரட்டும்.

அப்புறம் திட்டிட்டேன்னா என்ன பண்ணுவீங்க?

திட்டுவேன்.

திட்டுவீங்களா? எப்படி, அதுவும் ஒரு வார்த்தையிலா?

ஆமா.

திட்டிக்காட்டுங்க..

குரங்கு.

அவ்வளவு தானா?

ஆமா.

அவரின் குரங்கு என்ற வார்த்தை பிரயோகம், அந்த சூழ்நிலைக்கு, அவரின் முன் எனக்கு மிகப்பெரிய பாரமாக இருந்தது. ஒரு முறை எனக்கும் நண்பனுக்கும் வார்த்தை தகராறு முற்றிப்போய், நான் பேசவே மாட்டேன் என நினைத்திருந்த கெட்ட வார்த்தை எல்லாம் அருவியாய் கொட்டியது. இரண்டு வாரங்களுக்கு குறையாத கோபம். இவரின் குரங்கு வார்த்தை, அமைதிக்குள் இருக்கும் சொல்லப்படாத கெட்ட வார்த்தைகளை எல்லாம் துணைக்கு கொண்டு வந்து எனக்குள் கொட்டிவிட்ட உணர்வு வந்தது.

சரி சார், எல்லாத்தையும் விட்டுடலாம்.

சரி.

எப்பவோ ஒரு முறையோ, இரண்டு முறையோ உங்களுக்கு உச்சகட்ட உணர்ச்சிகள் வந்து பேசிய ஆகணும்னு இருந்திருக்கும். நாமெல்லாம் மனுஷ ஜென்மமாச்சே, அது இல்லாம இருந்திருக்க முடியாது. அது காதலாவும் இருந்திருக்கலாம், இல்லை உங்க பிள்ளைங்களை முதல் முறை குழந்தையா பார்த்த பொழுதா இருந்திருக்கலாம். அப்போ எப்படி?

கண்ணீர்.

ஏன் சார், இப்படி?

சிரித்தார். நான் கேட்கவேண்டியதை கேட்டு விட்டேன் என நினைத்த நேரத்தில் ஒரு காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தார். வேகமென்றால் அவ்வளவு வேகம். வார்த்தைகள் பொழிந்து கொண்டு இருந்தன. கையில் கொடுத்தார்.

உங்கள் வருகைக்கு நன்றி. நான் நம்பும் ஒரு கொள்கை, வார்த்தைகள் நம் புலன்களில் இருந்து வரும்போது வெளிப்படும் உணர்ச்சிகள் கொந்தளிப்பு உடையவை. அது காதலாகட்டும், பாசமாகட்டும், சினமாகட்டும். நம் புலன்களுக்கு அவ்வாறு ஒரு வடிவத்தை நம் முன்னோர்களும், நம் சுழலும் கொடுத்திருக்கிறது. வார்த்தையின் பின் இருப்பது மொழி மட்டும் அல்ல. மொழி தாங்கி வரும் உணர்ச்சி. அந்த உணர்வு ஏனோதானோ என்றெல்லாம் வராது. பொங்கி எழுந்து தான் வரும். அது தான் அதன் நியதி. அது இன்னொருவரை கையகப்படுத்தும், இல்லை, கைவிட்டு விலக வைக்கும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ எனக்கு பிடித்தம் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதை செய்ய எனக்கு பயம். என் வார்த்தைகள் மீது நான் ஏற்றி வைக்கும் உணர்ச்சி நான் உருவாக்கும் ஒரு  குற்றம். நீங்களும் இதை முயன்று பாருங்கள். வாழ்க்கை தெளிவாகும்.

கதவை திறந்து நடையை கட்டினேன். இந்த இரவுக்கு எந்த கனவு எனக்கு வாய்த்திருக்கிறதோ?

கூர்மை

தியானம் செய்து கொண்டிருந்தேன்
எழுந்திரு என்றான்
எழுந்துவிட்டேன் 

Tuesday, July 14, 2020

திகட்டாத அருவி

எழுதி எழுதி தீர்த்தான்
பேசுவதை குறைத்தான்
சாப்பிட மறந்தான்
எழுத்துக்களும் வார்த்தைகளும்
அவனுள் ஜலமாய்
ஊர்ந்துகொண்டிருந்தது
எதற்கு இத்தனை வாதை
அந்த ஒரு வார்த்தைக்காக
அவன் எழுதிய அந்த
கடைசி வார்த்தைக்காக
ஒரு புள்ளி வைப்பான்
அந்த புள்ளிக்காக.

Sunday, July 12, 2020

அறை

இந்த குகையே
என்னோடது தானாம்
வைத்துக்கொண்டே
தெரியாமல் போனது
அறிந்துகொள்ளாமல்
இருப்பது என் எண்ணம்
அல்ல
அந்த குகையை
மிக ஆழ்ந்து
பார்த்தவர்கள் எல்லோரும்
பிறழ்ந்து போனார்களாம்
நானும் பிறழ்ந்து
போவேனோ

ஆனாலும் குகை
அட்டை கருப்பு
ஊமை கோட்டான்களே
அதிகம் இருந்தது
எத்தனை எத்தனை
அறைகள்
எவ்வளவு வண்ணங்கள்
பெரும்பாலும் சிவப்பின்
தோற்ற மயக்கங்களே

ஒரு அறைக்கு
மூப்பு தட்டியிருந்தது

ஒரு அறைக்கு
பெயர் வைக்கப்படாமல்
இருந்தது

இதோ இது
மிக முக்கியமான
அறையாம்
உஷ்ணம் அதிகம்
அலறும் ஆந்தைகள் வேறு
மூச்சு முட்டியது
குகை சுவர்களும்
பூகம்பத்தை எதிர்கொண்டது
குகை குளிர
ஆரம்பித்தது
ஆந்தைகள் அடங்கின

குகைச்சுவர் அனைத்தும்
மென்மையானது

முக்கிய அறை
முழுதும்
அசரிரீ

வந்துட்டியா?
சாப்ட்டியா?

வெளி

எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்
என்னையும்
என் வார்த்தைகளையும்
நினைவுகளையும்
வாசனையையும்
நிகழ்வுகளையும்...
நான் விடுதலை
ஆகி இருப்பேன்
அதனாலேயே
நீங்களும் விடுதலை
ஆகி இருப்பீர்கள்
ஒருவரை ஒருவர்
ஈர்த்துக்கொண்டு
வாழ்ந்துகொள்ள
நீங்களும் நானும்
என்ன
காந்தப்புலமா?
வெறும் காற்றடைத்த
இதயப்பெட்டி கொண்ட
இரு விலங்குகள்

Monday, July 06, 2020

ஒரே வார்த்தை

எழுது எழுது என்றது
எதை எழுதுவது
அதைத்தான் என்றது
சரி என்று
கவி எழுதினேன்
ஒரே வார்த்தையில்
முடிந்தது கவிதை

"என்றது"

Wednesday, July 01, 2020

தீ

அந்த ஒரு இரவில் சாம்பசிவம் அந்த கேள்வியை ஆசானிடம் கேட்டே விட்டார். ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்? நாமெல்லாம் இப்படி செய்யக்கூடியவர்கள் இல்லையே என்றெல்லாம் கேட்டு துளைத்துவிட்டார்.

ஆசானுக்கு ஒரு நற்பழக்கம் உண்டு. கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு புன்முறுவல் பூப்பார். கேள்வி கேட்டவர்கள் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். கேள்வி கேட்ட என்னை சொல்லணும் என்பார்கள். இந்த மனுஷனுக்கு பதில் நாக்குல இல்ல, உதட்டுலயும் பல்லுலயும் தான் இருக்கு. என்ன ஒரு நெஞ்சழுத்தம் என்பார்கள். அவருக்கோ, இந்த பதில் போதும் என்றே நினைக்கிறார். மனதிற்குள் கேள்வியை ஏற்று, தனக்கான தர்க்கத்தை நிரப்பி, பின் பதில் ஒன்றை திரும்ப அனுப்பி, அதற்கு எதிர் மனிதன் என்ன கேள்வியை கேட்டு தொலைப்பானோ என யோசிப்பதற்குள் தான் பாதி ஆயுள் தீர்ந்து விடும் என நினைப்பார்.

ஆசான், வட தமிழகத்தின் தலை சிறந்த கல்யாண பந்தி நிபுணர். இவரிடம் கான்டராக்ட் விட்டுவிட்டால் போதும், கல்யாணம் தொடங்கி தொட்டில் தொட்டு தகனம் வரை சுவை நிற்கும்படி செய்துவிடுவார். போகும் வழியில் புண்ணியம் சேர்த்துக்கொண்டு போ என்பார்கள், அந்த புண்ணியத்தை சமைக்கும் வித்தகர் இவர்தானாம் என்று எங்கள் ஊர் பாட்டிகள் சொல்லி கேள்வி.

ஆசானுக்கு வித்தை எல்லாம் கைப்பக்குவத்தில் இல்லை, நாக்குக்கு ஏற்ப சமைப்பதில் தான் இருக்கிறது. அதற்கு அவர் உபயோகிக்கும் உத்தியை சார்க் நாடுகள் நான்கு நாட்கள் கருத்தரங்கு போட்டு விவாதிக்கலாம். கல்யாண கோஷ்டி அவர் வீட்டு வாசலில் நின்றாலே, அவர் கேட்கும் கேள்விகள் வந்தவர்களை உலுக்கிவிடும். என்ன இந்த மனிதன் என்ன சமைக்கவேண்டும் என்று கேட்காமல், கண்ட கருமாந்திரம் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று காதுக்கு பக்கத்தில் வசனம் பேசிக்கொள்வார்கள். இத்தனைக்கும் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் திரும்ப திரும்ப கேட்பவையே, ஆனாலும், இப்படி சொல்லிக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஆனந்தம்.

கேட்ட கேள்விகள் தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? சொல்லாமலா போவேன். அதற்குத்தான் உங்களை ஐந்தாவது பத்தி வரை இழுத்து வந்திருக்கிறேன்.

முதல் கேள்வி, பெண்ணுக்கும் மாமியாருக்கும் பூர்வீகம் என்ன?

இரண்டாவது கேள்வி, தேன்நிலவிற்கு எங்கே செல்கிறார்கள்?

மூன்றாவது கேள்வி, எத்தனை நாள் செல்கிறார்கள்?

நான்காவது கேள்வி, இது நாள் வரை குடும்ப சூழ்நிலையில் எத்தனை முறை அகால மரணங்கள் நிகழ்ந்துள்ளன?

ஐந்தாவது கேள்வி, கல்யாணம் நடக்கும் நாளின் தட்பவெப்பநிலை?

இதெல்லாம் எதற்கு என கேட்டால், கதவை காட்டி புன்முறுவல் பூப்பார். சரி சொல்லித்தொலையலாம் என்று தொலைப்பார்கள். சாம்பசிவம் அப்போதெல்லாம், ஏன் இதெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்டதில்லை. ஆனால், ஒவ்வொரு கல்யாணத்திற்கும் ஒவ்வொரு முறையை கைப்பிடிப்பார். மார்க்கெட்டுக்கு சென்றாலே, சாம்பசிவத்தை பார்த்து மளிகைக்கடைக்கார்களும், காய்கறி கடை காரர்களும் வாய்க்கும் வானத்திற்கும் சிரிப்பார்கள்.

வாப்பா, உனக்கென்ன ஆசான் கிட்ட வேலை!!! அவர் செய்யறதும் புரியாது, சொல்ல நினைக்கிறதும் புரியாது, உனக்கு மட்டும் எப்படி புரியுதோ?

எனக்கு புரிஞ்சதுன்னு என்னைக்காச்சும் சொல்லி இருக்கேனா? இதான் லிஸ்ட். குடுக்கற வேலைய மட்டும் பாரு. மத்த கேள்வி எல்லாம் கேக்காத.

உங்க ஆசான் ஒரு முறை, சைனால கிடைக்கிற ஒரு மிளகாயை கேட்டு வெச்சிருந்தார். கேட்டா, அதுவும் கல்யாணத்துக்குன்னு ஒரு பதில் இன்னொருத்தர் கிட்ட இருந்து வந்தது. கல்யாணமோ நம்ம அரக்கோணத்து ஜவுளிக்கடை ஆளுங்களுக்கு. அவங்களுக்கு எல்லாம், ஆந்திரா மிளகாயே பெருசு, இவரு இதுல சைனா மொளகாயை வெச்சு கல்யாண சாப்பாடு செஞ்சாரு... குழப்ப சமையல்யா உங்க ஆசானுக்கு.

ஒன்றும் பதில் சொல்லாமல் நடையை கட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அன்றைய லிஸ்டில் தக்காளி விதைகளை மட்டும் கிலோ கணக்கில் வாங்கி வர சொல்லி இருந்தார். அதெல்லாம் விவசாயி வாங்குறது என்று கேட்டால், மறுபடியும் புன்முறுவல் தான் வரும்.

எப்படியோ, எல்லா கல்யாணங்களையும் பார்த்தாகி விட்டது. ஆசானுக்கு இப்போதெல்லாம் கேள்வி கேட்பதும் அலுத்து விட்டது, புகை மூட்டமான கல்யாண மண்டப சமையல் அறைகளும் அலுத்து விட்டது. பெரும்பாலும் எந்த கல்யாணங்களையும் ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டுக்குள்ளேயே முனங்கி இருந்தார்.

அந்த ஒரு நாள், மறுபடியும் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

சாம்பு, மறுபடியும் தொழிலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

என்ன ஆசானே? என்ன ஆச்சு. உங்களால முடியுமா?

மறுமுனையில் புன்முறுவல் பூத்திருப்பார்.

முடியும். நீ வாயேன், பேசலாம் என்றார்.

வீட்டிற்கு சென்று பேசியபோது தான் பெரிய அதிர்ச்சியை தூக்கிப்போட்டார். அவரின் முடிவு, இனிமேல் சாவு வீடுகளுக்கு சமைப்பது என்கிறார். அங்கே மட்டும் தான் சமைப்பேன் என்கிறார்.

அப்போது தான் கேட்டேன், என் கேள்விகள் அவரின் பதில்களை துழாவி, புன்முறுவலை அகத்தே தள்ளி, என்னிடம் பறந்து வந்தது.

ஏன் செய்யக்கூடாதா?

செய்யலாம் ஆசானே, ஆனா, நமக்கு அது பழக்கமில்லையே? நம்ம குருவம்சத்துலயும் இப்படி செஞ்சதா எனக்கு நியாபகம் இல்லையே.

குரு வம்சம் எல்லாம் சும்மா பேச்சுக்கு தாண்டா. அது உனக்கு சொல்லிக்கொடுக்குறது, எப்படி சமைக்கணும் அப்படிங்கறது மட்டும் தான். எங்க சமைக்கணும், எதுக்கு சமைக்கணும்னு எல்லாம் ஒன்னும் சொல்லலை. அதெல்லாம், நடுவுல வந்த குரு அப்படின்ற பேருல பல பேர் விளையாடின சூதாட்டம். அதுல அவனுக்கு மட்டுமே வெற்றி.

சரி, கேள்வியை இப்படி கேக்கறேன். மங்கள நிகழ்ச்சிக்கு தானே, தடல்புடலா சமையல் எல்லாம். கூட்டம் கூட்டமா வருவாங்க, மனசு நிறையனும். அதுக்கு முதல் படி, நாக்கு நிறையனும். மண்டப வாசல்ல இருக்குற ரோஜா கூட்டத்தோட வாசத்தை தாண்டி, மூக்கை துளைக்கிற காபி வாடை தானே அவங்களோட மனச நிறைக்குது. அதுக்கு மேல காலையில கிச்சடி, பூரி, தோசை, இட்லி, பொங்கல், வடை, பாயசம் அது இதுன்னு போட்டு அவங்கள சூறையாடினா தானே நமக்கு செஞ்ச திருப்தி கிடைக்கும்.

அவங்களுக்கு திருப்தி இருந்ததான்னு நீ கேட்டிருக்கியா?

ஆமா, எத்தனை பேர் சொல்லி இருக்காங்க... உங்களுக்கு நியாபகம் இல்லியா? பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆற்காடுல நடந்த  கல்யாணத்துல, ஒரு குடும்பமே வந்து உங்க கால்ல விழுந்து, இன்னைக்கு எங்க எல்லாருக்கும் கடவுளை மனசுக்குள்ள காமிச்சிட்ட. நீ உருவாக்கின ருசி, எங்க பாட்டன் பூட்டன் எங்க மனசுக்குள்ள தூவி வெச்சிருந்த ருசி. இது வரைக்கும் எங்க பரம்பரை யாருக்கும் அதை தோண்டி எடுத்து திரும்ப அனுபவிக்க முடியல. அப்படி ஒரு ருசி யாருக்கும் கைவரல. உனக்கு வந்திருச்சேய்யா. நீயெல்லாம் பல குடிக்கு அரசனா இருக்க வேண்டியவன், அப்படின்னு சொன்னது இன்னைக்கு எனக்கு நியாபகம் வருது.

அதே குடும்பத்தை இன்னைக்கு போய் கேட்டுப்பாரு. அதையே திரும்ப சொல்லுவான். ஆனா, அவனோட குடும்பத்துல நடந்த ஒரு துர்மரணத்தை பத்தி கேட்டுப்பாரு, பேசக்கூட மாட்டான். ஏன்னா அது மனசோட வலி. அந்த வலி இவனை ஒரு வார்த்தை கூட எடுக்க விடாது. அப்படியே போட்டு அழுத்தும். எத்தனை வருஷம் ஆனாலும் அப்படியே இருக்கும், மலைக்கு உள்ள இருக்குற யாருக்கும் தெரியாத கல்லு மாதிரி.

ஆமா, அது இருக்கத்தானே செய்யும்...

அந்த மரணத்தோட அவன் அன்னைக்கு பக்கத்துல இருந்தானே, அப்போ என்ன சாப்பிட்டு இருப்பான்?

அதெல்லாம் நியாபகமா இருக்கும். அப்போ அது முக்கியம் இல்லையே.

ஆமா, அது முக்கியம் இல்ல. ஆனா, அதை முக்கியமா ஆக்கிப்பாரு. இவன் அந்த மரணத்தை இந்த ருசியோட சேர்த்து வெச்சு பாப்பான். வலியோட ருசியும் சேரும் போது, உன்னோட உடம்புல மீட்டாத அந்த நரம்பு மீட்டி இருப்ப... அது ஒன்னும் இவனை சிரிக்க வைக்காது. ஆனா கொஞ்சம் ஆத்துப்படுத்தி இருக்கும்.

அது அவ்வளவு முக்கியமா? சாவு வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதுக்கு ருசி. பாதி பேருக்கு மேல சாப்பிடாம தான் இருப்பாங்க..

நீ கவனிச்சது அவ்வளவு தான். ஒவ்வொரு சாவுக்கு பின்னாடியும், பல வேலைகள் உருவாகுது. அதுல முதல் வேலை, வீட்டுக்கு வர்றவங்கள எப்படி கவனிக்கிறது. வர்றவன் கல்யாணத்துல சுவாசிச்ச அந்த ரோஜாப்பூவை சுவாசிக்க மாட்டான். பிணத்தோட மேல படர ரோஜா வாசத்தை தான் சுவாசிப்பான். அது அவனை முறுக்கும். அவனை எப்படி கவனிக்க முடியும்?

எதுக்கு கவனிக்கணும்?

எதோ ஒரு சோகத்துல ஒருத்தர் உங்க வீட்டுக்கு வர்றார், அவரை நீ ஒரு காப்பி குடுத்து ஆசுவாசப்படுத்த மாட்ட? அது தான் இது. அந்த ஆசுவாசம் தான் இந்த ருசி.

என்னமோ போங்க. இது ஒன்னும் சரிப்பட்டு வர்ற மாதிரி எனக்கு தெரியல.

சரிப்படும் சாம்பு... கல்யாணத்துல வாடுற வயிறை விட, சாவு வீட்டுல வாடுற வயித்துக்கு வெப்பம் அதிகம். தகிக்கும். வெளியில சொல்லாது. சொல்லாம தன்னையே அரிச்சு சாப்பிடும். அத்தோட கோரப்பல்லால குடலை உரிச்சு தின்னும். உள்ள ரத்தம் சிந்தும். ஆனா, வெளிய அதை விட ஒரு சோகம் பரவலா இருக்கும். அதுக்கு தான் மனசையும் உடம்பையும் கொடுக்கணும்னு நமக்கு எழுதி வெச்சிருக்கு. அதை நான் தீத்து வைக்கிறேன்னு சொல்றேன்.

எத்தனை பேருக்கு தீத்து வைப்பீங்க...

நான் தீந்து போற வரைக்கும், தீத்து வைப்பேன்.


Thursday, June 25, 2020

இரக்கத்தின் அறம்

கொஞ்சம் இறங்கி பார்க்கவேண்டும்
காதுகளை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
போகவேண்டியது உங்கள் இதயம்
கொஞ்ச காலமாக அது இருக்கிறதா
என சந்தேகம் வருகிறது
தோண்டி பார்த்துவிடுகிறேன்
இருந்தால் சந்தோசம்
இல்லையென்றால்
என் இதயத்தை
கொடுத்துவிடுகிறேன்
கொஞ்ச காலம் வைத்துக்கொண்டு
அது இரக்கமான இன்னொரு
இதயக்குட்டி போடும் வரை
இதயமே இல்லாமல்
இரக்கமும் இல்லாமல்
நான் காத்திருக்கிறேன்!!

Thursday, June 18, 2020

புதை இருட்டு

புதைத்து வைத்திருந்தேன்
யாராவது வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
அது என் கவிதைக்குள் தான் இருக்கிறது
பொறுமையாய் தேடுங்கள்
கிடைக்கும்
மிக ஆழமாகவே புதைத்திருக்கிறேன்
கொஞ்சம் சுவாசம் தடைபடலாம்
அவ்வளவு இருட்டுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்
சுலபமில்லை தான்
புதைத்தபோது நானும்
அவஸ்தைப்பட்டேன்
தேடிவிட்டால் சொல்லுங்கள்
நான் புதைத்துவைத்தது
நீங்கள் எடுத்தபோது
எப்படி இருந்தது என்று!!!
காத்திருக்கிறேன்.

Saturday, June 13, 2020

கருப்பு

இந்த இரவிற்கு தனிப்பெயர் இருந்தது
பெயருக்கேற்ற அழகு
அட்டைக்கரி நிறம்
அள்ள அள்ள அன்பை
தொப்பை நிறைய வைத்திருந்தது
மெல்லிய இசையையும்
கசிந்து கொண்டிருந்தது
கதவுகளைத் தாண்டி
தூங்கும் ஒவ்வொருவரையும்
எழுப்ப முயன்றுகொண்டிருந்தது
சிலர் எழுந்தனர்
கழிவறை சென்றனர்
சிலர் எழவில்லை
அவர்களுக்கு இரவின்
கரிநிறம் பிடிப்பதில்லை
சிலர் கனவுக்குள் பகலை
வரைந்து கொண்டிருந்தனர்
ஒருவன் மட்டும் இப்படி
அல்லாடிக் கொண்டிருந்த
இரவின் ஓட்டத்தை
ரசித்துக்கொண்டிருந்தான்
மூச்சிரைத்தபடி இவனிடம்
கேட்டது
என்னை இப்படி குறுகுறுவென பார்க்காதே!!
நான் வெட்கி பகலாகிவிடுவேன்..
நீ என்னவானாலும் ஆகிப்போ,
ஆனால் நீதான் அன்றொரு நாள்
என் கண்ணீரை வரவழைத்தாய்
முதன்முதல் அழுதேன்!!
உன் கருப்பு நிர்வாணம்
எனக்கான கனத்த ஆடை....

Tuesday, June 09, 2020

நினை

மதிய வெயில் மண்டையை பிளந்தது
வட துருவத்தை நினைத்துக்கொண்டேன்
நாக்கு வறண்டு போனது
மீனை நினைத்துக்கொண்டேன்
தலை சுற்றியது
திருவிழா என்னுள் வந்தது
கண் இருட்டியது
வானத்தை வாங்கிக்கொண்டேன்
நினைவு தப்பித்தது
தொட்டில் பிள்ளை ஆகிக்கொண்டேன்
இதயம் நின்று கொள்ளவா எனக்கேட்டது
இரு,
அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்

உதிர்

உதிர்த்துப்போடு என்றான்
எதற்கு என்றேன்
அப்போது தான் உன்னை நீ
உணர முடியும்
சரி, உதிர்த்தேன்
என்னுள் இருந்த குழந்தை
உதிர்ந்தது
ஒரு ஆடவன் உதிர்ந்தான்
பெண் உதிர்ந்தாள்
அடுத்து என்ன...
மாணவன்
பணியாளன்
பொதுப்பணித்துறை அதிகாரி
அப்பா
தாத்தா

முடிந்ததா என கேட்டான்
ஆம், முடிந்தது
இப்போது நீ யார் என்றான்
உன் சீடன் என்றேன்
அதையும் உதிர்த்துப்போடு என்றான்

உதிர்த்தேன்

இப்போது நீ யார் என்றான்
நீ என்றேன்

Monday, June 08, 2020

நீயாக்கப்பட்ட நான்

நான் எதுவாக ஆகக்கூடாது
என நினைத்தீர்களா
அதுவாகவே ஆனேன்..

நான் எதுவாக ஆகக்கூடாது
என நினைத்தேனோ
அதுவாகவே ஆனேன்..

Sunday, June 07, 2020

நொடி

ஒரு நாள் மன்னிப்பு கேட்பீர்கள்
அந்த நாளில்
நான் என்னையே உரித்துப்போட்டிருப்பேன்
என்னை பிய்த்து பிய்த்து
தோண்டி தெரிந்து கொள்வீர்கள்
அங்கொரு நாள்
உங்களை மன்னித்திருந்தேன்
இன்னொரு நாள்
உங்களுக்கு உதவியிருந்தேன்
மற்றுமொரு காலையில்
குட் மார்னிங் சொல்லியிருந்தேன்
ஏகாந்த மாலையில்
கண்ணிழந்த உங்களுக்கு
கைபிடித்து பூ இதழ்
காண்பித்தேன்
ஒரு நாள் பத்து மணி
பசித்திருந்தீர்கள்
நான் உணவிட்டிருந்தேன்
தேடிவிட்டீர்களா, அந்த நொடியை?
நீங்கள் என்னை உடைத்துப்போட்ட
அந்த மரண நொடியை?
இருந்தாலும் அந்த கேள்வியை
கேட்டிருக்க வேண்டாம்

Wednesday, June 03, 2020

சிறை

உலகம் அழியப்போகிறதோ என்னமோ, இன்றைக்கு தோசை நன்றாக வந்திருந்தது. வழக்கமாக பாதி பிய்ந்து போகும், இல்லையெனில், நானா நீயா என என்னிடம் சண்டை போடும், அதே நேரத்தில் கல்லுடன் காதல் கொண்டிருக்கும். பசை போட்ட காதல். இத்தனைக்கும் நடுவே இதுவும் தோன்றியது. நான்கு கழுதை வயசாகி விட்டது, முதல் கழுதை வயசான போது இருந்த வீடு இங்கு தானே இருக்கிறது. போய்த்தான் பார்ப்போம் என்று, எங்குமில்லாத மனம் சொன்னது. அங்கு சென்றால், என்னவெல்லாம் உருளுமோ என்ற பயம் வேறு. இந்த மனம் தானே அங்கு காயப்பட்டது. காயத்தை நாக்கால் வருடும் நாய்க்குட்டி போல, எனக்குள் ஏதோ வருடிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. இந்த நேரமும், நொடியும் அதற்கான தொடுதலை ஏற்படுத்திக்கொண்டது போலும்.

தோசை கல்லை நிறுத்திவிட்டு, பைக்கை தொட்டு தொடக்கினேன். மெதுவாகவே செல்ல தோன்றியது. அதற்குள் மனம் தயாராகிறதோ என்னமோ. அதற்கும் ஆண்டாண்டு காலங்கள் முன்பிருந்த நினைவுகளை கோப்பில் இருந்து வெளியே கொண்டுவரவேண்டுமல்லவா. என்னை தாண்டி போன பாண்டியன் சித்தப்பா, என்ன என் மகனுக்கு மெதுவா கூட வண்டி ஓட்டத்தெரியுமா என்று கேட்டுக்கொண்டே போனார். அவர் என்னை சீறும் சிட்டெறும்பாக தான் பார்த்திருக்கிறார். அசலில் இருந்து வெளியே வந்தாலே, வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பா, சும்மா என்று சொல்லி முடிப்பதற்குள்ளே, அங்க சைக்கிள் கடை அண்ணாச்சியிடம் பேசிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் உலகம் இப்படித்தான். நாம் பதில் சொல்வதற்குள், அடுத்த கேள்விக்கு சென்றுவிடுகிறது. அதற்கு யார் தான் வேகத்தடைகளை எல்லாம் நீக்கி விட்டார்களோ தெரியவில்லை. மனம் இன்னும் மனனம் செய்து கொண்டிருந்தது. எப்படி வைத்து செய்யப்போகிறது என்று தோன்றவில்லை. அதற்கு இன்னொரு மனம் இல்லை. இல்லாத மனதிற்கு இரு உருவம் எப்படி கொடுப்பது. குழப்பம் தான்.

தூரத்தில் மக்கிப்போன சாம்பல் வண்ணத்தில், குவார்ட்டர்ஸ் நின்று கொண்டிருந்தது. எத்தனை கால தவம். வலி என்று ஒன்று இருந்திருந்தால், அது இந்நேரம், இந்த குவார்ட்டர்ஸை படுத்த படுக்கை ஆக்கி இருக்கும். யாரோ ஒருவர், அல்லது பல பேர் அதனுள் எத்தனை வலிகளையும், சிரிப்பையும், அழுகையையும், ஆணவத்தையும், கேணைத்தனங்களையும் பதித்து வைத்துள்ளனர். அதுவே மிகப்பெரும் துயர். எதனை ரசிப்பது, எதனை விடுப்பது. அதுவும் குழம்பித்தான் போயிருக்கும், என்னைப்போலவே. செங்கல்லுக்கும், சிமென்டிற்கும் மனமுண்டு என்று ஒரு நாள் சொன்னபோது அப்பா என்னை பக்கத்து மசூதியில் கொண்டு சென்று மந்தரித்துக்கொண்டு வந்தார். அஃறிணைக்கு ஒரு உயிர் உண்டு. அதனுள் ஆராய்ந்தால், நாமும் இருந்திருப்போம். அந்த குவார்ட்டர்ஸில் நான் இருந்ததை போல.

சுவாசப்புகையை நிறுத்தி, பைக் ஸ்டான்ட் போட்டேன். என் பழைய, முதல் கழுதையை சுமந்த டி-54, சாந்தமாக என்னை கண்டு இளித்தது. பழைய வீடாகிப்போன வீட்டிற்கு, புதிய கதவு இருந்தது. அரசாங்கம் எப்போதோ ஒரு நாள், ஒரு சின்ன விஷயத்தை சரி செய்யும். அந்த கதவிற்கு சரியான வண்ணம் அடித்திருக்கலாம். அங்கங்கு உள்ளிருந்த மர தசைகள் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தன. தட்டினேன்.

யாருப்பா!!!

என கேட்ட அந்த பெண்மணிக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கும். ஒருவரை குறிப்பதற்கு வயதை கொண்டு தான் குறிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு மேல் போனால், உடற்கூறுகளை குறிப்பிட வேண்டும். இதில் எல்லாம் எங்கே அந்த மனம்.... அது சரி, எதற்கு அந்த புதிய பெண்மணியின் மனத்தை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்பா, என்னை மசூதிக்கு கொண்டு சென்றது சரி தான்.

நான், அங்க ரிலையன்ஸ் பிரெஷ் பக்கத்துல இருக்குற அபார்ட்மெண்ட்ல குடியிருக்கறேன்.

நாங்க அங்க எல்லாம் காய்கறி வாங்கறது இல்லைங்க.

நான் காய்கறி விக்க வரலைங்க...

ஓ, அப்படியா, மன்னிச்சிடுங்க. அப்புறம் எதுக்கு கதவை தட்டினீங்க...

பின்னால் ஒரு குழந்தை காலை சுற்றிக்கொண்டிருந்தது. குழந்தைக்கும், காலுக்கும் நடுவே இருந்த ஒரு தரைப்பிளவில் என் நினைவு குத்தி நின்றது. இங்கு தானே, ஒரு நாள் தவறி விழுந்து மண்டைக்கு நடுவே சிவப்பு துளிகள் வியர்த்தது.

இந்த நினைவுக்குழிக்குள் நான் இருக்க, அந்த பெண்மணி கதவை மூடிவிட்டாள். சொல்லவந்ததை சொல்லி முடிக்கும் முன் இந்த மனம், அப்பா மசூதிக்கு கொண்டு சென்றது சரி தான்.

மறுபடியும் தட்டினேன்.

என்னதாங்க வேணும்..

கொஞ்சம் கடுப்பேறி இருந்தார். இந்த முறை தரைப்பிளவை எல்லாம் நோக்காமல், சொல்ல வந்ததை சொன்னேன்.

முப்பது வருஷத்திற்கு முன்னாடி, நாங்க இங்க தான் குடி இருந்தோம். அப்பா, தாசில்தார் ஆபிஸ்ல குமாஸ்தாவா இருந்தாரு. இப்போ ரிடையர் ஆயிட்டாரு. நாங்க ஒரு பதினஞ்சு வருஷம் இங்க தான் இருந்ததா அப்பா சொல்லி இருந்தாரு. நான் ஹை ஸ்குல் போற வரைக்கும் இங்க தான் இருந்தேன்.

அதுக்கு என்ன இப்போ?

பின்னிலிருந்த காலை சுற்றிய குழந்தை இப்போது சமையல் அறைக்குள் எதையோ உருட்டிக்கொண்டிருந்தது. அந்த பெண்மணி, பின் திரும்பி, குழந்தையை வையக்கூடாத வார்த்தையை கொண்டு வைதார். அது ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அம்மா அங்கே தான் பல நாட்கள் தனியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். சமைக்கும் வரைக்கும் அம்மா தான் ராணி. பரிமாறும் போது, கொஞ்சம் வேலைக்காரி ஆவாள். பரிமாறி முடித்து, எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின், சிறைக்கைதி ஆவாள். அந்த சமையலறையில் தான் சிறை புகுவாள். அங்கேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து, மீதமுள்ளவற்றை சாப்பிடுவாள். எப்போதோ ஒரு நாள் கூட, சாப்பிட்டு முடித்த என்னை போன்ற ஜென்மமும், மசூதிக்கு இட்டு சென்ற அப்பாவும் அவள் கூட உட்கார்ந்து சாப்பிடும் வரை துணை இருந்ததாக நியாபகம் இல்லை. அந்த குழந்தை இப்பொது பெரிதாக எதையோ உருட்டியது. அந்த பெண்மணி அம்மா உக்கிரமானாள். இப்போது எனக்கும் சேர்த்து விழுந்தது.

கதவு மூடப்பட்டது.

மறுபடியும் தட்டினேன்.

திறக்கவில்லை.

ஐந்து நிமிடம் காத்திருந்தேன். பக்கத்து வீட்டு பெரியவர் மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, இவனை எந்த போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து கொடுக்கலாம் என்பது போல கண்ணை உருட்டினார். ரிட்டயர்டு கான்ஸ்டபிளாக இருக்க வாய்ப்புண்டு. அவருக்கு ஒரு மனம்.... வேண்டாம் வேண்டாம், மசூதி வேறு வந்து தொலைக்கும்...

கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக்கொண்டு, மறுபடியும் தட்டினேன். பெண்மணி திறந்தார்.

வெளிய போறியா இல்ல பக்கத்துல இருக்கறவங்கள கூப்பிட்டு வெளிய தொரத்தணுமா?

கோபத்தின் எல்லையில் இருந்தார். நான் பதில் சொல்ல எத்தனித்த பொது, என் பின்னே ஒருவரின் கை என் தோளை தொட்டது.

யாரு நீங்க? என்கிறார்.

நான், ஒரு விஷயமா இங்க வந்தேன். இப்போதான் அத பத்தி சொல்லிட்டு இருந்தேன்.

தடுமாற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்போது நடந்து கொண்டு இருக்கும் விவகாரத்தினால் அல்ல. ஆனால், கண் முன்னே விரிந்து கிடந்த பழைய நினைவுகள். அம்மா உள்ளிருந்தாள். அவள் விட்டு சென்ற வார்த்தைகள், சிந்திய கண்ணீர், சொல்லிய கதைகள், போட்ட சண்டைகள், எனக்காக அவள் உடல் வெளிப்படுத்திய வாசனை, எத்தனை எத்தனை... இதெல்லாம் விட்டு விலகி விடுமா என்ன? பிரபஞ்சத்தை ஆள்வது நான்கு சுவர்கள் அல்ல. சுவர்கள் இல்லாத மனங்கள் மட்டும் தான். அவை விட்டுச்சென்ற அத்தனையும், அதன் வெளியில் மிதந்து கொண்டு தான் இருக்கும். மனிதனுக்கு இருக்கும் நெருக்கடி, அதை நாலு சுவற்றுக்குள் தான் விட்டுத்தொலைக்க வேண்டி இருக்கிறது. பரிணாம வளர்ச்சியில், அழிந்து போன சில விஷயங்களில் ஒன்று, வெட்டவெளியில் வாழ்ந்த வாழ்க்கை. அப்போது அனைவருக்கும் அனைவரும் சொந்தப்பட்டு போயிருந்தனர். சொன்னவையும் நினைத்தவையும் அடுத்தவருக்கும் சொந்தமாகி இருந்தது. இப்போது, இந்த நான்கு சுவர் அம்மாவின் உணர்வுகளை அடைத்து வைத்திருந்தது. அவள் தான் சொல்ல நினைத்த எவற்றையும் வெளியில் சொல்லவே இல்லையே. அந்த அடுப்பிடம் சொல்லி இருப்பாளோ என்னமோ.

தம்பி, நீங்க ரொம்ப யோசிக்கறீங்க... கொஞ்சம் உள்ள வாங்க.. காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்...

நல்ல மனிதராக இருந்தார்.

உள்ளே நுழைந்தோம்.

அடித்து துவைத்தது அம்மாவின் அத்தனை நினைவுகளும். கண் முன்னே கால அடுக்குகள் சரமாரியாக வெளுத்துவாங்கியது. கொஞ்சம் நிலை குலைந்தேன். நல்ல வேலை உட்கார்ந்து பேசுவதற்கு அவர் அவகாசம் கொடுத்தார்.

என்ன பாத்துகிட்டே இருக்க. இந்த தம்பிய நான் நம்ம லைப்ரரியில் நிறைய பாத்திருக்கேன். புக்கும், கையுமா இருப்பாரு. அவரை பத்தி நான் கொஞ்சம் விசாரிச்சும் இருக்கேன். தப்ப நெனச்சுக்காதீங்க தம்பி. நீங்க அப்பப்போ, கொஞ்சம் நிலை மாறிக்கிட்டே இருப்பீங்க. என்னோட தம்பி இப்படித்தான், அதனால ஒரு கரிசனத்துல கேட்டது தான்.

ரொம்ப நன்றி சார்... உங்க வீட்டுக்காரம்மாவ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்... தெரிஞ்சு பண்ணல...

பரவாயில்ல.. என்ன விஷயம் சொல்லுங்க...

நாங்க இங்க தான் பல வருஷத்துக்கு முன்னாடி குடி இருந்தோம்...

தெரியும்...

எப்படி சார்?

உங்கள பத்தி விசாரிச்சப்போ, நம்ம காளி சலூன் கடைக்காரர் சொன்னாரு. அவரு இங்க தானே நாப்பது வருஷமா குப்பை கொட்டிக்கிட்டு இருக்காரு...

ஆமா, அவரு கிட்ட தான் நான் முடி வெட்ட போவேன்..

உங்களுக்கு வீட்டை பாக்கணுமா?

ஆமா சார்...

பாருங்க... தாராளமா ஒரு ரெண்டு மணி நேரம் இருங்க.. பேசிகிட்டு இருப்போம்... நீங்க நினைக்கிறது தப்பில்ல. இது உங்க வீடு தான். நாங்க தான் இப்போ உங்க வீட்டுல குடி இருக்கோம்.

நல்ல மனசுங்க உங்களுக்கு.

அப்படி இல்ல தம்பி, ஒரு வீட்டை விட்டு போனா, நாம இருந்த இடம் என்ன அப்படியே நம்மள விட்டுட்டா போயிடும். அங்க பொழங்கினது எல்லாம் இல்லைன்னு ஆயிடுமா. நாளாகும் தம்பி. ஆனா உங்களுக்கு பல வருஷங்களாகியும் இந்த வீட்டு நினைப்பு இருக்குன்னா, ஆழமா எதோ நடந்திருக்கலாம்.

ஆமா...

பல சண்டைகள் சார். இந்த வீடு எனக்கு நரகமா தான் இருந்திருக்கு. அவ்ளோ சண்டை. எனக்கும் அப்பாக்கும் சண்டை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. எப்போ பாத்தாலும் சத்தம் தான் இந்த வீட்டுல. நான் வாழ்ந்த காலத்துல, இங்க இருந்து ஓடியே போயிடனும், இந்த இடத்தோட வாடையே வேண்டாம்னு எத்தனையோ நாள் யோசிச்சு இருக்கேன். ஒரு நாள் ஓடியும் போய்ட்டேன். அந்த காலத்துல, எப்படி ஓடினாலும், நம்மள திரும்ப வர வெச்சிடும், அது பசியோ, பாசமோ, எப்படியோ ஒன்னு இங்க கூட்டிகிட்டு வந்துடுது...

அப்புறம் எதுக்கு அந்த கனமான நினைவுகளை திரும்ப அசைபோடணும்னு நினைக்கறீங்க..

காலம் எல்லாத்தையும் ஆத்துப்படுத்துது சார்... இத்தனை நாளாச்சு, அந்த வார்த்தைகளை எல்லாம் என் மனசுக்குள்ள இருந்து வெளிய எடுத்து, ஒவ்வொண்ணா அலசி பாத்து, அதுக்குள்ளே இருந்த உணர்வை புரிஞ்சிக்க...

சரியா சொன்னிங்க... இப்போ நீங்க நல்லா இருக்கீங்க இல்ல.

சந்தோஷமா இருக்கேன் சார். இதுக்கு மேல சந்தோசம் வேண்டாம். திகட்டிடும்.

அது தான் தம்பி வேணும்.

காபி வந்தது. அந்த பெண்மணி இன்னும் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தார். என்னை தம்பியாக அழைத்த அவருக்கு வேண்டுமானால், வேற்று வீட்டுக்காரன், சக மனிதனாக தெரியலாம். அந்த பெண்மணிக்கு நான் இப்போதைக்கு ஒரு அச்சுறுத்தல். எங்கே இன்னொரு நாள் வெளியே பார்த்து ஏதாவது செய்து விடுவேனோ என்று பயம் இருக்கலாம். மனித மனங்கள் அப்படியே தான் உருவாக்கம் கொண்டிருந்தன. நான் நல்லது கூட செய்யலாம். அதை புரிந்தும் தெரிந்தும் கொள்ள, இரண்டு மணி நேரம் பத்தாது...

வீட்ட சுத்தி பாக்கறீங்களா? இருக்குற ஒரு பெட்ரும், ஒரு சமையல் அறை, ஒரு பாத்ரூம், எவ்ளோ துடைச்சாலும் போகாத நாத்தம், இத தாண்டி இந்த வீட்டுல ஒண்ணுமே இல்ல தம்பி. ஆனா, நீங்க அத பாக்க வரல.

ஆமா!!! நான் பாக்கறத நீங்க பாக்கல.. ஆனா புரிஞ்சிக்கறீங்க, அதுவே பெரிய விஷயம். சரி சார், நேரமாச்சு கெளம்பட்டுமா?

சாப்பிட்டுட்டு போகலாம்.

இல்ல சார் வேண்டாம். ஆனா ஒரே ஒரு உதவி செய்யறீங்களா?

சொல்லுங்க..

யோசனையில் மூழ்க, மசூதி மறுபடியும் வந்தது. அம்மா, அங்கிருந்து போய்ட்டு வா என்றாள்.

ஒன்னும் இல்ல சார், நாம இன்னொரு முறை லைப்ரரியில் சந்திக்கலாம்.

சரிங்க தம்பி... குட் நைட்...

கதவு மூடப்பட்டது.

சமையல் முடிந்து, பரிமாறல்கள் முடிந்து, அந்த பெண்மணி தனியே அந்த சமையல் அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

அவள்

ரணத்தில் இருந்து மீண்டிருந்தேன்
இவ்வளவு ரத்தமா
எவ்வளவு கண்ணீர்
சுற்றிலும் ரசாயன கலவை
வெள்ளை உடை இறைகள்
மீண்டு வந்ததே பெரும்பாடு
இன்னும் காலம் வேறு உள்ளது
எப்படி கடக்க
இனியெல்லாம் கடக்கவேண்டும்
இவள் யார்
எனக்காக கண்ணீர் விட்டுக்கொண்டு
கொஞ்சம் தள்ளி நில்லேன்
உன்னை சரியாக பார்த்துக்கொள்கிறேன் 

Monday, May 25, 2020

வேர்

ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் ஒவ்வொரு தருணமும் அம்மா எனக்காக என்ன செய்தி வைத்திருக்கிறார் என்பதிலேயே இருக்கும். எல்லா வார இறுதி நாட்களும், அவளின் கதைகளிலே ஓடி விடும். அத்தனை கதைகளிலும் இயற்கை அங்கிங்கெனாதபடி பரவி இருக்கும். அவளுக்கு அதை விட்டால் வேறு கதியே இல்லை என்பது. அப்பா கூட ஒரு நாள் சொன்னார், அவளுக்கு மாடியில ஒரு தோட்டம் வெச்சு கொடுத்துட்டா, அங்கேயே சமையல் செஞ்சு, அங்கேயே குடும்பம் நடத்திடுவா. இங்க இருக்குற, பத்துக்கு பத்து இடத்துல அவ பண்ற அராஜகம் இருக்கே, அப்பப்பா சொல்லி மாளலே. இத்தனைக்கும் அம்மா பண்ணும் ஒரே அராஜகம், அங்கேயே தன்னை மறந்து நிற்பது தான். சில சமயம், அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், சில நாட்களில், முதல் காரியமாகவே அங்கே தான் காலையே ஆரம்பிக்கும். அப்படி என்னதான் அங்க பொதச்சு வெச்சிருக்காளோ தெரியல. முன்னொரு காலத்துல அவுங்க தாத்தாவோட கொள்ளுத்தாத்தா இங்க கொஞ்சம் பெரிய குடும்பமா இருந்திருக்காங்கன்னு சொல்லுவா. அவங்க பொதச்சு வச்ச புதையலா இருக்குமோ என அப்பா இன்னும் கொஞ்சம் இழுத்து விடுவார். எதற்கும் அசர மாட்டாள், அடுத்த நாள் அவள் பார்வையின் ஆழம் இன்னும் நான்கு அடி கீழே சென்றிருக்கும். சில சமயங்களில், அம்மாவுக்கு புத்தி பேதலித்து இருக்குமோ என்று கூட அனைவரும் பயந்திருக்கிறோம். அப்படி வெறித்திருப்பாள். பெரும்பாலும் ஒரு பகுதியில் தான், மற்ற பகுதிக்கும் பார்வைகளையும் நேரத்தையும் ஒரு சேர கொடுத்திருப்பாள். ஆனால், இந்த ஒரு இரண்டுக்கு மூன்று இடம், பீன்ஸ் செடிக்கும், ரோஜா செடிக்கும், நந்தியாவட்டை செடிக்கும், தக்காளி செடிக்கும் அக்கம் பக்கத்தினராக இருக்கும் மண் மேடு. மேடு என்று சொல்வதற்கும் தகுதி இல்லை தான். கொஞ்சம் சேறு தட்டிப்போனது போல் இருக்கும்.

ஒவ்வொரு வாரம், வெள்ளிக்கிழமையும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், அடித்து பிடித்து ஏறி, ஒரு இரண்டு மணி நேரம் பல்லைக்கடித்துக்கொண்டு உட்கார்ந்தால், என் பஸ் ஸ்டாப் வந்துவிடும். நிலவு பாதி வேலையை முடிந்திருக்கும் பொழுதாகி இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்தில், சூரியனுக்கு வேலையை கொடுத்துவிட்டு, தூங்க செல்லும். அப்படி ஒரு பொழுதில், ஆட்டோ பிடித்து, கதவை தட்டினால், புன்னகையுடன் வரவேற்பாள். தூக்கம் பிடித்திருக்காது. ஆனால், படுத்துக்கொண்டே நேரத்தை கடத்துவாள். அப்பா, ஒரு குட்டித்தூக்கம் போட்டிருப்பார். வந்தவுடன், அவரின் வேலை, பாதுகாப்பாக கதவை திறந்து, எனக்கும் அம்மாவுக்குமான அந்த நிமிடங்களை கடன் கொடுத்துவிட்டு தூங்க சென்றுவிடுவார். அம்மா, நான் குளித்துவிட்டு வந்தபின், மதிய நேரத்தில் சேர்த்தே செய்துவிட்டிருந்த, குழம்பையும், கூட்டையும் நெய்யுடன் சேர்த்து போட்டு, நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருப்பாள். சகல விசாரிப்புகளும் அங்கேயே முடிந்து விடும். ஏனென்றால், அடுத்த இரண்டு நாட்கள், அவளின் தோட்டக் கதைகளை சொல்ல வேண்டும்.

ஒரு முறை, கருவேப்பிலை கதை சொன்னாள். இன்னொரு நாள், பக்கத்து வீட்டு கட்டுமானப்பணி நம் வீட்டு கொடி ஒன்றை சிதைத்ததை சொன்னாள். இன்னொரு நாள், நர்சரி சென்று சம்பங்கி செடி வாங்கி வந்து முகர்ந்து பார்த்ததில், அது தன் பால்யத்தை நினைவுபடுத்தியதை சொன்னாள். அம்மாவுக்கு அந்த தெருவில் பெயர் வைத்திருந்தனர். தோட்டாக்காரவுங்க. எது பிடிக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கு இந்த பெயர் பிடித்திருந்தது. அப்படி ஒரு உலர்ந்த மனங்களின் மத்தியில், வெயில் நான்கு அடுக்குகளை தனக்குள் தைத்து தைத்து போர்த்தியிருந்த அந்த இடத்தில், அவளுக்கு மட்டும் ஈரமான அடைமொழி.

கருவேப்பிலை கதையை அடிக்கடி சொல்லச்சொல்லி கேட்பேன். சொல்லும்போதே அவள் வேறு ஒரு பெண்ணாகி இருப்பாள். சாராம்சம் என்னவோ, ரொம்ப சாதாரணம் தான். ஆனால், அவள் சொல்லும்போது வேறு மனுஷி ஆவாள். கதையின் முக்கிய அம்சமே, அம்மா செடி எப்படி பிள்ளைச்செடி முளைத்து வந்த அடுத்த நொடி, தன் உயிரை விட்டது என்பது தான். அந்த கருவேப்பிலை செடி, அவளுக்கே அம்மாத்தனத்தை சொல்லிக்கொடுத்தது என்றாள். இதை எப்படி கேட்டுக்கொள்வது என்று பல நாள் யோசித்ததுண்டு.

பல மாதங்கள் ஓடிப்போக, ஒரு வெள்ளி இரவில், அம்மாவிடம் அந்த கேள்வியை கேட்டுவிட்டேன். ஏன்மா, அந்த மணல் மேட்டை அப்படி வெறிச்சு பாத்துகிட்டே இருக்க. அப்பா வேற அத பத்தி ஒரு முறை காமெடியா பேசறாரு, இன்னொரு முறை, அத வெச்சே உன்ன திட்டறாரு. என்னன்னு தான் சொல்லிடேன். நாளைக்கு சொல்றேன் என்றாள்.

அடுத்த நாளின் இட்லி, தோசைகளை முடித்துவிட்டு, முதல் வேலையாக அம்மாவை அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு போய், இப்போ சொல்லு என்றேன்.

அங்க பாத்தியா?

ஆமா, பாக்கறேன். ஒன்னும் பெருசா இல்லையே.

நீ மண்ணை பாக்கற, ஆனா நான், அதுக்கு கீழ இருக்குற உயிரை பாக்கறேன். அது என்னவோ ஒவ்வொரு நாளும் ஒரே விஷயத்தை, மாத்தி மாத்தி சொல்லிகிட்டே இருக்கு. அத புரிஞ்சிக்கற மனநிலை எப்போ வரும்னு யோசிக்கிறப்பயே பல நிமிஷங்கள் ஓடிப்போயிடுது.

கீழ என்ன இருக்கு? பக்கத்து செடிகளோட வேரெல்லாம் இருக்கும். அதுல என்ன இருக்கு?

அங்க மட்டும் தான், ஒரு மண்புழு கோட்டையே கட்டிவெச்சிருக்கு.

மண்புழு கோட்டையா? அது என்ன, எறும்பு கூட்டமா, நீ சொல்ற மாதிரி செய்ய? அதுக்கு வீடு கூட இல்ல.

வீடு இருக்குடா.. எறும்பு போலவே.

நீ பாத்தியா?

ஆமா, பாத்திருக்கேன். எல்லாரும் தான் பாக்கறோம். அத வீடா நாம எடுத்துக்குறதில்ல.

நீ சொல்லு, நான் எடுத்துக்குறதா வேணாமான்னு சொல்றேன்.

அதோட வீடு வேர் தான்.

வேர் எப்படி வீடாகும்?

பல வருஷங்களுக்கு முன்னாடி, இந்த செடி எல்லாம் வெச்ச தருணத்துல, மண்ணெல்லாம் நோண்டினப்போ, இந்த ஒரு இடத்துல மட்டும், அவ்ளோ மண்புழு. ஏதோ பல யுகங்களா அதுக்கான ஒரு தேடலை தேடிகிட்டு இருக்குற மாதிரி. இதுக்கும் அந்த நேரத்துல இங்க வெறும் புல்லு கூட பெருசா இல்ல. அப்படி ஒரு இடத்துல, ஈரப்பதம் இல்லாத நேரத்துல, மண்புழு இருந்திருக்க வாய்ப்பே இல்ல. அந்த கூட்டமே கொஞ்சம் மெலிஞ்சு தான் போயிருந்தது. சரி, அத நான் பெருசா எடுத்துக்கல. செடி எல்லாம் வெச்சிருந்தோம். அதுக்கு செய்யற வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கும்போது தான் புரிஞ்சது.

என்னன்னு?

ஒவ்வொரு மண்புழுவும் அதுக்கான வேரை தேடிபுடிச்சு அங்க மட்டுமே இருந்தது.

இதுல என்ன அதிசயம்?

அதிசயம் இல்ல. ஆனா, வேர் பிடிக்கிறதுல இருந்த ஆவேசம். இத்தனை கால தவம். எதுக்காக, ஏன், எப்படி, நிலையில்லாத தன்மைன்னு இருந்தபோதும், என்னைக்கோ ஒரு நாள் நான் வருவேன், விதை போடுவேன், அதோட வேர் பூமி முழுசா பரவும், அதுல ஒரு வேர்க்கற்றையை தனக்கானதா மாத்திக்கணும்னு இருந்திருக்கு.

நீ சொல்றது எல்லாம் சாதாரண விஷயம் தானேம்மா.

இல்ல டா. இயற்கையிலே எப்பவுமே ஒரு பாண்டித்தியத்தன்மை இருக்கும். அது அதுவா இருக்குறது மட்டும் இல்ல. நான் சொல்லித்தரேன், நீ கத்துக்கோ அப்படின்னு காலகாலமா சொல்லுது இல்ல. அதுல நான் என்னமோ, எனக்கு நெறைய சொல்லித்தர மாதிரியும், அது சொன்னதை எல்லாம் கேக்குற மொதல் பெஞ்ச் பொண்ணு மாதிரியும் எனக்கு தோணுச்சு. அதுக்குப்பின்ன, என்ன நான் சொன்னதை கேட்டியா, அடுத்து என்ன வேணும்? நான் சொல்லித்தறேன்னு, சொல்லும்.

அம்மா, நீ அப்பா சொல்ற மாதிரி, கொஞ்சம் ரொம்பவே இதை எல்லாம் யோசிச்சிருக்க. இது ஒரு தோட்டம், உனக்கு சந்தோஷத்தை குடுக்குது. நீ என்னை வளர்த்த மாதிரி, அத  இப்போ வளர்த்துட்டு வர. அப்படி சிம்பிளா முடிச்சிக்கயேன்.

அப்படி எல்லாம் முடியாது. அதோட இறுக்கம், ஒவ்வொரு வேர் மேலயும் இருக்குற மையல், அது இல்லாம அந்த வேர் வளராதுன்னு ஒரு நம்பிக்கையோட கூடவே சேர்ந்திருக்கிற அன்பு, இதெல்லாம் எனக்கு என்ன சொல்லும் தெரியுமா. இதெல்லாம் நீ தான், நான் இல்ல, அப்படின்னு சொல்லும்.

நீ இப்படி எல்லாம் பேசாம, ஒழுங்கா உக்காந்து சீரியல் பாரு. இல்ல, நியூஸ் பேப்பர் படி.

சரி சரி, மதியம் ஆயிருச்சு, சாப்பிடலாம்.

பல மாதங்கள் கழிய, ஒரு நாள், அம்மா தனக்கான உத்தரவை வாங்கிக்கொண்டாள்.

அம்மா கேட்டுக்கொண்ட வரத்தை நான் நிறைவேற்றும் தருணமும் வந்துவிட்டது. அப்பா முதற்கொண்டு, எவருக்கும் இது நடக்கின்ற சாத்தியம் இல்லை. வேண்டாம் என்றனர். இது தேவை இல்லாமல், உனக்கு தலைவலி மட்டுமல்ல, சட்டசிக்கலில் கொண்டு போய் விடும் என்றனர்.

கேட்க நேரம் இருந்தாலும், அவளுக்காக இதை செய்யாமலிருந்தால் எப்படி.

அம்மா, தோட்டத்திலேயே அடைக்கலம் ஆனாள்.

தோண்ட தோண்ட வந்த புழுக்கள், அம்மா உள்செல்ல காத்திருந்தன. அவள் உள்செல்ல, இவைகளும் பின்சென்றன. அம்மா பேசினாள், தாத்தா எப்படி இருக்கீங்க.

Thursday, May 21, 2020

நான்

எழுத்தாளனாய் இது ஒரு புது அனுபவம். நான் எழுத நேர்ந்ததே ஒரு துர்கனவு என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், என் கனவில் ஒரு பத்து ஸ்குயர் இடம் கேட்டு ஒருவன் வந்திருந்தான்.

ஒரு காலம் இருந்தது, எழுத்தின் பின் அலைச்சலாய் அலைந்து, எழுதியவரை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் ஒரு இரண்டு மணி நேரம் அளவளாவி விட்டு வருவேன். அப்போது ஒரு இருபத்தி மூன்று வயது இருக்கும். கவி சுகுமாரன் அவர்களின் கவிதைகளை குறிப்பிட்டு, அது குப்பை எனவும், தான் எழுதியது தான் காலத்தின் அளவுகோல் என்பது போலவும் எழுதி இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து சேர்வதற்குள், நான்கைந்து அமாவாசைகள் கடந்திருந்தன. பட்டு நூல் போல் அவர் வீட்டில் தனியே படுத்திருந்தார். வயதானவர் தான். நான் இளவயது இருக்கும், என நினைத்தேன் நாக்கை பிடுங்கி நாலு முதல் நாற்பது கேள்விகள் கேட்பதே என் எண்ணம். கூடவே சுகுமாரன் அவர்களின் கவிதை தொகுப்பையும் கொண்டு சென்றிருந்தேன். அவருக்கு அடுத்த அமாவாசை முடிவதற்குள் சுகுமாரன் என்பவர் இவர் நினைத்ததை எட்ட இருந்து பார்த்து அதற்கும் ஒரு கவிதை எழுதுவார். அதுவும் உங்களுக்கு புரியாது என சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனால், வயதான மனிதர்.

சார், நீங்க தான் கவிமேகம் அப்படின்ற அடைமொழியில எழுதறவரா?

ஆமா, வாங்க வாங்க.

எப்படி படிச்சீங்க. எங்க படிச்சீங்க. மொதல்ல உக்காருங்க. தண்ணி கொண்டுவா, தனம்.

இருக்கட்டும்ங்க... உங்க அடைமொழி ரொம்ப இனிமையா இருக்கு. நீங்களே வெச்சிக்கிட்டதுங்களா

ஆமா தம்பி, ஆனா நிறைய பேரு சொல்லுவாங்க. உங்க கவிதை எல்லாம் மேகத்துல இருந்து விழற தண்ணியில ஒரு துளி போல அவ்ளோ தூய்மையா இருக்குன்னு.

அய்யா, அவங்க சொன்ன வரியில கூட ஒரு அழகு இருந்தது. ஆனா, உங்க கவிதைகள்ல அதுவும் இல்லையே. சரி, அது இல்லைன்னாலும் பரவாயில்ல, நீங்க ஏன் சுகுமாரனை அப்படி விமர்சனம் செஞ்சீங்க.

நீங்க ஆறாவது தம்பி.

என்னது, ஆறாவது?

ஏன் சுகுமாரனை விமர்சனம் செஞ்சீங்கன்னு கேக்கற ஆறாவது ஆள்.

அந்த அஞ்சு பேருக்கு என்ன பதில் சொன்னிங்க.

சுகுமாரன் நம்பரை கொடுத்துட்டேன். அதுதான் பதில்.

அது எப்படி பதில் ஆகும்?

அத எழுத சொன்னதே அவர் தான் தம்பி...

கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

அவர் ஏன் அப்படி எழுத சொன்னார். அப்படி சொல்ற மனுஷன் இல்லையே.

நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க.

அவரோட கவிதைகள் அப்படிங்க. யாதுமாகி நின்றாய் காளி, அப்படின்னு ஒரு கவிதை முடியும். அதை படிச்சுட்டு, நான் கொஞ்ச காலம் தூங்கல.

இதான் தம்பி பிரச்சினையே. பல பேரு, எழுத்தையும் அதை எழுதறவனையும் ஒன்னுன்னு நெனக்கறீங்க. அது வேற இது வேற. மண்ணுக்குள்ள அழுக்கை தான் கொட்டறோம், ஆனா அது கொடுக்குறது அழகான பூ. என்னைக்காச்சும் பூவோட அது இருந்த மண்ணையும் கையில வெச்சிகிட்டே அலையறோமா என்ன? அது தனி, இது தனி. நாதஸ்வரம் வாசிக்கறவனோட வாய மோந்து பாக்கற மாதிரி தான். அதை யாருமே பண்றதில்லையே. ஏன்னா, அதை பண்ணா என்ன நடக்கும்னு தெரியும்.

நீங்க சொல்றது புரியுது. ஆனா, இதுக்கும், நீங்க என்னை சுகுமாரன் கிட்ட பேச சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்.

நான் கொஞ்சம் மேகத்தை தொட்டு பேசினேன். அவரு உங்களுக்கு பிரபஞ்சத்தை தொட்டு விளக்கி இருப்பாரு. அத்தனையும் கேட்ட கெட்ட வார்த்தையா விழுந்திருக்கும்.

நீங்க என்ன தொழில் செஞ்சீங்க. எப்படி கவிதை. எப்படி கவிமேகம்.

எனக்கென்ன தம்பி, தொழில்னு ஒன்னும் பெருசா இல்ல. பலவேலை பாத்தேன். ஒரு கட்டத்துல, பானிபூரி கூட வித்தேன். அதுக்கு என்ன வரவேற்புன்னு நீங்க கேக்கணுமே. கூட்டம் ஈயா மொய்க்கும். அதையே கொஞ்சம் பெருசா செஞ்சு, துணைக்கு நாலு பேர வெச்சிகிட்டு, தொழில் ஒரு மாதிரி முன்னேறிச்சு. நான் அத ஆரம்பிச்ச கட்டத்துல, எங்க அப்பா அந்த காலத்துல போட்ட சமோசா தான் எனக்கு ஆதாரம். அத கொஞ்சம் இந்த காலத்துக்கு மாத்தி பஜ்ஜி, வேர்க்கடலைன்னு மாத்திக்கிட்டு போனேன். எல்லாமே ஒன்னு சேர்ந்து தான் நடந்துச்சு. இதுக்கு நடுவுல தான், அதே அப்பாவை பின்தொடர்ந்து, அவர் படிச்ச கவிதைகளை எல்லாம் நானும் படிச்சு, சின்ன வயசுலயே கடனெல்லாம் வாங்கி, நான் எழுதின கவிதைகளை, எங்க அப்பா பதிப்பிச்சாரு. ஆனா பாருங்க, பஜ்ஜி வித்த காசு கூட நெறய வந்துச்சு. கடைசியில, எழுதின கவிதை பேப்பர் எல்லாம் கடைசியில எங்க போயிருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. பஜ்ஜியை நசுக்கி எண்ணையை பிழியறதுக்கு என்னோட கவிதை பொஸ்தகத்த தவிர வேற எதையும் கொடுத்த, அதையே குடுங்கன்னு கேட்டு வேற டிமாண்டு. அவன் எண்ணையை பிழியும் போதெல்லாம், நான் உள்ள இறங்கி முத்து மாதிரி எடுத்த வார்த்தை எல்லாம், என்னை கெட்ட வார்த்தையிலே திட்டி போட்டுட்டு, கடைசியில எண்ணெயில தற்கொலை பண்ணிக்கிற மாதிரி இருக்கும்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க. ரொம்ப நேரம் பேசிகிட்டு இருக்கீங்க.

அதெல்லாம் இல்ல தம்பி. இது மாதிரி என்னை தேடி வந்து திட்டின அஞ்சு பேரு கிட்டயும் இந்த கதையை மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கும்போதே என்னை நிறுத்திட்டு, அவங்க என்ன பேச நெனச்சாங்களோ அத பேசிட்டு போய்கிட்டே இருந்தாங்க. நீங்க மட்டும் தான் என்னை நிறுத்தாம இருந்தீங்க.

இல்ல, ஆனாலும், எனக்கு கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்குங்க.

இருக்குறது தப்பில்ல. கொஞ்ச நாள் இன்னும் ஆழமா படிங்க. கசடெல்லாம் நீங்கும். தெளிவான ஊத்து தண்ணி ஊரும். அதுக்கப்புறம் எல்லாம் புரியும்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பி வந்து இருவது வருடங்கள் ஆகி இருந்தன. தெளிந்து தான் இருந்தேன். தெளிந்ததின் உன்னதத்தையே பெற்றிருந்தேன். நானே எழுதுகிறேன். எழுதித்தள்ளுகிறேன். சரியோ தவறோ, எல்லாமே எழுதுகிறேன். ஆனால், நல்ல ஒரு தொழிலை எனக்காக கொண்டுவிட்டு, மீதி நேரத்தை என் கனவில் முதலீடு செய்திருந்தேன். அதன் பலனே, பல இடங்களில் என் எழுத்துக்கள் படிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும், சில இடங்களில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றும் இருந்தன.

அப்படி ஒரு நேரத்தில் தான் அந்த பத்து ஸ்குயர் தம்பி என் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவன் என்னிடம் ஒரு கேள்விக்கு பதில் கேட்டு வந்திருந்தான். ஆனால், அதற்கு நான் பதில் சொல்வதற்கு திணற, அந்த இடைப்பட்ட காலவெளிக்குள், ஒரு நான்கு முறை இரவுகள் கடந்து சென்றிருந்தன. வீட்டிலேயே தங்க சொல்லி இருந்தேன். அதற்குள் பதில் தேடிக்கொண்டும் இருந்தேன்.

அவன் கேட்ட கேள்வி இது தான். நான் இல்லாமல், ஒரு படைப்பு சாத்தியமா?

எழுதும் நான் இல்லாமல், என் படைப்பு இருக்க முடியுமா? ஒரு கவிதையோ, கதையோ, நாவலோ, கட்டுரையோ, எப்போது எழுதினாலும் அதில் நான் தான் இருக்கிறேன். இல்லை என் எண்ணம் தான் இருக்கிறது. இல்லை, எங்கோ ஒரு நியாபகபள்ளத்தில் இருக்கும் மனிதர்களோ, அவர்களுடன் உண்டான சம்பவங்களோ, இல்லை பார்த்தவையோ, படித்தவையோ தான் இருக்கின்றன. அது இல்லாமல் எழுதுவது சாத்தியமா? நீங்கள் எழுதியதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இல்லாமல் இருந்திருக்கீர்களா?

என் படைப்புகளை நான் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தேன். எழுதிக்கிழித்தால் இது தான் நிலை. எனக்குள் தேங்கி இருக்கும் படைப்பு நியாபகங்கள் இப்போது குறைந்திருந்தன. அதனால், இந்த ஆழ்நிலை ஆதாரங்களை தேடுவது கடினமாகவே இருந்தது.

காலம், நேரம் கடந்து சென்றாலும், அதற்கான பதில் கொடுக்க முடியுமா என தெரியவில்லை.

அந்த பத்து ஸ்குயர் இளைஞன், கொஞ்சம் விஸ்தாரமாக என்னுள் விளைந்து கொண்டிருந்தான்.

Tuesday, May 19, 2020

கொலைப்பசி

நேற்று வரை இருந்த நிதானம் இப்போது இல்லை. வழமையாக பேசும் வார்த்தைகள் வரவில்லை. அப்பாவிடம் எப்போதும் போல் நடக்கும் சுகாதார கேள்விகள், பொதுநல விசாரிப்புகள், அதற்கப்புறம் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாமல், அம்மாவிடம் கொடுக்க சொல்லி சொல்லும் நடைமுறை நேற்றோடு முடிந்து போனதாய் தெரிந்தது. அப்பா இன்றிலிருந்து நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டார். ஏன்தான் இந்த வலைப்பதிவு விஷயத்தை சொன்னோம் என்று இருந்தது. ஆனாலும், என்றோ ஒரு நாள் மடை திறந்திருக்க தான் வேண்டும். வயதான ஆலமரம் அவர். விழுதுகள் சொல்லிவிட்டு தான் தரை தொடவேண்டும். தரை தொட்டபின், விட்டகுறை தொட்டகுறை எல்லாம் இருந்தால் பேசிக்கொள்ளத்தான் வேண்டும்.

அப்பாவிற்கு மகன் மேல் கொள்ளைப்பிரியம். சொல்லிக்கொள்ளத்தான் மாட்டார். ஆனால், வெளியே சென்றால் கொட்டித்தீர்ப்பார். மழை மண்ணை நெருங்கும், ஆனால் நனைக்காது என்பது போல். நனைத்தால் தான் என்ன. அப்படியே ஆவியாகி விடும். ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு தன்னிலை. அதனுள் போய் கண்டுபிடிப்பதற்குள், ஆவியாகவோ, இல்லை மண்ணோடு மண்ணாகவோ சென்றுவிடுகிறது. அப்பா அப்படித்தான், என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் அடுத்த விஷயத்திற்கு போயிருப்பார். இப்போது வயது ஆகி விட்டது. கொஞ்சம் நிதானம் தங்கி இருக்கிறது. பல காலம் தங்கி இருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.

நேற்றைக்கு தான், நான் எழுதுவேன் என்று சொன்னேன். என்ன எழுதற என்றெல்லாம் கேட்காமல், ஓ அப்படியா என கேட்டவர், அம்மா மூலமாக கேட்டு தெரிந்து கொண்டார். நேராக எந்த  கேள்வியும் வந்ததே இல்லை. அம்மா தபால் கொடுத்தும் வாங்கியுமே வயதாகி போனார். இருபது வருட வலைப்பதிவில், யாருக்கும் சொல்லிடாத பல தகவல்கள் இருந்தன. எழுத தொடங்கிய நாட்களில், எல்லாமும் அதில் இருந்தது. பக்கத்து கட்டிலில் தூங்கிய நண்பன் தன் காதலியை திட்டியது முதல் கொண்டு. ஒரு நாள், தோழியுடன் கடற்கரைக்கு சென்றதையும், திரும்ப வரும்போது முட்டாள்தனமாக அவள் உட்கார்ந்திருந்த மண்ணை பாண்ட் பாக்கட்டில் போட்டு வைத்திருந்தது எல்லாம் எழுதி வைத்திருந்தேன். இப்போது அந்த தோழி எங்கோ, எப்படியோ யார் வீட்டிலோ, நான் எடுத்த மணலெல்லாம் நியாபகம் இல்லாமல் தனித்திருக்க வாய்ப்புண்டு.

சாதா எழுத்து, ஸ்பெஷல் சாதாவாக மாறி, கவிதைகள், கட்டுரைகள், கோபங்கள், திட்டுகள் என பல மாறுதல்கள் தாண்டி எங்கெங்கோ சென்றிருந்தது. மொத்தமாக நான் பேச நினைத்ததை எல்லாம் அது பேசி இருந்தது. மனைவிக்கு எல்லாம் தெரியும். அவளும் அதில் கால்வாசி பதிவுகளில் இடம் பெற்றிருந்தாள். கல்யாணத்திற்கு முன்னரும் பின்னரும். இதெல்லாம் படித்தால் தான் என்ன? ஆமாம், படிக்கலாம் தான். ஆனால், அப்பா படிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. அவரை விமர்சனம் செய்தும் பல பதிவுகள் இருந்தது. இதை எல்லாம் யாரோ அவரிடம் சொல்லி, என்னிடம் சமாதானம் பேச வருவார் என்று நினைப்பெல்லாம் இருந்திருக்கிறது. எழுத்தில் இருந்து தீர்மானம் வரும் என்றால், இந்நேரம், உலகில் அனைவரும் எழுதிக் கிழித்திருப்பார்கள். பேசவே வேண்டாம், நான் உனக்கு எழுதி வைக்கிறேன். அதை படித்து, உணர்ந்து, என்னிடம் சமாதானமாக போ என சொல்லி இருப்பார்கள். நல்ல வேளை, பேசியே எல்லாமும் நடக்கிறது. என் வீட்டில், பேச தயக்கம். சொல்ல தயக்கம். உணர்த்த தயக்கம். சண்டை போட தயக்கம். தயக்கமில்லாமல் வந்தது, எழுத்து மட்டுமே. எழுத்திக்கிழித்து விட்டேன். இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

அப்பா கேட்டார், மீட்டிங் ஏதாச்சும் இருக்கா? கொஞ்ச நேரம் பேசலாமா?

இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகி இருந்தது. என்னிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்ற வார்த்தை எல்லாம் அவரிடம் இருந்ததே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சரிப்பா பேசலாம்.

ரெண்டாயிரத்து நாலுல, நவம்பர் மாசம்...

மனது அடித்துக்கொண்டது. என்ன எழுதி வைத்திருக்கிறோம் என, சரசரவென மவுசை புரட்டினேன். நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். ஒன்றில், கில்லி பற்றி பதிவு. திரிஷாவை ஜொள்ளி எழுதி இருந்தேன். சரி, அதை கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்றால், கடைசி பதிவு, என் அப்போதைய காதலி (இப்போதைய மனைவி) பற்றி இருந்தது. மூளையின் அடுக்கில் எல்லாம் தேடுகிறேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று. கிடைத்துவிட்டது. அந்த மாதத்தில் தான் நான் காதலை போட்டு உடைத்திருக்கிறேன். பிரகாஷ் ராஜின், செல்லம் என்ற வார்த்தை மனைவிக்கு சூட்டப்பட்டது வேறு மனதிற்கு வந்து போனது. அவர் அதைப்பற்றித்தான் கேட்பார் என நினைத்தேன்.

அப்பா கேட்டார், உனக்கு என் மருமவள அவ்ளோ பிடிச்சிருந்ததுன்னா, என் கிட்ட நேரா வந்து சொல்லி இருக்க வேண்டியது தானே. ஏன் சுத்தி வளைச்சு, வேண்டாததெல்லாம் இழுத்து, சண்டை போட்டு, ரெண்டு பேருக்கும் பெருசா மனஸ்தாபம் வந்து, தேவை இல்லாம நெறய காயப்படுத்திகிட்டோம். மன்னிச்சிடுப்பா என்றார்.

பரவாயில்லப்பா...

அப்பா கேட்டார், இன்னொன்னு எழுதி இருந்த..

எது?

ரெண்டாயித்து அஞ்சுல டிசம்பர் மாசம்.

அப்பா அப்போது தான் பணிவிடுப்பு பெற்று, ஒய்யாரமாக ஈஸி சேரில் உட்கார்ந்த நேரம்.

அப்பா கேட்டார், உனக்கு நான் ரிட்டையர் ஆனது இவ்ளோ பாதிச்சிருக்கா? ஒரு முறை கூட சொன்னதே இல்லையே. நானும் நீயும் என்னோட வேலை பத்தி பேசிக்கிட்டதே இல்ல. ஆனாலும், அவ்ளோ விஷயம் எழுதி இருக்க. அந்த பியூன் சண்முகம் என்ன ஏமாத்தினதும், அவனை நான் மன்னிச்சி விட்டதையும் கூட எழுதி இருந்த. அத உங்க அம்மா கிட்ட கூட சொன்னதில்ல. நான் திரும்ப வரும்போது, வண்டிய ஒட்டிக்கிட்டு வராம, தள்ளிகிட்டே வந்ததெல்லாம் எழுதி இருக்க. அப்போ நீ என் பக்கத்துலயே இல்ல. ஆனா, சரியாய் எழுதி இருந்த. எப்படி?

தெரியலப்பா. தோணுச்சு..

அப்புறம், தொன்னுத்து எட்டுல, மார்ச் மாசம்...

கருப்பு மாதம் அது. மூளையின் எல்லா அடுக்குகளிலும் அந்த மாதம் விட்டேத்தியாய் உட்கார்ந்திருந்தது. பிய்த்து எறிந்து போட்டபோதிலும், எங்கோ காற்றில் எனக்காகவே காத்திருந்து, திரும்ப வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.

அதெல்லாம் படிக்காதீங்கப்பா.

எல்லாத்தையும் படிச்சுட்டேன். பேசிடலாமே.

வேண்டாம்பா..

இல்லப்பா பேசிடலாம். இன்னைக்கோ நாளைக்கோ, நான் உனக்கு வெறும் நினைவுகளா தான் இருக்கப்போறேன். அதுல ஒரு நினைவு மட்டும், உனக்கா எனக்கான்னு சண்டை போட்டா எப்படி. தீத்துக்கலாம். நான் ஆலமரம்னு ஒரு இடத்துல எழுதி இருந்த. ஆனா, அந்த ஆணிவேர் எப்பவும் அதோட மண்ணை மட்டுமே தின்னு வாழ்ந்துட்டு இருந்து இருந்தா சரி, பக்கத்து வீட்டு மண்ணை இல்ல தின்னுச்சு. அப்போ, அது தப்பு தானே.

பேசி இப்போ ஒன்னும் நடக்க போறதில்லப்பா.

பேசணும்டா.. பேசியே ஆகணும். இத்தனை நாள் பண்ணல. பேசி இருந்திருக்கணும். எதோ ஒரு அகங்காரம் மனசுக்குள்ள, அப்பன்னா குரல் உசத்தியே பேசணும், எங்க அப்பா என்ன நடத்தின மாதிரி தான் உன்ன நடத்தணும்னு ஒரு அசரீரி கண்ணுக்குள்ள தெரிஞ்சிகிட்டே இருக்கும். அந்த காலத்தோட கெட்ட பழக்கம் அது. இப்போ தெரியுது. ஆனா தெரிஞ்சு ஒன்னும் ஆக போறதில்லன்னு நீ நினைக்கலாம். ஆனா, நீ இத எழுதி வைக்கிற அளவுக்கு இருந்திருக்குன்னா, நான் அத பத்தி சொல்லிடறது சரி தானே.

சொல்லிட்டாலும், ஒன்னும் மாறாதுப்பா..

இல்லைதான். மாத்த வேண்டாம். என்னோட பாவ மன்னிப்பா எடுத்துக்கலாமே...

பாவம் செஞ்ச காலத்துல தாம்பா அது பாவம்.. காலம் கடந்து போச்சுன்னா, அதுக்கு பேரு துரோகம். மன்னிச்சிடுங்கப்பா..

நீ சொல்லலாம். அதுக்கு தான் இந்த நேரம் அமைஞ்சிருக்கு. எதையும் நாம உருவாக்கிறது இல்ல. ஆனா, நேரம் நமக்கு உருவாக்குது. இந்த நேரம், நான் மன்னிப்பு கேக்கணும்னு சொல்லுது. கேட்டுடறேன்.

எனக்கு கேட்டு ஒன்னும் ஆகாதுப்பா..

சரி, கேக்க வேண்டிய இடத்துல கேக்கறேன். நீ சாப்பிட்டியா?

இல்லப்பா.

சரி, நீ சாப்பிடு. நாளைக்கு எல்லாம் தெளிவாகும்.

அடுத்த நாள் காலை, அம்மா எனக்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். திரும்ப அழைத்தேன்.

என்னடா பேசினீங்க ரெண்டு பேரும். அந்த மனுஷன் இப்படி நடந்து நான் பாத்ததே இல்ல. என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு வந்து மொதல்ல நீ சாப்பிடு. அதுக்கப்புறம் நான் சாப்பிடறேன்னு சொன்னார். இனிமேல, அவர் நான் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவாராம். எனக்கு வேற, இதெல்லாம் பழக்கம் இல்ல. அவர் திட்டவே ஆரம்பிச்சுட்டார். வேற வழி இல்லாம, முன்னாடியே சாப்பிட்டுட்டேன். ஜீரணமே ஆகல...

Monday, May 18, 2020

மூக்கு

வீட்டின் முன் இருக்கும் அறையில், பிணம் இருப்பது இப்போது தான் முதல் முறை. அந்த அறையில் தான் இரண்டு சைக்கிள்களும், தட்டுமுட்டு சாமான்களும் வாசம் செய்யும். வீட்டு உரிமையாளர், அந்த அறையை ஏன் கட்டச்சொல்லி கேட்டார் என நிறைய கேள்விகள் வரும். தேவைக்கு கொஞ்சம் கூட பக்கம் வராத ஒரு குட்டி அறை. ஆனால், அதை தாண்டி தான் வீட்டில் சில உயிர்கள் இருக்கும் என தெரியும். அதை பெரியதாக கட்டி இருந்தால் இப்போது, பிணமாக இருந்த மாமாவை கட்டி அழ நிறைய பேர் உட்கார்ந்திருக்க முடியும். மிகப்பெரிய இட்டுக்கட்டு.

பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்த அப்பா முகத்தில் கவலை அவ்வப்போது வந்து சென்றது. இப்பொழுது தான் மாமா மூச்சற்றவராக கொண்டு வரப்பட்டார். அதற்கு முன் வரையிலும், கிட்டத்தட்ட எட்டு வார மருத்துவமனை வாசம். காசநோய், அவரை பாடாய் படுத்தி இருந்தது. என்னன்னவோ வைத்தியம் பார்த்தும் கேட்கவில்லை. கடைசியில், அப்பா தான் தன் தங்கையை இங்கு இருக்கும் காசநோய்க்கென இருக்கும் பிரத்தியேக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று கூட்டி வந்தார். வந்த நேரமோ என்னமோ, மாமாவுக்கு ஒன்றும் சரிபட்டுவரவில்லை. மருத்துவமனையிலேயே வாசம். அத்தை மட்டும், பாதி நேரம் இங்கே, பாதி நேரம் அங்கே என குதிரையாக ஓடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அன்பு இழந்து, கோபமே மீதி இருந்தது. அவளுக்கென்று ஒரு குரல், அண்ணன் மகனென்றால், கூட ஒரு இன்ச் புன்னகை பெருக்கும். ஆயிரம் தான் தகராறுகள் இருந்தாலும், அன்பாக பேசும் குரலை எப்போதும் உள்ளுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு தான் இருந்தாள்.

இப்படி ஆகி இருக்க வேண்டாம் தான். அவஸ்தையிலும் அவஸ்தை. இந்த வீட்டிற்கு வாடகை வந்து, இரண்டு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு  சாவு. இந்த கதை சொல்பவனுக்கும் அந்த வயதில் இதெல்லாம் புதிது. மாமா உடல் வரும்போதே, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன், நெற்றியில் ஈரம் காயாத விபூதி. செத்தபின் செய்யவேண்டிய காரியமெல்லாம் எப்படி நொடிப்பொழுதில் அரங்கேறுகிறது என்பதெல்லாம் ஆச்சரியம். சேராத கைகள் சேரும், கூடாத நட்பு கூடும், பார்க்காத கண்கள் பார்த்துக்கொள்ளும். இத்தனைக்கும் நடுவில், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவைக்க அத்தனை சாங்கியங்கள். மூச்சு முட்டும்.

அத்தைக்கும் சரி, அப்பாவுக்கும் சரி, முகத்தில் ஒரே ஒரு கவலை. எப்படி சமாளிப்பது என்று. இன்னும் சொல்லிவிட்டவர்கள் வர நேரமாகும். காசநோய் பாதித்த உடம்பு என்பதால், நிறைய நேரம் வைத்திருப்பது சரியில்ல. எண்பதுகளின் மத்தியில், ஒரு நடுத்தர குடும்பத்தில், குளிர்பதன பேட்டி என்பது, எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தானது. மற்றவர்கள் எல்லோரும், சுதந்திரமாக மூச்சு விட்டு சாகலாம். மாமாவின் முகம் மூடப்பட்டிருந்தது. கண்களுக்கு கீழ் மேல்கன்னம் வரை மட்டுமே பார்க்க முடிந்தது. அதற்கு பின் வெள்ளைத்துணியில் மூடியிருந்தது.

அண்ணா, எப்படி சமாளிக்கிறது?

பாத்துக்கலாம்மா..

எப்படி?

என்ன சொல்றதுன்னு யோசி. நானும் யோசிக்கறேன். அதுக்குள்ள, பாடை செய்ய சொல்லிவிட்டிருந்தேன் இல்லையா, அத என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்.

அப்பா இப்போதைக்கு சில மணி நேரங்களை கடன் வாங்கி வெளியே சென்றார். ஆனால், அவருக்கும் அந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த குட்டி அறையும், நான்கு நான்கு பேராகவே நிற்க முடிந்த தாழ்வாரமும் நிரம்ப போகிறது.

சில மணி நேரமெல்லாம் எடுக்க அவகாசம் கொடுக்காமல், சல்லிசான விலைக்கே மாமாவின் கடைசி வண்டி செய்துவிடப்பட்டு இருந்தது. பூக்கள் மட்டும் தான் வாங்கி கொடுக்க வேண்டும். அதையும், அப்பாவின் நண்பர் பார்த்துக்கொண்டார். எல்லாம் சேர்ந்து, அவருக்கு சொன்ன ஒரே விஷயம், அந்த கேள்விக்கு பதில் என்ன. யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மா எதிர்பட்டாள்.

உங்க தங்கச்சிக்கு ஏதாச்சும் பதில் சொல்லுங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரே பதில் சொன்னாத்தான் சரியா இருக்கும். நீங்க எதுவும் சொல்ல மாட்டேன்கிறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.

என்ன செய்யணும்னு எனக்கும் தெரியல. கொடுத்த காசுக்கு அவனுங்க சரியா வேலை செஞ்சிருந்தா, இப்போ இந்த நிலைமை இல்ல. எல்லாத்துலயும் எல்லாருக்கும் ஒரு அலட்சியம். அந்த அலட்சியம், இப்போ நம்மள அலைக்கழிக்குது.

சரி, அவங்ககிட்டயே என்ன பண்ணலாம்னு கேட்டிங்களா?

கேட்டேன். அப்படியே நமக்கு உதவரா மாதிரியே பேசிட போறாங்க... தெரிஞ்ச விஷயம் தானே... எங்களால ஒன்னும் பண்ண முடியாது. நீங்க பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க... இவ்ளோ படிச்சும், கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா சரி..

இப்படியே பேசிகிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது...

சரி, நடந்தத அப்படியே சொல்லிடலாம்..

அண்ணா, அது எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல...

எப்படி வேணா எடுத்துக்கட்டும்மா. இது தானே நிஜம். வரவங்களும் தெரிஞ்சிக்கட்டும்.

சரி, எப்படியோ ஒன்னு. என்னோட புருஷன் இறந்ததை நெனச்சு அழறதா, இப்படி ஒரு நிலைமையை நமக்கு ஆண்டவன் குடுத்துட்டானேன்னு அழறதா, ஒன்னும் புரியல.

இப்போதைக்கு எல்லாத்தையும் விட்டு தள்ளும்மா.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. நீ யோசிக்க வேண்டியதெல்லாம், இதுக்கப்புறம் நீ வாழ போற வாழ்க்கை.. அது தான் இப்போதைக்கு தேவை. மச்சானை நல்லபடியா அனுப்பிவைப்போம்.

சரிண்ணா..

இப்படியெல்லாம் பேசிவிட்டாலும், அவருக்கு உள்ளுக்குள் அவஸ்தை அடங்கவில்லை. அந்த முதல் கேள்வியை எதிர்கொள்வதற்கு தான் தைரியம் தேவை. அதற்கு பின் ஒன்றும் இல்லை. அது திரும்ப திரும்ப சொல்லப்படும். அதற்கு பின் பிறருக்கே அது அவல் ஆகிப்போகும். தான் தன்னுடைய வேலையை பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் வந்து இறங்கியது, இரண்டாவது இளைய அத்தை.

அக்காவை கட்டிக்கொண்டு அழுகிறாள். அழுது தீர்க்கிறாள். ஆசுவாசமாகிறாள்.

அப்பாவிடம் வந்து,

என்னண்ணா, ஏன் முகத்தை இப்படி மூடி வெச்சிருக்கீங்க. வர்றவங்க எல்லாம் பாக்கபோறதே முகத்தை தானே. அதை ஏன் மறைச்சு வெறும் கண்ணும் மட்டும் தெரியற மாதிரி வெச்சிருக்கீங்க.

மச்சானோட மூக்கை ஆஸ்பத்திரியிலேயே, நாம போய் எடுக்குறதுக்குள்ளயே, எலி சாப்பிட்டுச்சும்மா... படுபாவி டாக்டருங்க, உங்க அக்கா வந்து போன அந்த ஆறு மணி நேரத்துக்குள்ள, அவர் இறந்து,  மார்ச்சுவரியில வெச்சு, அங்க இந்த அநியாமெல்லாம் நடந்து, ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க...

அப்பாவுக்கு இப்பொழுது தான் அப்பப்பா என்று இருந்தது.

எலி வேறு வேலை பார்க்க சென்று கொண்டிருந்தது.

Friday, May 15, 2020

ஆறாயிரம்

அறிமுகம் என்ற சொல்லை, கடந்த 6 மாதங்களில், ஆறாயிரம் முறையாவது சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். இப்படியே போனால், என்னை நானே அறிமுகம் செய்து கொண்டு தனியே பேசிக்கொள்வேனோ என்னவோ. அப்படி எதுவும் ஆகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை மழை கொண்டு என்னை காப்பாற்றட்டும்.

இதுவும் ஒரு அறிமுகம் பற்றிய கட்டுரை தான். எஸ். ராமகிருஷ்ணன் அவரின் தேசாந்திரி காணொளி வரிசையில் செய்வதெல்லாம் அறிமுகமே. யாவரும் மின்னிதழில் வந்திருந்த அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணலை குறிப்பிடும் போது, எப்பொழுது முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைகளையோ, நேர்காணலையோ பார்க்கவோ, கேட்கவோ இருக்கும் பட்சத்தில், ஒரு நோட்டு புத்தககத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொள்வேன் என்கிறார்.

அவருக்கு, அ. முத்துலிங்கம், எனக்கு இப்போது வரை எஸ். ராமகிருஷ்ணனே.

அவரின் இன்றைய காணொளி, நேர்காணலாக அமைந்திருந்தது.



கொட்டிக்கொடுத்தார். இன்னும் பல கேள்விகள் இருக்குமென்று நம்புகிறேன். அடுத்தது வருவதற்குள், என் நோட்டுப்புத்தகத்தை நிரப்பி வைக்கவேண்டும் என்றெண்ணியதாலே, இந்த பதிவு (இதை எப்போதும் பதிவு போட்டு, வெளிச்சத்தில் காட்டியதில்லை. ஆனால், படிக்க சிலர் இருக்கும்போது, இது ஒரு ஆறாயித்தி ஒன்றாக, இன்னொரு அறிமுகமாக இருந்துவிட்டு போகட்டும் என்பதே எண்ணம்.

கீழே கொடுக்கப்பட்ட அத்தனையும் எஸ்ரா அவர்கள் சொன்னது. அதில் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை. ஆனால், எப்போதாவது படித்து விடவேண்டும். இப்போதுள்ள புத்தகங்களே இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அகரமுதல்வன் ஒவ்வொரு குறுநாவலையும் அழகாய் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறார். இப்போது நான் படிப்பது, உலகின் மிக நீண்ட கழிவறை. இப்பொது வரைக்கும் சித்தப்பா வெகுவாக கவர்த்திருக்கிறார்.

சோர்பா தி கிரீக் (சோர்பா என்னும் கிரேக்கன்)

கட்டவிழ்த்துவிடப்பட்ட மனநிலை கொண்ட சோர்பா என்பது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிடைத்தது. பயணம் தொடர்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இரு நண்பர்கள், இல்லை, சூழ்நிலையால் நண்பர்களாக்கப்பட்டவர்கள் போல தெரிகிறது. இது அத்தனையும் தாண்டி, கோவில்பட்டியில் தம் நண்பர்களோடு கூடும் போது போதெல்லாம் சோர்பாவை பற்றி பேசாமல் இருந்ததில்லை என்கிறார். அந்த கோவில்பட்டியில் அப்படி என்னதான் மாயமோ தெரியவில்லை. நைனா, கிரா'வை சொல்லியே ஆக வேண்டும்.

அருண்மொழி நங்கை இந்த நாவலை பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே.

கிண்டிலில் சொற்ப விலைக்கு கிடைக்கும் என அமேசான் சொல்கிறது. காகிதபுத்தகமும் சொற்ப விலையே.

கீழ்கண்டவற்றை சிறந்த இந்திய நாவல்கள் என்று சொல்லாமல், தனக்கு பிடித்தவை என்று சொல்லி இருக்கிறார்.

மலையாளத்தில், குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி. கண்ணுக்கு முன் இருக்கும் சில காலங்களை எழுத்தின் மூலம் கடந்து போகிறது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் அக்னி நதி பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே. இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு எழுதிய பதிவில் அக்னிநதி ஒரு முக்கிய படைப்பு என்கிறார். இதே பதிவில், இன்னும் எத்தனையோ இந்திய இலக்கிய படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (தமிழில் த. நா. குமாரசாமி), வங்கத்து நாவல். நாவலை பற்றி படிக்கும் போதே இழுக்கிறது. கதைக்களன் தானோ? மரபுக்கும், இக்காலத்திற்கு உள்ள சிக்கலை விளக்கும் போல் இருக்கிறது. ஆனால், கதைக்களன் மருத்துவத்துறை. கடைசி பெஞ்ச் பதிவில், ஆரோக்கிய நிகேதனம் பற்றி, இங்கே.

வங்காளத்து நீலகண்ட பறவை, பலரும் படிக்கச்சொல்லி கேட்டிருக்கிறேன். அதைப்பற்றி ஜெயமோகனின் ஒரு பதிவு.

தகழி சிவசங்கரன் பிள்ளையின், கயிறு மற்றும், செம்மீன்.

கேரளா பூமியில் இருந்து, கேசவதேவ் எழுதிய அயல்கார் (அண்டைவீட்டார்). ஜெயமோகனின் பதிவு இங்கே.

வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய, பால்யகால சகி. அது பற்றி ஒரு பதிவு இங்கே.

தனக்கு மிக நெருக்கமானதாக, வங்கத்து நாவல் சிப்பியின் வயிற்றில் முத்து நாவலை சொல்கிறார். விளக்கத்தில், ஏன் பிடித்தது என்பதற்கான காரணம் கேட்டால் நமக்கும் பிடிக்கிறது. ஒரு அமெரிக்க தாத்தா, தன் கொள்ளுத்தாத்தா இந்தியாவில் வேலை செய்தவர் என்று சொன்னால், எப்படி ஆர்வம் ஈர்க்கும். அப்படி இருக்கும் போலிருக்கிறது. அதை பற்றி எஸ்ராவே எழுதிய பதிவு, இங்கே.

தமிழில் தனக்கு பிடித்த சிறுகதையாக, கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை குறிப்பிடுகிறார். கிராவின் அண்டைவீட்டார் கு. அழகிரிசாமி. சொல்லும்போது, கரிசல்காட்டின் இன்னொரு எழுத்தாளர் உதயசங்கரை பற்றியும், அவர் அங்கேதான் வேலை செய்தார் என்றும் சொல்லும்போது, ஒரு படைப்பு எங்கெல்லாம் செல்கிறது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த படைப்பையும், படைப்பாளியையும் பற்றி உதயசங்கர் எழுதிய பதிவு.

இதற்கு பிறகு அமெரிக்க இலக்கியங்களை பற்றி ஒரு சிறுகுறிப்பை தூவி இருக்கிறார். அதற்கு ஒரு தனிப்பதிவு தேவைப்படும். அதற்கும் மேலாக, இந்த காணொளியில் அடுத்த பகுதியும் எப்போது வரும் என காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது வரை இந்த பதிவில் எத்தனை அறிமுகம் என்ற வார்த்தை வந்ததோ தெரியவில்லை. ஆனால், நான் இன்னும் சொன்ன நிலைக்கு போகவில்லை. 



Tuesday, May 12, 2020

ரெய்னர் மரியா ரில்கே

முதல் மொழிமாற்று முயற்சி. வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, எனக்கு பட்டதாய் தோன்றியதை எழுதியோ அல்லது கிறுக்கியோ இருக்கிறேன்.

மூலம் - எழுதியது ரெய்னர் மரியா ரில்கே

என் தமிழ்ப்பிரதி

எனக்கு
பாடி தூங்க வைக்க ஒருவர் வேண்டும் 
தோள் தொட்டு உட்காரவும், கூடவே இருக்கவும், 
தொட்டுணரவும், காதில் இசைக்கவும் 
பயணியாய் கனவிலும், எப்பொழுதிலும்...

கூதல் காற்று இரவை உனக்கு சொல்வதும்,
உன் சொல் இறங்குமிடமும் ,
அந்த சொல்லை காட்டில் இறக்கிவைக்கவும்,
மரத்திற்கு சொல்லவும்,
நான் மட்டுமே உனக்கு இருக்க வேண்டும்...

கடிகார முட்கள் மோதிக்கொள்கின்றன 
காலம் அதன் மிச்சத்தை காட்டிக்கொள்கிறது 
கதவுக்கு அப்பால் 
தெருநாய் குரைப்பை தாண்டி 
அந்த சத்தம் எழுப்பிய உறக்கத்தை தாண்டி
ஒரு மௌனம் நிரம்பிக்கொண்டு தான் இருக்கிறது...

என் கண்கள் உன் உடல்தோள் தொட்டிருக்கும் 
வேளையில் 
உன் நிழல் இருட்டில் வெளிவந்தால் 
சரிதான் போ என விட்டுவிடுவேன்...

ஏன், எப்படி, எதற்கு

எப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது. பல கேள்விகள் எனவும் சொல்லலாம். புத்தகம் ஏன் படிக்க வேண்டும். படித்து என்ன ஆகப்போகிறது. தூக்கம் வராமல் படிக்க என்ன செய்யவேண்டும். யாரை படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும். படித்து தான் ஆக வேண்டுமா. படிக்காமலே இருந்து விடலாமா. சங்க இலக்கியமா, இக்கால இலக்கியமா. சுஜாதாவா, பாலகுமாரனா. யூடியூப் பார்த்தால் போதாதா. கதை சொல்லிகளை பின்தொடர்ந்தால் மட்டும் போதுமே. எந்த புத்தகம் படித்தால் சீக்கிரம் தூக்கம் வரும், என சரமாரியான கேள்விகள் எதிர்கொண்டுள்ளேன். அனைவருக்கும், ஒரு புன்முறுவலே கொடுத்திருக்கிறேன். ஆனால், சிலருக்கு பதிலும் கொடுக்க முயன்றுள்ளேன். அந்த பதில், அவர்களுக்கு போய் சேரும் என நினைத்தவர்களுக்கு மட்டும்.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா கொடுமைக்காலத்தில், படித்து தான் பார்த்தால் என்ன என்று பல பேர் முயல்கிறார்கள். ஆனால், புத்தகம் இல்லாத கொடுமை வேறு. ஆர்வம் இருக்கிறது, நேரம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்போருக்கு, நான் பகிர்ந்த சில தகவல்களை இங்கே பதிவிடலாம் என நினைக்கிறேன். எக்காரணம் கொண்டும் இருட்டுலக PDF சந்தைக்குள் போகாமல், ஆனாலும், தரமான படைப்புகளை படிப்பது எப்படி என்பது தான் சொல்ல நினைப்பது.

இவை அனைத்தும் நான் படித்து ரசித்தவை. உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம், பிடித்துவிட்டு விட முடியாமல் போனாலும் போகலாம். இல்லையென்றால், என்னது, காந்தி செத்துட்டாரா என்ற ரீதியில் என்னை கமெண்ட்டும் செய்யலாம். உங்கள் விருப்பம் எதுவோ, அதுவே என் பதில்.

இதன் ஒரு சாராம்சம், சொல்ல வருவது பலவும், இன்றைய படைப்புகளை அறிமுகப்படுத்தும்.

கனலி மின்னிதழ்

நான் தொடரும் மின்னிதழ். ஏன் எனக்கு பிடிக்கும்? இதில் ஒரு சுயசார்பு இருக்கிறது. நான் வளர்ந்த பகுதியில் இருந்து வரும் மின்னிதழ் என்பதால். ஆனால், சராமாரியான நல்ல படைப்புகளே அங்கு காணக்கிடக்கிறது. கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும். சமீபத்திய பெருந்தேவி கவிதைகள் வெகுவாக ரசித்தேன். அழகிய பெரியவரின் யூதா கதையையும் ரசித்தேன். க. விக்னேஸ்வரன் அழகாக தொகுக்கிறார். படிக்கவும் கண்களுக்கு உறுத்தாத, வண்ணங்களுடன், ஓவியங்களுடன், நன்றாக இருக்கிறது.

யாவரும் மின்னிதழ்

அகரமுதல்வனின் இந்த மின்னிதழ் பல வகையில் எனக்கு பிடித்தமான ஒன்று. பல சீரிய சிறுகதைகள் எனக்கு பிடித்திருந்தன. என் மனதிற்கு பக்கத்தில், வெஞ்சினம் இருக்கிறது. அத்தனைக்கும் மேல், அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல். ஆழ்ந்து படிக்கும் பல பேருக்கு, இந்த பேட்டி ஒரு நல்ல பெட்டகம்.

தடம் மின்னிதழ்

இலக்கியம் என்ற ஒரு மெல்லிய கோட்டை இன்னும் கைவிடாமல் இழுத்துக்கொண்டே இருக்கும் ஒரே கடைசி மூச்சு (விகடனுக்கு). சமீபத்தில் நான் ரசித்தது, இலக்கியமும் பித்துநிலையும். இதை ரசித்தது என்று சொன்னால், ஆக்சிமோரோன் ஆகிவிடும். பிறழ்ந்த மனநிலைக்கான சில படிமங்களை புரியும்படி சொல்வதாக எனக்கு தோன்றியது. அதற்கும் மேல், இது சம்மந்தப்பட்ட சில படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. ஆத்மாநாம் பற்றியும், ஜி. நாகராஜன் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

வலைப்பதிவுகள்

நான் அடிக்கடி முட்டி மோதுவது, எஸ்ராவிடமும், ஜெயமோகனிடம் தான். வலைப்பதிவுகளை பொறுத்தவரை அவர்கள் இருவரும் நாளேடுகள் போல வைத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு நாட்கள் விட்டால், பின்தொடர சில நாட்கள் தேவைப்படுகிறது. எஸ்ராவின் தொடர் குறுங்கதைகள் இப்போதைய சூழலுக்கு பெரும் பொருத்தம். கிடைக்கும் ஒரு 20 நிமிடத்தில், நான்கு கதைகளை பிடித்துவிடலாம். எழுபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார்.

ஜெயமோகனின் புனைவுக் களியாட்டு சிறுகதைகள் என்ற தொடர் பதிவுகளில் எண்ணிப்பார்த்தால் இது வரை 59 சிறுகதைகள். ஒரு கதை படித்து, அதை இறக்கி வைக்கவே, சில நாட்கள் தேவைப்படுகிறது. இதில் எப்படி 59. நான் படித்தவற்றில், இது வரை என் தனி விருப்பம், குருவியும், கூடும்.

இவை தவிர, எனக்கு பிடித்த, நான் படிக்கும் இன்னும் சில வலைப்பதிவுகள்,

பா. ராகவன் அவர்களின் எழுத்துக்கு இருக்கும் பல்வேறு விசிறிகளில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் இவரின் புத்தகங்கள் மட்டும் தான் வாங்கி இருக்கிறேன். பெரும்பாலும் அபுனைவு வகைகள். ரெண்டு என்ற நாவல் இன்றும் மனதில் நிற்கும் ஒன்று. ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதியிலே நகரமும் நானும் இருந்தேன், சென்னையை பற்றியது. ஆதி (பிறந்து வளர்ந்தவர்கள்) சென்னைவாசிகளுக்கு சென்னை வேறு ஒரு உருவத்தில் காட்சி அளிக்கிறது.

சாருநிவேதிதாவின் zoom உரையாடலை (புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்) நேற்று கேட்டுக்கொண்டிருந்தேன். பல கதவுகள் திறந்தன. பல வருடங்களாக தொடரும் ஒரு எழுத்தாளர் என்றாலும், இந்த உரையாடல் செய்த விஷயம் தனித்துவமானது. அந்த வழியில் தொடர முயற்சிக்க வேண்டும். அவரின் வலைப்பதிவுகள், பல நல்ல படைப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். எஸ்ரா அதை இடையற செய்வதைப்போல சாருவும் செய்து கொண்டே இருக்கிறார். எந்த உணவகத்தில் எந்த பிரியாணி நம்மை அசத்தும் என்பதை யாரேனும் ஒருவர் நமக்கு சொல்லித்தான் தெரியவேண்டும். அந்த அறிமுகம் தேவை.

பாரதி கிருஷ்ணகுமார். எனக்கு மய்யம் தொடக்க காலத்தில் இருந்தே இவரை பிடித்திருந்தது. அரசியல்வாதி என நினைத்தபோது தான் தெரிந்தது, இவரும் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பது. மிகவும் பிடித்த ஒரு தருணம், சஞ்சாரம் நாவலுக்கு பவா அவர்கள் எடுத்த உண்டாட்டு விழாவில் இவர் பேசிய உரை. அதுவே என்னை சஞ்சாரம் படிக்க உந்தியது. இந்த உரை இல்லையென்றால், நிதானமாக படித்திருந்திருப்பேன். இவர் எழுதும் வலைப்பதிவில், மிகச்சமீபமாக நா. முத்துக்குமார் தொடர்பான ஒரு தொடரை எழுதி இருக்கிறார். அவனை முதல் முறை பார்த்த போது. நான் ரசித்து படித்த ஒன்று.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...